உலக மயமாக்கலும் அது உருவாக்கிய பின் விளைவுகளும் | தினகரன் வாரமஞ்சரி

உலக மயமாக்கலும் அது உருவாக்கிய பின் விளைவுகளும்

உலகமயமாக்கம் (Globalization) என்பது 1980 – -90களில் எல்லோராலும் உச்சரிக்கப்பட்ட மந்திர வார்த்தையாக இருந்தது. குறிப்பாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பொருளாதார வளர்ச்சியை அடைந்து கொள்ள வேண்டுமாயின் உலகமயமாக்கல் செயன்முறையில் தம்மை இணைத்துக் கொள்வதன் மூலமே அது சாத்தியப்படும் என்ற தோற்றப்பாடு சர்வதேச ரீதியாக உருவாக்கப்பட்டது. உலகப் பொருளாதாரத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலமே முழு உலகத்தினதும் சுபீட்சமும் சமாதானமும் மேம்படும் என்பது வழக்காறான மதிநுட்பமாக (Conventional Wisdom) மாறியது. 

சர்வதேச ரீதியில் சந்தைகளை திறந்துவிடுதலும், சர்வதேச ரீதியிலான மூலதனத்தின் பாய்ச்சலை ஊக்குவித்தலும், பல்தேசியக் கம்பனிகளின் நேரடிமுதலீடுகளை கவர்வதும், உலகளாவிய நிதிச் சந்தைகளை திறந்து விடுதலும், வர்த்தகத்தின் விரிவாக்கமும் அரசாங்கக் கட்டுப்பாடுகளை நெகிழ்வுள்ளதாக மாற்றுதலும், அரசுதுறை தொழில் முயற்சிகளை தனியார் மயப்படுத்தலும் உலகமயமாக்கலின் கீழ் இடம்பெற்ற முக்கியமான நடைமுறைகளாகும். 

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற பல்தேசிய நிதி நிறுவனங்கள் (Multinational Financial Institutions) இக்காலப்பகுதியில் தம்மிடம் கடன் பெற வரும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்காக உருவாக்கிய கட்டமைப்பு சீராக்கல் கொள்கைகள் (Structural Adjustment Policies) மேற்படி செயன்முறைகளை கடன் நிபந்தனைகளாக (Conditionality) முன்வைத்தன. 

கிழக்காசிய நாடுகள் மேலே சொல்லப்பட்ட உலகமயமாக்கல் செயன்முறைகளை பின்பற்றிய காரணத்தினாலேயே பொருளாதார ரீதியில் குறுகிய காலத்தில் முன்னேற்றம் கண்டன எனவும் அதனால் இவ்விரு நிதி நிறுவனங்களும் நொந்து நூலாகிப் போய் தம்மிடம் நிதி உதவி நாடிவரும் அபிவிருத்தி நாடுகளின் அரசாங்கத்தோடு இணைந்து மேலே கூறப்பட்ட கட்டமைப்பு சீராக்கங்களை மேற்கொள்ள அவற்றுக்குள்ள விருப்பத்தை வெளிப்படுத்தும் அறிவிப்புகளை வெளியிட்டன.

இவ்விரு நிறுவனங்களின் நிபுணர்களின் தொழினுட்ப வழிகாட்டலுடன் அரசாங்கங்கள் உள்ளூர் பொருளாதாரத்தில் மேற்கொள்ள வேண்டிய சீராக்கங்களை முடிவு செய்யும். அதாவது சீர்திருத்தங்கள் யாவை என்பதை நிதி உதவி பெறும் அரசாங்கங்களே முடிவு செய்யும் என்பதை காட்டவே இந்த ஏற்பாடு. காசுக்காக அல்லல் படும் அரசாங்கங்கள் எப்படியாவது நிதி உதவி கிடைத்தால் போதும் என்ற அடிப்படையில் தலையாட்டுவது உலகில் ஒன்றும் புதிதல்ல. எனவே, விருப்பம் இல்லாவிட்டாலும் அல்லது சீர்திருத்தங்கள் பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்று தெரிந்தாலும் கடன் நிர்ப்பந்தங்களுக்கு கட்டுப்பட வேண்டிய நிலை உலக நாடுகள் பலவற்றுக்கு ஏற்பட்டது. 

சில அரசாங்கங்கள்    சீர்திருத்தங்களை ஆரம்பித்து இடை நடுவில் கைவிட்டன. சில ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றன. 1998 ஆண்டாகும்போது மேலே சொல்லப்பட்ட அமைப்பு சீராக்கக் கொள்கைகளின் வெற்றி தோல்வி பற்றி ஆய்வுகள் சர்வதேச நாணய நிதியினாலும் உலக வங்கியினாலும் பரந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. அந்த சுய விமர்சனங்கள் காரணமாக இந்த நிறுவனங்களின் கொள்கைகள் உலகளாவிய ரீதியில் அபிவிருத்தியையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதற்கு பதிலாக வறுமையையும், வருமான ஏற்றத் தாழ்வையும் அதிகரித்ததாக வெளிப்படுத்தப்பட்டது. 

இந்த நிலை உணரப்பட்டதன் விளைவாகவே வறுமை தணிப்பு மற்றும் வளர்ச்சிக் கடன் (Poverty Reduction and Growth Facility PGRF) என்னும் புதிய நிதிவசதி சர்வதேச நாணயம் நிதியினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அத்தோடு புத்தாயிரமாண்டு அபிவிருத்தி இலக்குகளும் (Millennium Development Goals - MDA) 2000ஆம் ஆண்டு அறிமுகம் செய்துவைக்கப்பட்டன. 

உலகமயமாக்களின் மிகமுக்கிய ஆதரவாளராக இருந்த உலக வங்கியின் முன்னாள் தலைவரான ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் (Jospeph Stiglitz) என்பார் உலக மயமாக்களுக்கு பிரதான விமர்சகராக மாறி அதன் பாதக விளைவுகளையும் கட்டமைப்பு சீராக்கல்கள் உலகின் மிக வறிய மக்களை பாதித்த விதம் பற்றியும் உலகமயமாக்கமும் அதன் அதிருப்தியாளர்களும் (Globalization and its discontents) என்னும் ஒரு நூலை வெளியிட்டார்.  இவர் நோபல் பரிசு பெற்ற ஒரு அமெரிக்க அறிஞராவார்.  பின் தாராண்மை வாதமும் சந்தைப் பொருளாதாரமும் தனியார் துறையை முன்செல்துறையாகக் கொண்ட வளர்ச்சிச் செயற்பாடுகளும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்னும் வாதம் அவரது நூலில் வலுவாக சொல்லப்பட்டது. 

இந்த விமர்சனங்கள் உலகமயமாக்களின் வேகத்தை சற்றே மந்தமடையச் செய்த போதிலும் 1990களின் இறுதிப்பகுதியில் புத்தாயிரமாண்டின் முதலிரு தசாப்தங்களிலும் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்ப மற்றும் இணைய வழித் தொடர்பாடல் புரட்சி உலகமயமாக்களின் இன்னொரு பரிணாமத்திற்கு வித்திட்டது. 

1990களின் முற்பகுதியில் உலகமயமாக்கள் செயன்முறையில் இணைந்துகொண்ட சீனாவும் இந்தியாவும் புதிய அவகாசத்தின் உச்சப் பயன்பாட்டை அடையும் வகையில் காய்களை நகர்த்திய போதும் இந்தியாவால் சீனாவின் அளவுக்கு பொருளாதாரத்தை விஸ்தரிக்க முடியவில்லை. 2015ஆம் ஆண்டாகும் போது சீனாவின்  ‘ஒட்டோபஸ்’உலகின் பெரும்பாலான பிரதேசங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ வந்து விட்டிருந்தன என்பது உண்மை. 

2008ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிதிநெருக்கடியைத் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்த அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகள், சீனா உள்ளிட்ட புதிய ‘பலவான்’களின் வருகையை விரும்பியிருக்க எந்த நியாயமும் இல்லை.

உலக மயமாக்கம் என்ற ஒன்றை தமது பொருளாதார வல்லாதிக்கத்தை பல்தேசிய கம்பனிகளுடாகவும் சர்வதேச நிதி நிறுவனங்கள் ஊடாகவும் பரப்புவதை ஊக்குவித்த மேற்குலகினால் பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் – பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்க – எழுச்சியினை சகித்துக் கொள்ள இயலவில்லை. “எந்த ஒரு நாயும் சிறந்த பாதுகாவலன் தான் தனது கையை கடிக்காத வரையில்”என்பதைப் போல உலக மயமாக்கத்தை சர்வதேச சஞ்சீவியாக நோக்கிய அமெரிக்கா ‘தேசிய வாதம்’என்னும் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு சீனாவுக்கு எதிரான வர்த்தகப்போரைத் தொடுத்தது. அதன் காரணமாக அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட இழப்புகள் பல்லாயிரம் அமெரிக்க டொலர்கள் என சுதந்திரமாகச் செயற்படும் ஆய்வு நிறுவனங்கள் கூறுகின்றன. 

உலகமயமாக்கத்தின் புதிய ஜாம்பவனாக பரிணமித்த சீனப் பெருமான் இப்போது கொரோனா வைரஸினால் மிகப் பலத்த அடியை சந்தித்திருக்கிறார். உலகமயமாக்களின் விளைவுகளான சுற்றுலா, வர்த்தக விரிவாக்கம் மற்றும் தொழிலாளர் இடப்பெயர்வு காரணமாகவே இது வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது என்பதை இங்கே குறிப்பிடுவது பொருத்தம். எனவே உலகமயமாக்கலுக்கு விழுந்த ஒரு பலத்த அடியாகவும் இதனைப் பார்க்க முடியும். 

உலக மயமாக்கம் என்பதில் இருந்து தம்மை பாதுகாக்க செல்வந்த நாடுகள் எடுத்திருக்கும் தேசியவாதக் கொள்கை (அமெரிக்காவின் தேசியப் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் கொள்கை) பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் தீர்மானம் என்பவற்றோடு அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ போன்ற பல்வேறு நிகழ்வுகள் உலகினை வேறு ஒரு திசைநோக்கி நகர்த்தி விடக்கூடும். 

உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய தொற்றுநோய் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தியிருக்கிறது. சிலர் கொத்தமல்லியும் பஸ் பங்குவவும் கொரோனாவை கட்டுப்படுத்தும் என்கின்றனர். வெள்ளைப் பூண்டை அவித்து சாப்பிடச் சொல்லி ஆலோசனை கூறுகிறார்கள். வேறுசிலர் “இப்படி ஒரு வைரஸ் வருமென்று எங்கள் மத நூலிலே ஏற்கெனவே சொல்லியிருக்கிறது”என்று சுய விளம்பரம் தேட முயற்சிக்கிறார்கள். 

இப்போது இலங்கையர்கள் சப்பை மூக்கையும் வெள்ளைத் தோலையும் கண்டால் தலை தெறிக்க ஓடுகிறார்கள்.  விரும்பியோ, விரும்பாமலோ – இலங்கையும் உள்ளூர் தேசிய வாதத்திற்கு 2005 இலிருந்தே திரும்பி விட்டிருந்தது ஆயினும் இலங்கைக்கு பொருளாதார ரீதியில் வலுவோ தனித்தியங்கக்கூடிய திறனோ திராணியோ இல்லை. 

எனவே, சர்வதேச விருந்தாளிகளை வரவேற்கத்தான் வேண்டும். முதலீடுகளை கூவி அழைக்கத்தான் வேண்டும் அதேவேளை அவசரகால நிலைமைகளின்போது ஆயத்த நிலையில் இருக்கவும் வேண்டும். கத்தி முனையில் நடப்பது போல இது இருப்பதால் இலங்கைக்கு அதன் பொருளாதார எதிர்காலம் கேள்விக்குறியாகத்தான் இருக்கப்போகிறது.   

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல்துறை,
கொழும்புப் பல்கலைக்கழகம்

Comments