தலைதூக்குமா மின்சார நெருக்கடி | தினகரன் வாரமஞ்சரி

தலைதூக்குமா மின்சார நெருக்கடி

ஜனாதிபதித் தேர்தல் பரபரப்பு அடங்கிவரும் நிலையில்  இலங்கை அரசியலில் பல திருப்பமான சம்பவங்களும் மாற்றங்களும் நடந்தேறின.நாட்டு மக்களுக்கு இலங்கை அரசியலில் அசைபோடுவதற்கு புதுப்புது தகவல்கள் நாளாந்தம் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. சுவிட்சர்லாந்து கடத்தல் விவகாரம், ஐ.தே.க அரசியல் மாற்றங்கள், ரஞ்சன் ராமநாயக்க குரல்பதிவு, என ஆரம்பித்து இன்று கொரோனா வைரஸ் தான் பிரதான பேசு பொருளாக மாறியுள்ளது. முழுநாடும் வைரஸ் பீதியில் இருக்கையில் திடீரென  இரு மணிநேர மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டதை பலரும் கவனிக்கத் தவறி விட்டார்கள். கொரோனாவின் தாக்கம் தணிந்து வர  மீண்டும் விடுபட்ட சமாச்சாரங்கள் அரங்கத்திற்கு வர ஆரம்பித்துள்ளன. 

கடந்த 3ஆம் திகதி நாட்டின் பல பகுதிகளிலும் இரு மணிநேர மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டது. வழமையாக நடைபெறும் திருத்தப்பணிகளுக்கான மின்வெட்டாக இருக்கும் என பலரும் கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில் இதன் பின்னணியில் மறைந்திருந்த பாரதூரம் தற்பொழுது அம்பலத்திற்கு வர ஆரம்பித்துள்ளது. 

நாளாந்த மின்சாரத் தேவை 2570மெகா வோர்ட் வரையாக உள்ள நிலையில் இதன் பெரும்பங்கு அனல் மற்றும் எரிபொருள் மூலமான மின்உற்பத்தியூடாகவே நிறைவு செய்யப்படுகிறது. நீர் மின்உற்பத்தியின் பங்களிப்பு குறைவாகவே காணப்படுகிறது. இந்த நிலையில் கெரவலப்பிடிய மின்உற்பத்தி நிலைய உற்பத்தி பணிகள் சுதந்திர தினத்திற்ககு முதல் நாள் திடீரென தடைப்பட்டது. இதனை ஈடு செய்வதற்காக கொழும்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இரு மணிநேர மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டது. 

இந்த திடீர் திருப்பம் குறித்து பல்வேறு சந்தேகங்களும் ஊகங்களும் தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து  மின்சாரத்திற்கு பொறுப்பான  அமைச்சர்  மஹிந்த அமரவீரவுக்கு அறிவிக்கப்பட்டது.

மின்உற்பத்திக்குத் தேவையான எரிபொருளை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கடனடிப்படையில் தான் தொடர்ச்சியாக வழங்கி வந்தது. வருடாந்தம் 80பில்லியன் கடன் எல்லைக்கு உட்பட்டதாக எரிபொருள் வழங்கப்படும். இந்த கடனெல்லை தாண்டிவிட்ட நிலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தை 3ஆம் திகதியுடன் நிறுத்திவிட்டது. கடனெல்லையை கடந்தும் மேலும் 3பில்லியன் ரூபா வரைகூட எரிபொருள் விநியோகிக்கப்பட்டிருந்தாலும் தொடர்ச்சியாக எரிபொருளை பெறுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க மின்சார சபை அதிகாரிகள் தவறியிருந்தார்கள். 

இந்த நிலையிலே கெரவலபிட்டியவிற்கான எரிபொருள் விநியோகம் தடைப்பட்டது. இப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதை விட்டுவிட்டு மின்சார சபை அதனை சீர்செய்வதற்காக நாளாந்தம் இருமணிநேர மின்வெட்டிற்கு திட்டம் தீட்டியது. 

அமைச்சரின் தலையீட்டினால் ஒருநாளுடன் மின்வெட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மின்சார சபைக்கு எரிெபாருள் வழங்கும் கடன் எல்லையை அதிகரிக்கும் வாக்குறுதிக்கமைய தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகிக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உடன்பட்டது. கடனெல்லையை அதிகரிக்கும் அமைச்சரவை பத்திரம் கடந்த வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. 

மின்வெட்டு எதுவுமின்றி தொடர்ச்சியாக மின்சாரம் விநியோகிக்க அமைச்சர் பணிப்புரை வழங்கியதோடு மின்வெட்டு பிரச்சினை முடிவுக்கு வந்தது. 

ஆனால் நாம் நினைப்பது போல இது முடிவல்ல மற்றொரு பிரச்சினையின் ஆரம்பம் என்பது பலருக்கும் தெரியாது. புதிய குண்டொன்றை போடுவதாக நீங்கள் நினைத்தாலும் மின்சார நெருக்கடி என்பது இன்றும் நிழலாக தொடர்கிறது என்பது தான் உண்மை.   2015ஆம் ஆண்டின் பின்னர் நாட்டில் எந்த ஒரு மின்உற்பத்தித் திட்டமும் ஆரம்பிக்கப்படவில்லை. புதிதாக ஓரு அலகு மின்சாரம் கூட தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படவில்லை என்று கசப்பான உண்மை தான் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் மின்சார நெருக்கடிக்கு பிரதான காரணியாக அமைந்திருக்கிறது. வருடாந்தம் மின்சாரத்திற்கான கேள்வி அதிகரித்து வருவதோடு பாரிய முதலீடுகள் ஆரம்பிக்கப்படுவதால் மின்சாரத்தின் கேள்வி மேலும் உயர்கிறது. அதிகரிக்கும் கேள்வியை சமாளிக்க புதிதாக மின்உற்பத்தி நிலையங்கள் உருவாக வேண்டும்.  

எரிபொருள் ஊடான மின்உற்பத்திக்கு அதிக செலவாகும் நிலையில் அனல் மின்நிலையங்களும் இயற்கை வாயு உற்பத்தி நிலையங்களும் ஆரம்பிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் தினமும் தனியாரிடம் இருந்து அதிக செலவிற்கு மின்சாரத்தை கொள்வனவு செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவோம். நான்கரை வருடங்களாக புதிதாக ஓரு மின்உற்பத்தி நிலையமாவது உருவாகாமல் இருந்துள்ளது என்றால் அதனை மின்சார சபை கண்டுகொள்ளவில்லையா எனக் கேள்வி எழும்.தனியார் துறையிடம் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்காக வேண்டுமென்றே சாக்குப் போக்குச் சொல்லி புதிய திட்டங்களை உருவாக்க விடாமல் மின்சார சபை உயரதிகாரிகள் காலங்கடத்தியிருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகிக்கலாம். ஆனால் அந்த சந்தேகம் பொய்யல்ல என்பதற்கான தகவல்கள் லேசாக கசியாமல் இல்லை. எது எப்படியோ நாட்டை இருட்டுக்குள் புதைக்காமல் 24மணிநேரமும் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதற்கு கேள்விக்கு சமமாக விநியோகம் இருந்தாக வேண்டும்.   இந்த பாரிய சவாலை எப்படி சமாளிப்பது என மின்சார சபை, பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு, மின்சக்தி எரிசக்தி அமைச்சு உயரதிகாரிகள் ஆகியோரை அழைத்து அமைச்சர் மஹிந்த அமரவீர சில வாரங்களுக்கு முன்னர் ஆராய்ந்திருந்தார்.

எதிர்வரும் ஏப்ரல், -மே மாதங்களில் நாட்டில் பாரிய மின்சார நெருக்கடியொன்று ஏற்படும் அபாயம் இருப்பது இந்த சந்திப்பின் போது அம்பலமானது. கடந்த காலத்தில் புதிய மின்சாரத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படாதது போன்றே 2019-, 2020காலப்பகுதியில் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கவேண்டிய 100மெகா வோர்ட் இணைக்கப்படாததும் இதற்கு முக்கிய காரணியாக இருப்பது இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. பாரிய திட்டங்கள் எவ்வாறானாலும் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்உற்பத்தி திட்டங்களை உரியவகையில் செயற்படுத்த மின்சார சபையும், மின்சக்தி அமைச்சும் தவறியுள்ளன என்பது இங்கு முக்கியமாக சுட்டிக் காட்டப்பட்டது. கடந்த 5வருட காலத்தில் இயற்கை வலு சக்தி திட்டங்கள் முறையாக செயற்படுத்தப்படவில்லை என்ற உண்மையும் இந்த சந்திப்பில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.   கெரவலபிட்டிய 300மெகாவோர்ட் இயற்கை வாயு திட்டமும் தொடர்ச்சியாக பேசப்படாலும் இறுதி வரை செயலுருவாகமல் கானல் நீரானது. யாருக்கு ஒப்பந்தத்தை வழங்குவது என்ற இழுபறி நீடித்ததால் இறுதி வரை இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த கால குறைகளை பேசிப்பேசி இருந்தால் எதுவும் நடந்துவிடாது என்பதை உணர்ந்துள்ள புதிய அரசாங்கம் ஏற்கெனவே திட்டமிட்ட இயற்கை எரிவாயு திட்டத்தை உடன் ஆரம்பிக்க தயாராவதோடு இதற்கான முன்னெடுப்புகளை துரிதப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 20ஏக்கர் காணிக்கு மேலதிகமாக 10ஏக்கர் அரச காணியை வழங்கி திட்டத்தை ஆரம்பிக்க அமைச்சர் அமரவீர அதிகாரிகளுக்கு பணித்திருக்கிறார்.   ஏப்ரல், - மே மாதங்களில் எதிர்பார்க்கப்படும் மின்சார நெருக்கடிக்கு இடமளிக்காது தேவையான சகல முன்னெடுப்புகளையும் செய்யுமாறும் அமைச்சர் பணித்திருக்கிறார்.   பட்டகாலிலே தான் படும் என்பது போல கடந்த வருட இறுதியில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி நீர்நிலைகள் நிரம்பியது.

நீர்மின் உற்பத்தியும் வெகுவாக உயர்ந்தது. இந்த வருடத்தில் கடும் வெயிலால் நீர்நிலைகள் வற்ற ஆரம்பித்து நீர்மின் உற்பத்தியும் கணிசமாக சரிந்துள்ளது. ஆபத்தில் கைகொடுத்த நீர் மின்உற்பத்தியும் தற்பொழுது கைகொடுப்பதாக இல்லை. 

நீர்மின் உற்பத்தியில் தங்கியிருக்காது காற்றாலை,சூரிய சக்தி மின்உற்பத்தி என்பவற்றின் பங்களிப்பை 20வீதம் வரை உயர்த்த கொள்கை ரீதியான முடிவு எட்டப்பட்டாலும் அதனை செயற்படுத்துவதில் காணப்பட்ட குறைபாட்டினால் ஒரு வீதம் வரையான பங்களிப்பே இயற்கை வழிகளின் வாயிலாக தேசிய கட்டமைப்பிற்கு கிடைக்கிறது. 

காற்றாலை  மின்உற்பத்திக்கு மன்னார் உட்பட வடக்கில் பல இடங்கள் அடையாளங் காணப்பட்டாலும் அரசியல் ரீதியான சில தலையீடுகளும் இவற்றுக்கு தடையாக அமைந்திருப்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

உலகில் அநேக நாடுகள் இயற்கை வலுச்சக்தியின் பக்கம் தமது கவனத்தை திருப்பி மின்சார தேவையின் பெரும்பங்கை நிறைவு செய்கையில் இலங்கையில் அதன் பயனை அடைந்து கொள்ளாதது துர்பாக்கியமே. இவ்வாறே சூரிய சக்தி மின்உற்பத்தி திட்டங்களும் குறைவாகவே செயற்படுத்தப்படுவது கவனிக்கத்தக்கது. 

திட்டமிடப்படும் மின்சார திட்டங்கள் ஆமை வேகத்தில் நகர்வதற்கு மின்சார சபைக்கும் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவுக்குமிடையிலான இழுபறியும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்தியது என்பதை மறுக்க முடியாது. பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதிக்கப்பட்ட திட்டங்களை மின்சார சபை செயற்படுத்தாமல் கிடப்பில் போட்டது அனைவரும் அறிந்த ரகசியம். 

1990களின் பின்னர் எமது நாடு பல மணிநேர மின்வெட்டை கண்டது. சில ஆண்டுகளில் நாளின் பாதி நேரம் மின்வெட்ாக இருந்திருக்கிறது. எதிர்கால இலக்குகளின்றி செயற்பட்டால் நாடு பின்னோக்கித் தான் நகரும். 

எது எப்படியோ இன்னும் இரு மாதங்களில் நாடு இருளில் மூழ்கும் அபாயம் இருக்கவே செய்கிறது. எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் இதற்கு முகங்கொடுத்துத்தான் ஆகவேண்டும்.

மின்சார சபைக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் இடையிலான இழுபறி, மறுபக்கம் உலக சந்தையில் தொடர்ச்சியாக அதிகரிக்கும் எரிபொருள் விலை உயர்வு, மின்சார சபை உயரதிகாரிகளின் அசமந்தம், பொறியியலாளர்களின் பிரச்சினை எனை பல பிரச்சினைகளை சமாளித்துத் தான் இந்த இருளில் இருந்து வெளியில் வரமுடியும். 

புதிய அரசாங்கமும் இவ்வாண்டிலும் எதிர்வரும் ஆண்டுகளிலும் பல புதிய மின்சார திட்டங்களை செயற்படுத்த தயாராகியுள்ளது.

ஆனால் நெருக்கிவிட்ட நெருக்கடிக்கு மக்கள் மீது சுமையேற்றாத இருளுக்குள் புதைக்காத அவசர தீர்வு அவசியத் தீர்வு கிடைத்தாக வேண்டும்.

எம்.எஸ்.பாஹிம்

Comments