மேற்காசிய அரசியலில்; அமெரிக்க இராணுவ வல்லமை தகர்கிறதா? | தினகரன் வாரமஞ்சரி

மேற்காசிய அரசியலில்; அமெரிக்க இராணுவ வல்லமை தகர்கிறதா?

கொரோனா வைரஸின் (ெகாவிட்-19) தாக்கம் ஒரு பக்கம் நிகழும் போது மறுபக்கத்தில் அமெரிக்காவில் எதிர் நடவடிக்கைகள் நிகழ்ந்து கொண்டிருகிறது. கொரோனாவின் தாக்கம் சீனாவின் அரசியலை மட்டுமல்ல அதன் பொருளாதார, இராணுவ வல்லமையை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. இந்தக் காலத்தை பிற வல்லரசுகள் பயன்படுத்திக்கொள்ள முனைகின்றதை அவதானிக்க முடிகிறது. ஆனால் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள பெரும் அபாயமாக அப்கானிஸ்தான், ஈராக், ஈரான், சிரியா ஆகிய நாடுகளும், அந்நாடுகளில் இயங்கும் தீவிரவாத அமைப்புக்களும் ஏற்படுத்தி வருகின்றன. இக்கட்டுரையும் அமெரிக்க இராணுவம் மீதான தாக்குதலும் அதனால் ஏற்படவுள்ள நெருக்கடியையும் தேடுவதாக அமையவுள்ளது.  

முதலாவது, 2020 ஜனவரியில் ஈரான் ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தளங்கள் மீது நடத்திய தாக்குதலின் விளைவுகள் பற்றிய செய்திகளை தற்போதே பென்டகன் உறுதிப்படுத்தியுள்ளது. அத்தாக்குதலில் ஏறக்குறைய 109 அமெரிக்க படையினர் பாதிக்கப்பட்டுள்ளதாக பென்டகன் தெரியப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி ட்ரம்ப் எந்த படைவீரருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவித்திருந்த நிலையில் காலதாமதமாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாவது, அமெரிக்காவின் இராணுவ விமானத்தினை தாம் சுட்டு வீழ்த்தியதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான்களின் கட்டுப்பாட்டிலுள்ள காஜினி மாகாணத்தில் தேயக் பகுதியில் அமெரிக்க விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாக தெரியவருகிறது. ஆனால் இந்த விமானம் விபத்துக்குள்ளானதாகவும் தலிபான்கள் சுட்டுவீழ்த்தியதை மறுப்பதாகவும் அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதே நேரம் விமானம் நொருங்கி வீழ்ந்தது தொடர்பில் உன்னிப்பாக அவதானிப்பதாகவும் அவ்வதிகாரி தெரிவித்துள்ளார். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதோடு பல சி.ஐ.ஏ. உயர் அதிகாரிகள் உட்பட 83 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.  

மூன்றாவது, எதிரியின் அச்சுறுத்தல்களைத் தடுக்கும் அளவுக்கும் போரை நிறுத்துவதற்கும் நாம் பலமாக வேண்டும். நாம் பலமாக இருந்தால்தான் எதிரிகளின் அச்சுறுத்தல் முடிவுக்கு வரும் இதனால் போர் ஏற்படாது. நாம் யாரையும் அச்சுறுத்தத் தேவையில்லை. என ஈரானிய மூத்த மதத் தலைவர் அலி கெமெனி அறிவித்துள்ளார். இதனை ஈரானின் அணுவாயுதம் பற்றிய செய்தியைச் சொல்வதாகவே மேற்கு ஊடகங்கள் அதிகம் முதன்மைப்படுத்தியுள்ளன. அதேநேரம் ஈரானின் மதத் தலைவரது செய்தியானது ஈரானின் அணுவாயுத வல்லமை சார்ந்ததாகவே தெரிகிறது. வட கொரியா எப்படி போரை நிறுத்த அணுவாயுதத்தை பயன்படுத்தியதோ அதே போன்றே ஈரானும் செயல்பட முனைவது தொளிவாக தெரிகிறது. இது அமெரிக்காவின் இராணுவ வல்லமையை பாதிப்பதாக மட்டுமல்லாது அதன் பொருளாதார மையத்தையே தகர்ப்பதாகவும் இஸ்ரேலின் இருப்பினை பாதிப்பதாகவும் மாறும் என்பதே தற்போது எழுந்துள்ள பிரதான அச்சுறுத்தலாகும்.

நான்கு, ஈராக் நாட்டுக்கான ஆயுத விநியோகத்தினை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அறிவித்துள்ளது. இதனால் ஈராக்கின் இராணுவ ஆயுத தளபாட சந்தையாக ரஷ்யா மாறிக்கொண்டிருப்பதுடன் துருக்கி சிரியா, ஈரான், ஈராக் என ரஷ்யாவின் ஆயுத விநியோக பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது. இது புதிய நெருக்கடியை அமெரிக்க இராணுவ வலிமைக்கு ஏற்படுத்தவுள்ளது.  

அமெரிக்காவின் இராணுவ வல்லமை மேற்காசியாவில் வீழ்ச்சி கண்டு வருகிறது. அதனால் அதன் அரசியல் இராணுவ பரப்பு மட்டுமன்றி பொருளாதார வாய்ப்புகளும் நெருக்கடியை சந்தித்துள்ளது. அமெரிக்க இராணுவம் அழிக்கப்படும் போது அமெரிக்க அரச வல்லமையால் எதையும் செய்யமுடியாத கையறு நிலையை அந்நாடு தற்போதே முதல் தடவையாகச் சந்தித்துள்ளது. கடந்த காலத்தைப் போல் ஒரு பாரிய போரை தொடக்கவோ அல்லது நிகழ்த்தவோ முடியாத நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது. இதன் விளைவுகளுக்கு அண்மைய காலத்தில் அமெரிக்கா பின்பற்றிய கொள்கைகளும் உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளும் திட்டங்களின் பலவீனங்களுமே பிரதான காரணமாகும்.

இந்தப் போக்கு நீடிக்குமாயின் அமெரிக்காவுக்கு மாற்றான வலிமை படைத்த சக்தியாக ரஷ்யா மாறுவது இலகுவானதாக அமைய வாய்ப்புள்ளது. சீனாவின் எழுச்சி பெருமளவுக்கு கொவிட்-19 ஆல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வைரசின் தாக்கம் நீடிக்குமாக இருந்தால் சீனாவின் எழுச்சிகள் அனைத்தும் தகர வாய்ப்புள்ளது. சீனாவின் சனத்தொகையே இன்றைய உலகப் பொருளாதாரத்தின் சந்தையுமாகும். அது சீனாவினது மட்டுமல்ல உலக நாடுகளது பொருளாதார பலமுமாகும். எனவே தனித்து சீனா மட்டும் தகரப் போவதில்லை சீனாவினது சந்தையில் தங்கியிருக்கும் நாடுகள் அனைத்துமே நெருக்கடிக்கு உள்ளாகும்.  

மேற்காசியாவில் தங்கியிருக்கும் அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடியை அனைத்து இஸ்லாமிய தரப்பும் ஏற்படுத்த ஆரம்பித்துள்ளன. இதன் உச்ச எல்லை ஏறக்குறைய ஈரானின் அணுவாயுதமாகவே அமையும். அதனால் அமெரிக்கா மட்டுமல்ல இஸ்ரேலும் நெருக்கடிக்கு உள்ளாகும்.

கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்

Comments