மலையக மக்கள் முன்னணியை வழிநடத்துவது ராதாவா? அனுஷாவா? | தினகரன் வாரமஞ்சரி

மலையக மக்கள் முன்னணியை வழிநடத்துவது ராதாவா? அனுஷாவா?

மலையகத்தின் தொழிற்சங்க சந்தா அரசியலை அடுத்த பரிமாணத்திற்குக் கொண்டு சென்றவர் அமரர் பெரியசாமி சந்திரசேகரன் என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். கல்வி கற்ற இளைஞர், யுவதிகளையும், கல்விமான்களையும் அரசியல் செல்நெறிக்குள் உள்ளீர்ப்பதற்காகப் பெரும்பங்காற்றி வெற்றியும் கண்டார். அவரது மறைவுக்குப் பின்னர் மலையக மக்கள் முன்னணியை வழிநடத்துவதற்குப் பொருத்தமானவர் என்று வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவுசெய்யப்பட்டார். ஆனால், அதன் பின்னர் அரசியலுக்குள் பிரவேசித்த சந்திரசேகரனின் புதல்வி அனுஷா சந்திரசேகரன், மலையக அரசியலுக்குப் புது இரத்தம் பாய்ச்சுவார் என்ற நம்பிக்ைகயை ஏற்படுத்தினார். ஒரு புறம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடாக ஜீவன் தொண்டமான் ஒரு இளரத்தமாகப் புறப்பட்டிருந்தாலும், பெண் ஆளுமையில் தனித்துவமிக்கவராக அனுஷா தன்னை அறிமுகப்படுத்திக்ெகாண்டு வந்தார். இளையோர் மத்தியில் எதிர்காலத்திற்கான நம்பிக்ைகயை ஏற்படுத்தி வருகிறார் என்ற பாராட்டுக்கும் பாத்திரமானார். எனினும், கடந்த சில வாரங்களாக மலையக மக்கள் முன்னணியின் செயற்குழு விடுத்துள்ள ஓர் அறிவிப்பு அந்த நம்பிக்ைகயைத் தவிடுபொடியாக்கிவிட்டது என்கிறார்கள் இளையவர்கள். அனுஷாவைத் தற்போதைக்கு அரசியல் தலைமைத்துவத்திற்கோ அல்லது மக்களுக்குச் சேவையாற்றும் பொறிமுறைக்குள்ளோ உள்வாங்குவதற்கு இயலாத ஓர் அறிவிப்பை கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் இராதாகிருஷ்ணன் விடுத்திருக்கிறார். அதாவது, அடுத்து நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில், மலையக மக்கள் முன்னணியின் சார்பில் தாமும் பதுளையில் அரவிந்தகுமாரும் மாத்திரமே போட்டியிடுவதாகச் சொல்லியிருக்கிறார். 

அனுஷா சந்திரசேகரன்

சிலவேளை,, மலையக மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிடுமாகவிருந்தால், அனுஷாவுக்கு மட்டுமல்ல மேலும் பலருக்கும் வாய்ப்பிருக்கிறது. தமிழர் முற்போக்கு முன்னணியாகத் ​தேசிய கட்சியுடன் கூட்டணியாகப் போட்டியிட்டால், தனக்கு மட்டுமே வாய்ப்பிருக்கிறது என்ற பொருள்பட இராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். இந்தக் கருத்து மலையக மக்கள் முன்னணியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதாக மலையக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதுபற்றித் தமது கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள் இராதாகிருஷ்ணனும் அனுஷாவும். எதிர்வரும் தேர்தலில் எந்த வகையிலேனும் தாம் போட்டியிட்டே தீருவேன் என்கிறார் அனுஷா சந்திரசேகரன். மலையக அரசியலுக்குப் புது இரத்தம் பாய்ச்சிய சந்திரசேகரனின் புதல்வி என்ற வகையில், மலையக அரசியல் களம் கட்சி அரசியலுக்கு முக்கியத்தும் வழங்குமா? அல்லது தனிப்பட்ட ஆளுமைக்குப் பக்கபலமாக இருக்குமா என்பதைத் தேர்தல் பெறுபேறுகள் மூலமே உணர்ந்துகொள்ள முடியும். மலையகத்தின் தற்போதைய போட்டி அரசியல் களத்தில் பெண் என்ற வகையில் அனுஷா தாக்குப்பிடிப்பாரா? என்ற சிந்தனையில், மலையக மக்கள் முன்னணியினர் தன்னிச்சையாக முடிவெடுத்துப் பெண் தலைமைத்துவத்தைத் தனிமைப்படுத்திவிட்டதாகச் சொல்கிறார் அனுஷா சந்திரசேகரன்.

கடந்த ஜனவரி முதலாம் திகதி எனது தந்தையும் மலையக மக்கள்  முன்னணியின் ஸ்தாபக தலைவருமான அமரர் சந்திரசேகரன் அவர்களின் 10வது  சிரார்த்த தினத்தில் மலையக மக்கள் முன்னணி தற்போது சென்றுகொண்டிருக்கும்  திசையை நன்றாக அறிந்த எம் ஆரம்பகால உறுப்பினர்கள், கொள்கைவாதிகள்,  நலன்விரும்பிகள் என அனைவரது வேண்டுகோளுக்கு இணங்க எம் மக்களின்  எதிர்காலத்தை கருத்திற்கொண்டு இம்முறை பொதுத்தேர்தலில் களமிறங்க  உத்தேசித்திருந்தேன். அந்த தீர்மானத்தையும் அன்றே அறிவித்திருந்தேன்.

எனது தீர்மானத்தை அறிவித்த அடுத்த நாளே (02) ம் திகதி மலையக  மக்கள் முன்னணியின் தற்போதைய தலைவர் வே. ராதாகிருஷ்ணன் இம்முறை மலையக  மக்கள் முன்னணி சார்பில் தான் மாத்திரம் போட்டியிடப்போவதாகவும் தனி நபர்கள்  வேண்டுமானால் தனித்து போட்டியிடலாம், அது அவர்களது ஜனநாயம் என்றும்  பகிரங்கமாக ஊடகங்களுக்கு தனது கருத்தை தெரிவித்திருந்தார்.

அதாவது மலையக மக்கள் முன்னணி என்பது மக்களால் மக்கள்  நலனுக்காக கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பு. இந்த அமைப்பின் உத்தியோகபூர்வ  தீர்மானங்களை மேற்கொள்ள கவுன்சில், மத்திய குழு, தேசிய சபை என்ற மூன்று  படிமுறைகள் இருக்கின்றன.

கடந்த 5 வருடங்களாக மலையக மக்கள் முன்னணியின்  தனித்துவத்தை இழக்க செய்து கவுன்சில், பொதுக்குழு, தேசிய சபை என எந்தவொரு  முக்கியஸ்தர்களது தீர்மானங்களையும் மதிக்காமல் ஒரு சிலரால்  எதேச்சதிகாரமாக தீர்மானங்களை எடுத்துக்கொண்டிருப்பதை மலையக மக்கள் முன்னணி  சார்ந்த அனைவரும் அறிவார்கள்.

கடந்த ஜனவரி மாதம் 02 ம் திகதி தற்போதைய  தலைவரால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட கருத்து ஜனவரி மாதம் 25ம் திகதி  மத்திய குழு தீர்மானமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்த அமைப்பின்  கவுன்சில், பொதுக்குழு என்பன எந்தளவுக்கு பலமிழந்து போயிருக்கின்றது என்பதை  தெளிவாக வெளிச்சமிட்டு காட்டியிருக்கிறது. இந்நிலை மேலும் தொடர்வதால் இந்த  கட்சியை வைத்து இலாபமடையும் ஒரு சிலரை தவிர்த்து எம் மக்களுக்கோ, எம்  எதிர்கால சந்ததியினருக்கோ எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை என்பதை  உறுதிபட கூறிவிடலாம். இந்த அமைப்பை உருவாக்க மக்களுடன் இணைந்து பாடுபட்டு  உழைத்த ஒரு தலைவரின் மகளாக, உடம்பில் வெட்டுக்காயங்களோடு  வாழ்ந்துகொண்டிருக்கும் எம் உறவுகளது சகோதரியாக, மகளாக என்னால் இதனை இதற்கு  மேலும் பொருத்துக்கொள்ள முடியாது

இப்பொழுது பொதுத்தேர்தலில் களமிறங்குவதற்கு என்ன அவசரம்? ஏன்  நீங்கள் படிமுறையாக முன்னேறலாமே என்றவொரு பரந்தளவிலான கருத்து  நிலவிக்கொண்டிருக்கின்றது. நான் படிமுறையாக நிதானமாக அரசியலில் ஈடுபட  தயாராகவே இருக்கிறேன். ஆனால் எனது தந்தை 2010 ல் எம்மைவிட்டு பிரியும் போது  அவர் ஒரு அமைச்சராக மலையக மக்களுக்கும், இலங்கை வாழ் தமிழர்களுக்கும்  நிறைவான சேவையை வழங்கியிருந்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அவரது  மறைவின் பின் கடந்த ஒரு தசாப்த காலமாக அந்த இடைவெளி  பூரணப்படுத்தப்படவில்லை அவர் செய்த சேவைகள் தொடரவில்லை, அவரை போல்  எந்தவொரு அரசியல்வாதியும் மக்களுடன் மக்களாக இருக்கவில்லை என்பதை நான்  களத்தில் சந்திக்கும் மக்களிடமும், என்னை தொடர்புகொள்பவர்களது  ஆதங்கத்தினூடாகவும் என்னால் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. ஆகவே நான்  ஒரு பிரதேச சபை அல்லது மாகாண சபை உறுப்பினராகி எத்தனை பேருக்கு சேவை  செய்து விட முடியும்? எனக்கான பொறுப்பு, சேவைக்கான அளவு, என்னிடமிருந்தான  எதிர்ப்பார்ப்பு அதிகம் இதனால்தான் எம் மக்களின் நலனையும்,  அபிவிருத்தியையும், அடுத்தடுத்த சந்ததியினரது எதிர்காலத்தையும் கருத்தில்  கொண்டு பொதுத்தேர்தலில் களமிறங்க தீர்மானித்திருக்கிறேன். .

அரசியல் சமனிலை ஆட்டம் கண்ட 1987களில் எவ்வாறு ஒரு மாற்றம்  உருவானதோ, மதிப்பிற்குரிய் சந்திரசேகரன் என்ற விருட்சம் எவ்வாறு  அன்றிலிருந்து தன் கடமையை மக்களுக்கு செய்தாரோ அதே போன்றதொரு நிலையை  மீண்டும் உருவாக்கியிருக்கிறார்கள். அரசியல் சம நிலையை பேண  தவறியிருக்கிறார்கள்.

ஆகவே எதிர்வரும் பொதுத்தேர்தலில் மலையக மக்கள் முன்னணி இழந்த  தனித்துவத்தை நிலைபெற செய்ய வேண்டும், ஒரு சிலரின் பிடிக்குள்  சிக்கியிருக்கும் மலையக மக்கள் முன்னணியை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எனது  எண்ணமாகும். எம் மக்களுக்கான நீண்டகால நிரந்தர தீர்வுகளை பெற்றுக்கொடுக்க  வேண்டும் என்பதே எனது கொள்கையாகும். ஆகவே மலையக மக்கள் முன்னணியின்  வளர்ச்சிக்காக, எம் மக்களின் உயர்ச்சிக்காக எனது தந்தை வழியில் நான் என்னை  தியாகம் செய்ய தயாராகவே இருக்கிறேன்.

எமது உறவுகள் யாரும் ஐயம் கொள்ள தேவையில்லை. எதிர்வரும்  பொதுத்தேர்தலில் சுயேட்சையாகவோ, அல்லது பலமிக்க தேசியக்கட்சி ஒன்றினூடாகவோ  களமிறங்கப்போகும் தீர்மானத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்.

வே. இராதாகிருஷ்ணன் எம்.பி

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கருத்து தெரிவிக்ைகயில்,

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மலையக மக்கள் முன்னணி சார்பாக நுவரெலியா மாவட்டத்தில் நானும் பதுளையில் அரவிந்தகுமாரும் போட்டியிடுவது என கட்சியின் மத்திய குழு செயற்குழு இரண்டிலும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது தொடர்பாக எங்களுடைய கட்சியின் செயலாளர் நாயகம் ஊடகங்களுக்கும் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.  இது ஜனநாயக ரீதியாக தீர்மானிக்கப்பட்ட ஒரு விடயமாகும். இதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.

அனைவருக்கும் தெரிந்த விடயம் இந்த கட்சியை நான் பொறுப்பேற்ற போது கட்சி பாரிய பின்னடைவை சந்தித்திருந்தது. கட்சியின் தலைவர் செயலாளர் என இருவரும் மிகவும் குறுகிய காலகட்டத்தில் மறைந்து விட்டார்கள். அதன் பின்பு இந்த கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்ற சாந்தினி சந்திரசேகரன் தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் தோல்வியை சந்தித்ததுடன் கட்சியின் அங்கத்துவம் படிப்படியாக குறைவடைந்தது. கட்சி காரியாலயங்கள் பல மூடப்பட்டன. கட்சியில் இருந்தவர்களுக்கு மாதாந்த சம்பளத்தை வழங்க முடியாமல் இருந்த ஒரு இக்கட்டான நிலையிலேயே  கட்சியை பொறுப்பெடுத்தேன்.

நான் கட்சியை பொறுப்பேற்ற பின்பு இந்த கட்சியை படிப்படியாக முன்னேற்றப் பாதையில் இட்டுச் சென்றேன். கட்சிக்கு என்றும் கிடைக்காமல் இருந்த நுவரெலியா மாநகர சபையில் ஒரு அங்கத்தவரை உருவாக்கினோம்.

அதன் பின் அமரர் சந்திரசேகரனின் மறைவிற்கு பின் முதன்முறையாக மாகாண சபை தேர்தலில் மண்வெட்டி சின்னத்தில் தனித்து போட்டியிட்டு ஒரு உறுப்பினரை பெற்றுக் கொண்டோம். பாராளுமன்ற தேர்தலில் இரண்டு அங்கத்துவம் கிடைத்தது. நான் கல்வி இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டேன்.

இதனைத் தொடர்ந்து மலையக மக்கள் முன்னணி மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்தது. இந்நிலையில் கட்சியின் தலைவியாக இருந்த சாந்தினி சந்திரசேகரன் தான் கட்சியின் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்குவதாகவும் அந்த இடத்திற்கு தனது மகளை உள்வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதற்கு அமைய அனுஷா  சந்திரசேகரனை கட்சியின் பல மூத்த உறுப்பினர்கள் இருந்த நிலையிலும் அமரர் சந்திரசேகரன் மீது நானும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கொண்டிருந்த விசுவாசத்தின் காரணமாக அவரை பிரதி பொதுச் செயலாளராக நியமித்தோம். அவரை எனது  ஒரு மகளாகவே நினைத்தேன். அனைத்து நிகழ்வுகளிலும் அவருக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அனைத்து மேடைகளிலும் அவருக்குரிய ஆசனங்கள் வழங்கப்பட்டது.

ஆனால் திடீரென அவர் எடுத்த இந்த முடிவு கட்சியையும் அதன் நன்மதிப்பையும் பாதிக்கின்ற ஒரு செயலாகவே கருதுகின்றேன். இது தொடர்பாக அவர் கட்சியின் அங்கத்தவர்களிடமோ அல்லது கட்சியின் செயலாளரிடமோ எவ்வித கலந்துரையாடலும் இல்லாமல் எடுக்கப்பட்டதே இந்த முடிவு. இதற்கு யார் காரணம் என்பது எனக்கு தெரியவில்லை.

ஆனால் என்னை பொறுத்தளவில் இது ஒரு புதிய விடயமாக நான் பார்க்கவில்லை. காரணம் கடந்த 2015 ஆம் அண்டு ஜனாதிபதி தேர்தலில் கட்சி முடிவெடுத்தது மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க வேண்டும் என்று அதற்கு நான் கட்டுப்பட்டு அவ்வாறே செயற்பட்டேன். ஆனால் கட்சியின் ஒரு பிரிவினர் மகிந்த ராஜபக்சவை ஆதரித்தார்கள். அதே நிலை இன்று மீண்டும் ஏற்பட்டுள்ளது.

எனவே இதனை ஒரு புதிய விடயமாக நான் பார்க்கவில்லை. என்னுடைய அனுபவம் நான் மிகவும் நிதானமாக என்னுடைய அரசியலை முன் கொண்டு செல்கின்றேன்.

இந்த சந்தர்ப்பத்திலும் நான் கூறுவது தயவு செய்து மலையக மக்கள் முன்னணியை பாதிக்கின்ற வகையில் யாரும் செயற்படக்கூடாது. அப்படி செய்தால் அது மறைந்த எங்களுடைய தலைவர் அமரர் சந்திரசேகரனுக்கு நாம் செய்கின்ற ஒரு பெரும் தவறாகவே அதனை கருதுகின்றேன்.

நுவரெலியா தியாகு

Comments