ஐ.தே.க. - சமத்துவ மக்கள் சக்தி பொதுச் சின்னத்தில் தேர்தலை சந்திக்க இணக்கப்பாடு | தினகரன் வாரமஞ்சரி

ஐ.தே.க. - சமத்துவ மக்கள் சக்தி பொதுச் சின்னத்தில் தேர்தலை சந்திக்க இணக்கப்பாடு

ஐக்கிய தேசியக் கட்சியும், சமத்துவ மக்கள் சக்தியும் ஒரே அணியாக நின்று பொதுச் சின்னத்தில் தேர்தலை சந்திக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுபடுத்தும் எந்த எண்ணமும் இந்த கூட்டணியிடம் கிடையாது என சமத்துவ மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பல்வேறு சந்திப்புக்களிலும் சாதகமான சமிக்ஞைகள் வெளிப்படுத்தப்பட்டிருப்பதாக தினகரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்த மத்தும பண்டார, பேச்சுக்களில் 90சதவீதமானவை சாதகமாகக் காணப்பட்டதாகவும் நாளை திங்கட்கிழமை இறுதி முடிவை வெளியிட உடன்பாடு காணப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இதன் பிரகாரம் இருதரப்பினரும் ஒன்றுபட்டு ஒரே அணியாக பொதுச் சின்னத்தில் களமிறங்குவதற்கு இணக்கம் காணப்பட்டிருப்பதாக கூறிய அவர் யானைச் சின்னம் தொடர்பில் காணப்படும் சட்டச் சிக்கலை நிவர்த்தி செய்துகொள்ள முடிந்தால் அந்தச் சின்னத்தில் போட்டியிடவும் இன்றேல் பொதுச் சின்னத்தில் களமிறங்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இருதரப்புகளும் பொதுச்சின்னமாக அன்னத்தைப் பயன்படுத்தலாமென அபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டிருப்பதால் பெரும்பாலும் அன்னத்தையே பயன்படுத்தக் கூடிய வாய்ப்பு காணப்படுகிறது. கடந்த சில வாரங்களாக முரண்பாடுகள் அதிகரித்துக்காணப்பட்ட போதிலும் இருதரப்பும் விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த நிலையிலேயே இறுதிக்கட்டப் பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டன. கட்சி இரண்டாக பிளவுபட்டு இரண்டு சின்னங்களில் போட்டியிட்டால் பாதகமான விளைவுகளுக்கு முகம் கொடுக்கும் நிலை ஏற்படலாமென சுட்டிக்காட்டப்பட்ட நிலையிலே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டது.

எம்.ஏ.எம். நிலாம்

Comments