வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களாகியும் இன்னும் குடிநீர் வசதியில்லை | தினகரன் வாரமஞ்சரி

வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களாகியும் இன்னும் குடிநீர் வசதியில்லை

களுத்துறை மாவட்டத்தின் தெபுவன, அரப்பலாகந்த தோட்டம், லிஸ்க்லேன் பிரிவில் வீடமைப்புத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களாகியும் இன்னும் குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என அங்கு வாழ்ந்துவரும் மக்கள் தெரிவிக்கின்றனர்.  

மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கி வந்த தெபுவன, அரப்பலாகந்த தோட்டம், லிஸ்க்லேன் பிரிவைச் சேர்ந்த 29 குடும்பங்களின் பாதுகாப்பு கருதி தோட்ட நிர்வாகத்தினால் காணி ஒதுக்கப்பட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ஏழு பேர்ச் காணி பகிர்ந்தளிக்கப்பட்டு கடந்த ஆட்சியில் மலைநாட்டு புதிய கிராமம், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் ஒவ்வொரு வீடும் 10 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு பயனாளிகளுக்கு இலவசமாகவே கையளிக்கப்பட்டது.  

இங்கு ஆரம்பிக்கப்பட்ட குடிநீர்த்திட்டம் பூர்த்தி செய்யப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இருப்பது குறித்து அதிருப்தியடைந்துள்ள குடியிருப்பாளர்கள் கடந்த ஒன்றரை வருட காலமாக குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.   குடிநீர்த் திட்டத்துக்கென குறித்த அமைச்சினால் 18 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் வீட்டுத்திட்டம் திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் சில மாதங்களுக்குப் பின்னரே ட்ரஸ்ட் நிறுவனத்தின் மேற்பார்வையில் குடிநீர்த் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.  

இருந்தபோதிலும் சுத்தமான பொருத்தமான இடத்தில் கிணறு தோண்டப்படாது நீரோடையொன்றுக்கு அருகில் தோண்டப்பட்டு சிலிண்டர்கள் இறக்கப்பட்டு சுற்றிவர சீமெந்து கற்களால் கட்டப்பட்டுள்ளது.  

கிணற்று நீர், நீரிரைக்கும் இயந்திரத்தின் மூலம் நீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு வீட்டுத்திட்டத்துக்கு அருகில் உயரத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 20 ஆயிரம் லீற்றர் நீரைக்கொள்ளும்  பிளாஸ்ரிக் தண்ணீர்த் தாங்கியில் நிரப்பி அதிலிருந்து குடியிருப்பாளர்களுக்கு நீரை விநியோகிக்கும் முகமாக திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.  

ஆனால் இந்த நீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லாது களிமண் நிறமாக காணப்படுவதால் குடியிருப்பாளர்கள் இந்த நீரைக் குடிப்பதைத் தவிர்த்து மலசலகூடத் தேவைகளுக்கு மட்டுமே பாவித்து வருகின்றனர்.  

நீண்ட தூரம் நடந்துசென்று பாலுங்கிணறு ஒன்றிலிருந்தே பெரும் சிரமங்களுக்கு மத்தியில் குடிநீரை சுமந்துவந்து தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர்.  

வீட்டுத்திட்டம் திறந்து வைப்பதற்கு முதல்நாள் பவுசர் மூலம் நீரைக் கொண்டு வந்து ஒவ்வொரு வீட்டினதும் கூரையில் வைக்கப்பட்டிருந்த சிறிய அளவிலான பிளாஸ்ரிக் தண்ணீர் தாங்கியில் நிரப்பி மக்களையும், பிரமுகர்களையும் ஏமாற்றியுள்ளனர்.  

குடிநீர்த் திட்டத்துக்கென 17 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் இத்திட்டம் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்டு குடிப்பதற்கு உகந்த நீரைப் பெற்றுக்கொடுக்க முன்வராது அரைகுறையாக கைவிடப்பட்ட நிலையில் கிடப்பது குறித்து அதிருப்தி அடைந்துள்ள குடியிருப்பாளர்கள் 17 இலட்சம் ரூபாவுக்கு நடந்தது என்னவென்று கேள்வியெழுப்புகின்றனர்.  

குடிநீர்ப்பிரச்சினை தொடர்பாக முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் அவரது அதிகாரிகள் அமைச்சின் முன்னாள் செயலாளர் ரஞ்ஜனி நடராஜபிள்ளை, பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் மற்றும் பிரதேச அரசியல்வாதிகள் பலரினதும் கவனத்துக்கு கொண்டுவந்த போதிலும் எந்தவொரு பலனும் ஏற்படவில்லை.  

2018ம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து ட்ரஸ்ட் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த எஸ். அருள்சாமியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அவர் குறித்த தோட்டத்துக்குச் சென்று பார்வையிட இருப்பதாகத் தெரிவித்திருந்த போதிலும் அவர் திடீரென காலமாகிவிட்டார். அத்துடன் மீண்டும் பழைய ஆட்சியே பதவிக்கு வந்தது.  

2018.10.17ஆம் திகதி பிராந்திய தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் குறித்த அமைச்சுக்கு சென்று பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜை சந்தித்து விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். அவர் உடனே அமைச்சில் பணியாற்றிய பெண் அதிகாரி ஒருவரை வரவழைத்து அவரிடம் இதுகுறித்து கேட்டபோது குடிநீர்த்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது எனக்கூறி உண்மையை மறைத்துவிட்டார்.  

இதுபோன்று அதிகாரிகளே அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தவறான தகவல்களை வழங்கி அவர்களை சங்கடத்தில் ஆழ்த்தி விடுகின்றனர்.  

இதேவேளை அரசியல்வாதிகள் அவசரமான முடிவு எடுக்கும்போது அதிகாரம் உள்ள அதிகாரிகளின் கருத்துக்கள் கவனத்திற்கொள்ளப்படுவதில்லை. இந்த வீட்டுத்திட்டம் அரசியல்வாதிகளின் அவசரத்துக்கே திறந்து வைக்கப்பட்டது.  

இதேவேளையில் இங்கு அமைந்துள்ள வீடுகளில் சமையலறை மற்றும் குளியலறையிலிருந்து வெளியேறும் கழிவு நீர், மழை நீர் வழிந்தோட வடிகான் வசதி அமைக்கப்படாமையால் நீரை வெளியேற்றிக்கொள்வதில் குடியிருப்பாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதுடன் சண்டை சச்சரவுகளுக்கும் முகம்கொடுக்க வேண்டியுள்ளனர்.  

வீட்டுத்திட்டத்துக்கான பாதை கொன்கிறீட் இடப்பட்டுள்ள போதிலும் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத காரணத்தால் மழைக்காலத்தில் மழைநீர் மண்ணை அரித்துக்கொண்டு வீட்டு முற்றங்களில் தேங்கி நிற்பதைக் காணமுடிகிறது.  

இந்த வீட்டுத்திட்டம் 2018ம் ஆண்டு ஒக்டோபர் 17ஆம் திகதி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினரும் மத்துகம தொகுதியின் ஐ.தே.க பிரதான அமைப்பாளருமான ஜகத் வித்தானகே, அமைச்சின் முன்னாள் செயலாளர் ரஞ்சனி நடராஜபிள்ளை, ட்ரஸ்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வீ. புத்திரசிகாமணி ஆகியோர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இங்கிரிய மூர்த்தி

Comments