கிளிநொச்சி வளாக பாலியல் துன்புறுத்தல்; மாணவனுக்கு வகுப்புத் தடை | தினகரன் வாரமஞ்சரி

கிளிநொச்சி வளாக பாலியல் துன்புறுத்தல்; மாணவனுக்கு வகுப்புத் தடை

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மோசமான முறையில் பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகிய மூத்த மாணவன் ஒருவருக்கு மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழக கற்கைநெறிகளில் ஈடுபடவோ, வளாகங்களுக்குள் நுழையவோ முடியாதவாறு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மாணவன் மீதான ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாகவும் விசாரணைகளில் தலையீடுகளைத் தவிர்ப்பதற்காகவும் பல்கலைக்கழக எல்லைக்குள் நுழைவதற்கான (Out of Bounds) இடைக்காலத் தடை விதிக்கப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்துக்கு நேற்றுச் சென்றிருந்த குழு அங்குள்ள அதிகாரிகள், மாணவர்கள் சிலரிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

எனினும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் தரப்பிடமோ, குற்றஞ்சாட்டப்படும் தரப்பிடமோ விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்று அறியமுடிகிறது.

இதேவேளை இவ் விவகாரம் தொடர்பாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தினகரனுக்கு தெரிவித்ததாவது,

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தலானது பாரதுரமான செயற்பாடாகும். இதனை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது.

இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் அறிவுறுத்தலுக்கமைய இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு வடமாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் மேற்கொள்ளும் விசாரணைகளின் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து உயர் கல்வி அமைச்சு அடுத்தவாரம் கூடி ஆராய்ந்து இப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும்.

அதன்பொருட்டு செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமை உயர் கல்வி அமைச்சின் உயர்மட்ட குழுவொன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கும் கிளிநொச்சி வளாகத்துக்கும் செல்லவுள்ளது.

பல்கலைக்கழகங்களில் ஒழுக்க விழுமியங்களையும், சட்டங்களையும் பேணும் பொருட்டு காத்திரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

இந்நிலையில் இது குறித்து அனைத்து பல்கலைக்கழகங்களுக்குமான விரிவான செயற்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்றார்.

பருத்தித்துறை விசேட நிருபர்

Comments