ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு: கம்பனி தரப்பின் யோசனை கைகூடுமா? | தினகரன் வாரமஞ்சரி

ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு: கம்பனி தரப்பின் யோசனை கைகூடுமா?

ஆயிரம் ரூபாய் அதிகரிப்பு சம்பந்தமாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் இரண்டு யோசனைகளை அரசாங்கத்தின் முன் வைத்துள்ளது.  

ஒன்று தற்போது நடைமுறையில் உள்ள வருகையின் அடிப்படையில் சம்பளம் என்னும் முறைமை மாற்றப்பட வேண்டும். அதற்குப் பதிலாக உற்பத்தி அடிப்படையிலான சம்பளம் முறைமை உள்வாங்கப்பட வேண்டும்.  

அடுத்தது, தற்போது வழங்கப்பட்டு வரும் சம்பளத்தை தோட்ட நிர்வாகம் தொடர்ந்து வழங்க தயாராக உள்ளது. மேலதிக தொகையை (300ரூபாய்) அரசாங்கம் வழங்குவதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.  

1000ரூபாய் சம்பளம் வேண்டும் என்னும் கோரிக்கை வலுப்பெற தொடங்கிய காலந்தொட்டு தேயிலைத் தொழிற்றுறையில் முன்னெடுக்கப்படும் பாரம்பரிய கொடுப்பனவு முறைமைகளில் இருந்து விடுபடவேண்டும் என்று கூறி வருகின்றது தோட்ட முதலாளிமார் சம்மேளனம். கூட்டு ஒப்பந்த நடை முறையில் இருந்து விலகிச் செல்வதே இதன் முதல் நகர்வாகும். இது தற்போதைய சம்பள நிர்ணய பொறிமுறைக்கு மாற்று தேவைப்படுகின்றது என்பதையே வலியுறுத்துகின்றது.   

பெருந்தோட்டத் துறையில் உற்பத்தி முறைமையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் எனும் கருத்தியலை மலையக அறிவுஜீவிகள் வரவேற்கவே செய்கின்றார்கள். ஆனால் இதை சம்பளக் கொடுப்பனவை மட்டும் இலக்காகக் கொண்டதாக மாற்றும் யோசனை அவர்களுக்கு உடன்பாடில்லாதது ஆகும். ஏனெனில் சமூக மாற்றத்துக்கான ஒரு வழித்தடமாகவே உற்பத்தி முறை மாற்றம் என்பது இனம் காணப்படுகின்றது. பெருந்தோட்டத்துறை என்பது கைத்தொழில் துறையாக இருந்த போதும் கூட அதில் தொழில் மாத்திரமன்றி அந்தத் தொழில் சார்ந்த சமூகத்தையும் நிர்வாகம் செய்யும் கட்டமைப்பை உள்வாங்கிக் கொண்டுள்ளது.  

இதுவே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் மாற்றத்துக்கான முட்டுக்கட்டை என்பதை ஆய்வுகள் சுட்டுகின்றன. பெருந்தோட்டக் கட்டமைப்பிலிருந்து இச்சமூகம் வெளியேறுவது தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்குச் சாதகமான சங்கதியல்ல.  

இம்மக்களை நம்பி கடை விரித்திருக்கும் தொழிற்சங்கங்களுக்கும் பாதகமான விடமே. எனவே தான் தற்போதைய உற்பத்தி முறைமையானது முழுமையாக மாற்றம் பெறவேண்டியது அவசியமாகின்றது.  

ஆனால் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் சம்பள அதிகரிப்பு சமாச்சாரத்துக்கு மாற்று யோசனையாக தற்போதைய சம்பள நடைமுறை நீக்கப்பட வேண்டும் என்கிறது. இதற்கு வழிவகுப்பதாகவே உற்பத்தி அடிப்படையிலான வேதன முறைமையை அது விதந்துரைக்கின்றது. இது உற்பத்தி முறையிலான மாற்றத்தை நோக்கிய நகர்வல்ல.  

தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தமது புதிய சிபாரிசான உற்பத்தி அடிப்படையிலான சம்பள ஏற்பாட்டுக்கு சாதகமாக காணப்படும் சில விடயங்களை முவைக்கவும் செய்கிறது. தற்போதுள்ள நடைமுறை 150வருடகால பழைமை வாய்ந்தது என்பது சரிதான். தமது யோசனையை அரசாங்கம் அங்கீகரிக்கும் பட்சத்தில் ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான தொகையைப் பெறலாம் என்கிறது பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனிகள்.    சர்வதேச சந்தையில் தேயிலையின் விலை கூடி குறைகின்றது. இவ்வாறன நிலையில் தோட்டங்களைக் கொண்டு நடத்துவது மிகவும் கடினமாக உள்ளது. இன்று தோட்டத் தொழிலாளர்கள் நாளாந்த சம்பளத்தைவிட மேலதிக கொழுந்தைப் பறித்து அதிகமாக பெற்றுக் கொள்கிறார்கள். சில தொழிலாளர்கள் தினமொன்றுக்கு 30 – 35கிலோ தேயிலை கொழுந்தைப் பறிப்பவர்களாக இருக்கிறார்கள். சிறு தோட்ட உரிமையாளர்கள் உற்பத்தி முறைமையை கையாண்டுதான் சம்பளம் வழங்குகிறார்கள். இதனால் அங்கு பிரச்சினைகள் இல்லை. இங்கு தொழில் புரிவோர் நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாகவே உழைக்க முடிவதை அவதானிக்கலாம்.  

ஒரு கிலோ தேயிலை விலையில் 67சதவீதம் தொழிலாளர்களின் சம்பளத்திற்கே செலவாகின்றது என்றும் கூறுகின்றது பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம். ஆனால் இது சரியான கணக்குத்தானா என்பது குறித்து எந்தவொரு தொழிற்சங்கமும் ஆராய்ந்ததாகத் தெரியவில்லை. தொழிற்சங்கங்களின் இந்தப் பாராமுகம் பெரிய பலவீனம். அதுவே தோட்டக் கம்பனிகளுக்கு பெரும் பலம்.  

இன்று கம்பனி தரப்பு தோட்டங்களைக் குத்தகைக்கு எடுத்து 25வருடங்களைக் கடந்து விட்டானது. இக்காலக்கட்டத்தில் பெருந்தோட்டத்துறையை நட்டத்திலான ஓர் உற்பத்தி. துறையாகவே காட்டி வந்துள்ளது. இப்போதும் இதனையே தான் சொல்கிறது. அது கூறுகின்றபடி நாளொன்றுக்கு 30 -– 35கிலோ தேயிலைக் கொழுந்து பறிக்கக்கூடிய தொழிலாளர்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் காலநிலை என்பது எப்போதும் ஒரே தன்மை கொண்டிருப்பது அல்லவே. வரட்சிக் காலத்தில் இந்தளவு தேயிலையைப் பறிக்க இயலாது. தினமொன்றுக்கு 10கிலோ தேயிலைப் பறிப்பது கூட சில வேளைகளில் சவாலாகும். தேயிலைச் செடிகள் காய்ந்து கருகிப் போவதால் கிழமைக்கு இரண்டு முன்று நாட்களே தொழில் கிடைக்கும். இவ்வாறான சூழலில் உற்பத்தி முறைமைக்கேற்ப சம்பளம் என்னும் சங்கதி பிசுத்துப் போய்விடும் அபாயம் உள்ளது.  

தற்போதைய முறைமையான தொழிலுக்கு வருகை தருவதன் அடிப்படையில் சம்பளம் என்னும் முறையில் வருமானம் குறைச்சல் என்ற ரீதியிலேயே ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளம் அவசியம் என்னும் குரல் எழலானது என்பதை மறந்துவிட முடியாது.  

1000ரூபாய் சம்பளம் என்பது தற்போதைய அரசாங்கத்துக்கு ஒரு கெளரவப் பிரச்சினையாக மாறியுள்ளது. 1000ரூபாய் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்னும் பணிப்புரையை கம்பனிகளுக்கு வழங்கியவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆவார். இதன் பின்னரே கம்பனி தரப்போடு பேச்சுவார்த்தையும் இடம்பெற்றது. இது இணக்கமின்றி முடிந்தது.  

இதனையடுத்து அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, ரமேஷ் பத்திரன போன்றோர் பெருந்தோட்டங்களை அரசாங்கமே பொறுப்பேற்கப் போவதாக கூறலானார்கள். இதற்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் பதிலளித்திருந்தது.  

தோட்டங்கள் நீண்டகால குத்தகைக்குப் பெறப்பட்டுள்ள நிலையில் எழுந்தமானமாக அரசாங்கத்துக்குத் தோட்டங்களைச் சுவிகரிக்க முடியாது. அப்படி நடந்தால் சட்டச் சிக்கல்களைச் சந்திக்க வேண்டிவரும் என்று எச்சரிக்கும் பாணியில் கூறியிருக்கின்றது தோட்ட முதலாளிமார் சம்ளேனம். இதன் பின்னரும் கூட உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன 1000ரூபா சம்பள அதிகரிப்புக்கு கம்பனிகள் உடன்படாவிட்டால் தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்று அதனை இளைஞர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்போவதாக உறுதிப்படுத்தியுள்ளார். இவர் அமைச்சரவைப் பேச்சாளர், அத்துடன் அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர். இவரது வார்த்தையைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. தவிர 1000ரூபாய்ச் சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் உறுதியாய் இருப்பதையே இது குறியிட்டுக் காட்டுகின்றது.  

ஆயினும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் யோசனையைப் பற்றி அரசாங்கமோ தொழிற்சங்கமோ எந்தவொரு கருத்தையும் உத்தியோகப் பூர்வமாக வெளிப்படுத்தவில்லை இது எழுதப்படும் வரையில்.  

தாம் தெரிவித்திருக்கும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த தயார் என்றால் 1000ரூபாய்ச் சம்பள அதிகரிப்பில் எமக்கும் உடன்பாடு என்கிறது கம்பனி தரப்பு. ஆனால் அரசாங்கம் இந்த யோசனையை ஏற்குமா? அதற்கு மலையக தொழிற்சங்கங்கள் எப்படியான பிரதிபலிப்பினைக் காட்டும் என்பது கேள்விக்குறிதான். குறிப்பாக அரசாங்கத்தின் பங்காளி கட்சியாக இருக்கும் இ.தொ.கா. இதற்கு என்ன பதிலை வைத்திருக்கின்றது என்பதை அறிந்து கொள்ளும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.    இப்புதிய யோசனை ஏற்கப்பட்டால் இனி கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகிப் போகும். அதை இ.தொ.கா. எந்த அளவுக்கு வரவேற்கப் போகிறது என்பது அவதானத்துக் குரியது. ஏனெனில் கூட்டு ஒப்பந்தம் மூலம் பெருந்தோட்ட மக்களின் வேதன விவகாரத்தில் அது பாரிய செல்வாக்கினைச் செலுத்தி வருகின்றது.  

ஜனாதிபதி 1000 ரூபாவை அதிகரித்து வழங்க ஆணைப் பிறப்பித்துள்ளார். அமைச்சர்களோ கம்பனி தரப்பு கைகழுவ முனைந்தால் பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்கும். பிரித்துக் கொடுக்கும் என்கிறார்கள். முதலாளிமார் சம்மேளனமோ 1000 ரூபாய் அதிகரிப்பை சூட்சுமமாக மறுத்து புதிய யோசனையொன்றை முன்வைத்து பந்தினை அரசாங்கத்தின் பக்கமே இலாவகமாக நகர்த்திவிட்டுக் காத்திருக்கிறது. இவற்றுக்கிடையில் 1000 ரூபாய் வேதன அதிகரிப்பின் சூத்திரதாரியும் மூலவருமான அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பிந்தியச் செய்தியாக என்ன சொல்கிறார்? மார்ச் மாதம் முதல் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு நிச்சயம் கிடைக்கும் என்கிறார் அவர். என்னதான் நடக்கப் போகிறதாம்? பொறுத்திருப்போம்..!    

பன். பாலா

Comments