72ஆவது சுதந்திர தினம் சுதந்திர சதுக்கத்தில் கொண்டாட்டம் | தினகரன் வாரமஞ்சரி

72ஆவது சுதந்திர தினம் சுதந்திர சதுக்கத்தில் கொண்டாட்டம்

நாளையும் ஒத்திகை; கொழும்பில்  சில பாடசாலைகளுக்கு விடுமுறை

இலங்கையின் 72ஆவது சுதந்திரதினம் நாளை மறுதினம்(04) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடப்படவுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது. 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைக்கப்பட்ட விசேட குழுவே இம்முறை சுதந்திர தினத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது. 

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் அடங்கலாக சுமார் 2,500 பேர் சுதந்திரதின நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதுடன், 250 விசேட பிரமுகர்களும், சுமார் 1,000 பொது மக்களும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர். 

முப்படை, பொலிஸார், மற்றும் தேசிய மாணவர் படையணி அடங்கலாக 8,260 பேரைக் கொண்ட மரி யாதை அணிவகுப்பு ஊர்வலங்களும் நடைபெறவுள்ளன. மரியாதை அணிவகுப்பில் மாத்திரம்

4,325 படையினர் கலந்துகொள்வர். கடற்படையில் 860 பேரும், இலங்கை விமானப் படையில் 815 பேரும், இலங்கை பொலிஸார் சார்பில் 1,382 பேரும், சிவில் பாதுகாப்பு படைகளில் 515 பேரும் தேசிய மாணவர் படையணியில் 315 பேரும் கலந்துகொள்ளவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 

சுந்திரதின நிகழ்வுகளுக்கான மேற்கொள்ளப்பட்டுவரும் ஒத்திகை நடவடிக்கைகளுக்ககாக கொழும்பில் விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தில் உள்ள 15 அரச, தனியார், சர்வதேச பாடசாலைகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. 

டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி, ரோயல் கல்லூரி, தர்ஸ்டன் கல்லூரி, யஷோதரா கல்லூரி, மியூசியஸ் கல்லூரி, செயின்ட் பிரிட்ஜெட் கல்லூரி, கொழும்பு பெண்கள் கல்லூரி, கொழும்பு சர்வதேச பாடசாலை, விச்சேர்ளி கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு 03ஆம் திகதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு 12- மிஹிந்து வித்தியாலயம், அல்- ஹிதாயா வித்தியாலயம், அசோக வித்தியாலயம் என்பவற்றுக்கு நாளை திங்கட்கிழமை காலை 9.00 மணிமுதல் செவ்வாய்க்கிழமை இரவுவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

பயிற்சி நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தங்குமிட வசதி வழங்குவதற்காக கொழும்பு மஹாநாம, பொல்வத்த புனித மைக்கல், புனித மேரி கனிஷ்ட வித்தியாலயம் என்பன எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 5.00 மணி வரை மூடப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

இதேவேளை, ஒத்திகை நடவடிக்கைகளுக்கான சுதந்திர சதுக்கத்தை அண்டி பிரதேசங்களில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

கடந்த 26ஆம் திகதி முதல் நாளை 03ஆம் திகதிவரை இவ்வாறு விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

அதன் நிமித்தம் குறிப்பிட்ட சில வீதிகள் காலை 6.00 மணிமுதல் பிற்பகல் ஒரு மணிவரை மூடப்படவுள்ளன. மூடப்படும் வீதிகளுக்குள் வசிக்கும் மக்களுக்கு மாத்திரமே உட்பிரவேசிக்க அனுமதியளிக்கப்படும். 

கிளாஸ் ஹவுஸ் சந்தியிலிருந்து நந்தா மோட்டர்ஸுக்கு உட்பிரவேசிக்கவும், கொழும்பு நூலக சந்தியிலிருந்து கிளாஸ் ஹவுஸுக்குப் உட்பிரவேசிக்கவும், நூலக சந்தியிலிருந்து ஆனந்தகுமாரசுவாமி மாவத்தைக்கு உட்பிரவேசிக்கவும், தர்மபால மாவத்தையிலிருந்து எப்.ஆர்.சேனாநாயக்க மாவத்தைக்கு உட்பிரவேசிக்கவும், சொய்ஸா சுற்றுவட்டத்திலிருந்து கன்னங்கர மாவத்தைக்கு உட்பிரவேசிக்கவும், எப்.ஆர்.சேனாநாயக்க மாவத்தையிலிருந்து கன்னங்கர மாவத்தைக்கு உட்பிரவேசிக்கவும், விஜேராம மாவத்தையிலிருந்து ரோஸ்மீட் பிரதேசத்தின் ஊடாக கன்னகர மாவத்தைக்கு உட்பிரவேசிக்கவும், விஜேராம மாவத்தை பான்ஸ் பிரதேசத்தின் ஊடாக கன்னங்கர மாவத்தைக்கு உட்பிரவேசிக்கவும், ஹோர்டன் பிரதேசத்தின் விஜேராம சந்தியில் ஹோர்டன் மெட்லேன்ட் க்ரஸனட் சந்திக்கு உட்பிரவேசிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், விஜேராம மாவத்தையிலிருந்து ஆர்.பி.சேனாநாயக்க மாவத்தையின் ஊடாக க்ரஸன்ட் பிரதேசத்திற்கு உட்பிரவேசிக்கவும், ஹோர்டன் பிரதேசத்தின் க்ரஸன்ட் சந்தியிலிருந்து ஹோர்டன் சுற்றுவட்டத்திற்கு உட்பிரவேசிக்கவும், ஆர்.பி.சேனாநாயக்க மாவத்தையிலிருந்த மெட்லேன்ட் க்ரஸனட் பகுதிக்கு பிரவேசிக்கவும், விஜேராம மாவத்த, வித்தியா மாவத்தை சந்தியிலிருந்து வித்தியா மாவத்தைக்கு உட்பிரவேசிக்கவும், வித்தியா மாவத்தையிலிருந்து மெட்லேன்ட பிரதேசத்துக்கு உட்பிரவேசிக்கவும், பௌத்தாலோக்க மாவத்தையிலிருந்து (ஆர்.எப்.சேனாநாயக்க சந்தியில்) மெட்லேட்ன் பிரதேசத்துக்கு உட்பிரவேசிக்கவும், பௌத்தாலோக்க மாவத்தையிலிருந்து (டொரின்டன் சந்தியில்) ப்ரேமகீர்த்தி அல்வீஸ் மாவத்தைக்கு உட்பிரவேசிக்கவும், ப்ரேமகீர்த்தி மாவத்தையிலிருந்த சுதந்திர சதுக்க பாதைக்கும், ஸ்டேன்லி விஜேவர்தன மாவத்தையிலிருந்து இலங்கை மன்றப் பாதைக்கும், இலங்கை மன்றத்துக்கு அருகில் சுதந்திர சதுக்க பாதைக்கு பிரவேசிக்கவும், இலங்கை மன்றத்தின் ஊடாக சுதந்திர சதுக்க பாதைக்கும், சுதந்திர சதுக்க சுற்றுவட்டத்தில் சுதந்திர சதுக்க மாவத்தைக்கும், நந்தா மோட்டர்ஸ் பக்கத்திற்கும், மெட்லேன்ட் க்ரஸன்ட் பகுதிக்கும் உட்பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 

இந்த பாதைகள் மூடப்பட்டுள்ள காலப்பகுதியில் பொலிஸ் முன்னெடுத்துள்ள விசேட போக்குவரத்து ஒழுங்குகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்   

Comments