கற்பிட்டி மண்வாசனையுடன் இரண்டறக் கலந்திருக்கும் கழுதைகள் கழுதைகளை | தினகரன் வாரமஞ்சரி

கற்பிட்டி மண்வாசனையுடன் இரண்டறக் கலந்திருக்கும் கழுதைகள் கழுதைகளை

'கட்டிப்பிடிக்க யாருமில்லை
அதனால் எட்டி உதைத்து 
என் கோபத்தை வெளிப்படுத்துவேன்
என்ன செய்வது?...'  

ஒரு கழுதை பற்றிய கவிதை இது. புதியது கிடைத்தால் பழையது மறந்து போகும் என்பார்கள் முன்னோர்கள். அவ்வாறுதான் இன்று கழுதைகள் தங்களது முக்கியத்துவத்தை இழந்து கட்டாக்காலியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.   மனிதர்களின் நாகரீகம் ஆரம்பித்த காலம் முதல் மனித வாழ்வில் கழுதைகளின் வருகையும், அதனால் அவர்கள் பெற்ற உதவிகளும் சொல்லில் அடங்காதவை.   பொதிகளை சுமக்கவும், மருத்துவ தேவைகளுக்காகவும் இந்தக் கழுதைகள் பயன்படுத்தப்பட்டன. எனினும், புதிய நூற்றாண்டில் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கவே கழுதைகள் தங்களது முக்கியத்துவத்தை இழந்துவிட்டன. 

'கழுதை' என்ற வசனம் பொதுவாக நாம் உண்மையான கழுதைகளுக்கு பயன்படுத்துவதை விட மனிதர்களுக்கே அதிகமாக பயன்படுத்துகிறோம். 

இன்று ஆடு, மாடு. கோழிகளை நமது வீட்டில் எப்படி சர்வ சாதாரணமாக வளர்த்து வருகிறோமோ அதுபோலத்தான் அன்று எமது முன்னோர்கள் கழுதைகளை வளர்த்து , பராமரித்து தங்களது தேவைகளை நிறைவேற்றி வந்துள்ளனர் என வரலாறு சாட்சி ௯றுகிறது.    ஆனால், இன்று கழுதைகளை அபூர்வமாக பார்க்கும் அளவுக்கு அதனுடைய மகிமையும், பெருக்கமும் வெகுவாக மங்கிவிட்டது.   இலங்கையில் பேச்சுவழக்கில் 'பூரூவா' 'கழுதை' என்பார்கள். இவ்வாறு சொல்லி அழைப்பதை நம்மில் பெரும்பாலானோர் இழிசொல்லாகவே பார்க்கிறார்கள். உண்மையில் கழுதைகள் ஏனைய விலங்குகளை விட வித்தியாசமானவை.   இலங்கையில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மற்றும் புத்தளம் (கற்பிட்டி) ஆகிய பகுதிகளில்தான் கழுதைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. அதனால்தான் கற்பிட்டி நண்பர்கள் யாரும் வெளியிடங்களுக்குச் சென்றால் 'உங்கள் ஊரில் கழுதைகள்தானே அதிகம்' என்று அவர்களை இரட்டைஅர்த்தத்தில்  கிண்டல் பண்ணுவார்கள். 

புத்தளம் கற்பிட்டி என்றாலே கருவாடுகளும், கழுதைகளும்தான் எல்லோருக்கும் ஞாபத்தில் வரும். முன்பை விட இப்பொழுது கற்பிட்டியில் கழுதைகள் குறைவாகவே காணப்படுகின்றன. கற்பிட்டி பகுதியில் முன்னர் அதிகமான கழுதைகள் வாழ்ந்தமைக்கான நிறைய ஆதாரங்கள் காணப்படுகின்றன. இப்போது விரல்விட்டு எண்ணும் அளவுக்குத்தான் கழுதைகள் காணப்படுவதாக அந்தப் பகுதியில் வாழும் மக்கள் குறிப்பிடுகின்றனர். 

'முஹைதீன் காக்காவுக்குப் பிறகு இந்த பகுதியில் யாரும் கழுதைகளை பராமரித்ததை நான் காணவில்லை. இன்று கழுதைகள் அனாதைகளாக அங்கும் இங்கும் அலைந்து திரிகின்றன'  என்கிறார் கற்பிட்டியைச் சேர்ந்த பீட்டர் நோனிஸ்.  கற்பிட்டி நகரில் ஒரு சில்லறைக் கடைக்கு முன்னால் மூன்று கழுதைகள் ஒன்றாக சப்பிட்டுக்கொண்டிருக்கின்றன. அதற்கு ஒருவர் சாப்பாடு கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் அந்த சில்லறைக் கடை உரிமையாளர். கடும் வியாபார பிசிக்கு மத்தியிலும் அந்த கடை உரிமையாளரான பீட்டர் நோனிஸை சந்தித்து கற்பிட்டி கழுதைகள் தொடர்பாக கேட்டறிந்துகொண்டேன். வியாபாரத்தை கொஞ்சம் நிறுத்தி விட்டு பத்து நிமிடங்கள் பேசினார். 

'இந்தக் கழுதைகள் ஒவ்வொரு நாளும் மாலையானதும் எனது கடைப் பக்கமாக வந்துவிடும். நான் பனிஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களை அந்தக் கழுதைகளுக்கு சாப்பிடக் கொடுப்பேன்' என்றார் அவர். 

கழுதைகளை ஒரு படம் எடுப்பதற்கே நான் பெரும் கஷ்டப்பட்டுவிட்டேன். நான் அருகில் சென்றதும் கழுதைகள் ஓடி விடுகின்றன. ஆனால் உங்களுக்கு அருகில் நின்றுகொண்டு சாப்பிடுவதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன்.' 'என்ன காரணம்' என்றேன்.   'அதுவும் ஒரு மிருகம்தானே! கழுதைகளிடம் ஒரு குணம் உள்ளது. நன்றாகப் பழகிவிட்டால் பக்கத்திலேயே நின்றுகொண்டிருக்கும். நாம் கொடுக்கும் சாப்பாடுகளை சாப்பிடும்' என்று கற்பிட்டி கழுதைகளின் குணாம்சங்களை வர்ணித்த பீட்டர் நோனிஸ், மேலும் தொடர்ந்தார். 

“எனக்கு வயது 70 ஆகிறது. என்னுடைய அம்மாவின் அப்பா கட்டுநாயக்கவிலிருந்து கற்பிட்டி பகுதிக்கு தொழிலுக்காக வந்துள்ளார். அப்போது இங்கு அதிகமான கழுதைகள் இருந்துள்ளதாக அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதுமட்டுமல்ல நானும் கண்௯டாகப் பார்த்திருக்கிறேன்.   இப்போதும் எனக்கு நன்றாகவே ஞாபகம் உள்ளது. முஹைதீன் காக்கா, வின்சன் ஐயா போன்றவர்கள் இங்குள்ள கழுதைகளை பராமரித்து வந்தனர்.    இங்குள்ள கழுதைகளுக்கு வெற்றுத் தரைகளில் தொட்டிகளை அமைத்து நீர் அருந்துவதற்கு உரிய வசதிகளை செய்துகொடுத்தனர். அதுமாத்திரமன்றி, முஹைதீன் காக்கா கழுதையை வண்டில் ஒன்றில் பூட்டி தனது சொந்த தேவைகளையும் நிறைவேற்றி வந்தார்.    அவர்களின் மறைவிற்கு பின் இங்கு கழுதைகளை யாரும் பராமரிக்கவில்லை. அங்குமிங்கும் கட்டாக்காலியாகவே சுற்றித் திரிந்தன. வீடுகளுங்கு வந்தால் மாத்திரம் மக்கள் அவற்றுக்கு உணவு கொடுப்பார்கள் அதனால் மக்களுக்கு எந்த இடையூறுகளும் இல்லை.   கழுதைகள் எதையும் சாப்பிடும். விவசாயத்திற்கோ, மீன்பிடித் தொழிலுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், முருங்கை மரத்தை மாத்திரம் கழுதைகள் விட்டு வைக்காது. மரத்தோடே சாப்பிட்டு விடும். அதனால்தான் முருங்கை மரம் உள்ள வீடுகளில் மாத்திரம் கழுதைகள் உள்நுழைய விடமாட்டார்கள். 

அத்துடன், கழுதைகள் எப்போதும் ௯ட்டமாகவே திரியும். களி மற்றும் உப்புத் தன்மை கொண்ட மண்ணில்தான் (உவர் மண்) கழுதைகள் தங்கும். காலையில் பிரிந்து பிரிந்து சென்றுவிடுகின்ற கழுதைகள் மாலையானதும் கற்பிட்டியில் உள்ள இரண்டு தரவைகளில் இரவு நேரத்தில் அடைந்து விடுகின்றன. 

கழுதைகளுக்கு அதிக ஞாபக சக்தி உள்ளது. எங்கு சென்றாலும் மாலையானது தாங்கள் தங்க வேண்டிய இடத்திற்கே வந்து சேர்ந்து விடுகின்றன. 

முன்பை போல இப்பொழுது கழுதைகளின் நடமாட்டம் பெரிதாக இல்லை. அவை இறைச்சிக்காக வெட்டப்பட்டதாக ௯றப்படுகிறது. அவ்வாறு இறைச்சிக்காக வெட்டப்படும் போது அதனை கையும் மெய்யுமாகவும் பிடித்துள்ளார்களாம். 

பல கழுதைகளை இங்கிருந்து வெளியூர்களுக்கு வாகனங்களில் ஏற்றிச் சென்றுவிடுகின்றனர். கழுதைகளின் சத்தத்தை கேட்டால் விவசாய நிலங்களுக்கு வரும் ஒருவித வண்டுகள் அந்த இடத்தை விட்டே வெருண்டோடிவிடுகின்றனவாம். அதனால், விவசாயிகளே தமது விவசாய நிலங்களை பாதுகாப்பதற்காக கழுதைகளை கொண்டு சென்றுவிடுகின்றனர் என்றும் சொல்கிறார்கள். 

அத்தோடு முறையான பராமரிப்பு இன்றி பல கழுதைகள் வீதி விபத்துக்கள், நோய் என்றும் உயிரிழந்துள்ளன என்று விவரம் தந்தார் பீட்டர். 

கழுதைப் பால் மருத்துவ தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், அந்தக் காலத்தில் கற்பிட்டியிலும் கழுதைப் பால் மருத்துவ தேவைக்கு எடுக்கப்பட்டதா என்று அவரிடம் கேட்டேன். 

“ஆம் , எனக்கு தெரிய புற்றுநோய், தொண்டைக் கழலை, சளித்தொல்லை போன்ற நோய்களை குணப்படுத்துவதற்கு அப்போது கழுதைப் பால் பெறப்பட்டது. ஆனால், இப்போது அவ்வாறு எந்த மருத்துவ தேவைகளுக்கும் கழுதைப் பால் எடுக்கப்படுவதில்லை. 

கழுதைகள் பற்றி எமக்குத் தெரிந்த விடயங்கள் எமது பிள்ளைகளுக்கு தெரியாது தம்பி. எனவே, கொஞ்சம் கொஞ்சமாக இருக்கின்ற கழுதைகளையாவது பாதுகாத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் ஒரு பொட்டலத்தை கட்டியவாறு பீட்டர் நோனிஸ். 

கழுதை ஒரு பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. இது ஒரு தாவர உண்ணி. இது குதிரை இனத்தைச் சேர்ந்தது. பாலூட்டிகளில் குதிரை, வரிக்குதிரையைப் போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். முகத்தில் மூக்கின் அருகே வெண்மையாக இருப்பது இதன் அடையாளங்களில் ஒன்று. 

கழுதை சகிப்புத்தன்மைக்குப் பெயர் பெற்றது. கழுதைகளின் தாக்குப்பிடிக்கும் திறன் அதிகம். எனவே இவை கரடுமுரடான பகுதிகளில் மிகுந்த பாரம் தூக்கிச் செல்ல பயன்படுத்தப்படுகின்றன.   கற்பிட்டி பகுதியிலும் ஆடைகளை கழுவும் தொழிலில் ஈடுபட்டவர்களே இதனை தமது வாகனமாக பயன்படுத்தியுள்ளனர், என கற்பிட்டி தில்லையடி பகுதியைச் சேர்ந்த பாச்சா சபருள்ளா ௯றினார்.   மீன்பிடித்தொழிலுகுச் செல்ல ஆயத்தமான சபருள்ளாவை கற்பிட்டி ஆணவாசல கடற்கரையோரத்தில் சந்தித்தேன். 

“என்னுடைய அப்பப்பா (சேகாலியப்பா) இந்தியாவைச் சேர்ந்தவர். இவர் வர்த்தக நோக்கத்திற்காக மரைக்கார் மார்களுடன் இலங்கைக்கு வந்துள்ளார்.   அப்போது, இங்கு ஆடைகளை கழுவும் வண்ணார்மார் கற்பிட்டி பகுதிகளில் குளங்களை உருவாக்கி இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கழுதைகளை தமது போக்குவரத்து தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டிருந்தார்களாம்.   ஆடு, மாடுகளை வளர்த்தால் அதனை விற்பனை செய்ய முடியும். ஆனால், கழுதைகளை வளர்ப்பதால் நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம். நல்ல வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியும். அதுபோல கழுதைகளை வளர்த்தாலும் பிரயோசனம் ஏதும் கிடைக்காதே என்ற நினைப்பில் மக்கள் கழுதை வளர்ப்பில் ஈடுபடுவதில்லை” என்றார் சபருள்ளா. 

‘கச்சான் காற்று’ பருவம்தான் கழுதைகளின் இனப் பெருக்கத்திற்கு உகந்த காலமாகும். அப்போது, கழுதைகளை பராமரிப்பவர்கள் ஜாக் எனும் ஆண் கழுதைகளையும், ஜென்னி எனும் பெண் கழுதைகளையும் குளிப்பாட்டி, பொட்டு வைத்து சுத்தமாக வைத்திருப்பார்கள்.  

ஆண் கழுதையும், பெண் கழுதையும் இந்த காலத்தில்தான் ஒன்று சேர்ந்து தங்களது இனப் பெருக்கத்தை அதிகரித்துக்கொள்கிறது என்றார் சபருள்ளா. 

கழுதைகளின் மூல இருப்பிடம் ஆபிரிக்க பாலைவனம் என்று சொல்லப்படுகிறது. சாதாரண கழுதைகளை மூன்றாகப் பிரிக்கலாம்.   “கழுதைகள் மிகவும் புத்திச்சாலித்தனமான, வலிமை கொண்ட விலங்கினம். நல்ல ஞாபக சக்தி கொண்டவை. சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த இடங்களையும் மிகவும் சுலபமாக கழுதைகள் கண்டுபிடித்து விடுகின்றன.   படிக்காத அல்லது சிந்திக்கத் தெரியாத பிள்ளைகளைப் பார்த்து நம்மில் பலர் 'கழுதை' என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம் . ஆனால், கழுதைகளின் குணாதிசயங்களை அறிந்துகொண்ட பின்னரும் மனிதர்களுக்கு 'கழுதை' என்று திட்டுவது கழுதை இனத்தை மலினப்படுத்துவதாக இருக்கிறது” என்று கூறிப் புன்னகைக்கிறார் சபருள்ளா. 

இதேவேளை, இலங்கையில் உள்ள கழுதைகள் குறிப்பிட்ட இடங்களில் இருப்பதால் அந்தக் கழுதைகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டிய தேவை எமக்கு உள்ளது.  

கற்பிட்டி பகுதியில் இன்று நூறுக்கும் குறைந்த அளவில்தான் கழுதைகள் இருப்பதாக அறியமுடிகிறது. அந்தக் கழுதைகளை உரிய முறையில் பராமரிக்காததால் வீதி விபத்துக்களில் மனிதர்களும் கழுதைகளும் உயிரிழக்க வேண்டியதாகி விடுகிறது.    சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்து போகும் கற்பிட்டி பகுதியில் கழுதைகளின் சரணாலயம் ஒன்றை அமைப்பதற்கு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் உதவியுடன் கற்பிட்டி பிரதேச சபை கடந்த வருடம் நடவடிக்கை எடுத்தது.   ஆனால் அந்த முயற்சிகள் தற்போது கிடப்பில் போடப்பட்டிருப்பதாக ௯றப்படுகிறது. கற்பிட்டி கழுதைகள் இந்த நாட்டுக்கு சொந்தமான மிருகங்கள் என்பதால் அவற்றைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. 

சுற்றுலா பகுதியாக காணப்படுகின்ற கற்பிட்டி பிரதேசத்திற்கு வருகை தருகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஒருகணம் நின்று இந்தக் கழுதைகளை வியப்புடன் பார்த்துவிட்டுதான் செல்கிறார்கள்.  

கற்பிட்டி பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக பார்த்து பார்த்து அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கின்ற அரசாங்கமும், கற்பிட்டி பிரதேச சபையும் கற்பிட்டி மண்ணுடன் நீண்டகால தொடர்பு கொண்டிருக்கும் கழுதைகளை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது மக்களின் எதிர்பார்ப்புமாகும். 

ரஸீன் ரஸ்மின்    

Comments