புதிய அரசியல் கூட்டணி வடக்கில் இன்று உதயம் | தினகரன் வாரமஞ்சரி

புதிய அரசியல் கூட்டணி வடக்கில் இன்று உதயம்

வடக்கின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சீ.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் "தமிழ் மக்கள் தேசிய கூட்டணி" எனும் புதிய அரசியல் கூட்டணி ஒன்று வடக்கில் உதயமாகிறது.

இந்த கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் காலை 10மணிக்கு நடைபெறவுள்ளது. இக் கூட்டணியில் சீ.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ், சட்டத்தரணி சிறிகாந்தாவின் தலைமையிலான தமிழ் தேசிய கட்சி, அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய கட்சிகள் இணையவுள்ளன. இக் கட்சிகள் அனைத்தும் இணைந்து தமிழ் மக்கள் தேசிய கூட்டணி எனும் பெயரில் கூட்டு ஒப்பந்தம் செய்யவுள்ளதுடன் அதன் பெயரை தேர்தல் செயலகத்தில் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து புதிய ஒப்பந்தம் தொடர்பாகவும் அதன் எதிர்கால செயற்பாடுகள், கட்சி சின்னம் என்பன தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான விக்கினேஸ்வரன் தலைமையில் தமிழ் அரசியல் பரப்பில் புதிய கூட்டணியொன்று உருவாக்கும் முயற்சிகள் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்தன.

இக் கூட்டணியில் பல்வேறு கட்சிகள் பொது அமைப்புக்கள் எனப் பலரும் இணைந்து கொள்ளப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆயினும் அதிலும் குழப்பங்கள் ஏற்பட்டிருப்பதாக பல்வேறு செய்திகளும் ஊடகங்களில் வெளிவந்திருந்த நிலையிலேயே இப் புதிய கூட்டணி உருவாகவுள்ளது.

பருத்தித்துறை விசேடநிருபர்

Comments