பட்டாஸ் | தினகரன் வாரமஞ்சரி

பட்டாஸ்

லோக்கல் பொலிஸ் ஸ்டேஷனில் நிரந்தரமாக தேடுமளவுக்கு, நண்பனோடு சேர்ந்து சின்னச் சின்ன சில்லறைத் திருட்டுகளைச் செய்யும் ரெகுலர் கேடி தனுஷ். ஒருமுறை தன்னுடைய காதலிக்காக உதவும்போது, சினேகாவை தற்செயலாக சந்திக்கிறார்.  

அவரிடமும் தன் கைவரிசையைக் காட்டினாலும் சினேகாவின் சந்திப்பு தனுசுக்குள் இனம் புரியாத மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அப்போதுதான் அவர் யார் என்ற ஃப்ளாஷ்பேக் உண்மை தெரியவருகிறது. அதன்பின் அவர் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடக்கின்றன. அந்த மாற்றங்களை விறுவிறு திரைக்கதையில் சொல்வதுதான் மீதிக் கதை.  

பட்டாஸ் என்ற கேரக்டருக்கு ஏற்ப காட்சிக்கு காட்சி ஆயிரம்வாலா சரவெடி போடுகிறார் தனுஷ். பொங்கலுக்கு பட்டாஸ் வெடித்திருக்கிறார். சமீப காலமாக தனுஷ் நாற்பது, ஐம்பது வயசுக்கார் போல் திரையில் அடிக்கடி தோன்றுகிறார். இந்தப் படத்தில் தனுஷை துள்ளும் இளமையில் காட்டியிருக்கிறார்கள். பட்டாஸ் வேடத்துக்கு தனுஷை விட்டால் வேறு ஆள் இல்லை என்று சொல்லுமளவுக்கு வேடம் கச்சிதம். இதே கெட்டப்பை ப்ளீஸ் கீப் இட் அப் தனுஷ்.  

பிளாஷ்பேக் போர்ஷனில் திரவியபெருமாளாக வருகிற தனுஷ் நிறைகுடம். பாரம்பரியக் கலையான அடிமுறையை முறையாகக் கற்றவர் போல் மிக இயல்பாக சண்டை செய்கிறார். நடிப்பில் ‘அசுரன்’ வாடை இன்னும் போகவில்லை.  

சினேகாவின் பாத்திரப்படைப்பு சிறப்பு. அவருடைய கேரியரில் இது ஜாக்பாட் என்றே சொல்லலாம். அனுஷ்காவுக்கு ‘பாகுபலி’ என்றால் சினேகாவுக்கு ‘பட்டாஸ்’ என்று சொல்லலாம். அப்படி சினேகா பெருமைப்பட்டுக்கொள்ளக் கூடிய கதாபாத்திரம். அந்தப் பாத்திரமாகவே மாறி வரவேற்பு பெறுகிறார். இளமை மற்றும் நடுத்தர வயதுக்கேற்ற மாற்றங்களை தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் காட்டியிருக்கிறார் சினேகா. அடிமுறையில் அடி கொடுக்கும் காட்சிகளுக்கு தனி பாராட்டு.  

‘பட்டாஸ்’ தனுஷ் ஜோடியாக வரும் மெஹ்ரின் பிர்சாடா மெழுகு பொம்மை கணக்காக இருக்கிறார். சற்றே வானிலை மாறினாலும் மெஹ்ரினின் மேனிக்கு ஆபத்து எனலாம். அப்படியொரு நிறம், தேகம்! நடிப்பிலும் தனுசுக்காக அடிவாங்கி பரிதாபத்தை அள்ளுகிறார்.  

வில்லனாக நடித்திருக்கும் நவீன் சந்திராவுக்கு அழுத்தமான வேடம். அவரும் முடிந்தளவுக்கு கேரக்டருக்கு நியாயம் சேர்த்திருக்கிறார். க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் பெரிய அளவில் ஸ்கோர் பண்ணுகிறார்.  

அடிமுறை ஆசானாக வரும் நாசர் சிறப்பு. அவருடைய நடிப்பைப் பற்றி புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. அல்வா சாப்பிடுவது மாதிரி அதகள வேடம் அவருக்கு. தனுசுடன் வரும் சதீஷ் மற்றும் முனீஸ்காந்த், சிரிப்பு போலீஸ் வெற்றிவேல் ராஜா ஆகியோர் சிரிக்க வைக்கிறார்கள். ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு கதைக்கு நம்பகத்தன்மையைக் கொடுத்துள்ளது.  

விவேக்- மெர்வின் இசையில் பாடல்கள் தாளம்போட வைக்கின்றன. பின்னணி இசையும் பிரமாதம். பண்டைய தமிழர்களின் பெருமை பேசும் அடிமுறை சண்டைகளை மிக அழகாக வடிவமைத்திருக்கிறார் சண்டை இயக்குநர் திலீப் சுப்பராயன். படத்தொகுப்பாளர் பிரகாஷ், கலை இயக்குநர் துரைராஜ் ஆகியோரின் பங்களிப்பும் நன்று.  

முதல் பாதி வழக்கமான கோலிவுட் ஸ்டைல் என்றாலும், இரண்டாவது பாதியில் அடிமுறை என்கிற பண்டைய தமிழர் கலையை மையமாக வைத்து திரைக்கதை எழுதி படத்தை புதியதாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் துரை செந்தில்குமார்.  

தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா என்று மண்ணையும் தமிழனின் பாரம்பரியத்தைம் உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ள இந்த ‘பட்டாஸ்’... சரவெடி!      

Comments