அரசியல் நடிகர்களின் போலி முகமூடிகளை கிழித்தெறியும் காலம் | தினகரன் வாரமஞ்சரி

அரசியல் நடிகர்களின் போலி முகமூடிகளை கிழித்தெறியும் காலம்

நான்கரை வருடம் எதிர்க்கட்சி எனும் போர்வையில் அரசுடன் இணைந்து கொண்டு தங்களிற்கு தேவையான சலுகைகள் அனைத்தையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பெற்றார்கள். மக்களின் தேவைகள் அபிலாசைகள் அனைத்தையும் அடமானம் வைத்து அவர்கள் நடாத்திய இரட்டை வேட அரசியலை எமது மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள் என்கிறார் பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார். அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய செவ்வி...

​கேள்வி: சமூக சேவையாளராக பல வருடங்கள் பொதுநல விடயங்களில் ஈடுபட்டு வரும் நீங்கள் தற்போது அரசியல் ரீதியாக தங்களின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான காரணம்?  

சமூக சேவை என்பது நான் இன்று நேற்று தொடங்கியதொன்றல்ல. காலங்காலமாக அதனை நான் செய்துவருகின்றேன். சமூக சேவையின் மூலமாக எமது மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளில் ஒரு சிலவற்றை மாத்திரமே என்னால் தீர்க்க முடிகின்றது. மக்களின் தேவைப்பாடுகள் அவர்களுடைய அபிலாசைகள் நிறைவேற்றப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. எமது மக்களின் கல்வி, சுகாதாரம், அவர்களுடைய பொருளாதாரம் சார்ந்த குறைபாடுகள் குறிப்பாக இளைஞர் யுவதிகளின் வேலையில்லாத் திண்டாட்டம் இவை அனைத்தையும் நான் நன்கு உணர்ந்தவன்.  

அந்தவகையில் நீண்ட காலமாக துன்பத்தினால் வாடிக்கொண்டிருக்கும் எமது மக்களுக்கு என்னால் இயலுமான அளவிற்கு உதவிகளைச் செய்ய வேண்டும். எமது மக்களின் தற்போதைய நிலை மாறவேண்டும். இதன்பிரகாரம் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் கட்சியில் இணைந்து அவருடைய வழிகாட்டலின்கீழ் தற்போது பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம அமைப்பாளராகவும் இயங்குகிறேன்.  

​கேள்வி: எதிர்வரும் காலங்களில் எமது அரசியல் தலைவர்கள் எவ்வாறான அரசியல் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?  

எமது தலைமைகள் எதை செய்ய வேண்டுமோ அதனைச் செய்யாமல் எதையெல்லாம் செய்யக்கூடாதோ அவற்றையெல்லாம் செய்து வந்திருக்கிறார்கள் என்றே கூறவேண்டும். குறிப்பாக எமது மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு வாக்களித்தவர்கள். இது அனைவருக்கும் தெரியும் அதனால் எமது மக்கள் இற்றைவரை அனுபவித்துவரும் இன்னல்களும் எமக்கு புரியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் செயற்பாடுகள் எமது மக்களின் அபிலாசைகளை ஒருபோதும் தீர்த்து வைக்கப் போவதில்லை. மாறாக எமது மக்களின் வாக்குகளை பெற்று அவர்கள் சுகபோக வாழ்க்கையை அனுபவித்ததே வரலாறு. இனியும் எமது மக்கள் ஏமாறுவதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லை. சுமார் நான்கரை வருடம் எதிர்க்கட்சி எனும் போர்வையில் அரசுடன் இணைந்து கொண்டு தங்களிற்கு தேவையான சலுகைகள் அனைத்தையும் பெற்றார்கள் மக்களின் தேவைகள் அபிலாசைகள் அனைத்தையும் அடமானம் வைத்து அவர்கள் நடாத்திய அரசியல் இரட்டை வேட அரசியலை எமது மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். எனவே எமது நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை புரிந்துகொண்டு எவ்வாறான அரசியல் நகர்வுகள் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூடியவை என்பதை தீர்க்கதரிசனமாக சிந்தித்து அதன்பால் செயற்பட வேண்டிய காலம் தற்போது காணப்படுகின்றது. தற்போதைய அரசியல் நடிகர்களின் போலி முகமூடிகளை கிழித்தெறியும் காலம் நெருங்கிவிட்டது இதுவே யதார்த்தம்.  

​கேள்வி: இன்னும் ஓரிரு மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் ஒன்று வரக் காத்திருக்கும் நிலையில் தாங்களும் அத்தேர்தலிலே போட்டியிடப் போவதாக அறியக்கூடியதாக இருக்கின்றது. பொதுஜன பெரமுன கட்சியின் சார்பாக தங்களின் அரசியல் முன்னெடுப்புக்கள் எவ்வாறிருக்கின்றது?  

பசில் ராஜபக்ஷவின் நேரடி வழிகாட்டலில் எதிர்வருகின்ற பொதுத் தேர்தலில் எமது நாட்டின் தற்போதைய ஆளும் தரப்பும் எங்களுடைய கட்சியுமாகிய இலங்கை பொதுஜன பெரமுன கட்சியில் களமிறங்குவதற்கு முடிவெடுத்திருக்கிறேன். எனது இந்த முடிவிற்கு காரணம் எங்களுடைய கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ மற்றும் எமது நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரிடத்தில் எமது மாவட்ட தமிழ் மக்கள் மீது காணப்படுகின்ற அக்கறை மற்றும் எமது அரசினுடைய சமூக பொருளாதார திட்டங்களை எமது மாவட்ட தமிழ் மக்களுக்கு விகிதாசார அடிப்படையில் எந்தவித பாகுபாடுகளுமின்றி சரியான முறையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எங்கள் கட்சியின் எண்ணம் என்பனவாகும். வருகின்ற தேர்தல் ஆளும் தரப்பில் தமிழர்களை தெரிவு செய்யப்போகின்ற ஒரு தேர்தலாக நிச்சயம் அமையும்  

​கேள்வி: இந்த அரசாங்கம் அரசியல் தீர்வு விடயத்தில் சுமூகமான ஒரு தீர்வினை வழங்க முன்வருமா? வருமெனின் அது எவ்வாறு அமையும்?  

 எமது அரசாங்கம் எமது நாட்டிற்கான புதியதொரு அரசியல் யாப்பினை வழங்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றது. அதில் எமக்கு வழங்கப்பட வேண்டிய நியாயமான தீர்வுகள் நிச்சயம் உள்ளடக்கப்படும் அதுமட்டுமல்லாமல் ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதியாகவும் புதிய அரசியல் யாப்பு அமைந்திருந்தது. தமிழ் மக்களிற்கான எந்தவொரு தீர்வினை வழங்குவதாயிருந்தாலும் அது தற்போதைய நாட்டின் தலைமைத்துவமான கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் மூலமாக வழங்கப்படும்போதே அது நாட்டின் பெரும்பான்மை மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது அனைவரும் அறிந்தது.  

​கேள்வி: எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தல் தமிழர்களைப் பொறுத்தமட்டில் பாரிய மாற்றம் ஒன்றினை ஏற்படுத்தும் பலப் பரீட்சைக் களமாகவே இருக்கப்போகின்றது பல சுயேட்சைக் குழுக்கள்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ,பெரும்பான்மை தேசியக் கட்சிகள் எனப் பல கட்சிகள் போட்டியிடுகின்ற நிலையில் தங்களுக்கான மக்களின் ஆதரவு எவ்வாறிருக்கின்றது?  

நான் மேலே கூறியதைப்போன்று தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராலும் ஏனைய பல அரசியல் கட்சிகளாலும் ஏமாற்றப்பட்ட மக்கள் தற்போது மாற்றத்தினை தேடி காத்திருக்கிறார்கள். இதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை. சுயேட்சைக்குழுக்கள் பல தங்களின் பல்வேறுபட்ட நோக்கங்களிற்காக களமிறங்குகிறார்கள். குறிப்பாக தங்களுடைய அரசியல் வாழ்க்கையினை தக்கவைப்பதற்காகவும் தமிழ் மக்களினுடைய வாக்குகளை வீணடிப்பதற்காகவும் தாம் பெற்றுக்கொள்ளும் குறித்த வாக்குகளை காட்டி அடுத்துவரும் தேர்தல்களில் தங்களுடைய ஆதரவினைத் தருவதாக கூறி ஏனைய கட்சிகளிடமிருந்து பணம் உழைப்பதற்காகவும் களமிறங்குகிறார்கள். ஆனாலும் மக்கள் தற்போது இவர்கள் போன்ற அரசியல் மாபியாக்களை பற்றி தெளிவடைந்திருக்கிறார்கள். ஆளும் தரப்பினருடைய அரசியல் பலம் தமது மீட்சிக்கு தேவை என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதன் காரணமாக நாளுக்கு நாள் எனக்காக மக்கள் ஆதரவு பெருகிக்கொண்டு வருகிறது. அவர்களுடைய ஆதரவினை எமது அலுவலகம் தேடிவந்து தெரிவிக்கிறார்கள் நாளாந்தம் நூற்றுக்கணக்கான மக்கள் எமது அலுவலகத்திற்கு வருகின்றனர். மக்கள் தங்களுடைய ஆதரவினை தொடர்ந்து வழங்குவார்கள் என நம்புகின்றேன் .  

​கேள்வி: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சிந்தனைக்கமைவாக முன்வைக்கப்பட்ட தொழிலற்ற இளைஞர் யுவதிகளுக்கான 35000ரூபா வேதனத்துடனான தொழில் வழங்கும் திட்டமானது எவ்வாறானதொரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது?  

நல்லதொரு வினா எழுப்பியிருக்கின்றிர்கள் உண்மையில் வறுமையினை எமது நாட்டிலிருந்து இல்லாதொழிக்கவே நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பினை இளைஞர் யுவதிகளுக்காக ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார். எமது நாடு எதிர்நோக்குகின்ற மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக வறுமை காணப்படுகின்றது. அதனை வெற்றி கொள்வதே இதன் நோக்கமாகும் எனவேதான் வறுமையில் வாடுகின்ற குடும்பங்களிலிருந்து கல்வித்த​ைகமை பெருமளவில் இல்லாத இளைஞர் யுவதிகளை தெரிவு செய்து அவர்களுக்கான தொழில் பயிற்சியினை வழங்கி, அவர்களை அரச செயற்திட்டங்களில் இணைப்பதன் மூலமாக வறுமை நிலை நீங்கி குடும்பங்களின் நிலையான வருமானத்தினை பெற்றுக்கொடுத்து வறுமையை இல்லாதொழிப்பதே ஜனாதிபதியின் சிந்தனையாகும்.

நேர்காணல்: பத்மசிறி - ஆரையம்பதி தினகரன் நிருபர்

Comments