ஈழத்து இலக்கியத்துக்கான மதிப்பு என்றைக்கும் இருக்கிறது | தினகரன் வாரமஞ்சரி

ஈழத்து இலக்கியத்துக்கான மதிப்பு என்றைக்கும் இருக்கிறது

எழுத்தாளர் திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் மேடைப் பேச்சாளர் என பல துறைகளில் கால் பதித்து இலக்கிய உலகிற்கும் தமிழ் திரை உலகிற்கும் சிறந்த பணிகளை மேற்கொண்டு வருபவர்.  

அவரது 'அப்பத்தா' சிறுகதைத் தொகுப்பு இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் சிறப்பு விருதை பெற்றது. தமிழ்நாட்டின் உயர் விருதான இலக்கியச் சிந்தனை விருதையும் அது பெற்றுக்கொண்டுள்ளது. 'அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதியார்' என்ற பாரதியாரின் சொந்த வாழ்க்கையை அடிப்படையாக வைத்து அவர் எழுதிய நூல் ஒரு முதன்மையான ஆய்வு நூல். பாரதி மறைந்த 95 ஆண்டுகளில் எங்கும் யாராலும் எழுதப்படாத ஒரு ஆய்வு நூல் என்ற பெருமை இந்த நூலுக்கு உள்ளது. 

'என்று தணியும்' என்ற திரைப்படம் சாதி பேதங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இணக்கமாக மக்கள் வாழ்வதை வலியுறுத்தும் திரைப்படம் அது. சாதி பகைமைகள் என்று தணியும் எனக் கேள்வி கேட்கும் திரைப்படம் அது. பெரும் வெற்றி பெறாவிட்டாலும் சிறந்த கதையை கொண்ட திரைப்படம் என தமிழ் கூறும் நல்லுலகில் பேசப்படுகிற திரைப்படம் அது. 

சிறந்த பல குறும் திரைப்படங்கள் அவருடையவை. இந்தியாவில் ஒரு கிராமத்தில் 90 குழந்தைகள் பலியானதற்கு காரணமான பள்ளிக்கூடம் தொடர்பான படம் இதில் முக்கியமானது.  

சமூகத்திற்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பல குறும் படங்களின் சொந்தக்காரர் அவர். தானே கதை வசனம் ஒளிப்பதிவு என அனைத்து பொறுப்புகளையும் ஏற்று பல சிறந்த குறும்படங்களை அவர் சமுதாய மேம்பாட்டுக்காக வழங்கியுள்ளார். 

அத்தனை பெருமைக்கும் சொந்தக்காரரான தமிழகத்தின் சிறந்த இலக்கியப் படைப்பாளியும் திரைப்பட இயக்குனருமான பாரதி கிருஷ்ணகுமார் இலங்கையில் கம்பன் விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த போது தினகரனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் இது. 

கேள்வி: கம்பன் கழகத்தினரால் ஒவ்வொரு வருடமும் கொழும்பில் நடத்தப்படும் கம்பன் விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியாவிலிருந்து வருகை தந்திருக்கிறீர்கள் கம்பன் விழா பற்றிய உங்கள மனப்பதிவு என்ன? 

பதில்:   உலகில் பல நாடுகளிலும் கம்பன் விழாக்கள் நடக்கின்றன. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கம்பன் விழாக்கள் அவ்வப்போது நடக்கின்றன. இலங்கை கம்பன் கழகத்தின் கம்பன் விழா அதுபோன்றதல்ல. அதற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு அதனை ஒரு இலக்கிய விழாவாக மட்டும் கருதமுடியாது. எல்லா இனத்தவரையும் ஒன்று சேர்த்து ஒரே மேடையில் அமர்த்தி அவர்களை கௌரவிக்கும் ஒரு விழாவாகவும் , சமூகத்துக்கு உதவி செய்யும் ஒரு சமூக விழாவாகவும் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்ற ஒரு நல்லிணக்க விழாவாகவும் அதனைப் பார்க்க முடிகிறது. 

வெறும் வாய் வார்த்தையாக இலக்கியமாக அல்லது கம்பன் கூறியபடி குகனும் சகோதரன், சுக்ரீவனனும் சகோதரன் ,விபீடணனும் சகோதரன். காப்பியத்தில் ஏன் அப்படி சொல்லப்படுகிறது என்றால் விலங்காக இருந்தாலும் வேடனாகவே இருந்தாலும்கூட சகோதரனாக நட்பு பாராட்டுவது தான் அது. அந்தவகையில் நல்லிணக்கத்தை வலியுறுத்துகின்ற ஒரு காப்பியம் தான் கம்பராமாயணம்.   அந்த காப்பியத்தை கொண்டாடுகின்ற இலங்கை மண்ணின் மக்கள் அதை செயலிலும் செய்கிறார்கள் என்பதே பெருமைப்படும் விஷயம். 

கேள்வி:இது ஒரு இலக்கிய விழா மட்டுமல்ல, நல்லிணக்கத்தின் விழாவும் தான் என்று கூறுகிறீர்களா? 

பதில்: ஆம். சகல இன. மத சான்றோர்களையும் தமிழ், சிங்களம், முஸ்லிம் என பாராது அனைவரையும் ஒரே மேடையில் ஒன்றிணைத்து அவர்களை பாராட்டுகின்ற இந்த நிகழ்வு மிகவும் பாராட்டுக்குரியது. 

இது இந்த நாட்டின் வளர்ச்சிக்கு ஏதோ ஒருவகையில் பங்களிப்பு செய்கிறது. இந்த மேடையை பயன்படுத்தி கம்பன் காட்டிய நெறியை செய்து காட்டுகிறார்கள். அந்த வகையில் இது வெறும் கம்பன் விழா மட்டுமல்ல. எது விழுந்துவிடக் கூடாது என கம்பன் விரும்பினானோ அதனை கட்டி எழுப்பவே கம்பன் கழகம் இந்த அரிய பணியை செய்கிறது. என்பது எனது கருத்து. 

கேள்வி: இந்த விழாவில் கலந்து கொண்டு அதற்கு பங்களிப்புச் செய்வது தொடர்பில் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? 

பதில்: பெருமையாக இருக்கின்றது. இன மத நல்லிணக்கத்துக்காக போடப்படும் அந்த படிக்கட்டுக்கு என்னாலும் ஒரு செங்கல் ஆக இருக்க முடிகின்றது என்பது குறித்து பெருமைப்படுகிறேன். இதுபோன்று வேறு விழாகள் நடத்தினால் மற்றவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டுதான் அதனை ஏற்பாடு செய்வார்கள் ஆனால் கம்பன் கழகத்தினர் அப்படி இல்லை. கொழும்பு கம்பன் கழகம் சான்றோர்க்கு விருது வழங்கி கௌரவிப்பது மட்டுமன்றி, ஏழை எளியவர்களுக்கு உதவியும் சன்மானமும் வழங்குகிறது . நல்லிணக்கத்துக்கான சிறந்த அடித்தளத்தையும் அது இட்டு வருகிறது என்றால் மிகையில்லை. 

கேள்வி: இந்திய இலக்கியத்துறை விசாலமானது. அந்த வகையில் இலங்கையின் இலக்கிய முயற்சிகளை, குறிப்பாக ஈழத்து தமிழ் இலக்கிய முயற்சிகளை எவ்வாறு அது பார்க்கிறது? 

பதில்: ஈழத்து தமிழ் இலக்கியத்திற்கு இந்தியாவில் மட்டுமல்ல முழு உலகிலும் பெரிய மதிப்பு இருக்கிறது. அது எல்லா காலங்களிலும் இருந்து வருகிறது இனியும் இருக்கும். 

முன்பு இலங்கையில் இருந்து பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி தற்போது கம்பன் கழகத்தின் கம்பவாரிதி ஜெயராஜ் இவர்களை போன்றவர்கள் இலக்கியத்திற்கு பெரும் பங்களிப்பு செய்பவர்கள்.  

இது டேனியல் காலத்திற்கு முன்பிருந்தே ஆரம்பித்தது. அத்தோடு சேர்ந்து பெரிய பட்டியலே போடலாம். கவிதை, சிறுகதை நாவல் என எல்லாத்துறைகளிலும் தமிழ் இலக்கியத்துக்கு பங்களிப்பு செய்த மக்கள் இலங்கை மக்கள்.   உலகின் தமிழ் இலக்கியத்தை எழுதினால் ஈழத்துப் படைப்பாளிகளையும் ஈழத்து இலக்கியத்தையும் விட்டு விட்டு எழுத முடியாது. அப்படி எழுதினால் அது நிறைவு பெறாது என்பதே எனது கருத்து. 

கேள்வி: இலங்கையிலாக இருக்கட்டும் இந்தியாவிலாக இருக்கட்டும் மிக வேகமான இந்த விஞ்ஞான யுகத்தில் இலக்கிய முயற்சிகள் எந்த அளவில் இடம்பெறுகின்றன? 

பதில்: என்னைப் பொறுத்தவரை ஒரு சமூகத்திற்கு புதிதாக ஒரு கண்டுபிடிப்பு வரும்போது அல்லது ஒரு கருவி வரும்போது சில நன்மைகளும் தீமைகளும் இரண்டுமே ஏற்படுகின்றன. 

தொலைக்காட்சியில் என்ன நன்மை என்று நாம் பார்த்தால் எங்கோ உலகில் நடக்கின்ற விடங்களை எங்கள் வீட்டுக்குள் கொண்டுவந்து காட்டுகின்றது. உலகில் எங்கோ நடக்கின்ற விளையாட்டு, அரசியல் நிகழ்ச்சிகளை எமக்கு உடனடியாக காட்டுகிறது. 

ஆனாலும் நாம் அதிலேயே உட்கார்ந்துவிட்டால் எமது காலம் வீணடிக்கப்பட்டுவிடும். அதனால் அதில் நன்மையும் தீமையும் உள்ளன. இலக்கியத்தைப் பொறுத்த வரையிலும் சில பின்னடைவுகள் வரலாம் ஆனால் அது இலக்கியத்தின் முக்கியத்துவத்தையும் படைப்புகளையும் ஒருபோதும் பாதிக்காது.  

இன்னும் புத்தகங்கள் வந்துகொண்டு இருக்கின்றன. தமிழ்நாட்டில் பல புத்தகச் சந்தைகள் ஏன் இலங்கையிலும் கூட நான் பார்க்கின்றேன் ஒரு வருடத்திற்கு எத்தனையோ புத்தகச் சந்தைகள் நடக்கின்றன. கம்பன் விழா வாசலிலும் கூட புத்தகக் கடையில் எந்த நேரமும் ஒரு கூட்டம் புத்தகம் வாங்கிக்கொண்டு இருப்பதை நான் பார்க்கின்றேன். தமிழ்நாட்டில் புத்தக விற்பனையாளர்கள் கடந்த ஐந்து வருடங்களில் காணாத விற்பனையை இம்முறை தாம் காண்பதாக தெரிவிக்கின்றார்கள். உண்மையில் அது மகிழ்ச்சியைத் தருகின்றது. 

எத்தனை நவீன மாற்றங்கள் வந்தாலும் புத்தகம் வாசிப்பு ஒருபோதும் நிறுத்தப்படாது.   அது ஒரு சங்கிலித் தொடராக இருக்கும். அதனை யார் உருவாக்குவார்கள் என்று கேட்டால் அதில் ஈடுபடுபவர்கள் அதனை உருவாக்குவார்கள். குறிப்பாக கம்பவாரிதி ஜெயராஜுடைய உரையை கேட்பவர்களுக்கு கம்பனை வாசிக்கவேண்டும் என்ற உணர்வு வரும். அதேபோன்றுதான் திருக்குறள் என்ற பொதுமறையை, வள்ளுவரை வாசித்தறிய வேண்டும் எனத் தோன்றும். 

2018 நான் கம்பன் விழாவில் வந்து கலந்து கொண்டபோது மேடையில் நாற்காலியை தூக்கி போட்டவர்கள் கம்பன் கழகத் தொண்டர்கள். இப்போது மேடையில் கம்பனைப் பற்றி பேசுகின்றார்கள. கவிதைகள் பட்டிமன்றங்களில் முக்கிய பாத்திர மேற்கின்றார்கள். அப்படியே நீங்கள் கூறுவதுபோல் அது கொஞ்சம் அருகினாலும் மீன் பாட்டுக்கு போகின்ற மீனவனுக்கு ஒரு நாளில் நிறைய மீன்பாடு கிடைக்கும். இன்னொரு நாள் ஒன்றுமே படாது. 

அதுபோலத்தான் இலக்கியப் படைப்பும் அதற்காக மீனவர்கள் அவர்கள் தொழிலை விட்டுவிடப் போவதில்லை அதுபோன்றுதான் இலக்கியமும். சில பின்னடைவு காணப்பட்டாலும் மீண்டும் அது முன்னேறும். முயற்சிகளும்‌ முனைப்புகளும் தொடரும்.

(அடுத்த வாரம் தொடரும்)

Comments