இலங்கையின் 72ஆவது சுதந்திர தின விழா | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையின் 72ஆவது சுதந்திர தின விழா

இலங்கையின் 72ஆவது சுதந்திர தின விழா   எதிர்வரும்  4ஆம் திகதி  கொழும்பு சுதந்திர சதுக்கத்தில்  ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள்  அனைத்தும்  பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக  உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

பாதுகாப்பான தேசம், சுபீட்சமான நாடு என்ற தலைப்பில் இம்முறை சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.  இந்நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் அமைச்சர்கள், அமைச்சின் உயரதிகாரிகள், படைத்தளபதிகள், முப்படைகளின் உயரதிகாரிகள் மற்றும்    வெளிநாடுகளின் தூதுவர்கள்  என பெருமளவிலானோர்    கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

சுதந்திர தினத்தன்று இந்துசமய வழிபாட்டு நிகழ்ச்சிகள்   மயூராபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலயத்திலும்   இஸ்லாமிய சமய நிகழ்ச்சிகள் கொள்ளுபிட்டி ஜூம்ஆ பள்ளிவாசலிலும் பம்பலபிட்டி புனித மரியாள் தேவாலயத்தில் கத்தோலிக்க சமய நிகழ்ச்சிகளும்   பகத்தலே பெஸ்ரிஸ் தேவாலயத்தில் கிறிஸ்தவ சமய நிகழ்வுகளும்  இடம்பெறவுள்ளன. அன்றைய தினம் தேசப்பிதா டி.எஸ் சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது. 

சுதந்திர தினத்தன்று வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் தேசியக் கொடியை ஏற்றுமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அன்றைய தினம் வீடுகளில் மரக்கன்றுகளை நாட்டி  சுதந்திர தினத்தை அனுஷ்டிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவர்களாகிய நாமும் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுவதுடன் மரக்கன்றுகளை நாட்டி பங்களிப்பு செய்வதுடன்  இலங்கையை வளமிக்க நாடு என்பதை உலகுக்கு  வெளிப்படுத்துவோம்..!  

சுஜானி திருஆலன், 
நெடுங்குளம், 
வவுனியா.  

Comments