வழிகாட்டி | தினகரன் வாரமஞ்சரி

வழிகாட்டி

இன்னுமின்னும் என்னுள்ளே 
நிறைந்திருப்ப துன்நினைவே!   
உன் நினைவோ டிருப்பதனால்...   
எந்நாளும் பகல் எனக்கே!   
வேறு கவலைவந்து   
வீழ்த்தாமல்.... எனக்குள்ளே   
பாறையைப் போல் நீயிருந்தே   
பாதுகாப்புத் தருகின்றாய்!   
சிரிப்பு முகத்தை விட்டுச்   
சென்றுவிட்டால்... அவர்கள் பிணம்   
பிணங்களிடம் போய்ப்பேச   
எவர்தான் முயற்சிப்பார்!   
எனக்குள்ளே நீயிருந்தால்...   
சிரிப்பினிலும் இனிப்பிருக்கும்   
மனங்களினைச் செதுக்குகிற   
சிற்றுளியே பெண்தானே!   
ஒவ்வோர் ஆண் உணர்வினையும்   
உயிர்ப்பிப் பவள் பெண்ணே!   
உயிர்ப்பித்தல் உடனிருந்தால்....   
சிறப்பெல்லாம் தேடிவரும்!   
அவன் மனதில் குடியிருக்க   
அவளிடத்தில் குணம் வேண்டும்!   
அவனுக்குப் பிடிகொடுத்து   
ஒத்துழைக்கும் மனம் வேண்டும்!   
புன்சிரிப்பைப் பங்குவைத்து   
போகும் என்னை அனுப்பிவைப்பாய்   
எங்கு நான் போனாலும்   
இலட்சுமிதான் வரவேற்பாள்!   
 
கவிமணி நீலாபாலன்  

Comments