நாடளாவிய ரீதியில் மும்மொழி இடைநிலை தேசிய பாடசாலைகள் | தினகரன் வாரமஞ்சரி

நாடளாவிய ரீதியில் மும்மொழி இடைநிலை தேசிய பாடசாலைகள்

நாடளாவிய ரீதியிலுள்ள தற்போதைய பாடசாலைக் கட்டமைப்பிலிருந்து 1000பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதும் ஏற்கனவேயுள்ள 20தேசிய பாடசாலைகளைத் தெரிந்தெடுத்து பூரண மும்மொழி இடைநிலை தேசிய பாடசாலைகளாக மாற்றுவதும் மற்றும் அப்பாடசாலைகள் யாவற்றையும் இணைத்து கேந்திரப்பாட சாலையுடன் கூடிய பாடசாலை வலையமைப்பொன்றை தாபித்தல் தொடர்பாக கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.  

இத்தீர்மானமானது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “செளபாக்கியத்தின் எதிர்கால நோக்கு” எனும் கொள்கைக்கமைய “பயனுறுதிமிக்க குடிமக்கள் மற்றும் மகிழ்வாக வாழும் குடும்பம்” எனும் தொனிப்பொருளின் கீழ் பாடசாலைக்கல்வியின் நவோதயம் எனும் கல்வி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கமைய முன்னெடுக்கப்படுகிறது. இது தொடர்பாக கல்வியமைச்சு அண்மையில் வெளியிட்ட 03/2020சுற்றறிக்கை மூலம் மேற்படி பாடசாலை கட்டமைப்புகளும் எவ்வாறு உருவாக்கப்படும் என்பது பற்றிய ஆலோசனை மற்றும் வழிகாட்டலொன்றை வெளியிட்டுள்ளது.  

அனைத்து பாடசாலை மாணர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்பையும், சமமான கல்விப்பண்புத்தர வாய்ப்பையும் வழங்குவதும் “பாடசாலைக்கல்வியின் நவோதயம்” செயற்றிட்டத்தின் பிரதான நோக்காகும். கிராமப்புறத்து மாணர்கள் நகரப்புறத்தை நோக்கி பிரபல பாடசாலைகளில் கல்வி கற்கும் மோகத்தை குறைத்து கிராமப்புறங்களிலேயே கல்வி கற்பதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் வழங்குவது ஜனாபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும ஆகியோரின் அபிலாசையாகும்.  

கல்வியமைச்சு நடைமுறைப்படுத்தும் மும்மொழி இடைநிலை தேசிய பாடசாலை திட்டமென்பது ஏற்கனவே 1985ம் ஆண்டு காலப்பகுதியில் கல்வி வெள்ளையறிக்கையின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட “கொத்தணி பாடசாலைகள்” அமைப்பை விட படித்தரம் கூடிய ஒரு அமைப்பாக உருவாகுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  

நவீன கல்வி மறுசீரமைப்பின் கீழ் பாடசாலை அமைப்பை திறனாய்வு செய்யும் நிகழ்ச்சிக்குக் கீழ் குறிப்பிட்ட முதன்மை நிகழ்ச்சிகள் உள்ளடங்கும்.  

பாடசாலை அமைப்பில் தற்போது அமுலிலுள்ள பாடசாலைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்துவதன் மூலம் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000ஆக உயர்த்தல்.  

அனைத்து மாவட்டங்களும் தழுவும் வகையில் பரிபூரண மும்மொழி இடைநிலைத் தேசிய பாடசாலைகள் 20ஐ மாவட்ட மட்டத்தில் தாபித்தல்.  

மேற்கூறிய பாடசாலைகளை இணைத்து கேந்திரப் பாடசாலையொன்றுடன் கூடிய பாடசாலைகள் வலையமைப்பொன்றைத் தாபித்தல்.  

இத்திட்டத்தை அமுல்படுத்தும் நோக்கத்திற்காக பின்வரும் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன :  

இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைகள் உச்சளவில் உறுதிப்படுத்தப்படும் வகையில் அனைத்துப் பிள்ளைக்கும் சம நியாய மற்றும் உயர் தரத்திலான கல்விப்பிரவேச மற்றும் பங்குபற்றல் வாய்ப்பை உத்தரவாதப்படுத்தல்.  

இடைநிலைக்கல்விப் பாடத்திட்டங்களை அமுல்படுத்தும் பாடசாலைகளை திறனாய்வு செய்வதன் மூலம் உச்சளவில் வளப்பயன்பாட்டை உத்தரவாதப்படுத்தல்.  

இவ்வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் பாடசாலைகளுக்குள் இடம்பெறாத பாடசாலைகள் தொடர்பில் நிலைக்குத்து சம நியாய கொள்கை உறுதிப்படுத்தப்படும் வகையில் விசேட வேலைத்திட்டங்களை அமுல்படுத்தல்.   மொத்தக்கல்விப் பண்புத்தரத்தை மேம்படுத்தல்.  

மாணவர் கற்றல் அடைவுமட்டத்தை மேம்படுத்தல் 

இத்திட்டத்தை அமுல்நடத்துவதன் காரணமாக பின்வரும் விளைவுகள் ஏற்படும் என கல்வியமைச்சு எதிர்பார்க்கின்றது.  

(அ)  எதிர்பார்க்கப்படும் வருவிளைவுகள் :  

தற்போது அமுலிலுள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000ஆக உயர்த்தல்.  

வேலைத்திட்டத்துக்காக தேர்ந்தெடுக்கும் பாடசாலைகளில் பெளதீக, உட்கட்டமைப்பு மற்றும் மனிதவள அபிவிருத்தி.  

அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் பரிபூரண மும்மொழி இடைநிலைத் தேசிய பாடசாலைகள் 20ஐதாபித்தல்.  

மொத்த பாடசாலை அமைப்பும் இணைக்கப்படும் வகையில் கேந்திரப் பாடசாலையொன்றுடன் கூடிய வலையமைப்பொன்றைத் தாபித்தல்.  

(ஆ)  எதிர்பார்க்கப்படும் வெளியீடுகள் :  

எவ்வித வேறுபாடுகளுமின்றி அனைத்துப் பாடசாலைப் பிள்ளைக்கும் பண்புத்தர கல்விக்காக கல்விப்பிரவேச மற்றும் பங்கேற்பு வாய்ப்புகளை உறுதிப்படுத்தியிருத்தல்.   தற்போது பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்றுள்ள துவித முனைவாக்கம் இழிவளவாகியிருத்தல்.  

கல்வி அமைப்பில் தற்போதிருக்கும் வளப்பகிர்வு வேறுபாடுகள் இழிவளவாகியிருத்தல் மற்றும் கல்வி முதலீட்டின் விளைத்திறன் மேம்பட்டிருத்தல்.  

பண்புத்தர கல்வி வாய்ப்பை மொத்த அமைப்பும் உள்ளடங்கும் வகையில் வழங்க முடியுமாக இருத்தல்.  

சமநிலையான பிராந்திய அபிவிருத்தியொன்றை நிலைபேறாக நடத்திச்செல்ல முடியுமாக இருத்தல்.  

கல்வியின் பண்புத்தரம் மேம்பட்டிருத்தல்.  

இத்திட்டத்தை செயற்படுத்தும் வழிமுறைகளாக பின்வருவனவற்றை கல்வியமைச்சு வகுத்துள்ளதுடன் ஐந்து படிமுறைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.  

(1)பாடசாலை அமைப்பில் தற்போது அமுலிலுள்ள பாடசாலைகளிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்துவதன் மூலம் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000ஆக உயர்த்தல்.  

இவ்வேலைத்திட்டம் கல்வித்திட்டமிடல் முறைமையின் கீழ் விஞ்ஞான கோட்பாடுகளின் அடிப்படையில் அமுல்படுத்தப்படும். மாணவர் நகர்வு :  

கடந்த 5வருட காலத்துக்குள் பாடசாலைகள் வலையமைப்பினுள் அவ் ஒவ்வொரு பாடசாலைக்குமுள்ள மாணவர் கேள்வி பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும். அப்பகுப்பாய்வு பாடசாலைகள் அடிப்படையில், வகுப்புகள் அடிப்படையில் மற்றும் கலைத்திட்ட அடிப்படையில் செய்யப்படல் வேண்டும்.  

பாடசாலைகள் வலையமைப்பினுள் அவ் ஒவ்வொரு பாடசாலைக்குமான மாணவர் வருகையை கணக்கிடும்போது கிராம சேவகர் பிரிவுகளின் அடிப்படையில் அக்கணக்கீட்டை மேற்கொள்ள முடியும். அதற்காக கீழ்வரும் படிவங்களை பயன்படுத்த முடியும்.  

உட்கட்டமைப்பு வசதிகளின் விரிவாக்கச் செயலாக்கம் :  

தேர்ந்தெடுக்கப்படும் கேந்திரப் பாடசாலையை, மேலதிக அபிவிருத்தி வசதிகள் அதாவது மொத்த பாடசாலை கற்றற் சூழலை கவர்ச்சிகரமான முறையில் மேம்படுத்துவதற்கு மற்றும் அதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஏனைய பெளதீக வசதிகளை வழங்குவதற்குப் போதுமான இடவசதிகள் இருக்க வேண்டும்.  

அப்பாடசாலையில் விஞ்ஞான ஆய்வுகூட வசதி, ஏனைய விடயார்ந்த உயர்தரத்திலான இடவசதி, விளையாட்டு வசதிகள், கற்றல் வசதிகளுக்கான இடவசதி, புறப்பாடவிதான செயற்பாடுகளுக்கான இடவசதி போன்ற வசதிகளுக்காக போதிய இடவசதி இருத்தல் வேண்டும்.  (தொடரும்...)

ஏ.எல்.முஹம்மட் முக்தார்  
ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர்.

 

 

 

 

 

 

    

Comments