ஜனாதிபதியின் சுதந்திரதின உரையும் தமிழ் சமூகத்தின் எதிர்காலமும் | தினகரன் வாரமஞ்சரி

ஜனாதிபதியின் சுதந்திரதின உரையும் தமிழ் சமூகத்தின் எதிர்காலமும்

நாட்டின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய உரையானது, ஒரு வகையில் ஒரு கொள்கை விளக்க உரையாகவும் எடுத்துக்கொள்ளலாம். அவரை நாட்டின் ஜனாதிபதியாக தெரிவுசெய்வதில் பெரும்பான்மை சிங்கள சமூகம் பாரிய பங்களிப்பினை வழங்கியிருந்த போதிலும் ஒப்பீட்டு ரீதியில் சிறுபான்மை தமிழ் சமூகத்தின் பங்களிப்பானது மிக மிகக்குறைவாகவே காணப்பட்டது. அது அவரது ஆட்சியின் கீழ் தமிழ் மக்கள் மீது பாராமுகமாக இருக்க காரணமாக அமையும் என்ற எண்ணம் தமிழ் சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அதேவேளை அதனை உணர்ந்துகொண்டவராகவே அவர் தமது பதவியேற்பு விழாவின் போதான உரையிலும் அதனை அடுத்ததாக அவர் ஆற்றிய பாராளுமன்ற மற்றும் சுதந்திரதின உரை ஆகியவற்றிலும் தாம் தனக்கு வாக்களித்த மக்களின் மாத்திரமன்றி தமக்கு வாக்களிக்காத மக்களினதும் ஜனாதிபதி என்பதை மிக ஆணித்தரமாக வலியுறுத்தி வந்திருக்கிறார். குறிப்பாக சுதந்திர தின உரையின்போது தான் நாட்டின் நலன்கருதி ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்காகவும் சேவையாற்ற திடசங்கற்பம் கொண்டிருப்பதாக கூறியிருக்கின்றார்.  

இருப்பினும் அவருக்கு வாக்களித்த பெரும்பான்மை மக்கள் தனிநாடு, அதிகாரப்பகிர்வு ஆகிய விடயங்களுக்கு மாறாக ஒற்றையாட்சியை பலப்படுத்தி நாட்டை பிளவுபட விடாது பாதுகாக்க வேண்டும் என்ற கொள்கைக்காகவே தமது வாக்குகளை வாரி வழங்கியிருக்கிறார்கள். மறுபுறத்தில் அவருக்கு வாக்களிக்காத அல்லது அவரது எதிர்தரப்பை ஆதரித்த குறிப்பாக வடகிழக்கு வாழ் தமிழ் சமூகம் உச்சக்கட்ட அதிகாரப்பகிர்வை ஆதரித்தே வாக்களித்திருக்கின்றது. ஆகையால் அதிகாரப்பகிர்வின் மூலம் அரசியல் தீர்வை எதிர்பார்த்து நிற்கின்ற தமிழ்த்தரப்பு உண்மையாகவே ஜனாதிபதியை ஆதரித்திருக்கின்ற பெரும்பான்மை சிங்கள மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு மாறான செயற்பாட்டை ஜனாதிபதி முன்னெடுப்பார் என எதிர்பார்ப்பது யதார்த்தத்திற்கு ஒவ்வாததாகும். காரணம் நாட்டு மக்களினதும் நாட்டினதும் இறைமையை பாதுகாக்கும் வகையிலும் நாட்டின் பாதுகாப்பை முதன்மையாகக் கருதியுமே தமது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பதை ஜனாதிபதி தமது உரையில் கூறியிருப்பதன் மூலம் ஒற்றையாட்சியின் அவசியத்தையே வெளிப்படுத்தியிருக்கிறார்.  

நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே தமது தலையாய கடமையாகும் எனவும் அதற்கு அரச உத்தியோகத்தர்கள், சட்டவாக்கத்துறை, மற்றும் நீதித்துறை ஆகியன தடையாக அமையக்கூடாது எனவும் கூறியிருக்கின்றார். பல தசாப்தங்களாக தமது மக்களுக்கு பணியாற்றுவதில் பல்வேறு சட்டதிட்டங்கள் தடையாக இருந்துவருவதாக கூறிவருகின்ற தமிழ் அரசியல்  தலைமைகள் ஜனாதிபதியின் மேற்குறிப்பிட்ட கருத்துடன் ஒத்துப்போகும் வகையில் செயல்படுவதன் மூலம் அத்தகைய தடைகளை அகற்றிக்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தமது மக்கள் பணியினை காத்திரமாக மேற்கொள்வதற்கும் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக மக்களின் சுயதொழில் பாரம்பரிய கைத்தொழில் ஆகியவற்றுக்கு தடையாக இருந்துவரும் சட்டதிட்டங்களை துரிதமாக சீர்திருத்தி அத்துறைகளை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்திருக்கின்ற கருத்தானது குறிப்பிடத்தக்க சுயதொழில் மற்றும் பாரம்பரிய கைத்தொழிலாளர்களை கொண்டிருக்கும் வடக்கு கிழக்கு பிரதேசத்தின் அபிவிருத்திக்கு சாதகமாக உபயோகிக்கப்படுத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்பாகவே காணப்படுகிறது.  

அத்தோடு இறுதி யுத்தத்தின் பின்னரான காலப்பகுதி வடக்கு கிழக்கு பகுதிகளை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கொண்டிருந்த போதிலும் குறிப்பாக கடற்றொழில் மற்றும் காணி விடுவிப்பு ஆகியன தொடர்பில் மக்களின் அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டிருக்கின்றது என்ற குற்றச்சாட்டு தீர்வு கிடைக்கப்பெறாமலே இருக்கின்றது. அத்தகைய பிரச்சினைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரும் பட்சத்தில் அவற்றை தீர்த்துவைப்பதற்கான ஒரு சாதகமான நிலை இன்று ஏற்பட்டிருக்கின்றது என்பதையும் ஜனாதிபதி தமது இந்த உரையில் வெளிப்படுத்தியிருக்கின்ற இந்நாட்டில் எந்தவொரு பிரஜைக்கும் அநீதி ஏற்படாத வகையில் நீதி நிலைநாட்டுவதை உறுதிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தி இருப்பதால் பாதிக்கப்பட்ட மக்களும் பரிகாரம் கூட இது ஒரு வாய்ப்பாக அமைகின்றது.  

அத்தோடு நாட்டில் காணப்படுகின்ற பொருளாதார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வினை இல்லாதொழிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அதற்கு தமது அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். சுமார் மூன்று தசாப்தங்களுக்கு மேல் நீடித்த யுத்தத்தினால் நாட்டில் ஏனைய பிரதேசங்களை விட பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பாரிய பின்னடைவை வட கிழக்கு மாகாணங்கள் கண்டிருக்கின்றன. அவற்றை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் பிரிவினையை நோக்கி தள்ளப்பட்ட மக்களை மீண்டும் ஒற்றையாட்சிக்குள் கொண்டுவருவதற்கான சாத்தியப்பாட்டை அது உருவாக்கும் என்பதையும் எடுத்துரைத்து இப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கான வாய்ப்பும் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. ஒற்றையாட்சிக்குள் சகல பிரஜைகளுக்கும் சம உரிமை உரித்தாக வேண்டும் என்ற ஜனாதிபதியின் கருத்தை யாதார்த்தமாக்க வேண்டுமாயின் அதற்கான ஒரு வாய்ப்பாகவும் தமிழ் தலைமைகள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படிச் செய்யும் பட்சத்தில் அதை சமூக மற்றும் பொருளாதார முரண்பாடுகளை அகற்றுவதற்கான வாய்ப்பாகக் கொள்ளலாம். பிரதேச அபிவிருத்தியில் காணப்படுகின்ற ஏற்றத்தாழ்வு மற்றும் பின்னடைவு ஆகியவற்றை சரிசெய்ய வேண்டுமென்ற ஜனாதிபதியின் கருத்தினை தமிழ் மக்களுக்கு சாதகமான வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அம்மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகும்.  

வடக்கு கிழக்கு தமிழ் சமூகத்தை உந்துசக்தியாகக் கொண்டு உருவாகிய பிரிவினைவாத செயற்பாடானது ஆயுத போராட்டமாக மாறியதையடுத்து அதனை பயங்கரவாத செயற்பாடாகவே இலங்கை அரசு ஏற்றுக்கொண்டது. ஆகையால் அதனை தோல்வியுறச் செய்யப்பட்டிருக்கும் பின்னணியில் மீண்டும் பயங்கரவாதத்துக்கு வழிவகுக்கும் அடிப்படைவாதத்துக்கு இடமளிக்கக்கூடாது என்பதை இவ்வாண்டு சுதந்திரதின விழா உரையில் ஜனாதிபதி மிகத் தெளிவாக எடுத்துரைத்திருக்கின்றார். அத்தோடு அரசியல் தேவைகளைப்பற்றி மாத்திரம் சிந்திக்காது மக்களைப்பற்றியும் சிந்திக்க வேண்டுமென கூறியிருக்கும் ஜனாதிபதி, அதன் மூலம் சுயநல அரசியலுக்குப் பதிலாக மக்கள் சேவையை முதன்மையாகக் கொண்ட அரசியல் செயற்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தியிருக்கின்றார்.  

அவரின் இக்கருத்தானது அடையாளத்துவ அரசியலுக்குப் பதிலாக அபிவிருத்தி அரசியலின் தேவையையே உணர்த்தி நிற்கின்றது. உலக நடைமுறை மற்றும் கால மாற்றம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு ஜனாதிபதியின் இக்கருத்துக்களில் புதைந்து கிடக்கும் யதார்த்தத்தை சரியாக புரிந்துகொள்ள வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாக இருக்கின்றது.  

எதிர்கால சந்ததியினருக்கான நாட்டை உருவாக்க வேண்டிய கடப்பாடு நிகழ்கால சந்ததியினரின் பொறுப்பாகும் எனவும் அதன்போது எழுகின்ற சவால்களை வெற்றிகொள்வதற்கு நாட்டின் அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பு தமக்கும் தனது அரசாங்கத்துக்கும் கிடைக்க வேண்டுமென தாம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். அதாவது முரண்பாட்டு அரசியலுக்குப் பதிலாக இணக்கப்பாட்டு அரசியலின் அவசியத்தையே அவர் இங்கு வலியுறுத்தியிருக்கின்றார்.  

அந்த வகையில் ஜனாதிபதியின் சுதந்திரதின உரையானது முற்றுமுழுதாக ஒட்டுமொத்த நாட்டையும் கட்டியெழுப்பும் அதேவேளை அதற்கு தடையாக எழும் எந்தவித எதிர்ப்பையும் சகிப்பதற்கு தாம் தயாரில்லை என்பதையே வலியுறுத்தி நிற்கின்றது. இதனைப் புரிந்துகொண்டு காய் நகர்த்துவதன் மூலமே தமிழ் சமூகத்தின் எதிர்காலம் எவ்வாறு அமையப்போகின்றது என்பது தங்கியிருக்கின்றது.    

ரவி ரத்னவேல்

Comments