என்ன நடந்தது வவுனியா பொருளாதார மத்திய நிலையத்துக்கு? | தினகரன் வாரமஞ்சரி

என்ன நடந்தது வவுனியா பொருளாதார மத்திய நிலையத்துக்கு?

விவாதப் பொருளாகி, இழுபறிப்பட்டு, பிரச்சினைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் அமைக்கப்பட்ட மத்திய நிலையம் செயற்படாத நிலையில் இன்று பூட்டிக் கிடக்கிறது! 

காய்கறி மற்றும் பழங்களுக்கான மொத்த விற்பனை சந்தை ஒன்றை உருவாக்கி அவற்றை சேகரிக்கும் மத்திய நிறுவனமாக அதை செயற்படுவதற்கும், பழங்கள் காய்கறிகளை சுத்திகரித்து வழங்குவதுடன், சில்லறை மற்றும் மொத்த கொள்வனவுகளை நோக்கமாகக் கொண்டும் ஒவ்வொரு பிரதேசங்களிலும் விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் உருவாக்கப்படுகின்றன. அவை மாத்திரமல்லாது பொருளாதார மத்திய நிலையம் அமைந்துள்ள பிரதேசங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதுடன் அப்பிரதேசத்திலுள்ள காய்கறி உற்பத்தியாளர்களுக்கும், கொள்வனவாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் பொருளாதார மத்திய நிலையமானது ஒரு வரப்பிரசாதமாகவும் அமைந்துள்ளது. 'சிறுபிள்ளை வேளாண்மை விளைந்தும் வீடுவந்து சேராது' என்று சொல்வார்கள்.

வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தை பொறுத்தவரையில் இது மிகவும் பொருத்தமான பழமொழியாகவே காணப்படுகின்றது. கடந்த 2016ஆம் ஆண்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் வவுனியா மதகு வைத்தகுளத்தில் 291மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையமானது மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் 2015ஆம் ஆண்டு விசேட பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பிரச்சினைகளும் சிறகு விரிக்க ஆரம்பித்திருந்தன. அன்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த வைத்தியர் ப.சத்தியலிங்கம் தலைமையிலான குழுவினர் வவுனியா நகரத்திலிருந்து இரண்டு கிலோமீற்றர் தூரத்திலுள்ள தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்க வேண்டும் என்றும்  வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் ஒரு குழுவினர் விசேட பொருளாதார மையத்தை ஓமந்தையில் அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்த நிலையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. இந்த பொருளாதார மத்திய நிலைய விவகாரமானது அரசியல்வாதிகளின் அரசியல் செய்யும் மத்திய நிலையமாக மாற்றப்பட்டு ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும், சாகும்வரை உண்ணாவிரதங்கள் என பெரும் போராட்டகளமாக வவுனியா மாறியிருந்தது.

தாண்டிக்குளமா அல்லது ஓமந்தையா என்ற இழுபறி நிலைமை கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிசனால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அப்போதைய கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி. ஹரிசன் வவுனியா மதகு வைத்த குளத்தில் விசேட பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படும் என தெரிவித்ததுடன் 2016ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டி பொருளாதார மத்திய நிலையத்தின் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைத்தார். அரசியல்  இலாப நோக்கத்துடனும், நீயா நானா என்ற இழுபறியுடன் தமிழ் அரசியல்வாதிகளால் ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாக மதகுவைத்தகுளத்தில் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த நான்கு வருடங்களாக எவரும் உள்ளே அனுமதிக்கப்படாமல் மூடிய நிலையில் காணப்படுகின்றது.

ஒரு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு மாவட்ட அரசாங்க அதிபர் தலைவராகவும், பிரதேச செயலாளர், செயலாளராகவும் பதவி வகிப்பார்கள்.  அந்தவகையில் வவுனியாவில் கடந்த நான்கு வருடங்களாக பணியாற்றிய அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள் என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது அரசியல் வாதிகளுக்கும் அவர்களின் சொல்லுக்கும் கட்டுப்பட்டு மத்திய நிலையத்தை கைவிட்டார்களா? என்ற சந்தேகம்' மக்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.

வவுனியா மாவட்டத்தை பொறுத்தவகையில் விவசாயத்தை பெருமளவில் வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். வவுனியா நகரப்பகுதியில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதை விட ஓமந்தை போன்ற பகுதியில் பொருளாதார மத்திய நிலையம் அமையப்பெற்றால் விவசாயிகளுக்கு அது வரப்பிரசாதமாக அமையும் என்பது உண்மைதான்.  காரணம் பெருமளவிலான விவசாயிகள் ஒமந்தையை அண்டிய பகுதியில் விவசாயம் செய்து வருவதுடன் வன்னி பெரு நிலப்பரப்பை ஓமந்தை பகுதி இணைக்கவும் செய்கிறது.  ஏ9வீதியூடாக போக்குவரத்தும் இலகுவாக இருக்கும் என்பதுடன் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது வாகன தரிப்பிட வசதிகளையும் தேவையான அளவு ஏற்படுத்தவும் முடியும். யுத்தகாலத்தின் பின்னர் வடக்கு மற்றும் வன்னி பகுதிக்கு படையெடுத்த அரசியல்வாதிகள் அல்லது அதன் பின்னர் வடக்கு மக்களால் தேந்தெடுக்கப்பட்ட முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.விக்கினேஸ்வரன் போன்றோருக்கு மக்களின் எண்ணங்கள் மற்றும் வன்னி நிலப்பரப்பின் தன்மைகள் பற்றிய அறிவு அற்றவர்களாகவே காணப்பட்டார்கள்.

உதாரணமாக வவுனியா பழைய பேரூந்து நிலையம் மற்றும் ஏ9வீதியில் அமைக்கப்பட்ட புதிய பேரூந்து நிலையத்தின் காரணமாக தனியார் மற்றும் அரச பேரூந்து ஊழியர்களுக்கிடையில் பிரச்சினைகள் பூதாகரமாக உருவெடுத்திருந்த நிலையில் வவுனியா நகரசபைக்கு உட்பட்டிருந்த பழைய பேரூந்து நிலையத்தை மூட உத்தரவிட்ட முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் ஏ9வீதியில் மத்திய போக்குவரத்து அமைச்சினால் அமைக்கப்பட்ட பேரூந்து நிலையத்திற்கு அனைத்து பேரூந்துகளையும் சென்று சேவையில் ஈடுபடுமாறு உத்தரவிட்டதன் விளைவாக வவுனியா நகரசபைக்கு வரவேண்டிய வரிப்பணம் இல்லாதும் போனது. பழைய பேரூந்து நிலையத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த வியாபார நிலையங்களும் அதனை நம்பியிருந்த தொழிலாளர்களும் பெரும் பாதிப்பை சந்தித்திருந்தனர்.

வவுனியா நகரசபையானது வடக்கு மாகாணத்திற்கு உட்பட்டது. அதன் வருமானம் நகரசபை ஊடாக மக்கள் அபிவிருத்தி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என தெரிந்தும் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தை இழுத்து மூட உத்தரவிட்ட முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் மத்திய அமைச்சால் அமைக்கப்பட்ட பேரூந்து நிலயத்தினூடாக அனைத்து வரிப்பணத்தையும் மத்திய அரசுக்கு சென்றடையும் வகையில் வகை செய்திருந்தார். இவ்வாறான செயற்பாட்டுடைய அமைச்சர்களே மக்கள் நலன் சாராது வடக்கில் செயற்பட்டிருந்தனர்.

வடக்கு மாகாணத்தில் மக்கள் நலன் சாராது செயற்பட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகளின் செயற்படுகள் காரணமாக மக்கள் போராட்டங்கள் தன்னெழுச்சியாக வடக்கில் நடைபெற்றதை காணக்கூடியதாக இருந்தது.

உதாரணமாக நகரசபை சுகாதாரத் தொழிலாளர்களின் பிரச்சினை, சுகாதாரத் தொண்டர்களின் பிரச்சினை, புகையிரதக்கடவை காப்பாளர்களின் பிரச்சனை, வேலையில்லாப்பட்டதாரிகளின் பிரச்சினை, காணிகளுக்கு உறுதி வழங்காத பிரச்சினை எனப் பிரச்சினைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

வவுனியா விசேட பொருளாதார மத்திய நிலையம் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் அதற்கான விலை கோரல் மனுக்கள் அரசினால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அதிர்ந்தே போனார்கள்.

குறிப்பாக கண்டி மற்றும் தம்புள்ள போன்ற பொருளாதார மத்திய நிலையங்களில் ஒரு கடைக்கு ஐயாயிரம் ரூபா அறவிடும் அரசு, வவுனியாவில் 50ஆயிரம் ரூபா வாடகை கோரியிருந்தது.வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள விவசாய உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் சிறு வியாபாரிகளின் சந்தையானது அவ்வியாபாரிகளுக்கு ஏற்ற விதத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

பொருளாதார மத்திய நிலையம் அமையப்பெற்றால் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் நன்மையாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரசின் அறிவிப்பு விவசாயிகளை சோர்வடைய செய்ததுடன் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பான ஆர்வத்தை விவசாயிகளிடம் குறைத்திருந்தது.

அரசின் இச்செயற்பாடானது பொருளாதார மத்திய நிலையத்தை தென்னிலங்கை மொத்த வியாபாரிகளுக்கு தாரைவார்க்கும் ஒரு செயற்பாடாகவே பார்க்க முடிவதாக வவுனியா விளைபொருள் உற்பத்தி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலை வெளியிட்டிருந்தனர்.

வவனியா விசேட பொருளாதார மத்திய நிலையம் நிர்மாணிக்கப்பட்டு நான்கு வருடங்கள் கழிந்துவிட்ட நிலையில் அக்கட்டடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு வருவதாகவும், மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் பிரச்சினைகள் முற்றாக நிறைவு செய்யப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாகவும் தெரியவருகிறது.

வவுனியாவில் 291மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாக மாவட்ட செயலகம் மௌனம் சாதித்து வருவதனால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதுடன் பொருளாதார மத்திய நிலையத்தினூடாக பிரதேசத்திற்கு வரவேண்டிய வருமானங்களும், தொழில் வாய்ப்புக்களும் இல்லாது போயுள்ளது.

குறித்த பொருளாதார மத்திய நிலையமானது பொருத்தப்பாடான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதா? உண்மையிலேயே பொருளாதார மத்திய நிலையத்தின் கட்டடம் மக்கள் பாவனைக்கு உகந்த நிலையில் உள்ளதா? கட்டப்பட்ட கட்டடம் 291மில்லியன் ரூபா பெறுமதியானதா? என்ற கேள்விகளுக்கு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சும், வவுனியா மாவட்ட செயலகமுமே பதில் சொல்ல வேண்டும்.

மக்களின் நலன்சாராது அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தன்னிச்சையாக எடுக்கும் முடிவுகள் நீர் அற்ற கிணறு போலவும் பூவற்ற செடி போலவுமே எவருக்கும் பயனற்றதாக அமைந்து விடும் என்பதற்கு வவுனியா பொருளாதார மத்திய நிலையம் ஒரு உதாரணம். 

Comments