லேங்டல் தோட்ட மக்களின் அவதிக்கு தீர்வு கிடையாதா? | தினகரன் வாரமஞ்சரி

லேங்டல் தோட்ட மக்களின் அவதிக்கு தீர்வு கிடையாதா?

கஷ்டப்பட்டு உழைத்து களைத்து  வீட்டிற்கு வந்தால் நிம்மதியாக உறங்கக்கூட  வழியில்லாமல் தவிக்கிறோமே  எங்களுக்கு  எப்போது ஐயா வழி பிறக்கும்?"   என்ற ஏக்கத்துடன் கேட்கிறார்கள் நானுஓயா லேங்டல் தோட்ட மக்கள்.  இத்தோட்டத்தில் 4 ம் இலக்கம் கொண்ட தொடர் குடியிருப்பில் வாழும் 10 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் ஒவ்வொரு நாளும் தனது உயிருக்காக போராடிக்  கொண்டிருக்கிறார்கள்.   

கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இக் குடிருப்பு பகுதியில் ஆங்காங்கே பாரிய வெடிப்புகள் ஏற்பட்டன. இதனால் இப்பகுதி தாழிறங்கியுள்ளது. அத்தோடு மலசல கூடம்,  சமையலறை மற்றும் வீடுகளின் உட்புறத்திலுள்ள சுவர்கள் அனைத்திலும் பெரிய அளவில் வெடிப்புகள் காணப்படுகின்றன.  எப்போது சுவர் இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் இவர்கள் நாட்களைக் கடத்தி வருகின்றனர்.

இக்குடியிருப்புக்கு எதிரே  உயரமான    மண்மேடு காணப்படுகிறது. மழைக்காலத்தில் அடிக்கடி இம் மண்மேடும் சரிந்து விழுவதாகவும தெரிய வருகின்றது. கூரைத் தகடுகள் உக்கிய நிலையில் மழை நீர் உட்பகுதியில் வடிவதால் இரவு பொழுதில் நிம்மதியாக உறங்க முடியவதில்லை. கல்வி கற்கும் மாணவர்களும் தங்களில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியாமல் பெரிதும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.  

தங்களின் பிரச்சினைகளுக்கு நிவாரணம் தேடி மலையக அரசியல்வாதிகளை சந்திக்க முயன்ற போதிலும்  அம்முயற்சிகள் பலன் தரவில்லை என்பது இவர்களின் ஆதங்கம்.

கடந்த 2017ம் ஆண்டு நுவரெலியா இயற்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இவர்களை உடனடியாக இங்கிருந்து வெளியேறுமாறு அறிவித்தது. இது தொடர்பாக தேவராஜ் விசாலாட்சி என்ற மூன்று  பிள்ளைகளின் தாய் சொல்வதைக் கேளுங்கள்.  "எங்களுக்கு போதிய வருமானம் இல்லை.   தற்போது வீடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.    இரவில் தூங்குவதற்கு பயமாக உள்ளது.   வெள்ளம் வந்தால் நீர் வீட்டுக்குள் வருகின்றது. இதன்போது பாரிய இடையூறுகளைச்  சந்திக்கின்றோம். வீடு தருகிறோம் என்று பொய் சொல்லி ஏமாற்றுகின்றனர். - அரசியல்வாதிகளின் காரியாலயத்திற்கும் சங்க காரியாலயத்திற்கும் ஏறி இறங்கியது தான் மிச்சம். எனவே எங்களை ஏமாற்றாமல் வீடுகளை அமைத்து தாருங்கள்" என்கிறார் விசாலாட்சி.

தொழிலாளர் முத்துராஜ் ரமணி சொல்வதைக் கேளுங்கள். "பிரச்சினைகளை  சொல்லிச்சொல்லி இனி என்ன புண்ணியம் என நினைக்க தோன்றுகிறது.

தேயிலை மலையில் மிகவும் கஷ்டப்பட்டு வீடு வந்து உறங்கக்கூட நிம்மதி இன்றி வாழ்கின்றோம். காற்று வந்தால் கூரையில் போடப்பட்டுள்ள கறுப்பு றபர் சீட்டுகள் காற்றில் பறக்கின்றன. ரெட்டுவாங்க முடியாத நிலையில் உள்ளோம். எப்போது மாற்றம் கிடைக்கும் என்ற ஏக்கம் தான் எங்கள் மனதில் உள்ளது"  என்கிறார்  இவர்.

வரதராஜ் கனேகேஸ்வரி இப்படிச் சொல்கிறார் : எந்த தீர்வும் இதுவரை கிட்டவில்லை. இன்னும் ஆபத்தில் இருக்கின்றோம். எப்போது உக்கிபோயுளள கூரை தலைமேல் விழுமோ  எனத் தெரியவில்லை. அண்மையில் நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் வந்தார்.

எங்களுடைய வீடுகளை பார்த்தார். இப்பிரச்சினையை  அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கவனத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் கொண்டு சென்றுள்ளதாகவும் மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  கூறிச்சென்றார் எப்படியோ நல்லது நடந்தால் சரி" எனப் புலம்பினார்.    இவர்கள் பாவம். இவர்களைப் போலவே இன்றும் பலர் ஆபத்தான இடங்களில் இடிந்து விழக்கூடிய வீடுகளில் மரணத்துடன் தினமும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தகையோருக்கு விடிவு ஏற்படுத்தித் தருவதை அமைச்சர் தொண்டமான முதன்மை விஷயமாகக் கருத்தில் எடுத்து இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை ஏற்படுத்தினால் கோடிப் புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள் ​லெங்டல் தோட்டத் தொழிலாளர் குடும்பத்தினர். தோட்ட வீடமைப்புகளை ஏற்படுத்தும்போது  அபாய நிலையில் உள்ள குடும்பங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது மிக மிக முக்கியம்!

நூரளை சுப்பிரமணியம்

Comments