சம்பியன் பட்டம் வென்றது திக்குவல்லை மின்ஹாத் | தினகரன் வாரமஞ்சரி

சம்பியன் பட்டம் வென்றது திக்குவல்லை மின்ஹாத்

திக்குவல்லை என்ற பெயரை கேட்டால் இலக்கியவாதிகள் தான் கண்முன் தோன்றுவார்கள். சிங்கள பிரதேசத்தில் தனியொரு முஸ்லிம் ஊரான திக்குவல்லை தலைசிறந்த இலக்கியவாதிகளையும் எழுத்தாளர்களையும் உருவாக்கி பெருமை சேர்த்திருக்கிறது. இந்த நிலையில் அதன் நாமம் தேசிய அளவில் மீண்டும் பேசப்படுகிறது.இம்முறை கல்வித் துறையினூடாக திக்குவல்லையின் பெயர் திக்கெட்டும் பரவியிருக்கிறது. 

இலங்கை மத்திய வங்கியின் அனுசரணையில் அண்மையில் நடந்த அகில இலங்கை ஈகோன் - ஐகோன் (ஸீஸன் 4) வினாடி வினாப் போட்டியில் தமிழ்மொழி மூலமான பாடசாலைகளுக்கிடையே திக்குவல்லை மின்ஹாத் தேசியபாடசாலை சம்பியனாகி சாதனை படைத்திருக்கிறது.  

சக்திதொலைக்காட்சி ஊடக அனுசரனையுடன் இரத்மலான ஸ்டைன் கலையகத்தில் இறுதிப் போட்டி நடைபெற்றது. 

அகில இலங்கை ரீதியாக சுமார் 280 தமிழ்மொழி மூலமான பாடசாலைகளுக்கிடையே எழுத்துப் பரீட்சை மூலம் 16 பாடசாலைகள் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டன. தென் மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஒரேயொரு தமிழ்மொழி மூலப் பாடசாலையாக திக்குவல்லை மின்ஹாத் காணப்பட்டது. நாடு முழுவதும் இருக்கும் தலைசிறந்த பாடசாலைகளுடன் போட்டியிட்டு மின்ஹாத் இந்த சாதனையை படைத்திருப்பது விசேட அம்சமாகும்.  

ஆரம்ப முதலே பரபரப்பாக நடந்தபோட்டிகளில் மின்ஹாத் அணி சிறப்பாக தமது திறமைளை வெளிப்படுத்தி வந்தது. தேசிய ரீதியில் 16 பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் திக்குவல்லை மின்ஹாத் தேசியபாடசாலை முதலில் புத்தளம் கடயாமோட்டை மு.ம.வித்தியாலயத்துடன் மோதியது. இதில் மின்ஹாத் 750 புள்ளிகளையும் எதிரணி 200 புள்ளிகளையும் பெற்றது. காலிறுதிப் போட்டிக்கு முன்னேறிய மின்ஹாத் அடுத்து கொழும்பு இந்துக் கல்லூரியோடு மோதியது. மின்ஹாத் 750 புள்ளிகளையும் எதிரணி 325 புள்ளிகளையும் பெற்று, திக்குவல்லைமின்ஹாத் 425 மேலதிகபுள்ளிகளால் வெற்றியீட்டி அரையிறுதி வாய்ப்பைப் பெற்றது. அரையிறுதிப் போட்டியில் மின்ஹாத் அணி யாழ் வேம்படி மகளிர் உயர் பாடசாலை யோடுமோதி கடும் சமருக்குப் பின் வெற்றி பெற்றது. மின்ஹாத் 650 புள்ளிகளையும் எதிரணி 525 புள்ளிகளையும் பெற்று 125 புள்ளிகளால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.  

 மாபெரும் இறுதிப் போட்டி அண்மையில் சக்தி கலையகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இலங்கை மத்தியவங்கி சிரேஷ்ட துணை ஆளுனர் வீரசிங்ஹ பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், பழையமாணவர்கள் எனப்பெருந் தொகையானோர் புடைசூழ போட்டியாளர்கள் சபையோரின் பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் மேடையைநோக்கி வீறுநடைபோட்டனர். திக்குவல்லை மின்ஹாத் தேசியபாடசாலையோடு இவ்விறுதிப் போட்டியில் ‘ஸீஸன் 3 சம்பியனான’ மட்டக்களப்பு குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலயம் மோதியது. 

கடும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்த இந்த இறுதியில் திக்குவல்லை மின்ஹாத் 1075 புள்ளிகளையும் எதிரணி 475 புள்ளிகளையும் பெற்றது.

600 மேலதிக புள்ளிகளால் வெற்றிவாகை சூடிய மின்ஹாத் ஈகோன் - ஐகோன் (ஸீஸன் 4) சம்பியன் கேடயத்தை சுவீகரித்துக் கொண்டது. முடிவில் வெற்றிச் சாதனை படைத்த திக்குவல்லை மின்ஹாத் தேசியபாடசாலை மாணவர்களாகிய செல்வி இஷ்ரா இர்ஷாத்,செல்வி ஸஃபா ஸஹீம், செல்வி ஹஸ்லா நஜ்முத்தீன் ஆகியோருக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு பாடசாலைக்கு ஒருமில்லியன் ரூபா பணவவுச்சரும் சம்பியன் கேடயமும் வழங்கப்பட்டது.

அவற்றை வெற்றிச் சாதனையாளர்களுடன் அதிபர் எம்.ஏ.எம்.மஷாயிர் மற்றும் பயிற்றுவிப்பாளர் ஆசிரியர் டீ.கே.எம். ரிஸ்மி ஆகியோர் பொறுப்பேற்றனர்.  

இவ்வெற்றியானது மின்ஹாத் தேசியபாடசாலை வரலாற்றில் நிலைநாட்டப்பட்ட அதிஉயர் சாதனையாகக் காணப்படுகிறது. இவ்வெற்றியைப் பெற்றுத்தந்த மாணவச் செல்வங்களுக்கும் அதற்காக பின்னணியிலிருந்து உழைத்த அனைவருக்கும் நன்றி செலுத்துவதாகவும் கல்லூரி அதிபர் மஷாயிர் தெரிவித்துள்ளார். 

வரலாற்றுப் பொற்தடமாக மிளிர்ந்து நிற்கும் இவ்வெற்றியினால் பாடசாலைக்கு மட்டுமல்ல, முழு திக்குவல்லைக்கும் பெரும் புகழும் கௌரவமும் ஏற்பட்டுள்ளது. இம்மகத்தான வெற்றியை முழு ஊரும் வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக கொண்டாடி மகிழ்ந்தது. 

வரலாற்றுச் சாதனையாளர்களை வரவேற்று கௌரவிக்கும் மாபெரும் விழா திக்குவல்லை மின்ஹாத் தேசியபாடசாலை மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழையமாணவர் சங்கம், ஊர் மஸ்ஜித் நிர்வாகம் என்பவற்றின் இணைப்போடு அண்மையில் விமர்சையாக நடத்தப்பட்டது. 

மாபெரும் வரவேற்பு ஊர்வலம் சுமார் 3கிலோ மீட்டர் தூரம் இடம்பெற்றது. இதில் பாடசாலை பேண்ட் வாத்தியக்குழுவின் அணிவகுப்புக்கும் பழைய மாணவர்களின் மோட்டார் சைக்கிள் பேரணிக்கும் மத்தியில் சாதனையாளர்கள், மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள், ஊர்ப் பிரமுகர்கள் அணிவகுத்துச் செல்ல, இடைக்கிடை ஊர்மக்களால் மலர்ச் செண்டும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

சிலிர்க்கவைக்கும் இப்பேரணியைக் கண்டுகளிக்க முழு ஊரும் திரண்டிருந்தது.  

கல்லூரி அதிபர்  மஷாயிர் தலைமையில் நடைபெற்ற இந்த மாபெரும் கௌரவிப்பு விழாவில் அதிதிகள் திக்குவல்லை மின்ஹாத்தின் சாதனையாளர்களை வாழ்த்தினர். பிரதமஅதிதியாக வருகைதந்த தென் மாகாணப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.ஆகில் முக்கிய விடயமொன்றை இங்கு தெரிவித்தார். 

'மேல் மாகாணத்தின் கொழும்பு இந்து கல்லூரியையும், வடமாகாணத்தின் வேம்படி மகளிர் கல்லூரியையும், கிழக்கு மாகாணத்தின் குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலயத்தையும் திக்குவல்லை மின்ஹாத் வெற்றி கொண்டமை உண்மையில் மாபெரும் வெற்றியாகும் என்றார். இவ்வெற்றியானது முழுத் தென் மாகாணத்துக்கும் பெரும் கௌரவத்தை ஈட்டித்தந்துள்ளது. இதற்கான கால்கோளாய் அமைந்த அதிபர் உட்பட ஆசிரியர்கள், இம்மாணவர்களை நல்ல முறையில் பயிற்றுவித்து வழிகாட்டிய பொறுப்பாசியர் ரீ.கே.எம்.ரிஸ்மி தியாகத்துடன் கற்று சாதனைபடைத்த மாணவர்களுக்கும் ஒத்துழைப்பாய் அமைந்த இம்மாணவர்களின் பெற்றோருக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். 

செல்வி இஷ்ரா இர்ஷாத் (அணித் தலைவி), செல்வி ஸஃபா ஸஹீம்,செல்வி ஹஸ்லா நஜ்முத்தீன் ஆகியோருக்கும் அணி அங்கத்தவர்களாகிய செல்வி மிஸ்தா ஜரூக், செல்வன் முஆத் பௌகத் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கி பதக்கம் அணிவித்து  அதிதிகளால் கௌரவிக்கப்பட்டதோடு பாடசாலையால் நினைவு விருதும் வழங்கப்பட்டது.

Comments