பொதுத் தேர்தலில் தனித்தும் கூட்டாகவும் போட்டி | தினகரன் வாரமஞ்சரி

பொதுத் தேர்தலில் தனித்தும் கூட்டாகவும் போட்டி

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொதுத் தேர்தலில் மாகாண, மாவட்ட மட்டங்களில் வெவ்வேறு விதமாக வேட்பாளர்களை களமிறக்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

வட மாகாணத்தில் நேரடியாக ஐக்கிய தேசிய முன்னணியின் தேசிய கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவதற்கே தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கட்சியின் வடபுலத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.

அதே சமயம் கிழக்கில் முஸ்லிம் காங்கிரசுடன் மக்கள் காங்கிரஸும் இணைந்து களமிறங்குவதன் மூலமே உரிய பயனை அடைந்து கொள்ளமுடியுமென தெரிவித்திருக்கும் சம்மாந்துறை பிரதேச சபைத் தலைவர் நௌஷாத், தனித்துப்போக நினைத்தால் இருப்பதையும் இழந்து நடுத்தெருவுக்குள் தள்ளப்படுவோம் எனக் கூறினார்.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் தரப்புகள் ஒன்றுபட்டுச் செயற்படுவது குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். மக்கள் காங்கிரஸ் தேர்தல் தொடர்பில் இதுவரையில் எந்தவிதமான ஆக்கபூர்வமான தீர்மானத்தையும் எட்டவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மாவட்ட மட்டங்களில் உள்ள உள்ளூர் தலைவர்கள் தத்தமது நிலைப்பாடுகளை முன்வைத்துவருவதை மட்டுமே பார்க்கக் கூடியதாக உள்ளது. புத்தளம் மாவட்டத்தில் தனித்தும், மேல் மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும், சிறுபான்மைத் தரப்புகள் இணைந்தும் களமிறங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

எதிர்வரக் கூடிய வாரங்களில் இவ்விடயங்கள் தொடர்பில் தீவிரமாக ஆராயப்படுமெனவும். மாத இறுதியில் கட்சி உயர்மட்டம் கூடி இறுதித் தீர்மானத்தை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக மக்கள் காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்தது.

எம்.ஏ.எம். நிலாம்

Comments