மலையகத்தில் கரும்புலி பீதி | தினகரன் வாரமஞ்சரி

மலையகத்தில் கரும்புலி பீதி

தேயிலைத் தோட்டங்களில் கொழுந்து பறிக்கும் காலம் இன்றில்லை. மாறாக காடுகளில் நுழைந்தே கொழுந்து பறிக்கும் கொடுமை பெருந்தோட்டங்களில் நடப்பதாக அண்மையில் பாராளுமன்ற அமர்வின்போது மனக்கிலேசம் தெரிவித்துள்ளார் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ். 

சிவனொளிபாத மலைக்கு அண்மித்ததாக காணப்படுகின்றது ரிகாடன் வனப்பகுதி. இங்குதான் கண்காணிப்பு காமராவில் சிக்கியது அக்கரும்புலி. 6 அடி நீளம் 3 அடி உயரம் இருக்குமென தெரிவிக்கப்படுகிறது. இப்பகுதியில் கண்காணிப்புக் காமராக்களைப் பொருத்தியிருப்பது வனத்துறை அதிகாரிகள். இதேநேரம் காமராவில் தென்பட்ட கரும்புலியை கண்ணாற்கண்ட பொதுமக்கள் கடுங்கிலி கொண்டுள்ளனர். 

இதனையடுத்தே திலகராஜ் எம்.பி. பாராளுமன்றத்தில் மக்களின் மனப்பீதியைப் பதிவு செய்திருக்கிறார். அத்துடன் கடந்த காலங்களில் பேராதனைப் பல்கலைக் கழகத்தை மையமாகக் கொண்டுள்ள ஆராய்ச்சி நிலையம் ஒன்று புலி சிறுத்தைகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விதந்துரைத்திருந்தது.

ஆனால் இதுபற்றி எவருமே ஏறிட்டும் பார்க்கவில்லை என்று கவலையும் தெரிவித்தார் அவர். தவிர தோட்டத் தொழிலாளர்களும் பாதிக்கப்படக்கூடாது. அதேநேரம் அருகிவரும் இனமான கரும்புலி சிறுத்தைகளும் வாழவேண்டும். இதற்கு ஏற்புடையதான ஒரு முறைமை அவசியம் என்பதையும் அவர் வலியறுத்தி இருந்தார்.  

இவை வெறும் செய்திகளல்ல. அச்சுறுத்தல் சமாச்சாரம். அதனாலேயே மக்களிடம் பீதி இந்தளவுக்கு. இன்று பெருந்தோட்டங்கள் பெயரளவிலேயே தோட்டங்கள். வருங்காலங்களில் வனாந்தரங்களாக 1820 காலப்பகுதிக்குச் செல்லப்போவதன் அறிகுறி. தேயிலை மலைகள் புதருக்குப் புகலிடம் தருகின்றன. தேயிலைச் செடிகளுக்கடியில் புல் பூண்டுகளைத் தேடியது அந்தக்காலம். புல் பூண்டுகளுக்கு இடையே தேயிலைச் செடிகளைத் தேடி அலைய வேண்டியது இந்தக் காலம். இதுதான் பெருந்தோட்ட மக்கள் படும் அவலத்தின் அடையாளம்.  வேலை செய்வதற்கேற்ற தொழில் பாதுகாப்பு எதுவுமேயில்லை. அனர்த்தம் இடம்பெற்றால் தோட்ட நிர்வாகம் பொறுப்பேற்காது. அரசாங்கமும் அலட்சியமாகவே நடந்து கொள்ளும். வேலையைச் செய்ய வேண்டும். வரும் விளைவுகளைத்தாமே பொறுப்பேற்கவும் வேண்டும். காலையில் வேலைக்குப் புறப்படும் போதே உயிருக்கு உலை வைக்கப்படலாம் என்னும் உறுத்தல். வனவிலங்குகள் வலம் வருவதால் கொஞ்சம் அயர்ந்து இருந்துவிட்டால் ஆப்புதான். 

வில்பத்து, பின்னவலயைப் போல பெருந்தோட்டப் பிரதேசங்களும் சரணாலயம் ஆகிவிட்டதோ என்று சந்தேகம் வருமளவுக்கு வன விலங்குளின் உலா. முன்பு சிறுத்தைகள் மட்டுமே சீறிப்பயமுறுத்தின. இப்போழுது கரும்புலியொன்றும் காலாற வருகிறது பவனி. முன்பு வீடுவரை வந்து வீட்டுப்பிராணிகளை விருந்தாக்கி வந்துள்ளன வன விலங்குகள். தொழிலாளர்களையும் பதம் பார்க்கத் தவறுவது இல்லை. சிறுத்தைகளின் நடமாட்டத்தால் தினசரி தொல்லைகள். தொழிலாளர்கள் தமது சுயபாதுகாப்பை தாமே உறுதிசெய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். 

தாக்குதல்களில் இருந்து தப்பிக்கொள்ள வேண்டுமானால் சிறுத்தைகளை சிக்கவைக்க வேண்டும். அதற்காக வலை ஏதும் விரித்து தப்பித்தவறி சிக்கவைத்தால் போதும். வாரிச்சுருட்டிக் கொண்டு வாசலுக்கு வந்து குற்றப்பத்திரிகை நீட்டும் அகில இலங்கை வன பாதுகாப்புச் சங்கம். சிறுத்தைகளால் தொழிலாளர்கள்    தாக்கப்பட்டால் கரிசனைக் காட்ட நாதியே இல்லை. சிறுத்தைகளை சித்திரவதை செய்வது பாரிய குற்றம். இதுதான் வன பாதுகாப்புச் சங்கத்தின் நிலைப்பாடு. துன்பறுத்தல் கொலை அனைத்தும் எல்லா உயிரினங்களுக்கும் எதிர்மறையான விடயங்கள்தான். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமேயில்லை. 

ஆனால் மனித ஜீவன்கள் பாதிக்கப்படும் போது ஒருபக்கச் சார்பான அணுகுமுறையைக் கையாள்வது தான் அபத்தம். வன விலங்குகளைப் பாதுகாப்பது முக்கியம். சிறுத்தை கரும்புலி போன்றவை கண்மறைந்து கொண்டிருக்கின்றன. அவை தேசத்தின் வனச்செல்வங்கள்.

அதே நேரம் மக்கள் இவ்விலங்குகளால் தாக்கப்படுவதைத் தடுப்பதே நியதி. இதை விடுத்து சிறுத்தை புலிகள் ஒன்றும் ஆபத்தானவை அல்ல என்று சமாதானம் சொல்வது சரியானதல்ல. 

தம்மைத் தாக்க வருபவரை தற்பாதுகாப்புக்காக தமது நகங்களால் பருவி விடுவது பொதுவாகவே விலங்கினங்களின் வழக்கமாம். சிறுத்தைகளும் இதில் விதிவிலக்கல்ல என்பது வன விலங்கு திணைக்களத்தின் வாதம்.  

சிறுத்தைப் போன்ற விலங்கினங்கள் தேயிலைச் செடிகளுக்கு அடியில் வாழ்வதைப் பெரிதும் விரும்புவதாக ஆய்வு ஒன்று கூறுகின்றது. இதனாலேயே பெருந்தோட்டப் பகுதிகளுக்கு படையெடுப்பதாக காரணம் சொல்கிறது வன விலங்கு திணைக்களம்.  தவிர சிறுத்தை தாமே முன் வந்து தாக்குதல் தொடுக்கும் குணம் கொண்டதல்ல என்பது ஒரு தகவல்.  பார்ப்பதற்கே பயங்கரமான தோற்றம் கொண்டது சிறுத்தை. அதை வலியச் சென்று பல்லைப் பிடித்துப் பார்க்க தோட்டத் தொழிலாளர்கள் என்ன முட்டாள்களா? அவர்களுக்குத் தொழில் செய்ய வேண்டியது நிர்ப்பந்தம். எனவே தேயிலைப் புதருக்குள் சிறுத்தை இருக்குமா? கரும்புலி காத்துக்கிடக்குமா? அட்டை பாம்பு அடைக்கலம் கொண்டு அடைந்து கிடக்குமா? என்றெல்லாம் ஆய்வு செய்வதை விட்டு தொழில் செய்யமுடியாது. அத்தனை அவசரம். அச்சத்துடனேயே ஆரம்பமாகும் தொழில் அதே அச்சத்தோடும் ஆயாசத்தோடும் முடிவுபெறும். இடையில் எத்தனை இடையுூறுகள். 

குளவிக்களும் தேனீக்களும் தேடித்தேடி வந்து கொட்டித் தீர்க்கும்.  சிறுத்தை கரும்புலி பன்றி பயத்தோடு இது வேறு இடர்  குளவியும் தேனீயும் கூட்டமாக வாழ பெருந்தோட்ட தேயிலைக் காடுகளே தளம். குளவிகள் கொட்டுவதால் துள்ளத் துடிக்க மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்படும் காட்சி இங்கு அடிக்கடி தரிசனம். ஒரே தடவையில் 100 பெண் தொழிலாளர்களைக் கொட்டித் தீர்த்த குளவிகளும் இங்கு சகவாசம். இப்படி கொண்டு செல்லப்பட்டவர்களில் உயிரிழந்தவர்களின் கதைகளும் உண்டு. தோட்டத்தில் மருத்துவமனை இருக்காது. இருந்தாலும் மருந்துகள் காணப்படாது. அம்பியூலன்ஸ் வசதியும் இல்லை. இன்னும் தோட்ட லொறியையும் டிரக்டர் வண்டியையும் நம்பியிருக்கும் தோட்டங்கள் எராளம். ஏழு குளவிகள் ஓரே நேரத்தில் கொட்டும்போது அதுநல்ல பாம்பு விஷத்துக்கு ஒப்பாகும் என்பது பொதுவான நம்பிக்கை. இது தோட்டப் புறங்களில் சா்வசாதாரணம்.  

குளவிக் கொட்டினால் சம்பந்தப்பட்டவாின் தொண்டை. உதடு, முகத்தில் வீக்கம் ஏற்படும். குளவி கொட்டிய இடங்களில் அரிப்பு உண்டாகும். மூச்சு முட்டும். தலைச் சுற்றும் உணா்விழப்பு எழும். குமட்டலும் வாந்தியும் கூடிவரும். இப்படி நிறைய உபாதைகள். இறுதியில் உயிரிழப்பாகவும் முடியும். இறப்புக்கும் இடமுண்டு. ஆனால் குளவி தேனீ தாக்குதல்கள் பெருந்தோட்டப் பிரதேசங்களில் தினசரி நிகழ்வுகள். ஊடகங்களுக்கு அவை செய்திகள். உயிரிழப்பு ஏற்படுமாயின் அரசியல்வாதிகளுக்கு அனுதாபங்கள். நிவாரணம் என்னும் பெயரில் சில நிஜமில்லாத நடப்புகள். 

ஆனால் இன்னுமொரு உயிர்போவதைத் தடுக்க உருப்படியாக எதுவுமே நடக்காது. தோட்ட நிர்வாகங்கள் எவ்வித பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்துவதே இல்லை. பெருந்தோட்டங்களைத் துப்புரவு செய்ய வேண்டும் என்று கூட்டு ஒப்பந்தம் நடக்கும்போது தொழிற்சங்கங்கள் கோரும். கம்பனி தரப்பு இணக்கம் கூறும். ஆனால் ஆளணிப்பற்றாக்குறையை ஆதாரமாகக் காட்டி தேயிலை மலைகளை ஆரண்யமாக்கிக் கொண்டிருக்கின்றன தனியார் கம்பனிகள். 

தொழில் செய்யும் தளத்தில் தொழிலாளர்களுக்கு எவ்வித பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்படுவது இல்லை. கழிவறை வசதி கிடையாது. உணவருந்த தற்போது நிழலுக்கும் வழியில்லை. இருக்கும் மரங்கள்வெட்டி காசாக்கப்பட்டு விடுகின்றன. இதனால் காடுகளுக்கிடையே தொழில். அதற்குள்ளேயே உணவு. ஆக, வன விலங்கு சஞ்சாரம் செய்யும் பிரதேசங்களே தோட்ட மக்களின் வேலைத்தலங்கள்.  

சிறுத்தை புலிகளை அப்பறப்படுத்த முடியும். குளவி தேனீக்கூடுகளை அகற்ற வழி வகைகள் உண்டு. இதற்கான பயிற்சிப் பெற்ற ஊழியர்களும் உள்ளார்கள். தவிர குளவி தேனீ தாக்குதல்களில் இருந்து தப்பிக்கொள்ள கவச உடைகளும் இருக்கவே செய்கின்றன. முதலுதவி முறைகளில் தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளிக்கலாம். ஆனால் அதனை குறைந்தபட்சம் மனிதாபிமான ரீதியிலாவது கையாள எத்தரப்பும் தயாரில்லை.  

பெருந்தோட்டக் காணிகள் முறையாக பராமரிக்கப்படாமையினாலேயே இந்நிலைமை. இதற்கான அழுத்தங்களைப் பிரயோகிக்கும் திராணி மலையக தொழிற்சங்கங்களுக்கு இருப்பதாக தெரியவில்லை. குளவி தேனி கொட்டி, சிறுத்தை பாம்பு பன்றித் தாக்கி மரணம் சம்பவிக்கும்போது மட்டும் சவப்பெட்டிக்கு காசு, இழப்பு நிவாரணம் என்று முண்டியடிக்கும் தோட்ட நிர்வாகங்கங்கள். அதை விட இவ்வாறான திடீர் விளைவுகளைத் தடுப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதில் அக்கறை காட்டினால் அநாவசிய உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம். அச்சத்துடன் தொழில் புரிவதை தடுக்கலாம். 

கரும்புலி பிரவேசம் நடந்துள்ளமை உறுதியாகி உள்ளது. இந்த நேரத்திலாவது பெருந்தோட்டப் பிரதேசங்களில் அச்சத்துடன் தொழில்புரிய வேண்டிய அச்சுறுத்தல் அகல ஆவன செய்ய வேண்டியது அவசியமாகும். ஆகுமா?.      

பன். பாலா

Comments