“நாற்பத்தெட்டில் நாடொருமித்து நன்மை பெற்ற நன்னாள்!” | தினகரன் வாரமஞ்சரி

“நாற்பத்தெட்டில் நாடொருமித்து நன்மை பெற்ற நன்னாள்!”

நாம் எமது பிறந்த தினத்தை வருடா வருடம் நினைவு கூருவதும், அதை வெகு விமர்சையாக கொண்டாடுவதும் போன்று எமது நாட்டின் விசேட, தினமான 72ஆவது சுதந்திரதினம் நாளை மறுதினம்வெகு விமர்சையான கொண்டாடப்படுகின்றது. 

இது புதிய அரசாங்கத்தின் கீழ் கொண்டாடப்படும் முதலாவது சுதந்திர தினமாகும். இந்த வேளையில் அன்று எமது நாட்டின் சுதந்திரத்திற்காக அயராது பாடுபட்டு உழைத்தவர்களையும் சற்று நினைத்து பார்த்தல் நாம் அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடனாகும். 

ஜயா, எஸ்.ஆர். சேனநாயக்க, S.W.R.D பண்டாரநாயக்க, வண. வாரியப்பொல சுமங்களதேரர் மற்றும் சிலர் நடாத்திய சுதந்திர போராட்டத்தையும் கருத்தில் கொள்ளாதிருக்க முடியாது. 

கடந்தகால யுத்தத்தினால், எமது ஐக்கியம் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் தற்பொழுது மக்கள் மத்தியில் நல்லுறவு வலுப்பெற்று வருகின்றது. இருப்பினும் ஆங்காங்கே ஒருசில கசப்பான சம்பவங்களும் இடம்பெற்றுவருவதை சுட்டிக்காட்டாமல், இருக்க முடியாது. இனப்பிரச்சினைக்கு இன்னுமொரு தீர்க்கமான தீர்வு கிடைக்கவில்லை என்பதும் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு குறைபாடாக இருந்து வருகிறது.  

எமது தமிழ் தலைவர்களின் இன்றைய ஒற்றுமையின்மையும் இதற்கு ஒரு முக்கிய காரணியாக அமைந்துள்ளதையும் இங்கு குறிப்பிடாமல் இருக்கமுடியாது. பாதுகாப்பு, பொருளாதாரம், சுபீட்சம், என்பவற்றை கட்டியெழுப்ப புதிய ஜனாதிபதி திடசங்கற்பம் பூண்டுள்ளார். அவருடைய நன்நோக்கங்கள் பாகுபாடற்ற முறையில் சகல மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படல் வேண்டும். 

அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளால் அவர் வெற்றி பெற்ற வேளையில் தனக்கு நன்மனதுடன் அதிகமாக வாக்களித்தவர்கள் பௌத்த சிங்கள மக்களே  என்றும் தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர் தனக்கு வாக்களிக்கவில்லை என்றும் பகிரங்கமாக கூறினாலும் இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் அனைத்து மக்களுக்கு தான் ஜனாதிபதியாக செயல்படப் போவதாக அறைகூவல் விடுத்துள்ளார்.  

அன்று எமது நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தவர்களின் வரிசையில் மூவினத் தலைவர்களினது அளப்பெரிய பங்களிப்பு இருந்ததையும்  நினைவு கூர வேண்டியுள்ளது. சிறுபான்மைத் தலைவர்கள் அன்று சகலராலும் போற்றிப் புகழப்பட்டார்கள். 

இனத்துவேஷம், பாகுபாடு இல்லாத ஒரு நிரந்த சமாதானம் எமது நாட்டில் இருக்க வேண்டும். அப்பொழுதான் நாம் அன்று பெற்ற சுதந்திரத்தின் பயனைப் பெறலாம். இனவாதம், மதவாதம் என்பனவற்றிலிருந்து நாம் அனைவரும் விடுபட்டால் தான் உண்மையான சுதந்திரத்தை நாம் அனுபவிக்க முடியும். 

பொறுப்புமிக்கவர்கள் இவற்றைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். மக்களை சிதறடிக்க விடலாகாது. ஐக்கியத்தை என்றுமே பாதுகாக்கவேண்டும் அதை சீர்குலைக்க எந்தவொரு அரசியல் தலைவரும் முன்வரலாகாது.  

அன்று எமக்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்தவர்கள் இனவாதத்தையும் மதவாதத்தையும் ஒருங்கே எதிர்த்து நின்று ஐக்கியத்துடன் செயல்பட்டதால், ஒரு சொட்டு இரத்தமும் சிந்தாது தமது நோக்கத்தினை வெற்றிக்கரமாக நிறைவேற்றிக் கொண்டனர். 

எமது தாய் நாட்டின் பெருமையை உலகறிய திடசங்கற்பம் பூணவேண்டும். இந்த வேண்டுகோள் அனைத்து மக்களுக்குமுரியதாகும். அரசியல்வாதிகள் தங்களது நீண்டகால இருப்புக்காக மக்களை மந்தைக் கூட்டமாக கருதுகின்றனர். அதனால் மக்கள் குழப்பி ஒவ்வொரு திசையாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

புதிய ஜனாதிபதி  பல வாக்குறுதிகளை அளித்துள்ளார். அவை அனைத்தையும் நிறைவேற்ற முடியாவிட்டாலும் அத்தியாவசியமானவைகளுக்கு முக்கியத்துவமளித்து நிறைவேற்றப்படல் வேண்டும். சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு  நிரந்தர தீர்வு வழங்கப்பட்டால், எதிர்கால சந்ததியினருக்கு அச்சமின்றி வாழக் கூடியதாக இருக்கும். 

72வருடகாலம் கழிந்தும் இன்னும் சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. பதவிக்கு வருவதற்கு முன்னர் ஒன்றைக் கூறுவார்கள் பதவிக்கு வந்தபின் இன்னும் ஒன்றைக் கூறுவார்கள். இதனால் பாதிக்கப்படுவதும், ஏமாற்றப்படுவதும் அப்பாவி மக்கள் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். 

பலர் கட்சி தாவுவதற்கும், ஆட்சியாளர்களை குறை சொல்வதற்கும் காரணம் மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்க்கமான தீர்வுகள் எட்டப்படாமையே. அரசை மக்கள் நம்புவது தமக்கு தேவையானவைகள்  கிடைக்க வேண்டுமென்பதற்காகவே. பிரித்தானியர் எம்மை 152 வருடங்கள் ஆட்சி செய்தனர். 1948 பெப்ரவரி- 04 இல்தான் எமக்கு சுதந்திரம் கிட்டியது. எமது நாடு சகல வளங்களையும் கொண்ட நாடென்பதால், அந்நியரின் ஆதிக்கம் வரம்புக்கு மீறியதாக இருந்தது. 

எம்மை அவர்கள் ஏமாற்றினர். எமது வளங்களை சூறையாடினர். எம்மை அடிப்பமைப்படுத்தினர். அந்த நிலையில் இருந்து நாம்  விடுவிக்கப்பட்டுள்ளோம். 

அரசியல் மாமேதை ருசோ இவ்வாறு கூறியுள்ளார். 

“மனிதன் சுதந்திரமாகப் பிறக்கின்றான் ஆனால் வாழும் பொழுது இரும்புச் சங்கிலிகளால் கட்டப்பட்டே காணப்படுகின்றான்.” 

எமக்குகிடைத்த சுதந்திரம் பூரணமானதாக இருக்க வேண்டுமெனில், எமது ஐக்கியம் முக்கியம். அவ்வாறே அதிகாரங்களும்  பகிரப்படல் வேண்டும். இன்றேல் பிரிவினைவாதம் தலைதூக்கிவிடும். போராட்டங்கள், இடம்பெறும். ஈற்றில்  முன்னேற்றங்கள், அபிவிருத்திகள் அனைத்தும் முடக்கப்பட்டு விடும்

எமது நாட்டை எதிர்காலத்தில் உன்னத நிலைக்கு கொண்டுவர அனைவரும் பங்களிக்க திட சங்கற்பம் பூணுவோம்.

பாலையூற்று மரியதாஸ்     

Comments