உள்ளங் கொள்ளை கொண்ட கம்பன் கழக வெள்ளி விழா | தினகரன் வாரமஞ்சரி

உள்ளங் கொள்ளை கொண்ட கம்பன் கழக வெள்ளி விழா

கொழும்புக் கம்பன் கழகம் தனது வெள்ளி விழாவை, அண்மையில் பூர்த்தி செய்தது. ஒரு இலக்கிய விழாவுக்கு இன, மத பேதமின்றி ரசிகர்களை, உருவாக்க முடியும் என்ற கருத்தியலில் கம்பன் கழகத்தினர்  வெற்றி பெற்று விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். இதற்குச் சான்றாக மண்டபம் நிறைந்து வந்து இலக்கிய விருந்து அருந்திய இரசிகர்களைக் காட்ட முடியும். விழா, தொடங்குவதற்கு முன்னரே சமூக வலைத்தளங்களில் கழக உறுப்பினர்களாகிய இளைஞர்களால் பகிரப்பட்டிருந்த பதிவுகள் இம்முறை கம்பன் விழா வழமையை விட சிறப்பாக அமையும் என எதிர்வுகூறின. 

தென்னிலங்கையில் தமிழர்களுடைய அடையாளங்களையும், இருப்புக்களையும் ஆவணப்படுத்தியதில் கொழும்பு கம்பன் கழகம் ஆற்றிய - ஆற்றிவரும் பங்கு அளப்பரியது. போர்ச்சூழல் தமிழர்களோடு சேர்த்து கம்பனையும் கப்பலேற்றிய காலத்தில் வெள்ளவத்தையில் காலூன்றி, நிதானித்து இன்று இருபத்தைந்து ஆண்டுகளை கடந்து, தன்னை அகில இலங்கை கம்பன் கழகத்தின் தக்க சேயாக, கட்டமைத்து கொண்டிருப்பது பெருமைக்குரியது. 

இத்தகு வளர்ச்சிகளுக்கு பின்னால் மறைந்து கிடக்கும் கம்பவாரிதி ஜெயராஜின் தியாகங்களும் கம்பன் கழகத்தினரின் உழைப்பும் போற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அடிப்படையில் கம்பன் விழாக்கள், அனைத்துத் தரப்பினரையும் கவர்வதற்கான காரணங்கள்தாம் எவை? இலக்கிய விழாக்களின் பழைய மரபுகளைத் தகர்த்தல், வழமையாக இலக்கிய விழாக்கள் என்பது காதோரம் நரைத்த முதியவர்களினதும் ஓய்வு நிலை உத்தியோகத்தர்களினதும் நுழைவு கூடமாகவே கருதப்பட்டது. இந்நிலையை மாற்றியமைத்து இளைய தலைமுறையை - குறிப்பாக இணைய தலைமுறையை - இலக்கியத்தின் பாதைக்கு அழைத்து வந்து அவர்களுக்கும் களங்களை அமைத்துக் கொடுத்துள்ளது கம்பன் விழா என்பது குறிப்பிடத்தக்கது.  

இவ்வாறு, கம்பன் விழா மேடைகளுக்கான அங்கீகாரம் உலகத்தமிழர் மத்தியில் ஏற்பட்டிருக்கும் இச்சூழலில் இவ்வாண்டு நடைபெற்ற அகில இலங்கை கம்பன் கழகத்தின் கொழும்பு விழாவைப் பற்றிப் பேசுவது காலத்தின் தேவையாகும் 31.1.2020 தொடக்கம் 4.2.2020 வரை ஐந்து நாள்கள் நடைபெற்ற கம்பன்விழாவின் சிறப்பை இலக்கிய தராசு, கொண்டு நிறுப்பதோ விபரிப்பதோ என்பது சுண்டு விரலால் வானத்தைத்தொடும் முயற்சிதான், எனவேதான் நிகழ்வின் சிறப்புக்கள் மட்டும் இங்கு சித்திரிக்கப்பட்டுள்ளன.

பொதுவாக இலக்கிய விழாக்கள் ஒழுங்கமைக்கப்படுவதோ உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்படுவதோ இலங்கையைப் பொறுத்தவரை கல்லில் நார் உரிக்கும் செயலாகும். ஆனால், கம்பன் விழாவில் ஐந்து நாட்களில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளும் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்த உரியநேரத்தில் தொடங்கப்பட்டன. இது, இமாலய வெற்றியாகும். 

ஒவ்வொரு அரங்கம் ஆரம்பிக்கும்போதும் ஆற்றப்படும் தலைமையுரை, தொடக்கவுரை, மங்கள விளக்கேற்றல் என்பன கம்பன் கழகம் விதையாய் முகிழ்ந்த காலத்தில் நீருற்றி நிழல் பரப்பிய ஆன்றோர்களை கெளரவிப்பதாய் அமைந்தது. பெரியாரை துணைகொள்ளும் வழக்கத்தை காலமெல்லாம் கம்பன் கழகம் கைக்கொள்வது வரவேற்கத்தக்கது. சுழலும் சொற்போரானது இந்திய பட்டிமன்றப் பேச்சாளர் திருமதி சுமதியின்  தலைமையில், சான்றோனாய் ராமனைப் பதிவு செய்யவதில் முன்னிற்கும் சந்திப்பு எனும் தலைப்பில் அரங்கேறியது. கம்பனை கற்காதவர்களையும் அவன் பால் ஈர்க்கும் இலக்கிய பேச்சினால் அனைத்து நாவலர்களும் அரங்கை அமர்களப்படுத்தினர்.

அதிலும் இரா மாதுவின் குறும்பும் நகைச்சுவையும்  கலந்தபேச்சு அரங்கில் இருந்த அனைவரையும் வயிறு குலுங்க வைத்தது. மாலை, வழக்காடு மன்றத்தில் பழிதுடைத்து இராமனை மீட்டுத் தருக என வழக்கறிஞர் திருமதி சுமதி தலைமையிலான குழுவினர் தாக்கல் செய்த மனுவை இரா மாது தலைமையிலான குழுவினர் மறுத்தனர்.

சுறுசுறுப்பாகவும் காரசாரமாகவும் நிகழ்ந்த விவாதத்தில் நேரமுக்கியத்தும் கருதி நடுவர் கம்பவாரிதி ஜெயராஜ்  குறுக்கிட வேண்டி ஏற்பட்டது. வேகமும் விவேகமும் நிறைந்த நிகழ்ச்சியாக அது அமைந்தது.  

பட்டிமன்ற புகழ் திருமதி பாரதி பாஸ்கர் தலைமையேற்ற கவிநய அரங்கு மூன்றாம் நாள் காலை அரங்கானது, ஒவ்வொரு பார்வையாளனுக்கும் வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் வெளிப்படுத்திய காணாமல் ஆக்கப்பட்ட மகனை நினைத்து 12 வருடமாக வெதும்பிக்கொண்டிருக்கும் ஈழத்தாயின் உண்மைக்கதை நடுவர் உட்பட்ட அனைவரையும் சில நிமிடம் உறைய வைத்தது. அதுபோல கலாநிதி ஆறு. திருமுருகன், கலாநிதி இரா. மாது, புலவர் மா. இராமலிங்கம் போன்றோரின் பேச்சுக்களிலும் சுவை குறையவில்லை. அவர்களில் பாரதி கிஷ்ணகுமாரின் பேச்சு மிகப்பெரும் விருந்தாக இருந்தது. கம்பீரமான குரலில் அவர் காதலைப் பற்றி கணீர் என மொழிந்தார். 

பாடலாசிரியர் கலைமாமணி பிறைசூடன் தலைமையிலான கவியரங்கம் கவிதை, சுவைஞர்களுக்கு பெருவிருந்தாகும்..குறிப்பாக ஈழத்து கவிஞர்களின் கவிதை நடை இயல்பான சுவையை அரங்கிற்கு அளித்தது. எனினும் ஒலிவாங்கியில் ஏற்பட்டிருந்த சிறியகோளாறின் காரணமாக தெளிவாக கேட்க முடியவில்லை என பின்னிருக்கை நண்பர்களின் மத்தியில் ஆதங்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சான்றோர் விருது வழங்கல் இவ்வருட விழாவின் உச்சமாகும். வருடந்தோறும் கம்பன் கழகம் சான்றோர்களை கெளரவம் செய்வதில் பின்னிற்பதில்லை. இவ்வருடம் எஸ் துரைராஜா, எழுத்தாளர் . அ. முத்துலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன்,  வே சிவஞானசோதி, எம் ஏ நஹியா போன்றோர் அவரவர் துறைகளில் மக்களுக்கு ஆற்றிய பணிகளுக்காக விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இவ்வருடம் இளைஞர்கள் கம்பன் மேடையில் இரண்டு பிரமுகர்களை அதிகமாய் எதிர்பார்த்தார்கள். அவர்கள் சங்ககாரவும் எஸ். பி பாலசுப்பிரமணியமும் ஆவர். இருவரும் தங்களது சாதனைகளை தாங்களே அடிக்கடி முறியடித்து கொண்டவர்கள். ஒருவர் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார. சகோதர மொழி பேசுபவராக இருந்தாலும் தமிழர்கள் மீது அபிமானம் கொண்ட மனிதர். இப்படியான சிங்கள சகோதரர்களும் உள்ளார்கள். அவர்கள் எம்மோடு கைகோர்க்கத் தயாராக உள்ளார்கள் என்பது விருது வழங்கப்பட்டபோது புலனாகியது. இம்முறை கம்பன் புகழ் விருது பின்னனி பாடகர் எஸ் பி, பாலசுப்பிரமணியத்திற்கு வழங்கப்பட்டது. இசைத்துறையில் இதுவரை அவர் ஆற்றிய எண்ணிலடங்கா சாதனைகளுக்குச் சன்மானமாக இவ்விருது அமைந்திருந்தது. இப்படி ஓர் கெளரவத்தை இந்தியாவிலும் தான் பெற்றதில்லை என அரங்கிலயே அவர் அறிவித்ததுடன் பாடலொன்றையும் பாடி மக்களை சந்தோசப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.  

முத்தாய்ப்பாய் இவ்வாண்டு கம்பன் விழா பற்றி ஓரிரு விடயங்களையும் இவ்விடத்தில் பதிவு செய்ய வேண்டும். பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ள வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி அபிவிருத்திக்கான புலமைப் பரிசில் மிகவும் வரவேற்கத்தக்கது. போர்முடிவுற்ற சூழலில் தமிழர்கள், மலையக தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் தமிழ்பேசும் மக்கள் என்ற ரீதியில், ஒன்றிணைய வேண்டிய தேவை உணரப்பட்டுள்ள சூழலில் அதனை செயற்பாட்டு ரீதியில் முன்னெடுத்த பெருமை கம்பன் கழகத்துக்கு உரியது. விருந்தினர்களாக திருமதி பேரியல் அஸ்ரப், முன்னாள் இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா போன்றோர் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க நிகழ்வில் கலந்து கொண்டமையும் தமிழ் சிங்கள முஸ்லிம் வேறுபாடுகளைக் கடந்து விருதுகள் வழங்கப்பட்டுள்ளமையும் கவனிக்கத்தக்து 

ஈழத்தில் நடைபெற்ற போர்க்கால அவலங்களையும் வடுக்களையும் தனது படைப்புக்களில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் பதிவு செய்தவர்களில் கவிஞர் தீபச்செல்வனும் ஒருவர். எனினும், புலம்பெயர் தேசங்களில் அவருக்கு கிடைத்த அளவு அங்கீகாரமோ விருதுகளோ ஈழத்தில் அரசியல் சூழல்களால் வழங்கப்படவில்லை. இந்நிலையில் கம்பன் கழகம் ஏற்றமிகு இளைஞர் விருதினை தீபச்செல்வனுக்கு வழங்கியிருப்பது இளைய தலைமுறையினரின் உற்சாக செயற்பாட்டிற்குத் தீனி போடுவதாகும். 

வழமையைப் போல பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் பேச்சு, கவிதை போட்டிகளை ஏற்பாடு செய்திருப்பதும் இவ்வாண்டு புதிதாக இலக்கிய புரவலர் ஹாசிம் உமரின் அனுசரணையுடன் இஸ்லாமிய மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியை அறிமுகப்படுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு, அப்பால் மலேசியாவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் டத்தோ உள்ளிட்ட பிரபலங்களையும், இந்தியா, கனடா, அவுஸ்திரேலியா வாழ் தமிழ் அறிஞர்களையும் ஒன்றிணைத்து அகில உலக கம்பன் விழாவாக நிகழ்த்தியுள்ளமை சாதனையாகும். ஆக, இலங்கையில் தமிழர்களின் இருப்பையும் அடையாளத்தையும் தீர்மானிக்கும் சக்தியாகவும் தமிழ் மக்களை ஒன்றிணைத்து இன,மத முரண்பாடுகளை களையும் அமைப்பாகவும் கம்பன் கழகம் வளர்ச்சி பெற்றுள்ளதை யாராலும் மறுக்க முடியாது. 

குறிஞ்சியூர் செந்தமிழி 
படங்கள்:  கொழும்பு வடக்கு நிருபர், ஏ.கே.விஜயபாலன்

Comments