கொரோனா: இலங்கையர்களே! பயப்படவே வேண்டாம் | தினகரன் வாரமஞ்சரி

கொரோனா: இலங்கையர்களே! பயப்படவே வேண்டாம்

கொரோனா வைரஸ் இலங்கைக்குள் பரவுவதை தடுப்பதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இலங்கை பிரஜைகள் இந்த வைரஸ் தொடர்பில் அச்சப்பட வேண்டியதில்லை. தமது அன்றாட பணிகளை முன்னெடுக்கலாம். என்றாலும் வைரஸ் பரவக்கூடுமென சந்தேகிக்கும் அல்லது சுகாதார அமைச்சு எச்சரிக்கும் இடங்களுக்கு முகக் கவசம் அணிந்து செல்வது சிறந்த தாகும் என தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர தெரிவித்தார். தினகரன் வாரமஞ்சரிக்கு அவர் வழங்கிய விசேட நேர்காணலின் போதே மேற்கண்டவாறு கூறினார்.அவரது முழுமையான நேர்காணல் வருமாறு.

கேள்வி : சீனாவின் வுஹான் மாகாணத்தின் இறைச்சிகள் விற்பனை செய்யப்படும் சந்தையொன்றிலேயே கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் என்றால் என்ன? 

பதில் : ஒருவிதமான வைரஸுக்குதான் கொரோனா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. நவால் 2019- _ nCoV என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாத நடுப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. வுஹானில் உள்ள இறைச்சிகள் மற்றும் கடல் உணவுகள் விற்பனை செய்யப்படும் சந்தையில் இது பரவியுள்ளது. பாதிக்கப்பட்ட அல்லது நோய்த் தாக்கத்துக்கு உள்ளான விலங்குகளிடமிருந்து இது பரவியிருக்கலாமென சீன சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். கொரோனா வைரஸ் விலங்கிலிருந்து விலங்குகளுக்கும், விலங்கிலிருந்து மனிதர்களுக்கும் பரவும் என்பதை சீனாவின் தேசிய சுகாதார பேரவை உறுதி செய்துள்ளது. விலங்குகளுடன் சீனர்கள் நெருக்கமானவர்கள் என்பதால், வுஹானில் இந்த வைரஸ் விரைவாக பரவத் தொடங்கியுள்ளது. வுஹான் மாகாணத்திலிருந்து நாட்டின் பிற பகுதிக்குச் சென்றவர்கள் மூலமாகவும் வைரஸ் மற்றவர்களுக்கு பரவத் தொடங்கியுள்ளது. அத்துடன், அங்கு சுற்றுலா சென்றவர்கள் மற்றும் வுஹானிலிருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றவர்கள் மூலம் ஏனைய நாடுகளிலும் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

கேள்வி: கொரோனா வைரஸ் எவ்வாறு பரவக்கூடியது? 

கொரோனா வைரஸ் தும்மல், இருமல் வழியேதான் அதிகமாக பரவுவதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் விளக்கமளிக்கின்றனர். இது மிக எளிதாக ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பரவக்கூடியது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். அதன் பிறகு, வறட்டு இருமல் உண்டாகி, ஒரு வாரத்திற்குப் பிறகு, மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கிறது. 14 நாட்களுக்குள் நோய் தொற்றுக்கு உள்ளானவர்களை அடையாளங்காண முடியும். இந்த வைரஸால் தாக்கப்பட்ட நான்கில் ஒருவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடைகிறது. வைரஸால் உறுப்பு செயலிழப்பு, நிமோனியா உள்ளிட்டவையும், அதிகபட்சமாக உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. சீனாவின் வுஹான் மாகாணத்திலேயே அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளனர். சார்ஸ் வைரஸ் தொடர்பில் அண்மைக்கால அனுபவமொன்று எமக்குள்ளது. அதன் பின்னர் மத்திய கிழக்கு நாடுகளில் மோஸ் என்ற வைரஸ் பரவியது. ஆகவே, இந்த வைரஸையும் அவதானத்துடன் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 

கேள்வி : சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸூகளுக்கிடையிலான வேறுபாடுகள் என்ன? 

பதில் : வைரஸின் மரபணுக்கள் மூலம் அவற்றைஅடையாளம் காண முடியும். இந்த வைரஸில் RIA என மரபணுக்கள் உள்ளன. இதுவரைகாலமும் மருத்துவ உலகம் கண்டிராத மரபணுவாக இது உள்ளதாலேயே கொரோனா வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது. சார்ஸ் வைரஸ் உலகளாவிய ரீதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. கொரோனா வைரஸ் விரைவாக மனிதர்கள்மூலம் பரவக்கூடியதாகவுள்ளதால் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துமெனக் கூற முடியாது. என்றாலும் வைரஸை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சீனா பாரிய முயற்சிகளை சர்வதேச நாடுகளுடன் இணைந்து முன்னெடுத்துள்ளது. 

தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர

கேள்வி : சர்வதேச சுகாதார அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சூழலில் சீனாவின் தற்போதைய  நிலைமை  எவ்வாறுள்ளது? 

பதில் : நோயாளார் ஒருவர் அடையாளங் காணப்படும் போது முதலில் நேரம், இடம் மற்றும் பின்புலம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும். ஆரம்பத்தில் சீனாவில் இந்த வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கும் சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள கடல் உணவு சந்தைக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளன. குறித்த சந்தையில் பணிபுரிந்தவர்கள் அல்லது அங்கு சென்றிருந்த நுகர்வோருக்கு வைரஸ் தாக்கம் இருந்துள்ளது. அதன் பிரகாரமே இங்கு கொண்டுவரப்பட்டிருந்த விலங்குகள் மூலம் இது பரவியிருக்கலாமென கூறப்படுகிறது. பின்னர் சீனாவின் அனைத்து நகரங்களுக்கும் இந்த வைரஸ் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. தற்போது உலகின் 18 நாடுகளில் இந்த வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். சீனாவுக்கு வெளியில் இதுவரை 82 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட சிலரை தவிர ஏனைய அனைவரும் வுஹான் நகரிலிருந்து வந்தவர்களாகும். சீனா இந்த வைரஸை கட்டுப்படுத்த பாரிய முயற்சிகளை எடுத்துள்ளது. விரைவில் வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுமெனவும் அந்நாட்டு சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

கேள்வி : இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாது போனால் இன்னும் ஓரிரு மாதங்களில் நிலமை எவ்வாறு இருக்கும்? 

பதில் : கொரோனா வைரஸை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது போனால் அனைத்து இடங்களுக்கும் பரவும். குறிப்பாக வைரஸின் விசத்தன்மை அனைத்து இடங்களுக்கும் பரவும். மரணத்தை ஏற்படுத்தக் கூடியதென்பதால் நோயாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும்.என்றாலும், வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானவர்கள் அனைவரும் இறப்பதில்லை. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்ததும் வைரஸ் சென்றுவிடுகிறது. ஆனால், இன்னமும் இதற்கு மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை. நாளுக்கு நாள் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 1700களில் ஐரோப்பாவில் பரவியிருந்த இன்புளுவென்ஸா வைரஸால் 50 மில்லியன் வரையான மக்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே, இந்த வைரஸ் நாட்டுக்குள் பரவுவதை தடுப்பதே நாம் முதலில் செய்ய வேண்டியது. 

கேள்வி : இலங்கையில் தற்போது இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? 

பதில் : கடந்த 23ஆம் திகதிதான் இலங்கையில் இந்த வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதான சந்தேகத்தின் பேரில் ஒரு நோயாளர் வருகைதந்தார். அவர் இலங்கையை சேர்ந்தவர் என்பதுடன், சீனாவுக்கு கல்விக்கற்க சென்றவராகும். 25ஆம் திகதி இரண்டு சீன பெண்கள் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் நாட்டில் அச்ச நிலை ஏற்பட்டது. பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். எவரும் அச்சப்படத் தேவையில்லை. 13 பேரிடம் இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் ஒருவருக்கு மாத்திரமே கொரோனா வைரஸ் தாக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரும் சீனாவிலிருந்து வருகைதந்த சுற்றுலாப்பயணியாகும். ஏனையவர்களுக்கு எவ்வித தாக்கமும் இல்லை. 

கேள்வி : சீனாவிலிருந்த பல மாணவர்கள் இலங்கைக்கு மீண்டும் அழைத்துவரப்பட்டுள்ளனர். வுஹான் மாகாணத்திலிருந்து வரும் மாணவர்கள் தியத்தலாவையில் அமைக்கப்படும் விசேட இராணுவ வைத்திய முகாமில் தங்கவைக்கப்படவுள்ளனரா? 

பதில் : வுஹான் நகரில்தான் இந்த வைரஸ் பரவியுள்ளது. இதன் காரணமாக சர்வதேச ரீதியில் வுஹான் நகரிலிருந்து வருபவர்கள் தொடர்பில் அதிதீவிர பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன் காரணமாகவே இந்த மாணவர்களுக்கென தனி முகாமொன்று அமைக்கப்பட்டுள்ளது. குறைந்தது, 14 நாட்களுக்கு இவர்கள் தனிமையில் இருக்க வேண்டும். குறித்த வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானவர்கள் இலங்கைக்கு வந்தால் நோய் அறிகுறிகள் வெளியாக 14 நாட்களாகும். இலங்கையில் இந்த வைரஸ் பரவலை தடுக்கவே இவ்வாறு விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.   சீனாவின் வேறு நகரங்களில் இருந்து வந்த மாணவர்கள் அவர்களது வீடுகளுக்கே அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பாதிப்புகள் இல்லை. என்றாலும், அவர்களை தனிமையாக சில நாட்கள் வைத்திருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம். 

கேள்வி : கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானவை என நினைக்கின்றீர்களா? 

பதில் : இருக்கும் அவசரகால நிலைமையின் மூலம்தான் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். தேவைக்கு அதிகமாக பணத்தை செலவிடுவதில் அர்த்தமில்லை. சாதகத் தன்மையின் அடிப்படையிலேயே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், விஞ்ஞான பூர்வமான நடவடிக்கைளும், உலகில் ஏனைய நாடுகள் எடுக்கும் தீர்மானங்களை அவதானித்தும்தான் செயற்படுகின்றோம். ஆகவே, போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எவரும் அச்சப்படத் தேவையில்லை. 

கேள்வி : வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள முகக் கவசம் அணியுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் முகக் கவசத்தை அணிந்துதான் வெளியில் செல்ல வேண்டுமா? 

பதில் : இல்லை. அனைவரும் அணிய வேண்டிய அவசியமில்லை. கொழும்பு உட்பட சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும் நகரங்களில் வாழ்பவர்கள் அணிவது நல்லது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் வைத்தியசாலைகள், விமான நிலையம் உட்பட நோய் தாக்கம் ஏற்படுமென அச்சப்படும் இடங்களில் பணிபுரிபவர்கள் கட்டாயம் முகக் கவசத்தை அணிய வேண்டும். நோயாளர்களும் அணிவது பாதுகாப்புக்கு உகந்ததாகும். சாதாரணமாக நகரங்களில் அணிந்துகொண்டு செல்வது அவசியமற்றதாகும். அதனால் அவர்களுக்கு எவ்வித பலனும் இல்லை என்பதுடன் செலவுதான் ஏற்படும்.இந்த நோய்ப் பரவலை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் இலங்கை பிரஜைகள் அச்சப்படத் தேவையில்லை. 

கேள்வி : கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சில நாட்கள் செல்லுமென சீன அரசாங்கம் அறிவித்துள்ளது. ஒருவேளை நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர் மாணவர்கள் அல்லது எவரும் சீனாவுக்குச் செல்வது தொடர்பில் எவ்வாறான முறைமைகளை கையாள வேண்டும்? 

பதில் : இன்னமும் இந்த வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. இதற்கான மருந்துகளும் கண்டுப்பிடிக்கப்படவில்லை. நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டாலும் ஓர், இரு மாதங்கள் நாம் தொடர்ந்து அவதானம் செலுத்த வேண்டும். அதன் பின்னர்தான் அடுத்தகட்ட முடிவுகளை எடுக்க வேண்டும்.    

நேர்காணல்: சுப்பிரமணியம் நிஷாந்தன் 

Comments