“மணிரத்தினத்துடன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை!” | தினகரன் வாரமஞ்சரி

“மணிரத்தினத்துடன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை!”

ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமாக உருவாகியுள்ளது, ‘அதோ  அந்த பறவை போல’. முதன்முறையாக இதில் அதிரடி சண்டைக் காட்சிகளில்  நடித்துள்ளார், அமலா பால். 

இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக சென்னைக்கு வந்த அவரிடம்  பேசினோம். எது கேட்டாலும் சிரித்தபடி பதிலளிக்கும் அவர், தன் இரண்டாவது  திருமணம் குறித்து மட்டும் கேள்வி கேட்க வேண்டாம் என்று முன்கூட்டியே  சொல்லிவிட்டார். 

“சினிமாவில் நடிக்கும் பெரும்பாலான நடிகைகளுக்கு, ஒரு  படத்திலாவது ஆக்‌ஷன் காட்சியில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.  எனக்கும் அந்த ஆசை இருந்தது. வழக்கமான கதைகளில் நடித்துவிட்டுச் செல்வது  ஒரு கட்டத்தில் சலிப்பு ஏற்படுத்துவதாக இருந்தது என்று சொல்ல மாட்டேன். 

என்றாலும், வித்தியாசமான கதைகளில், இதுவரை நானே நடிக்காத  வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது மிகப் பெரிய கனவாகவும்,  எதிர்பார்ப்பாகவும் இருந்தது. அப்போதுதான் ‘அதோ அந்த பறவை போல’ படத்தின்  கதையைக் கேட்டேன். உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். 

இதில் நடித்தது எனக்கு மிகப் பெரிய சந்தோஷத்தைக்  கொடுத்துள்ளது. படத்தின் தயாரிப்பாளருக்கு கண்டிப்பாக நல்ல லாபம்  கிடைக்கும். காரணம், கதை.” என்றவரிடம், 

‘அப்படியென்ன வித்தியாசமான கதை?’ன்னு கேட்டதும், 

“ஒரு இளம்பெண் யாருடைய உதவியும் இல்லாமல், தனி ஆளாக ஒரு  அடர்ந்த காட்டில் சிக்கிக்கொண்டு தவிக்கிறாள். உயிருக்குப் போராடும் அவள்,  அந்தக் காட்டிலிருந்து எப்படி தப்பிக்கிறாள் என்பது கதை. தற்போது நாடு  இருக்கும் சூழ்நிலையில், பெண்கள் பாதுகாப்பு என்பது எந்தளவுக்கு பலவீனமாக  இருக்கிறது என்பது மிகப் பெரிய விவாதமாக இருக்கிறது. 

இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், இத்தகைய கதையுடன் ஒரு படம்  வருவது ஒட்டுமொத்த பெண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடியதாக  இருக்கும். ஆந்திரா மற்றும் அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பு நடந்தது. 

படக்குழுவினர் ஏற்கனவே ஷூட்டிங் நாட்களையும், என்னென்ன பணிகளை  எப்போது முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்ததாலும், காடுகளில்  தங்களது கடுமையான உழைப்பை வெளிப்படுத்தியதாலும் எவ்வித அசம்பாவிதமும்  இல்லாமல் ஒழுங்காக படப்பிடிப்பு நடந்து முடிந்தது.”  என்று பேசியவரிடம்,  “மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்திலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தை கேட்டோம். 

“மணிரத்னம் டைரக்‌ஷனில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில்  நடிப்பதற்கான ஆடிஷனில் கலந்துகொண்டேன். படத்தின் கதைப்படி, மிகவும்  அமைதியான பெண் கேரக்டருக்கு என்னை தேர்வு செய்ய மேக்கப் டெஸ்ட்  எடுத்தார்கள். 

நிஜத்தில் நான் கலகலப்பாக சிரித்துப் பேசக்கூடிய பெண்  என்பதால், அமைதியான அந்தப் பெண் கேரக்டருக்கு நான் செட்டாக மாட்டேன் என்று  தோன்றியது. இதையேதான் மணிரத்னமும் சொன்னார். ‘அடுத்த படத்தில் சேர்ந்து  பணியாற்றலாம். இந்தப் படத்தில் வேண்டாம்’ என்றார். உண்மையில் இதுதான்  நடந்தது. 

அதற்குள் சில மீடியா நபர்கள், மணிரத்னம் படத்திலிருந்து என்னை  நீக்கிவிட்டார்கள் என்பது போல் கதை எழுத ஆரம்பித்துவிட்டார்கள். அவர்  என்னை நீக்கவும் இல்லை, நான் விலகவும் இல்லை. எனக்கு தருவதாக இருந்த  கேரக்டருக்கு நான் பொருத்தமாக இல்லை என்பதே உண்மை. தமிழில் உருவாகும்  எல்லாப் படத்திலும் நானே நடிக்க வேண்டும் என்று நினைக்க முடியாது. 

ஒரு கேரக்டருக்கு நான் பொருத்தமாக இருந்தால் மட்டுமே நடிக்க  முடியும். ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நான் நடிக்க தேர்வாகாதது குறித்து  வருத்தப்படவில்லை. இதெல்லாம் திரைத்துறையில் சகஜம். ஒரு விஷயத்தை நாம்  எந்த கோணத்தில் அணுகுகிறோம் என்பதுதான் முக்கியம்.”   

Comments