பெருந்தோட்ட பாதைகளை அபிவிருத்தி செய்வது அரசின் பொறுப்பு! | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்ட பாதைகளை அபிவிருத்தி செய்வது அரசின் பொறுப்பு!

மடகும்புற வைச் சேர்ந்த மயில்வாகனம் திலகராஜ் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி. எம்.பி, அரசியல்வாதி என்ற எந்த பந்தாவும் காட்டாதவர். எளிமையாக பழகக் கூடியவர். வழமையான மலையக அரசியல்வாதியாக இவரைக் கருதி விடாதீர்கள். அரசியல்வாதியான இவருக்கு இலக்கியவாதி, கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர் எனப் பல முகங்கள். ஒரு அரசியல்வாதியை புடம் போடக் கூடிய மற்றும் கண்காணித்து வழிநடத்தக் கூடிய முகங்களாக இவை இருப்பதாலோ என்னவோ, நான்கரை ஆண்டு எம்.பி. வாழ்க்கையின் பின்னரும் கூட அதே திலகராஜாகவே இவரால் இருக்க முடிகிறது. இவருடன் பேசினால், இப்படி ஒரு அரசியல்வாதியை நாம் இதுவரை மலையகத்தில் பார்த்தது இல்லையே என்ற எண்ணம் உங்களுக்கும் ஏற்படும். அதற்கு காரணம் உள்ளது. ஏனெனில் மலையகம் இவ்வளவு பின்தங்கி, அங்கு வாழும் மக்களின் பொருளாதாரம் இவ்வளவு மோசமாக இருக்கிறதே என்ற ஏக்கம் இவருள் கனன்று வந்திருக்கிறது. இந்த ஏராளமான பிரச்சினைகளை எப்படித் தீர்க்கலாம்? பிரதான அம்சங்களில் எவ்வளவு உறுதியான கட்டமைப்புகளை ஏற்படுத்தலாம் என்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் காண்பதையே தன் இலட்சியமாகக் கொண்டு கடந்த நான்கரை ஆண்டுகளாக இவர் உழைத்து வந்திருக்கிறார். 

மயில்வாகனம் திலகராஜாவை அவரது வத்தளை வீட்டில், கதிரவன் சுட்டெரிக்க ஆரம்பித்திருந்த ஒரு காலைப் பொழுதில் சந்தித்தோம். ஒரு மாதத்துக்கு முன்னர்தான் ஹேர்னியா தொந்தரவுக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஆடி ஓடாமல் கொஞ்சம் ஓய்வாக இருந்த பொழுதில் அவரை சந்தித்ததால் ஆறஅமர அவருடன் பேச முடிந்தது. கையில் ஒரு வெந்நீர் போத்தல். “அடிக்கடி மிடறு மிடறாகக் குடிக்கிறேன். சளித் தொல்லைக்கு அருமருந்து” என்று சொல்லியபடியே வாயில் கொஞ்சம் ஊற்றிக் கொள்கிறார். அவருடன் பேசிய போதுதான், பட்ஜட் நிதியாக இந்தக் கோடி ரூபா எல்லாம் வேண்டாம். மாவட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை எம்.பிக்களான நாங்கள் அறிந்து வந்து அரசிடம் தெரிவிக்கலாம். அரசே அந்த அபிவிருத்தி பணிகளை செய்து முடிக்கட்டும். இது நாங்கள் விரைவாக வேலை செய்ய உதவும் என்பது இவரது பார்வை. 

இதுவரை இப்படி ஒரு பார்வையை எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் வெளிப்படுத்தியதாகத் தெரியவில்லையே என்று நாம் மலைத்தபோது திலகராஜ் இன்னொரு விஷயத்தையும் சொன்னார். அது பெருந்தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வு தொடர்பானது. அதுதான், ஆயிரம் ரூபா சம்பள உயர்வு. 

“ஆயிரம் ரூபா கோரிக்கை எப்போது வந்தது தெரியுமா? 2015ம் ஆண்டில்தான் இது பற்றி பேசப்பட்டது. ஐந்து வருடங்களின் பின்னரேயே அது சாத்தியமாகப் போவதாகத் தெரிகிறது. இப்போது ஆயிரம் ரூபா கிடைக்கும் என்று வைத்துக் கொண்டாலும் அன்றைய பொருட்களின் விலைகளோடு ஒப்பிடும்போது இன்றைய விலைவாசி மிகவும் அதிகரித்து விட்டது. எனவே இந்த ஆயிரம் ரூபா ஐந்து வருடங்களுக்கு முன் அதற்கிருந்த பெறுமதியை இழந்து விட்டது. எது எப்போது கிடைக்க வேண்டுமோ அதை அப்போதே பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். ஆயிரம் ரூபா இன்றைக்கு வெறும் அடையாளம் தான். அது தன் பெறுமதியை இழந்து விட்டது. 

அடுத்ததாக இதை நான் நடைமுறை ரீதியான பிரச்சினையாகவும் பார்க்கிறேன். இவ்வளவு காலமாக சம்பள மற்றும் ஏனைய படிகள், சலுகைகள், வசதிகள் என்பன கூட்டு ஒப்பந்தம் மூலமே நிர்ணயிக்கப்பட்டன. இது தொழிலாளர் மற்றும் முதலாளிமாருக்கு இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமாக இருந்து வந்திருக்கிறது. முறுகல்கள் மற்றும் பிணக்குகள் ஏற்பட்டபோது அரசாங்கம் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் என சங்கங்கள் கோரிக்கைகளை விடுத்து வந்துள்ளன. ஆனால் இது ஒரு தொழிலாளருக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையிலான தொழில் ஒப்பந்தம் என்பதாக அர்த்தப்படுத்திக் கொண்டு அரசுகள் விலகி நின்று கொண்டன. கடந்த முறை பிணக்கு எழுந்த போதும் கூட அரசு இதில் தலையிட வேண்டும் என நாம் கேட்டுக் கொண்டோம். எனினும் இந்த அரசு இதில் தலையிடவில்லை. ஆனால் அரசியல் காரணங்களுக்காக அரசு இச்சம்பள விவகாரத்தில் தலையிட முன்வந்ததோடு முதலாளிமார் சம்மேளனத்துடனோ அல்லது கையெழுத்திடும் அதிகாரம் கொண்ட தொழிற்சங்கங்களுடனோ பேச்சுவார்த்தை நடத்தாமலேயே அமைச்சரவையில் ஆயிரம் ரூபாவை சம்பளமாக வழங்குவோம் எனக் கூறி அதற்கான திகதியையும் நிர்ணயம் செய்கிறது. எனினும் இன்றுவரை இதை எப்படி வழங்குவோம். அலவன்சாகவா அல்லது அடிப்படைச் சம்பளமாகவா மேலும் இதில் அரசின் பங்களிப்பு இருக்குமா, கம்பனிகள் ஒத்துக் கொள்ளுமா என்ற விவரங்கள் எதுவுமே வெளிவந்த மாதிரித் தெரியவில்லை. தங்களை பேச்சுவார்த்தைக்காக அரசு அணுகியிருக்கிறது என்று கம்பனி தரப்பு சொல்ல இல்லை...” 

திலகராஜ் இவ்வாறு கூறிச் சென்றபோது குறுக்கிட்ட நாம், ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்று நம்புகிறீர்களா? என்று கேட்டோம். 

“வழங்கப்படும் என்றுதான் நினைக்கிறேன். தேர்தல் அண்மிக்கும் காலத்தில் அதற்கான அரசியல் தேவை இருக்கிறது. ஆனால் நான் எதை உறுதியாகக் குறிப்பிட விரும்புகிறேன் என்றால், அந்த ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளமாக, ஊழியர் சேமலாப நிதி, நம்பிக்கை நிதியம் ஆகிய பிடித்தங்களுக்கு உட்பட்ட வேதனமாக இருக்காது என்பதைத்தான். இன்று அடிப்படைச் சம்பளம் 700 ரூபா. இதை 300 ரூபாவால் அதிகரித்தால் தான் ஆயிரம் என்ற எண்ணிக்கையை எட்டும். இது எப்படி சாத்தியமாகும் என்று புரியவில்லை. ரூபா 700 அடிப்படை சம்பளமானால் அதற்கான ஊழியர் சேமலாபநிதி பிடித்தமான 105 ரூபாவை சேர்ப்பார்கள். தேயிலை விலை கொடுப்பனவாக மேலும் 50 ரூபாவை சேர்த்துக் கொண்டால் மொத்தத் தொகை 700+105+50=855 ரூபாவாகி விடும். நாம் ஏற்கனவே 50 ரூபா கொடுப்பனவுக்காக பேச்சுவார்த்தை நடத்தி அன்றைய அமைச்சர் நவீன் திசாநாக்கவும் அதற்கு ஒப்புக் கொண்டுவிட்டார். அமைச்சில் அந்த நிதி உள்ளது. இன்றைய அமைச்சர் அதை எப்போது வேண்டுமானாலும் வழங்க முடியும். எனவே அந்த 50 ரூபாவையும் சேர்த்தால் 905 ரூபாவாகி விடும். மிகுதி 95 ரூபா. இத் தொகையை அரசும் கம்பனிகளும் பிரித்துக் கொள்ளலாம். எனவே கம்பனி வழங்குவது சிறு தொகை ஒன்றாகவே இருக்கும். ஆயிரம் ரூபா எப்படி வழங்கப்படும் எனத் தெரியாததால் இது நான் போட்டக் கணக்கு. எப்படி வழங்கப்போகிறோம் என்பதை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்தான் தெரிவிக்க வேண்டும்” என்று விளக்கமளித்த நுவரெலியா மாவட்ட உறுப்பினர், இன்னொரு கேள்வியையும் முன்வைத்தார். 

“ஊழியர் சேமலாப நிதி என்பது ஊழியர்களின் சேவைக் காலம் முடிவுக்கு வந்த பின்னர் வழங்கப்படும் ஒரு ஓய்வூதியம். இதில் சேவையாற்றியவர் மற்றும் சேவையைப் பெற்றவர் ஆகிய இரு தரப்பினரும் அளித்த நிதியுடன் கிடைத்த வட்டியும் அடங்கியிருக்கிறது. இனிமேல் கிடைக்கப்போகின்ற ஒரு ஓய்வுகால நிதிக்கான பிடித்தத்தை எவ்வாறு சம்பளத்தின் ஒரு பகுதியாகக் காட்ட முடியும் என்பது எனக்குப் புரியவில்லை. அது சம்பளத்தின் ஒரு பகுதி அல்ல என்பதால்தான் சம்பளத் துண்டின் இறுதிப் பகுதியில் தனியாக அதைக் குறிப்பிடுகிறார்கள். அது சம்பளமும் அல்ல, கொடுப்பனவுகளும் அல்ல. பிடித்தம் என்பதன் கீழேயே வருகிறது. சேமலாப நிதியை சம்பளத்தின் ஒரு பகுதியாகக் காட்டுவது முறையல்ல என்பது என் அபிப்பிராயம்” என்று அவர் கூறி முடித்தார். 

திலகராஜுக்கு இவ்விடயத்தில் இன்னொரு பிரச்சினையும் உள்ளது. தொழிலாளருக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தத்துக்கு மேலாக அரசே தலையிட்டு சம்பள விடயத்தில் மாற்றங்கள் செய்ய முடியுமாயின் இப்படி ஒரு ஒப்பந்தமும் பேச்சுவார்த்தைகளும் அவசியமே இல்லையே! இதைத்தான் நாமும் கூறி வந்திருக்கிறோம். தொழிலாளர் சம்பள விடயத்தில் அரசாங்கம் நேரடியாகத் தலையிட வேண்டும் என்று. இந்த ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்பட்ட பின்னர் கூட்டு ஒப்பந்தம் தேவையற்றதாகி விடும். அரசே அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் திலகராஜ் எம்.பி. 

திலகருடனான உரையாடலின் போது புதிய புதிய விடயங்கள் அவ்வப்போது தெறித்து விழும். அப்படி அவர் சொன்ன விடயம்தான் தோட்டப் பாதை பற்றியது.  

“உண்மையைச் சொன்னால் தோட்டப்பாதைகள் என்ற ஒன்று கிடையாது. ஏனெனில் தோட்டக் காணிகள் அனைத்துமே அரசுக்கு உரியவை. காணி அரசுக்கு சொந்தமாக இருக்கும்போது அதை ஊடறுத்துச் செல்லும் பாதைகள் எப்படிதோட்ட நிர்வாகங்களுக்கு சொந்தமாக முடியும்? இவ்வளவு காலமாக நாம் தவறாகப் புரிந்து கொண்டதால்தான் கம்பனிகள் தமக்கு சொந்தமற்ற காணிக்கும் பாதைக்கும் உரிமை கொண்டாடுகின்றன.” என்று ஒரு அதிர்வெட்டைத் தூக்கிப் போட்டார் திலகராஜ். 

இலங்கை முழுவதும் பெருந்தோட்டப் பாதைகள் என அறியப்படும் பாதையின் மொத்த நீளம் 1800 கிலோ மீற்றர்கள். இவை அரசுக்கு உரியவை. அரசால் பராமரிக்கப்பட வேண்டியவை. பாதைகளுக்கு பொறுப்பான அமைச்சும் சரி பாதை அபிவருத்தி அதிகாரசபையும் சரி இப்பாதைகளை தோட்டப்பாதைகளாக கருதி அவற்றைகண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றன.

தோட்ட நிர்வாகங்களோ அவற்றை தமது ஆதனமாகக் கருதினாலும் அதில் ஏன் காசைக் கொட்டுவானேன் என சும்மா இருந்து விடுகின்றன. இதனால் பாதிக்கப்படுவது அவற்றைப் பாவிக்கும் தோட்ட மக்கள்தான். எல்லா தோட்டப்பாதைகளையும் அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் கடமை. தோட்ட நிர்வாகங்களுக்கும் பாதைகளுக்கும் இடையே எந்த சம்பந்தமும் கிடையாது! என்று ஒரு உண்மையை போட்டு உடைத்தார். 

“பல தோட்ட நிர்வாகங்கள் தோட்டத்துக்குள் செல்லும் பாதையை முடி வைத்துள்ளன. இப்போது நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகிறீர்கள் என்றால் அந்த நிறுவனத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வேலை செய்ய வேண்டும். வெளியே வந்தால் அதற்கு கட்டுப்பட வேண்டியதில்லை. வீட்டுக்கு வந்தால் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட வேண்டும். நாடு தரும் உரிமைகளை அனுபவிக்கலாம்.  

ஆனால் தோட்டத் தொழிலாளியோ நாடு தரும் உரிமைகளை அனுபவிப்பதில் இருந்து தடுக்கப்படுவதைப் பார்க்கலாம். ஏனெனில் அவனுக்கு காணி உரிமை இல்லை. வீட்டு உரிமை இல்லை.

பாதைகளைப் பயன்படுத்தும் உரிமையும் மறுக்கப்படுகிறது. தோட்ட மருத்துவ நிலையங்களை அரசு கையேற்றிருந்தாலும் அவை முறையாக இயங்குவதில்லை.

எனவே இங்கு நகர்ப்புற கிராமப்புற மக்கள் ஒரு வகையாகவும் பெருந்தோட்ட சமூகம் வேறு விதமாகவும் கவனிக்கப்படுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்” என்று கூறி முடித்த திலகர் தன் கண்ணாடியைக் கழற்றித் துடைத்து மீண்டும் மாட்டிக் கொண்டு எம்மைப் பார்த்து புன்னகைத்தார். 

(அடுத்த வாரமும் தொடர்வார்)   

உரையாடியோர்: அருள் சத்தியநாதன், பி.வீரசிங்கம்

Comments