நாய்க்கடி ஊசிக்கு பயப்படாதவர்களும் உண்டோ | தினகரன் வாரமஞ்சரி

நாய்க்கடி ஊசிக்கு பயப்படாதவர்களும் உண்டோ

வாழ்க்கை மிகவும் கஸ்டமாகப் போய்க்கொண்டிருக்கிறது. நாம்  நமது எதிரிகளுடன் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். அவையாவன நாய்கள்  பூனைகள் என இவை வளர்ப்புப்பிராணிகளாகவும் கட்டாக்காலிகளாகவும் எம்மை  சுற்றிக் கொண்டிருக்கின்றன.  

 அது தவிர இவற்றுக்கான செலவும் பெருகிக் கொண்டே போகிறது  வாரந்தம் நாய்களால் அதாவது கட்டாக்காலி நாய்களால் இருசக்கர வண்டிகளில்  செல்வோர் அதிகமாக விபத்துக்குள்ளாகின்றனர். இரவு நேரங்களில் வீதிகளில்  மாடுகளும் ஆடுகளும்கூட இவைகளுடன் சேர்ந்து கொள்கின்றன. அரை சைகிளில்  எதிரில் வரும் வாகனங்கள் தமது ஒளியை கெஞ்சம்கூட தாழ்த்தாமல் திமிராக  செல்கையில் அவை கடக்கும் ஒவ்வொரு கணமும் எதிரில் செல்பவர் கொலை வலயத்துள்  சென்றே மீள்கிறார். அல்லது மீளாமலும் போகிறார்.  

 தொலைதூர பயண வண்டிகள் விபத்துக்குள்ளாகும்போது சாரதி  தூங்கிவிட்டார் என்றே பலர்,  பலர் என்ன பத்திரிகைகள் கருதுகின்றன. எனது  அனுபவத்தில் சொல்கிறேன் எதிரில் வரும்வாகனம் தனது ஒளியை தாழ்த்தாமல்  செல்வதும் ஒரு முக்கிய காரணம்தான்.  

 நாம் விடயத்திற்கு வருவோம் நாய்களை முற்காலத்தில் வளர்த்தோம்  அவை வீட்டுக்கு காவலாக நின்றன. வயல்வெளிகளுக்கும் சேனைப்பிலவுகளுக்கும்  குரங்கு, நரி, முயல் போன்றவற்றையும் தெரு விலங்குகளையும் துரத்துவதற்காக  வளர்த்தோம். அவை ஒரு விவசாயக் குடும்பத்தின் முக்கிய அங்கத்தவர்களாக  விளங்கின. சாதாரணமாக ஒரு வீட்டில் நான்கு நாய்களுக்கு குறையாமலும்  பத்துக்கு மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்டதாகவும் அக்கால குடும்பங்கள்  இருந்தன. அன்று நாய் வளர்த்தால் அது வீட்டைக்காக்கும் எனப்பாடங்களிலும்  படித்தோம். இன்று நாய் வளர்த்தால் அதன் எஜமானர்கள் அதற்கு காவல் காக்க  வேண்டிய நிலை ஆகிவிட்டது. நாயை பல ஆயிரம் ரூபாக்களுக்கு வாங்கி, அதற்கு  இறைச்சி முட்டை பால் என கொடுத்து வளர்த்தாலும், அதை எங்கள் ஊர்  நாய்களைப்போல வாசலில் படுக்க விடமுடியாது. நாயை திருடன் கொண்டு போய்  விடுவான். நாய் திருடனைப் பார்த்து குரைத்து பிடித்துக் கொடுத்ததெல்லாம்  இனி பாட்டி கதையில்தான்..  

ஆக நமது சொந்த நாய்களை வளர்ப்போர் இல்லாமையால் அவை  தெருக்களில் அலைந்து கிடைத்ததை தின்றுவிட்டு கண்ட இடங்களில்  மலசலங்கழித்துவிட்டு மர நிழல்களில் படுத்து உறங்குகின்றன.. அப்படியே  பெருந்தெருவிலேயே காதல் கல்யாணப்பேச்சு வார்த்தைகள். கலியாணத்துக்கான வீர  யுத்தங்கள் என முடித்து சுயம்வரமும் நடந்து விடுகிறது. அப்படியே  பிரசவத்துக்கு அவை பொதுச் சந்தைகள் பொதுக்கட்டடங்கள். மூத்திரச்சந்துகள் என  தாமாகவே பிரசவ வார்ட்களையும் அமைத்துக் கொள்கின்றன.

இப்படியாக, எம்மால் அந்நியப்படுத்தப்பட்ட விலங்குகளால் எமக்கு  தொல்லைகள் எழுவதை எதுவும் செய்ய முடியவில்லை. எமது அயலில் காலையில் எங்கும்  போக முடியாது இந்த கட்டாக்காலிகளுடன் கட்டவிழ்த்துவிடும் நாய்களும் கூடி  நிற்கின்றன. தெருவில் போவோர் வருவோரையெல்லாம் குரைத்துக் கலைத்துக்கொண்டு  பின்னாலேயே ஓடுகின்றன. பயணிகள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓட  வேண்டியுள்ளது. இது மட்டுமா இந்த நாய்கள் தெருவெங்கும் மலம்கழித்து  வைப்பதால் வாகன சில்லுகள் அதன்மீது உருண்டு அவற்றை அன்றாடம் கழுவவேண்டிய  நிலைக்கு தள்ளுகிறது.     நாயால் கடிக்கப்பட்டவர்களுக்கு போடப்படும் ஊசிக்கு  பயப்படாதவர்கள் உண்டா? இனி கடித்தது விசர்நாயா? வெறும் நாயா என்ற  ஆராய்ச்சிகளையும் கடி வாங்கியவரே செய்து வைத்தியசாலைக்கு அறிக்கை சமர்ப்பிக்க  வேண்டும் இப்படி பலவகையில் ஸ்ரீமான் பொதுஜனம் பாதிக்கப்பட்டாலும் நாய்கள்  இன்னமும் சட்டத்தில் சாதுவான மிருகம் என்ற வரையறைக்குள்தான் வருகிறது. எனவே  அவை ஏற்படுத்தும் சேதங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது இனி  இந்த நாய்களை வளர்ப்போர்  நாய்கள் கடிநாயாக இருப்பதையே பெருமையாக  கொள்கிறார்கள். அதை மிக நாகரீகமாக தமது வெளிப்படலையில் கடிநாய் கவனம் என  எழுதி மாட்டுவதிலும் பெருமை கொள்கின்றனர்.  

ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பதுகளில்,  நாய்களால் சேதங்கள்  மிகும்போது அவற்றை ஒழிப்பது ஒரு நடவடிக்கையாக அவ்வவ்பகுதி நகர, பிரதேச,  பட்டின சபைகளால் மேற்கொள்ளப்படும். முதல் நாள் பறையறிவித்து கட்டாக்காலிகளை  கட்டி வைக்கும்படி அறிவுறுத்தப்படும். மறுநாள் ஒரு துப்பாக்கிதாரி  தெருவில் காணப்படும் நாய்களையெல்லாம் அவ்விடத்திலேயே சுட்டு வீழ்த்துவார்  வீழ்த்தி பின் அதன் வாலை வெட்டி தன்னுடன் எடுத்துச் செல்வார் கொல்லப்படும்  நாய்களின் எண்ணிக்கைக்கே பணம் வழங்கப்படும் என்பதால் அவர் வால்களை  சேகரிப்பதாக பெரியவர்கள் சொல்லித் தெரியும்.  

அண்மையில் பத்திரிகையில் ஒரு செய்தி. நாயைக் கொன்றவர் கைது,  அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போட்டிருந்தது.  துப்பாக்கிகள் இல்லாமல் ஆக்கப்பட்ட பிறகு. உணவில் நஞ்சு கலந்து கொடுத்து  கொல்வதை வழமையாக கொண்டன மேற்குறித்த சபைகள். இதற்கென பிரதேச சபைகளுக்கு  உரிய மருந்துடன் இறைச்சி வாங்குவதற்கும் பணம் கொடுப்பார்கள். ஒரு தடவை ஒரு  பிரதேச சபை நாய் கொல்லுநர், தமக்கு இறைச்சிக்காக வழங்கப்பட்ட பணத்தில் பாண்  வாங்கி அந்த நஞ்சை கலந்து போட்டார் . அருகிலேயே குடியிருந்த ஒரு  அகதிக்குடும்பத்தினர். தமது வாழ்வாதாரமாக ஆடு வளர்த்தார்கள். அந்த ஆடுகள்  நஞ்சு கலந்த பாணை சாப்பிட்டுவிட்டு பட்டியில் செத்துக்கிடந்த கோலம் மிகப்  பரிதாபமாக அந்த வீட்டுக்கார அம்மாவும் பிள்ளைகளும் கதறியதும் அயலவர்களை  கோபமுறச் செய்தது.    

இப்போதேல்லாம் ஆடுவளர்ப்பவர்கள் அதை மேச்சலுக்கு கொண்டு  செல்லாமல் அவற்றை அவிழ்த்து விடுகிறார்கள். அவை அயலெல்லாம் தமது வீடு போல  புகுந்து கொண்டாடி நட்டு வளர்த்த பயிரெல்லாம் மேய்ந்து தொலைக்கிறது. அதை  கேட்டால் கூட ஆடு வளர்ப்போர் அடங்குவதாக இல்லை. கால்நடை வளர்ப்பு  முக்கியம்தான் அது அயலவர்களை பாதிக்கப்படக்கூடாது என்பதை ஏன்  உணர்கிறார்களில்லை. எல்லோராலும் மதில் கட்ட முடிகிறதா? இந்த நடவடிக்கைக்கு  எதிராகவும் எதுவும் செய்ய முடிவதில்லை ஒன்று அயலட்டைச் சனத்தோடு பகை கூடாது  என்ற மனம். மற்றது இயலாமை. இதையெல்லாம் பொது நோக்கோடு வழிநடத்த  வேண்டியவர்களே திருடர்களாக உள்ளமைதான் வேடிக்கை .     பெரும்பாலும் கால்நடைக்கட்டுப்பாடுகளை மீறி கால்நடைகளை  அவிழ்த்து விடுவோர்  கமவிதானைகளாகவே உள்ளனர். கட்டுப்பாடு இருக்கும்போது  வேலி பிரிப்பவர்களும் அவர்களாகவே உள்ளனர். சாதாரணமாக மக்களால் எதுவும்  பண்ணமுடியாத சிறு பிரச்சினைகள்தான் இவை. ஆனால் பென்னம் பெரிய கப்பலில்  விழுந்த சிறு ஓட்டைகள்தான் இவை என்பதை விரைவில் புரிந்து கொள்வார்கள் என  நம்புவோம்.

தமிழ்க் கவி பேசுகின்றார்

Comments