பிரெக்ஸிட்டும் அதன் பின்விளைவுகளும் | தினகரன் வாரமஞ்சரி

பிரெக்ஸிட்டும் அதன் பின்விளைவுகளும்

ஜனவரிமாதம் 31ம் திகதி நள்ளிரவுடன் பிரித்தானியா உத்தியோகபூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிக் கொண்டது. இது உலக வர்த்தகம் மற்றும் நிதி முதலீடுகள் தொடர்பில் முக்கிய கரிசனைக்குரிய ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

உலகின் மிகவும் முன்னேற்றகரமான பொருளாதார ஒருங்கிணைப்பாக ஐரோப்பிய ஒன்றியம் பார்க்கப்படுகிறது. பிராந்திய ரீதியில் அருகருகே உள்ள நாடுகள் தமது பிராந்தியத்தின் பொருளாதார அரசியல் சமூக நலனை மேம்படுத்தும் பொருட்டு பிராந்திய ரீதியிலான பொருளாதாரக் கூட்டுகளை உருவாக்குகின்றன.

அதில் ஒரு ஆரம்பப்படியாக தாராள வர்த்தகப் பிரதேசம் (Free Trade Area) பார்க்கப்படுகிறது. நமது தெற்காசிய தாராள வரத்தகப் பிரதேசம் (south Asian Trade Area- -_ SAFTA) இந்த ஆரம்பப்படிக்கான ஒரு உதாரணமாகும்.

அடுத்த நகர்வாக சுங்க ஒன்றியம் என்னும் (Customs union) தீர்வை வரிகளை ஒருங்குபடுத்தும் அமைப்பும் அதற்கடுத்து பொதுச் சந்தை (Common market) என்னும் முன்னேற்றகரமான பொருளாதார ஒருங்கிணைப்பும் பின்னர் பொருளாதார ஒன்றியம் (Economic union) எனப்படும் மிகவும் வினைத்திறன் கொண்ட பொருளாதார ஒருங்கிணைப்பும் ஏற்படும். ஐரோப்பிய ஒன்றியம் என்பது பிராந்திய பொருளாதார கூட்டுகளிலேயே மிகவும் விருத்தியடைந்த ஒரு கட்டமைப்பு என்பது இதிலிருந்து புலனாகும். எனவே அப்படியான ஒரு மிகவும் உச்ச நிலை பொருளாதாரக் கூட்டமைப்பிலிருந்து பிரித்தானியா வெளியேறியமை முக்கியமான ஒரு திருப்பு முனையாகப் பார்க்கப்படுகிறது. ஒரு புறம் பிராந்திய ரீதியாக ஒருங்கிணைத்து செயற்பட விரும்பும் நாடுகளுக்கு இது ஒரு சிவப்புச் சமிக்ைஞயாக அமையலாம். அதேபோல மறுபுறம் ஏலவே பொருளாதார ரீதியிலான பிராந்திய கூட்டுகளில் இருந்து அங்கத்துவ நாடுகள் வெளியேறிச் செல்ல இது ஒரு முன்னுதாரணமாகவும் அமைந்து விடலாம். நமது சார்க் (SAARC) தென்னாசிய வலயத்திலும் தென்னாசிய நாடுகள் உருவாக்கியுள்ள தென்னாசிய தாராள வர்த்தக பிரதேசம்/ உடன்படிக்கை என்பன முன்னேறமுடியாமல் அணுங்கிக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. இதனால் தான் இலங்கையானது இந்தியா, பாகிஸ்தான் ஆகிய சார்க் நாடுகளுடன் தனித்தனியே இருபக்க வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

உலகில் சுமார் 200 நாடுகளும் பிரதேசங்களும் உள்ளன. ஆனால் உலக வங்கி தரவுகளின்படி 2017ஆம் ஆண்டில் மொத்தம் 280 பிராந்திய வர்த்தகக் கூட்டுகள் காணப்பட்டன. அவ்வாறாயின் ஒவ்வொரு நாடும் குறைந்தபட்சம் ஒன்றுக்கு மேற்பட்ட பிராந்திய வர்த்தக் கூட்டுகளிலாவது அங்கத்துவம் பெற்றிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. எனவே பிராந்திய ரீதியிலான வர்த்தகக் கூட்டுக்கள் என்பது உலக நாடுகள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு செயன்முறையாக பார்க்கப்படுகிறது. இவற்றுள் எந்த பிராந்திய வர்த்தகக் கூட்டுமே ஐரோப்பிய ஒன்றியத்தைப்போல விருத்தி அடையவில்லை முன்னேறிச் செல்லவுமில்லை.

1957ஆம் ஆண்டு பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, லக்ஸம்பேர்க், நெதர்லாந்து மற்றும் (மேற்கு) ஜேர்மனி ஆகிய ஆறு மேற்கைரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து ஐரோப்பிய பொருளாதார ஆணைக்குழுவை (European Economic Commission - EEC) உருவாக்கின.

இதுவே பின்நாளில் ஐரோப்பிய ஒன்றியமாக (European Union - EU) உருவெடுத்தது. 2020 ஜனவரி 31திகதி வரை 28 நாடுகள் இதில் அங்கத்துவம் வகித்தன. ஆரம்ப அங்கத்தவர்களாகிய ஆறு நாடுகள் தவிர ஏனைய 22 நாடுகளும் வெவ்வேறு காலக் கட்டங்களிலே ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து கொண்டவையாகும். கடைசியாக 2013ம் ஆண்டில் குரேஷியா ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் பெற்றது.

பிரித்தானியாவின் வெளியேற்றத்துடன் தற்போது 27 நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ளன. இந்த 27 நாடுகளில் அயர்லாந்தும் உள்ளடக்கம் இங்கிலாந்தும் வேல்ஸும் வெளியேறிய போதும் அயர்லாந்து வெளியேறவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் வகிக்கும் 27 நாடுகளும் பொது நாணயமாகிய யூரோ (Euro) வை தமது நாணயமாக பயன்படுத்தவில்லை. 19 நாடுகள் மாத்திரமே யூரோவை தமது நாணய அலகுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஏனைய எட்டு நாடுகளும் தத்தமது நாணய அலகுகளையே பயன்படுத்துகின்றன. வெளியேறிய பிரித்தானியாவும் ஸ்ரேலிங் பவுனையே நாணயமாகப் பயன்படுத்தியமை கவனிக்கத்தக்கது. ஐரோப்பிய ஒன்றியத்தில் யூரோ நாணயத்தை பயன்படுத்தும் நாடுகள் யூரோ வலய நாடுகள் (Eoro Zone) என்றழைக்கப்படுகின்றன. இவை ஐரோப்பிய நாணய ஒன்றியத்தில் (European Monetary Union - EMU) அங்கத்துவம் வகிக்கின்றன. இந்த நாடுகளின் பணக்கொள்கை சார்ந்த விடயங்களை கையாளும் அதிகாரம் ஐரோப்பிய மத்திய வங்கிக் (European Central Bank) உள்ளது. அதாவது யூரோ வலய நாடுகளின் பணக்கொள்கை அங்கத்துவ நாடுகளுக்கு பொதுவானது. எனவே பேரினப் பொருளாதாரக் கொள்கை ஒருங்கிணைப்பும் ஐரோப்பிய நாணய ஒன்றியத்தில் உள்ளது.

அதுமட்டுமன்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அரசியல் விவகாரங்களிலும் கொள்கைகளிலும் ஒருமைப்பாட்டையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்தும் வண்ணம் ஐரோப்பியப் பாராளுமன்றமும் (European Parliament) உருவாக்கப்பட்டுள்ளது அங்கத்துவ நாடுகளுக்கு ஏதேனும் அரசியல் பிரச்சினைகள் நெருக்கடிகள் வரும் பொழுது ஐரோப்பியப் பாராளுமன்றம் அதில் முனைப்புடன் ஈடுபட்டு தீர்வு காணும்.

இவ்வாறான ஒரு அமைப்பில் இருந்தே பிரித்தானியா வெளியேறு கிறது. அங்கத்துவ நாடுகள் அனைத்தும் சமமாக நோக்கப்படும் என்பது ஒன்றியத்தின் கொள்கையாக இருந்த போதிலும் பிரித்தானியா தான் முக்கிய விவகாரங்களில் ஓரங்கட்டப்படுவதாக பல தடவைகள் புகார் கூறியது. எனினும் ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற பொருளாதார வல்லமை கூடிய நாடுகள் அவற்றை கருத்திற் கொள்ளவில்லை.

2016ம் ஆண்டு ஜூன் மாதம் பிரித்தானியா தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடித்திருக்க வேண்டுமா இல்லையா என்பது பற்றி சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் வாக்களித்தோரில் 51.89% சதவீதமானோர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் என வாக்களித்திருந்தனர்.

முன்னேற்றங்கண்ட ஜனநாயக நாடாகிய இங்கிலாந்தில் வாக்களிப்பு வீதம் மெச்சும் படியாக இல்லை. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க வேண்டும் என்று விரும்பிய பலர் வாக்களிக்கச் செல்லவில்லை. ஆனால் வெளியேற வேண்டும் என்பதில் தீவிர போக்குவடைய பெரும்பாலானோரே வாக்களிக்கச் சென்றதாக பிரித்தானியாவைச் சேர்ந்த கல்வியாளர் குழாமை சந்தித்து அளவளாவிய பொழுது கேட்க நேர்ந்தது. எது எவ்வாறான இருப்பினும் வாக்கெடுப்பு முடிவுகள் ஜனநாயக ரீதியானவை என்பதால் பிரித்தானிய அரசாங்கம் 2017 மார்ச் 29ம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் நடவடிக்கையை பிரித்தானிய அரசாங்கம் ஆரம்பித்தது. எனினும் வெளியேற்ற ஒப்பந்தத்தை முடிவு செய்வதில் பிரித்தானிய பாராளுமன்றத்திலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் நீண்ட இழுபறிகள் நிலவின இதன் காரணமாக பிரதமர்கள் இருவர் பதவிவிலக நேர்ந்தது. எவ்வாறாயினும் புதிய பிரதமரின் அரசாங்கத்தின் கீழ் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு ஜனவரி 2020ல் பாராளுமன்றத்தில் அங்கீகாரம் பெறப்பட்டு 2020 ஜனவரி 31 இரவு 11 மணிக்கு பிரித்தானியா உத்தியோகபூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்தது. பிரித்தானியா முழுதும் கோலாகல கொண்டாட்டங்கள் அரசாங்க செலவில் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன. தற்போது பிரித்தானியா வெளியேறினாலும் 2020 டிசம்பர் 31வரை நிலைமாறு காலமாக கருதப்படும் இக்காலப்பகுதியில் எஞ்சியுள்ள ஒப்பந்தங்களை நிறைவேற்றவும் புதிய தாராள வர்த்தக உடன்படிக்கையொன்றை ஏற்படுத்த விரும்புவதாகவும் பிரித்தானியா அறிவித்துள்ளது. அதிலும் இக்காலக் கெடு நடைமுறைச் சாத்தியமற்றது என ஐரோப்பிய ஒன்றியம் கருதுகிறது.பிரித்தானியாவின் வெளியேற்றம் இலங்கை போன்ற நாடுகளுக்கு புதிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. GSP+ திட்டத்தின் கீழ் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஆடை ஏற்றுமதி செய்த இலங்கையின் பிரதான வாடிக்கையாளர் பிரித்தானியாவாகும். எனவே பிரித்தானியாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பிரித்தானியாவுக்குள் வெளிநாட்டு முதலீடுகள் குறையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. வர்த்தக் கட்டுப்பாடுகளை பிரித்தானியா விதித்தால் அந்நாட்டுக்கு அது பாதகமாக அமையும் என்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளுடன் வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை பிரித்தானியா வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் ஆலோசனைகள் கூறப்படுகின்றன. பிரித்தானியாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தொழிலாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நிலையும் அவ்வாறே. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பிரித்தானிய தொழிலாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் எவ்வாறு கையாளப்படப் போகிறார்கள் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல்துறை, கொழும்பு பல்கலைக்கழகம்

Comments