மீண்டும் சிக்கலான நிலையில் ஐ.தே.மு செயலாளர் விவகாரம் | தினகரன் வாரமஞ்சரி

மீண்டும் சிக்கலான நிலையில் ஐ.தே.மு செயலாளர் விவகாரம்

ஐ.தே.மு செயலாளர் விவகாரம் மீண்டும் சிக்கலான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தினகரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். முன்னணியில் தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்றக் குழுக்கூட்டத்தின்போது செயலாளர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயரை அறிவித்த நிலையில் அதனை செயற்குழுவுக்கு சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றுக் கொள்ளுமாறு கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

இதனடிப்படையில் நாளை திங்கட்கிழமை கூடும் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்படவிருக்கும் நிலையில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசிய முன்னணியின் செயலாளர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்கவின் பெயரை முன்மொழிய விருப்பதாக தெரியவருகின்றது. இது கட்சிக்குள் மீண்டும் முறுகல் நிலை தோன்றிருப்பதையே காட்டுகின்றது.

பல கட்டச் சந்திப்புகளின் பின்னர் ஓரளவு இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்த நிலையில் இப் புதிய பிரச்சினை உருவாகியுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியின் செயலாளராக பிரேரிக்கப்பட்டிருக்கும் ரஞ்சித் மத்தும பண்டாரவின் நியமனத்துக்கு அங்கீகாரம் பெறப்பட வேண்டுமென ஐ.தே.க. செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் நேற்று தினகரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதான கட்சியாக ஐக்கிய தேசிய கட்சி இருப்பதால் முன்னணியின் தலைவர், செயலாளர் இருவரும் பிரதான கட்சியிலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டின்படியே சஜித் பிரேமதாச முன்னணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நியமனத்தை சஜித் பிரேமதாச செயற்குழுக் கூட்டத்தின்போது ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளார்.

முன்னணியின் செயலாளர் பதவிக்கு ரஞ்சித் மத்துமபண்டாரவின் பெயர் அறிவிக்கப்பட்ட போதிலும் அதனை செயற்குழுவுக்கு அறிவித்து அங்கீகாரம் பெறப்படவேண்டும். அதனையும் நாளை கூடும் கூட்டத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. கட்சியின் யாப்புக்கமையவே இவை இடம்பெற வேண்டுமெனவும் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.

ரஞ்சித்மத்தும பண்டாரவின் பெயர் முன்வைக்கப்படும், போது மற்றொரு தரப்பால் நவீன் திசாநாயக்கவின் பெயரும் முன்மொழியப்பட்டால். நாளைய செயற்குழுக் கூட்டத்தில் நெருக்கடி நிலை ஏற்படலாமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருவரது பெயர்களும் வாக்கெடுப்புக்குவிடப்பட்டால் முறுகல் நிலை ஏற்படலாமெனவும் அது கட்சி மீண்டும் பிளவுபடுவதற்கு வழி வகுக்கலாமெனவும் அந்த சிரேஷ்ட உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

எம்.ஏ.எம். நிலாம்

Comments