பாராளுமன்றத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு! | தினகரன் வாரமஞ்சரி

பாராளுமன்றத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு!

சர்சைக்குரிய இந்தோ- லங்கா ஒப்பந்தத்தை ஜனாதிபதி ஜே.ஆர்.  ஜெயவர்தனாவும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் 1987ஜூலை 29ஆம் திகதி கைச்சாத்திட்டிருந்தனர். தெற்கில் ஜே.வி.பி. கிளர்ச்சியும் வடக்கில்  விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டமும் ஜே.ஆர். ஜெயவர்தனவுக்கு சிக்கலை  ஏற்படுத்தியிருந்த நிலையில் அவருக்கு அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதைத்  தவிர வேறு எந்த வழியும் இருக்கவில்லை. இந்தனைக்கும் அந்த ஒப்பந்தம்  இந்தியாவின் தேவைக்கு ஏற்றபடியே வகுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

விடுதலைப் புலிகள் தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்து போராட்டம்  நடத்தினர். ஜே.வி.பியின் கிளர்ச்சியில் தென் பகுதி மக்களிடையே அச்சம்  நிலவியது. இரு போராட்டங்களுக்கும் முகம் கொடுக்க முடியாதிருந்த நிலையில்  ஜே.ஆர். மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதையடுத்து இந்திய அமைதி  காக்கும் படையினர் இலங்கையில் கால்வைத்தனர்.  

இவ்வாறான ஒரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்போவதாக ஜனாதிபதி  ஜே.ஆர். ஜெயவர்த்தன தனது பிரதமருடனோ அல்லது அமைச்சரவை அமைச்சர்களுடனோ  கலந்துரையாடியிருக்கவில்லை. அமைச்சர் காமினி திசாநாயக்கவுக்கு மட்டும்தான்  அது தெரிந்திருந்தது. சுதந்திர சதுக்கத்தில் ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டபின்  அன்றைய தினம் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திற்கு அணிவகுப்பு மரியாதை  வழங்கப்பட்டது. அந்த அணிவகுப்பு மரியாதையில் பங்குபற்றிய கடற்படை வீரர்  ஒருவர் தனது துப்பாக்கிக் கட்டையால் ராஜீவின் தலையில் ஓங்கி அடிக்க  முனைந்தார். சமயோசிதமாக ராஜீவ் தலையைக் குனிந்ததால் அடி அவரது  தோள்பட்டையில்பட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் ஏற்படாமல் ராஜீவ்  தப்பினார்.  

இந்த சம்பவம் உலகளாவிய ரீதியில் பலத்த அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. இலங்கை கடற்படை வீரரின் துப்பாக்கி அடி ராஜீவுக்கு பலத்த  காயத்தையோ மரணத்தையோ ஏற்படுத்தியிருந்தால் நினைத்துக்கூட பார்க்க முடியாத  விளைவுகள் ஏற்பட்டிருக்கக் கூடும்.  

இச்சம்பவம் நடைபெற்று முடிந்து, நிலைமைகள் ஓய்ந்த பின்னர்  ஓகஸ்ட் 18 ஆம் திகதி ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன பாராளுமன்றத்தில் மேற்படி  ஒப்பந்தம் பற்றி தனது கட்சியினருக்கு விளக்கிக் கூறுவதாக இருந்தது.  பாராளுமன்றத்தின் முதலாவது குழு அறையில் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது. அதே வேளை அன்று பிற்பகல் பாராளுமன்றம்  கூடவிருந்ததையும் இங்கு குறிப்பிடவேண்டும்.  

சரியாக ஒரு மணிக்கு ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன  பாராளுமன்றத்துக்கு வந்தார். முதலாவது குழு அறைக்கும் சென்றார்.  பாராளுமன்றத்தின் முதலாவது குழு அறையில் கிட்டத்தட்ட 150 பேர் தாராளமாக  அமரலாம்.  

9.45 மணியளவில் ஜனாதிபதி ஜெயவர்த்தன என்னை பார்க்க  விரும்புவதாக எனக்கொரு தகவல் கிடைத்தது. எனினும் அந்த கலந்துரையாடல் ஐக்கிய  தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே என்று ஏற்கனவே  எனக்கு தெரிந்திருந்ததால் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் என்ற நிலையில்  அங்கு செல்லவேண்டிய அவசியம் எனக்கு இருக்கவில்லை. எனினும் நாட்டின் தலைவர்  அழைக்கும் போது போகாமல் இருக்க முடியுமா? செல்லத்தானே வேண்டும்!  

முதலாவது குழு அறையில் இருந்த பெரிய மேசையின் முற்பகுதியில்  ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன அமர்ந்திருந்தார். அவருக்கு வலது புறமாக பிரதமர்  பிரேமதாசவும் இடது புறமாக அரசாங்கத்தின் பிரதம கொறடா வின்சன்ட் பெரேராவும்  அமர்ந்திருந்தனர். நான் உள்ளே சென்றதும் அன்றைய தினம் பாராளுமன்றத்தில்  என்ன விடயம் எடுக்கப்படவுள்ளது என்று ஜனாதிபதி ஜெயவர்த்தன என்னிடம்  கேட்டார்.  

அதிர்ஷ்ட வசமாக அன்றைய தினம் இடம்பெறவிருந்த நிகழ்ச்சிகளின்  ஒழுங்குப் பத்திரத்தை தான் என்னுடன் எடுத்துச்சென்றிருந்தேன். அதில் 25  விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. நானும் அதனை ஜனாதிபதிக்கு காட்டினேன்.  அதனை அவர் குறித்துக் கொண்ட பின் நான் குழு அறையை விட்டு இரண்டாம் தளத்தில்  இருந்த எனது அறைக்கு சென்று விட்டேன்.  

அரைமணி நேரம் கூட சென்றிருக்காது. எனது பியோன் எனது அறைக்குள்  நுழைந்தார். “பிரதமர் உங்களை அழைக்கிறார்” என்று அவர் பரபரப்பாகக்  கூறியதும் நான் கீழே இருந்த ஒரு அறைக்கு ஓடிச் சென்றேன். குழு அறையின்  லிப்ட்டுக்கு அருகில் பிரதமர் தனது தேசிய உடையை ஓரளவு துக்கியபடி  நிற்பதைக்கண்டேன். “நிஹால் குழு அறைக்குள் குண்டொன்று வெடித்துள்ளது. அந்த  அறையை சோதனைக்கு உட்படுத்தவேண்டும். பொலிஸாருக்கு சொல்லுங்கள்” என்று  கூறினார்.  

ஜனாதிபதி ஜெயவர்த்தனவை சிலர் பாதுகாப்பாக அறையில் இருந்து  வெளியேற்றி அழைத்துச் சென்று கட்டடத்துக்கு வெளியே இருந்த வாகனமொன்றில்  ஏற்றுவதைக் கண்டேன். குழு அறைக்குள் நான் நுழைந்த போது அது குழம்பிய  நிலையில் இருந்ததை கண்டேன். அறைக்குள் புகை நிறைந்திருந்தது. கதவுகளில்  இருந்த கண்ணாடிகள் உடைந்த நிலையில் தரையெங்கும் கொட்டிக் கிடந்தன. ஒரு சில  பாராளுமன்ற உறுப்பினர்கள் கீழே விழுந்திருந்தனர். லலித் அத்துலத்முதலியின்  உடலின் பல இடங்களில் இரத்தம் வடிந்தபடி இருந்தது அவரை ஒரு ஸ்ட்ரேச்சரில்  கிடத்தி சிலர் வெளியே தூக்கி வந்து அம்பியூலன்ஸில் ஏற்றினர். அவர் உடனடியாக  ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  பாராளுமன்றத்தின் பின் வாயில் பெரும்பாலும் மூடப்பட்ட நிலையிலேயே  இருக்கும். ஆனால் சில சமயங்களில் நாம் அதனை திறந்துவைப்பதுண்டு.  அங்கிருந்து ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு ஒரு மைல் தூரம் தான்  இருக்கும்.  

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒரேயொரு உயிரிழப்பு மட்டுமே  ஏற்பட்டது. அக்மீமன தொகுதி உறுப்பினர் கீர்த்தி அபேவிக்கிரம மட்டுமே அச்  சம்பவத்தில் உயிரிழந்தார். உடைந்த கண்ணாடித் துண்டொன்று அவரது நெற்றியை  பலமாகத் தாக்கியிருந்தது. அவர் வீட்டிலிருந்து வரும்போது அவரை கவனமாக  இருக்குமாறு அவரது மனைவி கூறியபோது நான் பாராளுமன்றத்துக்குத்தானே  செல்கிறேன். அதைவிட பாதுகாப்பான இடம் வேறு எங்கே இருக்கிறது என்று அவர்  பதில் கூறியிருந்ததாக பின்னர் தெரியவந்தது.  

அப்போதைய நிலையில் இந்த குண்டு வெடிப்பு எப்படி நிகழ்ந்தது  என்பது பற்றி எனக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. நான் உடனே எனது  பல்கலைக்கழக தோழனும் பொலிஸ் மா அதிபருமான பிராங்க் டி சில்வாவை தொடர்பு  கொண்டேன். அவரை உடனடியாக பாராளுமன்றத்துக்கு வரச் சொன்னேன்.  பாராளுமன்றத்தில் இருந்து எவரும் வெளியேறாதவாறு பாதுகாப்பை  பலப்படுத்தினோம். பின்னர் பாராளுமன்றத்தின் படைக்கல சேவிதரின் உதவியுடன்  பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்களை பாதுகாப்புடன் வெளியேற  வழி செய்தோம்.  

குழு அறையின் பின் கதவு வழியாகத்தான் யாரோ குண்டு வீசியதை  தான் கண்டதாகவும் வெள்ளை நிறசேர்ட் அணிந்த நபரால்தான் குண்டு  வீசப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் என்னிடம் கூறினார்.  அன்றைய தினம் பாராளுமன்றத்துக்கு வேலைக்கு வந்திருந்த 950 ஊழியர்களையும்  பாராளுமன்றத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாமென உத்தரவிட்டேன்.  

இதே வேளை வெடித்தது குண்டா இல்லை துப்பாக்கி தோட்டாவாகக் கூட  இருக்கலாம் என்று பொலிஸ்மா அதிபர் கூறினார். இதையடுத்து அவ்வாறான  துப்பாக்கிகள் எதுவும் ஒளித்துவைக்கப்பட்டுள்ளனவா எனப் பொலிஸார் ஆராயத்  தொடங்கினர்.    நேரம் இப்போது இரவு 9 மணியாகிவிட்டது. அதன் பின்னர்தான் சோதனைகள் முடிந்தன. நான் நள்ளிரவுக்குப் பின்னர்தான் வீடு சென்றேன்.  

அடுத்த நாள் காலை அனைத்து பாராளுமன்ற ஊழியர்களும் வேலைக்கு  வந்தார்களா? என்று நான் படைக்கல சேவிதரை கேட்டேன். அவர் அது பற்றி  விசாரித்து சில நிமிடங்களில் பதிலளித்தார். நான்கு பேர் மட்டுமே அன்று  வேலைக்கு வந்திருக்கவில்லை. அதில் ஒருவர் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்தார். மற்றும் இருவர் லீவில் இருந்தனர். ஒருவர்  மட்டும் அன்று வேலைக்கு வரவில்லை. அவரது பெயர் அஜித் குமார அவரை நான்தான்  வேலைக்கு சேர்த்திருந்தேன்.  

கடவத்தையில் இருந்த அஜித் குமாரவின் வீட்டை பொலிஸார்  சோதனைக்குட்படுத்தினர். அஜித் குமார தனது குடும்பத்தினருடன் முதல் நாள்  நள்ளிரவே வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக அக்கம் பக்கத்தவர்கள் கூறினர்.  இந்நிலையில் மொத்த சந்தேகமும் அஜித் குமாரவை சுற்றியே நிலை கொண்டது. நாடு  முழுவதும் பொலிஸார் அஜித் குமாரவைத் தேடினர்.  

சில நாட்களின் பின்னர் நடந்தது என்ன, என்பதை எங்களால்  தெரிந்து கொள்ள முடிந்தது. குண்டு வெடிப்பு இடம்பெற்ற தினம் அஜித் குமார  வேலைக்கு வந்திருக்கிறார். அச்சமயம் தனது சப்பாத்துக்களிடையே ஒரு  கைக்குண்டையும் ஒளித்துக் கொண்டு வந்திருக்கிறார். வாசலில் சோதனையில்  இருந்த பொலிஸார் அதனை கண்டுபிடிக்கத் தவறி விட்டனர். இந் நிலையில்  ஜனாதிபதியின் செயலாளர் குழு அறையை நன்கு சோதித்த பின்னர் அதற்கு செல்லும்  அனைத்து கதவுகளையும் மூடிவிட்டார். ஆனால், தன்னிடம் தயாராக வைத்திருந்த  கள்ளச் சாவியின் மூலம் அந்த அறைக்குச் செல்லும் கதவைத் திறந்து அஜித் குமார  உள்ளே ஒளிந்திருக்கிறார். அங்கிருந்த ஒரு பெரிய ஓவியத்தின் பின் அவர்  மறைந்திருந்ததாக தெரிகிறது.    மறைந்திருந்த நிலையில் அவர் திடீரென வெளியே வந்து தான்  மறைத்து வைத்திருந்த கைக்குண்டை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவை நோக்கி  வீசியிருக்கிறார். மேசையின் முகப்பில் அமர்ந்திருந்த முக்கியஸ்தார்கள்  மூவரின் முன்னிலையில் விழுந்த குண்டு மேசையில் பட்டு வெளியே உருண்டு சென்று  முன்வரிசையில் அமர்ந்திருந்த லலித் அத்துலத் முதலியின் நாற்காலிக்கு  அடியில் வெடித்துள்ளது. இதனால் லலித் அத்துலத்முதலி படுகாயமுற்றார்.  

உடனடியாக ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலைக்கு எடுத்துச்  செல்லப்பட்டு அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பிரபல  சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் ஜே.யோகேஸ்வரன் தான் அவருக்கு சத்திர  சிகிச்சையை மேற்கொண்டார். அந்த சத்திரசிகிச்சையின் மூலமே அவரது உயிர்  காப்பாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.   

அதற்கு சில நாட்களின் பின் முற்றிலும் குணமானதும் லலித் அத்துலத் முதலி எனது அறைக்கு வந்து பேசிக் கொண்டிருந்தார்.  

அஜித் குமார கைக்குண்டை வீசியெறிந்த போது ஒரு தவறை செய்து  விட்டார். கைக்குண்டின் பின்னை கழற்றியவுடனேயே அவர் அதனை  வீசியெறிந்திருக்கிறார். கைக்குண்டின் பின்னை அகற்றியவுடன் ஒன்று, இரண்டு,  மூன்று, நான்கு, ஐந்து என்று எண்ணி முடிந்த பின்னரே கைக்குண்டை வீச  வேண்டும். இவ்வாறு எண்ணிய பிறகு அஜித் குமார கைக்குண்டை வீசியிருந்தால் அது  மேசையின் முகப்பில் பட்டவுடனேயே வெடித்திருக்கும். அப்படி நடந்திருந்தால்  மேசையின் முகப்பில் அமர்ந்திருந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன, பிரதமர்  பிரேமதாச மற்றும் வின்சன்ட் பெரேரா ஆகியோருக்கு உயிராபத்து  ஏற்பட்டிருக்கும். அதற்கு மாறாக பின்னை கழற்றியவுடன் அஜித் குமார  கைக்குண்டை வீசியெறிந்ததால் அது மேசையில் விழுந்து அங்கிருந்து உருண்டு  கீழே விழுந்து முதல் வரிசையில் இருந்த நாற்காலிகளின் கீழே  வெடித்திருக்கிறது. சில செக்கன் தாமதத்தின் பின்னர் வெடித்ததால்தான்  அது முன்வரிசையில் அமர்ந்திருந்த லலித் அத்துலத் முதலிக்கு பாதிப்பை  ஏற்படுத்தியிருக்கிறது.  

ஆறு மாதங்களின் பின்னரும் அஜித்குமார மிகவும் தேடப்படும் ஒரு  நபராக இருந்தார். ஜனாதிபதியையும் பிரதமரையும் கொலை செய்ய முயற்சித்த  சந்தேகநபராக அவர் கருதப்பட்டார்.  

பாராளுமன்ற குண்டு வெடிப்பு நடந்து ஆறு மாதங்களின் பின்  கேகாலை மாவட்டத்தில் கசிப்பு வேட்டையின் போது வயல் காணியில் தேடுதல்  நடத்திக் கொண்டிருந்த பொலிஸாரை கண்ட ஒரு நபர் அங்கிருந்து தப்பியோடினார்.  தங்களை கண்டு ஒரு நபர் தப்பியோடுவதை கண்ட பொலிஸார் அவரை துரத்திப்  பிடித்தனர். மிகவும் தேடப்பட்ட ஒரு நபரை பிடித்திருக்கிறோம் என்பது  பொலிஸாருக்கு அதுவரை தெரியவில்லை. அவரைப் பிடித்து விசாரணை செய்தபோதுதான்  அவர் அஜித் குமார என்று தெரியவந்தது.  

ஒரு வாரத்தின் பின்னர் கடுமையான பாதுகாப்புடன் அஜித் குமார  பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டார். அவர் அப்போது தனது குற்றத்தை  ஒப்புக்கொண்டிருந்தார். அவ்வாறு தான் கைக்குண்டை சப்பாத்துக்குள் மறைத்துக்  கொண்டு பாராளுமன்றத்துக்கு கொண்டுவர முடிந்தது எவ்வாறு என்பதையும், தான்  சட்டமிடப்பட்ட ஓவியத்தின் பின் மறைந்திருந்தது எப்படி என்பதையும் தான்  கள்ளச் சாவி போட்டு குழு அறையை திறந்தது, கைக்குண்டை எறிய முடிந்தது  என்பதையும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.  

இரண்டு நாட்களின் பின்னர் சபாநாயகர் ஈ.எல்.சேனாநாயக்கவும்  நானும் அமைச்சரவையின் முன் தோற்றுமாறு அழைக்கப்பட்டோம். ஆனால் சபாநாயகர்  என்ற வகையில் தான் அமைச்சரவை முன்னிலையில் தோற்றுவது சரியல்ல என்று கூறி  சபாநாயகர் ஈ.எல். சேனநாயக்க ராஜதந்திர ரீதியாக மறுப்புத்தெரிவித்து  ஒதுங்கிக்கொண்டார். அதனால் தான் மட்டுமே அமைச்சவை முன்னிலையில் தோற்ற  வேண்டியிருந்தது.    அஜித் குமாரவை,எவ்வாறு நான் பாராளுமன்ற வேலையில்  சேர்த்துக்கொண்டேன் என்பது பற்றி என்னிடம் கேள்வி எழுப்புவார்கள் என்று  நான் எதிர்ப்பார்த்தேன்.

அஜித் குமார எந்த குற்றமும் செய்யாத ஒருவர் என்று  அவருக்கு வழங்கப்பட்ட பொலிஸ் அறிக்கையை நான் என்னுடன் எடுத்துச்  சென்றிருந்தேன். அந்த பொலிஸ் சான்றிதழ் அறிக்கை அஜித்குமாரவை  பாராளுமன்றத்துக்கு நான் வேலைக்கு சேர்ப்பதற்கு முன்னரே அவருக்கு  வழங்கப்பட்டிருந்தது.  

அஜித் குமாரவை வேலைக்கு சேர்த்தது பற்றி அமைச்சர் மொன்டேகு  ஜயவிக்கிரம் என்னிடம் கேள்வியெழுப்பியதும் நான் அஜித்குமாரவின் பொலிஸ்  சான்றிதழ் அறிக்கையை காட்டினேன் வேறுபல கேள்விகள் கேட்கப்பட்டன. நான்  அவற்றுக்கு பொறுமையாக பதிலளித்தேன்.  

அஜித் குமார தொடர்பான பொலிஸ் சான்றிதழ் அறிக்கையை  ஜே.வி.பியினர் தான் தயாரித்திருந்தனர் என்பது பின்னர் எனக்கு தெரியவந்தது.  ஜனாதிபதியையும் பிரதமரையும் கொலை செய்ய அவரே சரியான நபர் என்று ஜே.வி.பி.  கருதியிருந்தது. இதனால் அவருக்கு போலியான பொலிஸ் சான்றிதழை உருவாக்கி  என்னிடம் அனுப்பியிருந்தது. நானும் அஜிக்குமார நல்லவர் என்று எண்ணி ஏமாந்து  விட்டேன்.  

இந்நிலையில் தனது கணவர் மரணத்தில் இருந்து சில விநாடிகளில்  தப்பிய அந்த இடத்தைப் பார்வையிட ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் பாரியார்  விருப்பம் தெரிவித்திருந்தார். ஜே.ஆரின் பாரியாரும் அவரது பேரப்பிள்ளைகள்  இருவரும் அங்கு வந்திருந்தனர். நான் அவர்களுக்கு அந்த அறையை  சுட்டிக்காட்டினேன்.  

இந்த சம்பவங்களுக்கு ஒரு புதுமையான முடிவு ஏற்பட்டது.  நீதிமன்றத்தில் சந்தேக நபராக அஜித்குமார ஆஜர்ப்படுத்தப்பட்டபோதும் பொலிஸார்  அஜித்குமார மீதான குற்றத்தை நிரூபிக்க போதிய சாட்சியங்களை முன்வைக்கத்  தவறியிருந்தனர். சட்டமா அதிபர் திணைக்களம் ஆதாரங்களை குழப்பிக் கொண்டதாலும்  நீதவான் அஜித்குமாரவை விடுதலை செய்துவிட்டார். நடந்த சம்பவங்கள் உண்மையாக  இருந்தபோதிலும் அவற்றை சரிவர செயற்படுத்த முடியாததால் அஜித்குமார சுதந்திர  மனிதனாக நீதிமன்றத்தில் இருந்து வெளியேறமுடிந்தது.  


நிஹால் செனவிரட்ன - பாராளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் நாயகம்

தமிழில் ராம்ஜி   

Comments