சவால்களை சந்திக்கும் துணிச்சலுடன் அரசியல் களத்துக்கு வந்திருக்கிறேன்! | தினகரன் வாரமஞ்சரி

சவால்களை சந்திக்கும் துணிச்சலுடன் அரசியல் களத்துக்கு வந்திருக்கிறேன்!

மலையக அரசியலில் ஒரு விழிப்புணர்வையும், தோழர் இளஞ்செழியனின் பின்னர் சமூக இலட்சியத்துடன் போராட்ட குணம் கொண்ட இலட்சியக் குரலை எழுப்பியவருமான பெரியசாமி சந்திரசேகரனின் மகள் இவர். ஒரு சட்டத்தரணி. அப்பாவைப் போலவே இலட்சிய வேட்கையும், போராட்டக் குணமும் தான் என்ன செய்யப் போகிறேன் என்பதில் தெளிவான சிந்தனையும் கொண்டவராக இருக்கிறார். மலையகம் என்றால் அது பெருந்தோட்டங்களும் தொழிலாளர்களும்தான், அவர்களுடைய பிரச்சினைகளே எமது பிரச்சினைகள் என்பதாக இவ்வளவு காலமாக காட்டப்பட்டு வந்த சிந்திரத்தை மறுத்து, மாறிவரும் மலையக சமூகத்தின் வேறுபட்ட மற்றும் உரிமை அரசியலை விதைத்து போதிக்க விரும்புகிறவராக அரசியலுக்கு வந்திருக்கிறார் அனுஷா சந்திரசேகரன்.  

இந்த உரிமை அரசியலை ஏற்கனவே திலக்கராஜ் முன்வைத்து பேசி வருகிறார், ஆற்றியும் வருகிறார். இப்போது இதோ இன்னொரு உரிமை அரசியல் பேசும் இளம் பெண் சந்திரசேகரன் பாசறையில் இருந்து வந்திருக்கிறார். மாற்று அரசியல் பேசும் இள இரத்தங்கள் பல இன்னும் மலையக அரசியலுக்கு வர வேண்டும். மலையக இளம் சமூகம், சாராயத்துக்கும், சோற்றுப் பார்சலுக்கும், அஞ்சுக்கும் பத்துக்கும் ஏமாறாமல் உரிமை அரசியலுக்கு உரம் சேர்க்க வேண்டும்.  

இந்த சிந்தனை வந்ததற்கு எல்லாம் காரணம் கடந்த வாரம் எமது அலுவலகத்துக்கு வந்து எம்முடன் மலர்ந்த முகத்துடன் உரையாடிய அனுஷா சந்திரசேகரன் தான். அவர் தன் புது மாப்பிள்ளை கணவருடன் வந்திருந்து தனது அரசியல் பற்றி எம்முடன் பேசினார்.  

“திலகராஜ் நேரடியாகவே பாராளுமன்றம் வந்தவர்தான். நாமல் ராஜபக்ச மாகாண சபை உறுப்பினராக இருந்து பாராளுமன்றம் வந்தவர் அல்ல. இப்படிப் பலரைச் சொல்லலாம். ஆனால் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லும் போது மட்டும் படிப்படியாக வர வேண்டும் என்றும் மாகாண சபை உறுப்பினராக அனுபவம் பெற்று பாராளுமன்றம் செல்லலாம் என்றும் எனக்கு அறிவுரை சொல்லப்படுகிறது. இதை நான் நிராகரிக்கிறேன். பாராளுமன்ற அரசியல் மூலமாக என் மக்களுக்கு சேவையாற்றத் தீர்மானித்திருக்கிறேன்” என்று கூறியபடியே அடக்கமான சாரியில் வந்து அழுத்தமான பேச்சுடன் வசதியாக அமர்ந்து கொண்டார் அனுஷா.  

நீங்கள் சட்டத்தரணி. வருமானம் வரும் தொழில். அப்பா அரசியல்வாதியானாலும் ஒரு சமயத்தில் கையை சுட்டும் கொண்டார். அவருக்குப் பின் அம்மா அரசியலுக்கு வந்து காயப்பட்டு போனார். உங்களுக்கு ஏன் இந்த அரசியல்? என்று கேட்டதும் பரபரப்பானார் அனுஷா.  

“அப்பா ஒரு சித்தாந்தவாதி. இ.தொ.கா.வில் இருந்த அவர் தனது சிந்தனைகளுக்கு அந்த இடம் சரிபட்டு வராது என்று கருதியதால் வெளியே வந்தார். மலையக மக்கள் முன்னணி என்ற புதிய அமைப்பை – அரசியல் கட்சியை ஆரம்பித்தார். உண்மையில் அவர் கட்சியைத்தான் ஆரம்பித்தார். தொழிற்சங்கத்தை அல்ல. எனினும் அன்றைய மக்கள் சிந்தனைக்கும் சூழலுக்கும் தொழிற்சங்கத்தின் தேவை இருந்ததால் தொழிற்சங்கமும் உதயமானது. அவர் கட்சி ஆரம்பித்தது சரியானது என்பதற்கு அவரது கட்சியில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையே நிரூபணம் செய்தது. அப்போது தொழிலாளரை அடிப்படையாகக் கொண்ட மலையகக் கட்சிகளே இருந்தன. அப்பாவின் கட்சியில் படித்த இளைஞர்கள், நிறைய பெண்கள், பாடசாலை ஆசிரியர்கள் என்போர் ஆயிரக் கணக்கில் இணைந்தனர் அதை சிந்தனை புரட்சி நிகழ்ந்ததாகத்தான் வர்ணிக்க வேண்டும்.  

அப்பா இப்போது இல்லை. கட்சியின் பலம் குன்றியிருக்கிறது. உண்மையான மலையக மக்கள் முன்னணி விசுவாசிகள் அப்படியேதான் போக்கிடமின்றி இருக்கிறார்கள். கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்கள், சந்திரசேகரனுடன் ஒன்றாக பணியாற்றியவர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் என் அப்பா சார்பாக பதில் சொல்ல வேண்டும். அவர்களை ஒன்றிணைந்து ஒரு அமைப்புக்குள் கொண்டுவர வேண்டும். புதிய காலத்துக்காகவும் அக் காலம் வேண்டும் தேவைகளுக்காகவும் கோட்பாட்டு அரசியலை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. மொத்தத்தில் அப்பா கருத்தியல் ரீதியாக எங்கே விட்டாரோ அங்கே இருந்து அவர் பாதையில் தொடர விரும்புகிறேன். அதனாலேயே அரசியலுக்கு வருகிறேன்” என்று தன் அரசியல் பிரவேசம் பற்றி தெளிவுபடச் சொன்னார் அனுஷா.  

கட்சியின் நிலை எப்படி இருக்கிறது?  

திருப்திப்பட்டுக் கொள்கின்ற மாதிரி இல்லை என்பதே உண்மை. அங்கத்தவர் எண்ணிக்கை குறைந்து விட்டது. தொழிற்சங்க உறுப்பினர் தொகை குறைந்து விட்டது. பெரிய கட்சிகளுடன் இணைந்தும். கூட்டணி அமைத்தும் தொடர்ச்சியாகத் தேர்தல்களில் போட்டியிட்டு வந்திருப்பதால் கட்சியின் உண்மையான பலம் என்ன என்பதே யாருக்கும் தெரியாமல் போய்விட்டது. கட்சியின் ஆரம்பகால விசுவாசிகள் பெரும்பாலும் விலகிப் போய் விட்டனர். கட்சிக்கென கொள்கைகள், இலட்சியங்கள், ஒரு பார்வை இருந்தது. அதெல்லாம் காணாமற்போய்விட்டன. எனினும் கட்சியைத் தலைவர் ஏன் உருவாக்கினாரோ அந்தக் காரணங்கள் இன்னும் அப்படியே இருக்க, அதற்கான வேலைத்திட்டங்கள் எவையும் கட்சியிடம் இல்லை. கட்சி தன் சுயத்தை இழந்து பத்தோடு பதினொன்றாகி விட்டது. முன்னர் மண்வெட்டிச் சின்னத்தில் போட்டியிட்டு சந்திரசேகரன் வெற்றி பெற்றார். வெற்றியோ தோல்வியோ சின்னம் முக்கியம் என்று தலைவர் கருதினார். வாக்காளர்களுக்கும் அது புரிந்திருந்தது. இப்போதோ தாங்கள் அரசியலில் நீடிப்பதற்கு ஒரு கட்சி வேண்டும். தங்கள் ‘ஏஜண்டா’ வை முன்னெடுத்துச் செல்ல ஒரு அமைப்பு வேண்டும் என்பதற்காக கட்சியை வைத்துக் கொண்டிருப்பது மாதிரியே தெரிகிறது. சந்திரசேகரன் காலத்தில் மேற்கொள்ளப்பட்டவை எவையும் இப்போது இல்லை. அவருடைய மகள் என்றவகையில் நான் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதா? என்ற கேள்விக்கு விடையாக தற்போது நான் களத்துக்கு தந்தையின் பெயரால் வந்திருக்கிறேன் என்று பதில் தருகிறார் இக் கேள்விக்கு.  

நீங்கள் சின்னப் பெண். பழம் தின்று கொட்டை போட்டவர்களுடன் நீங்கள் மோத வேண்டியிருக்கும், புரிகிறது அல்லவா?  

“நான்றாகவே புரிகிறது. ஆனால் ஒரு திருத்தம். நான் சின்னப்பெண் அல்ல. ஏனெனில் இன்று நீங்கள் குறிப்பிடும் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் அனைவருமே இந்த சின்னப் பெண் வயதில்தான் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். முப்பது வருடங்களுக்கு முன்னர் அவர்களுக்கும் சின்ன வயதுதான். நான் என்ன அறுபது வயதிலா அரசியலுக்கு வர வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? சரியான வயதில்தான் ஒரு சட்டத்தரணியாக திருமணம் செய்த பின் அரசியலுக்கு வந்திருக்கிறேன். எனக்கு உதவ என் கணவர் இருக்கிறார். எனக்கு ஆதரவாக என் மக்கள் இருக்கிறார்கள். படித்த இளைஞர்கள் இருக்கிறார்கள். பிரச்சினைகளின் பரிமாணம் எனக்கு நன்றாகவே புரிகிறது. நெஞ்சில் இலட்சியமும் மடியில் கனமுமற்ற தன்மையும் இருக்குமானால் எதற்கு பயப்பட வேண்டும்?. வழியில் சவால்கள் இருக்கும் என்பது புரிகிறது. சவால் இல்லாவிட்டால் அது அரசியலாக இருக்க முடியாதே! உங்கள் அறிவுரைக்கு நன்றி!”  

அரசியலுக்கு வருவதாக முடிவு செய்துவிட்டீர்கள். யாருடன் கூட்டு சேர்வதாக உத்தேசம்?  

கூட்டு சேரும் எண்ணம் இல்லை. மண் வெட்டிச் சின்னம் எனக்குக் கிட்டாது. சுயேச்சையாகத்தான் போட்டியிட வேண்டியிருக்கும். அப்பாவைப் போலத்தான், வெற்றியோ தோல்வியோ எங்கள் பலம் என்ன என்பதை முதலில் பார்த்துவிட வேண்டும். அப்பாவின் விசுவாசிகள். அவரது தொண்டர்கள், மாற்றத்தை விரும்பும் இளைஞர்கள், புதிய அரசியல் கலாசாரத்தை வேண்டுபவர்கள், குறிப்பாகப் பெண்கள் ஆகிய தரப்பினர் என் பின்னால் அணி திரள்வார்கள் எங்கள் பலம் என்ன என்பதுதான் முக்கியமே தவிர, வெற்றி தோல்வி அல்ல. பலம் தெரிந்தால்தானே அங்கிருந்து முன்னேறலாம்! எனது அரசியல் தொடர்பாக என்னிடம் ஒரு தெளிவான பார்வை உள்ளது. அவர்களிடம் அது இல்லை. அவர்களுடைய ‘எஜண்டா’ வேறு. எப்போதுமே அரசியலில் முதல் பிரவேசம் அக்கினி பிரவேசமாகத்தான் இருக்கும். இருக்கட்டுமே! என்று இக் கேள்விக்கு பதில் சொல்லி கணவர் முகம் பார்த்து புன்னகைக்கிறார் அனுஷா.  

ஆயிரம் ரூபா சம்பள விவகாரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பது அடுத்த கேள்வி.  

“மலையகம் என்றால் பெருந்தோட்டம், பெருந்தோட்ட குடிகள் என்றால் சம்பள அதிகரிப்பு என்று நாம் எமது பார்வையை குறுக்கிக் கொண்டிருக்கிறோம். விஷயம் அதுவல்ல. நமது இருப்புதான் முக்கியம். இருப்பு என்றால் காணி, வீடு. அது தான் நாம் பேச வேண்டிய அரசியல். ஆயிரம் ரூபாவை இப்போது பெற்றுத் தர முடியுமென்றால் அதை எப்போதோ பெற்றுத் தந்திருக்கலாம். சிங்கள கிராமவாசிகளும் மிகுந்த சிரமப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு காணி உள்ளது. சொந்தமாக குடிசையாவது இருக்கும். அதுதான் இருப்பு. பிரக்​ைஞ இந்நாட்டுக் குடிமகன் என்றால் ஒரு காணித் துண்டு சொந்தமாக இருக்க வேண்டும். 1994ம் ஆண்டு தனது ஒரு ஆசனத்தால் சந்திரிகா அரசை எனது தந்தை காப்பாற்றியபோது தான் பாராளுமன்ற ஆசனமொன்றின் பெறுமதியைப் பலரும் புரிந்து கொண்டார்கள். அவருக்கு பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பதவி வழங்கப்பட்டபோது அவர் தோட்டங்களில் வீடமைப்பு திட்டத்தை அமுல் படுத்தினார்.

அந்த வீடு ஒரு விவசாயிக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என அவர் கருதினார். ஒரு வீடு, சுற்றிலும் காணி. வீட்டுத் தோட்டத்துக்கோ அல்லது கால் நடை வளர்ப்புக்கோ ஏற்ற கொஞ்ச இடம். வீட்டுக்கான பாதை. அருகே ஒரு பாடசாலை. மின்சார மற்றும் குடிநீர் வசதி என்பனவும் அந்த வீட்டுத் திட்டத்துக்கு இருக்க வேண்டும் என அவர் விரும்பினார். இன்னொரு லயத்தை அமைப்பது அவர் வேலையாக இருக்கவில்லை. அவரது இந்த 1994கனவு அப்படியே இன்றைய புதிய பெருந்தோட்டக் கிராமங்கள் என்ற திட்டத்தோடு பொருந்திப் போகிறது அல்லவா?  

எனவே எமது கோரிக்கை காணியுடன் கூடிய சொந்த வீடாக இருக்க வேண்டும். கம்பனி தரப்பு சொல்லும் வெளிவாரி பயிர்ச் செய்கைத் திட்டத்தை அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது. அதில் இருக்கக்கூடிய தொழிலாளருக்கு பாதகமான அம்சங்களை நீக்கி அவர்களை சிறு தோட்ட முதலாளிகளாக்கலாம்.

இது மிகவும் கவனம் செலுத்த வேண்டிய விஷயம். இங்கே முக்கியம் ஆயிரம் ரூபா சம்பளம் அல்ல. தொழில் பாதுகாப்பே முக்கியம். ஆயிரம் ரூபாவுக்கு ஒத்துக் கொண்டு மாதம் 12நாள் வேல வழங்கினால் என்ன செய்வது? அந்த ஆயிரம் ரூபாவை பெறுவதற்கான நிபந்தனைகள் எவ்வாறிருக்கப் போகின்றன? ஆயிரம் ரூபா என்பது வெறும் எண்ணிக்கை விளையாட்டாக இருந்துவிடக் கூடாது. ஏனெனில் கம்பனி தரப்பை குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது.  

நீங்கள் முன்னெடுக்கவுள்ள அரசியல் எவ்வாறிருக்கும்?  

“நேரடியானதாக இருக்கும்” என்று கூறிய அனுஷா சந்திரசேகரன்.” தொழிலாளர் சமூகம் என்ற நிலையை இச்சமூகம் தாண்டி விட்டது. மலையகத்தில் பல குறும்பட இயக்குநர்கள் வந்து விட்டார்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள், கணனித் துறையாளர்கள், அரசு உத்தியோகத்தர்கள், தனியார்த்துறையில் உயர்பதவி வகிப்பவர்கள் என்று வந்து விட்டார்கள். இவர்களையும் சேர்த்துத்தான் மலையகம். எனவே பிரச்சினை சம்பளம் மட்டுமல்ல. அதனால் நான் இவர்களை நேரிடையாகவே சந்திக்கிறேன். குறை நிறைகளை கேட்கிறேன். அவர்கள் கல்வி, பொருளாதார ரீதியாக முன்னேறவும் வேண்டும் மலையகத்துக்குள் காணி உரிமையுடன் வாழவும் வேண்டும். அனைத்தையும் உள்ளடக்கியதாகவே என் அரசியல் அமையும்”  

இவ்வாறு எம்முடன் உரையாடிக் கொண்டிருந்தவர், தனது தந்தை தோட்டப்பகுதிகளில் 40 நூலகங்களை அமைத்ததாகவும் அவை இப்போது செயற்பாட்டில் இல்லை என்றும் கூறினார்.  

“தந்தை அடிப்படையில் மார்க்சிஸ்ட். போராட்டக் குணம் கொண்டவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். எனவே அவர் நூலகங்களை அமைக்க விரும்பியதில் ஆச்சரியமில்லை. ஆனால் அவருக்குப் பின் அவற்றை பராமரிக்கத் தவறி விட்டனர். இன்று 15நூலகங்கள் நர்சரிகளாக இருக்கின்றன. கொள்கை பிடிப்புடன் அரசியல் செய்தால் இப்படி நிகழாது.”  

மலையகத்தில் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் ஒரு வழக்கத்தை கட்சிகள் மத்தியில் பார்க்கிறேன். அது என்ன என்று புரியவில்லை. ஆதரவு வழங்குவதானால் நிச்சயம் நாம் நிபந்தனைகள் விதிக்க வேண்டும் என்று சொல்பவர், கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டத்தோடு கோவிந்தா போட்டதால் கட்சி பின்னடைவை சந்தித்தது என்கிறார்.  

“அத்தேர்தலில் கட்சி தன் சொந்த சின்னத்தில் தனியாக போட்டியிட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் அதிக உறுப்பினர்கள் தெரிவாகும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். வெல்லக் கூடிய நபர்களும் கூட இத் தேர்தலில் பின்னடைவை சந்தித்தார்கள்.

இத்தனைக்கும் கட்சியின் உயர் பீடமும் மத்திய குழுவும் தனித்து போட்டியிட வேண்டும் என்றே தீர்மானித்திருந்தன.

ஆனால் சேர்ந்து போட்டியிடுவது என்ற தீர்மானம் இதையும் மீறியே தன்னிச்சையாக எடுக்கப்பட்டது. எனவே இவர்களுடன் பேசுவதில் பயன் இல்லை என்ற முடிவுக்கு வந்தேன். கடந்த ஜனவரி முதலாம் திகதி தந்தையின் நினைவு தினம் அன்றைய தினமே கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்கள். ஆசிரியர்கள் பெண்கள் ஆகியோரை சந்தித்து என் முடிவை வெளியிட்டேன். அனைவரும் ஊக்கப்படுத்தினார்கள்.”  

அப்படியானால் முன் வைத்த காலை....  

“பின் வைப்பதாகவே இல்லை. தேடிப் பார்த்ததில் மலையகத்தில் அப்பாவின் நினைவுகள் இன்றைக்கும் உயிர்ப்புடன் இருப்பதை அறிகிறேன். அவர் இப்போது முன்னெப்பொழுதையும் விட மலையகத்துக்கு தேவைப்படுவதை நன்றாகவே உணர்கிறேன்”   சொல்லிவிட்டு இருக்கையில் சாய்ந்து நம்பிக்கையுடன் புன்னகைத்தார் அனுஷா சந்திரசேகரன்!     

உரையாடியோர்: அருள் சத்தியநாதன், பி. வீரசிங்கம்   

Comments