பலஸ்தீன சமாதானத் திட்டம் யாரின் நலனுக்கானது? | தினகரன் வாரமஞ்சரி

பலஸ்தீன சமாதானத் திட்டம் யாரின் நலனுக்கானது?

இஸ்ரேல் பலஸ்தீன முரண்பாடு நீண்ட வரலாற்றைக் கொண்டதாக காணப்படுகிறது. அது வெறும் இரு இனப்பிரிவுகளுக்கிடையிலான முரண்பாடாக மட்டுமல்லாது பிராந்திய சர்வதேசப் பிணக்காக வளர்ந்துள்ளது. ஏறக்குறைய இரு தரப்புக்கும் இடையிலான மோதல் உலக வல்லரசுகளால் கையாளப்படும் அரசியல் போக்கினை காணமுடிகிறது. அதிலும் அமெரிக்காவின் இருப்பாக இஸ்ரேல் பலஸ்தீன போரும் சமாதானமும் கட்டிவளர்க்கப்படுகிறது. கடந்த 1947 முதல் சம காலம் வரை அமெரிக்காவே இஸ்ரேலின் பக்கமிருந்து போரையும் சமாதானத்தையும் மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு கட்டமாகவே தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் பலஸ்தீனரது நீண்ட நாடற்ற பிரச்சினைக்கு தீர்வு காண்பது போல் ஒரு சமாதான முயற்சியை முன்னெடுத்துள்ளார். இக்கட்டுரையும் அதன் தாக்கங்களையும் பிரதிபலிப்புக்களையும் யதார்த்த நிலையையும் நோக்குவதாக அமைந்துள்ளது. 

முதலில் ஜனாதிபதி ட்ரம்ப் முன்வைத்த திட்டத்தினை நோக்குவோம். 

இரு அரசுகளுக்கான வரைபை முன்வைத்த ட்ரம்ப், இஸ்ரேலின் பாதுகாப்பின் கீழ் அவ்விரு அரசுகளும் காணப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். அமைக்கப்படும் குழுவானது தெளிவான வரைபடம் ஒன்றினை வெளியிடும் எனவும் அது பேச்சுவார்த்தை மூலம் தீர்மானிக்கப்படும் எனவும் ட்ரம்ப்ன் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நான்கு வருட காலப்பகுதியில், இஸ்ரேலிய குடியிருப்பு பூர்த்தி செய்யப்பட வேண்டும்.  ஜெரூசலம் இஸ்ரேலின் தலைநகரமாக அமைவதுடன் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் முழுநகரமும் அமைந்திருக்கும். பலஸ்தீனர்களின் தலைநகரமாக கிழக்கு ஜெரூசலம் அமையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பலஸ்தீனம், இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அ​ைனத்து வழக்குகளையும் விலக்கிக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அத்துடன் மாற்றி அமைக்கப்பட்ட இஸ்ரேல்-, பலஸ்தீன வரைபடம் ஒன்றும் அத்தகைய புதிய தீர்வுத்திட்டத்தில் இணைத்துள்ளது. இத்தீர்வுத்திட்டத்தை ஆங்கிலம், ஹிப்ரு மற்றும் அரபு மொழிகளில் வெளியிட்டுள்ளமை கவனிக்கத்தக்க விடயமாகும்.  

மேற்காசியா முழுவதும் போருக்கான தி-ட்டமிடலும் போரும் நிகழ்ந்து கொண்டிருகிறது. அவ்வாறே ட்ரம்ப் மீதான நம்பிக்கையில்லாத தீர்மானம் செனற் சபையில் விவாதிக்கப்படுகிறது. மற்றும் ரஷ்யா, சிரியா, ஈரான் துருக்கி ஆகிய நாடுகளிலும் சவூதி அரேபியா, யெமன், ஈராக் போன்ற நாடுகளிலும் போர்ப் பதற்றம் நிகழ்ந்து கொண்டிருகிறது. இத்தகைய நிலையில் பலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்குமான மோதல் போக்கினை விட ஒரு பதற்றம் மட்டுமே காணப்படுகிற நிலையிலும், இத்தகைய தீர்வுத் திட்டத்தினை ட்ரம்ப் அறிவித்துள்ளார். போரால் எதனையும் சாதிக்கமுடியாத நிலையிலும் சமாதான திட்டத்தினை அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளமை   ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. 

ஒன்று, எகிப்து, லிபியா, ஈராக் தகர்க்கப்பட்டது போல் ஈரான் முற்றாக அழிந்து புதிய சகாப்தம் என்ற போர்வையில் தமக்கு இசைவான ஆட்சியை கட்டமைப்பதற்கான அமைதி  சூழல்  இஸ்ரேலின் எல்லையில் தேவைப்படுகி-றது. அதனை அடைவதற்கான நகர்வுகளை இஸ்ரேல் அமெரிக்கக் கூட்டு ஏற்படுத்த முனைகிறது. அதன் ஒரு கட்டமாகவே சுலைமானி படுகொலை செய்யப்பட்டார். அதன் அடுத்த கட்டமாக இஸ்ரேலின் நகர்வு சமாதானமாக செயற்பட  முனைவது என்ற போர்வையில் ஒரு தாக்குதலைக் கூட திட்டமிட்டிருக்க வாய்ப்புள்ளது. காரணம் அமெரிக்க சமாதானத் திட்டத்தை அறிவித்த மறுகணம் பலஸ்தீன ஜனாதிபதி அத்திடத்தினை நிராகரித்துள்ளார். அத்தகைய நிராகரிப்பு நிகழும் என்பதை அமெரிக்க-, இஸ்ரேல் தரப்பு முன்கூட்டியே உணர்ந்திருக்க வாய்ப்புள்ளது. அதனால் ஒரு போருக்குள் செல்வது என்பது அத்தரப்புக்கு இலகுவானதும் நியாயமானதாகவும் அமைந்திருக்கும். ஆனாலும் அமெரிக்க,- இஸ்ரேல் தரப்புக்கு போரை விட சமாதானம் ஒன்றின் அவசியப்பாடே அதிகம் தேவைப்படுகிறது. எல்லையோரத்தில் சமாதானத்தையும் ஈரானுடன் ஒரு போரையும் பிரகடனப்படுத்த விளைகிறது. 

இரண்டாவது, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமையைக் கொண்டுள்ள ரஷ்யர்களையும் சீனர்களையும் கையாளுவதற்கு ஒரு சமாதானம் தேவையாக உள்ளது என்பதன் பிரதிபலனாக அமைய வாய்ப்புள்ளது. அத்தகைய சமாதானத்தின் வெளிப்பாடு போருக்கான வாய்ப்புக்களை பெரிதாக வெளிப்படுத்தாத நிலையை உருவாக்கிவிடும். அதன் மூலம் தெளிவான உத்திகளை வகுத்து நகர்த்த முடியும்.  

மூன்று பலஸ்தீனர்களது நிலங்களில் யூதர்களை குடியேற்றவும் அதற்கான கால அவகாசத்தை பெறவும் இந்த முயற்சி வாய்ப்பானதாக அமைய உதவும். அதற்கான எண்ணத்துடனேயே இத்திட்டத்தை அமெரிக்கா வரைந்துள்ளதாக பலஸ்தீனத் தரப்பு குறிப்பிடுகிறது. குறிப்பாக ட்ரம்ப் வெளியிட்ட வரைபடத்தில் பலஸ்தீனர்களது நிலம் மேலும் பறிபோக  வாய்ப்பு உள்ளதுடன் அப்பகுதி முழுவதும் யூதர்களின் பாதுகாப்பு நிமித்தம் இஸ்ரேலியப் படைகள் குவிக்கப்பட முடியும். அதனால் பாரிய பாதிப்பினை பலஸ்தீனர்கள் எதிர் நோக்குவார்கள் என்பது மட்டுமன்றி பலஸ்தீன அதிகார சபைக்கான நெருக்கடியாகவும் அமைய வழிவகுக்கும். 

நான்கு தற்போதுள்ள பலஸ்தீனரது காசா ஜெரிக்கோப் பகுதியின் நிர்வாகப் பரப்பிலிருந்து இஸ்ரேலுக்கு ஏற்படும் பாதிப்புகள் அனைத்தையும் தடுக்க  இந்த சமாதான முயற்சி வழிவகுத்துள்ளது. 

இவற்றை விட சர்வதேச மட்டத்தில் இஸ்ரேலின் நலன்களும் அதன் அதிகாரக் கட்டமைப்பும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு இத்திட்டம் உதவும் விதத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்  ஜனாதிபதி வேட்பாளராக ட்ரம்ப் நிறுத்தப்படுவதற்கு பூரண ஆதரவு வழங்கும் விதத்தில் ட்ரம்ப்பின் நகர்வுகள் அமைந்துள்ளன.  

பலஸ்தீனர் விடயம் எப்போதும் அமெரிக்க,  இஸ்ரேல் நலன்களுக்கு உட்பட்ட தளத்திலேயே காம்ப் டேவிட் உடன்படிக்கை முதல் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. அத்தகைய நகர்வில் இன்னோர் கட்டமாகவே தற்போதைய சமாதான அறிவிப்பு அமைந்துள்ளது.

கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்

Comments