மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கான AYATI தேசிய மையம் ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் | தினகரன் வாரமஞ்சரி

மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கான AYATI தேசிய மையம் ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம்

மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கான தேசிய மையமானAYATI, மாற்றுத்திறனாளி சிறுவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் சேவைகளை வழங்குவதற்காக உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளார். 

மாற்றுத்திறன் என்பது ஒரு தேசிய மட்டத்திலான பிரச்சினையாக இனங்காணப்பட்டுள்ளதுடன், அனைவரும் இதன் மீது கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. கிடைக்கப்பெற்றுள்ள புள்ளி விபரங்களின் அடிப்படையில், சிறுவர்கள் மத்தியில் ஐந்தில் ஒருவர் (20%) என்ற வீதத்தில் உளரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ ஏதோ ஒருவிதத்தில் மாற்றுத்திறனாளிகனாக உள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. இதனை ஆரம்பத்திலேயே இனங்கண்டு உரிய வழிமுறைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கும் பட்சத்தில் கணிசமான மேம்பாடுகளை அடையப்பெறமுடியும் என்பதுடன், அத்தகைய சிறுவர்கள் தமது ஆற்றலை முழுமையாக வெளிக்கொணரவும் இடமளிக்கும்.  

தேசிய மட்டத்திலான இந்த தேவைப்பாடானது நிலைபேறு கொண்ட தீர்வை வழங்குவதற்காக தனித்துவமான ஒருஅரச-தனியார்பங்குடமையை ஏற்படுத்த வழிவகுத்துள்ளது. களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் இதற்கான நிலம் மற்றும் மருத்துவ ரீதியான உதவிகளை வழங்குவதுடன், இரு முன்னணி கூட்டாண்மை நிறுவனங்களான Hemas Holdings மற்றும் MAS Holdings ஆகியன முக்கியமான நன்கொடையாளர்களாகச் செயற்பட்டு AYATI மையத்தை அமைப்பதை முன்னின்று வழிநடாத்தியுள்ளன.

13மாதங்கள் என்ற மிகவும் குறுகிய காலப்பகுதியில் இந்த மையத்தை இலவசமாக நிர்மாணிப்பதற்கு இலங்கை இராணுவம் தமது அளப்பரிய சேவையை ஆற்றியுள்ளது. செவிப்புலன் உபகரணங்களை வழங்குவதற்காக றோட்டரிக் கழகம் கைகோர்த்துள்ளதுடன், மூன்றாவது முக்கியமான நன்கொடையாளராக Roshan Wijerama Family Foundation’இணைந்துள்ளது. AYATI மையம் நாட்டின் அனைத்துப் பாகங்களிலுமுள்ள இலங்கை மக்களுக்கும் தனது சேவைகளை இலவசமாக வழங்குவதற்காக தற்போது திறந்துள்ளது. 

வாரம் முழுவதும் பல்வேறுபட்ட மருத்துவத் தொழிற்பாடுகளை AYATI மையம் முன்னெடுக்கும். ஆரம்பகட்ட மருத்துவ பரிசோதனைகளுடன் அனைத்து வகையான மாற்றுத்திறன்களையும் (உடல் ரீதியான மற்றும் உளரீதியான) உள்ளடக்குவதுடன், பேச்சு மற்றும் மொழிப் பயிற்சி, செவிப்புலன் சிகிச்சை, பிஸியோதெரபி சிகிச்சை,குடும்பசிகிச்சை, தொழில் சிகிச்சை போன்றவை அடங்கலாக பல்வேறு தொடர் சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Comments