அரசாங்கப் பாடசாலைகளை தோட்டப் பாடசாலைகள் என முத்திரை குத்துவது என் ? | தினகரன் வாரமஞ்சரி

அரசாங்கப் பாடசாலைகளை தோட்டப் பாடசாலைகள் என முத்திரை குத்துவது என் ?

(கடந்த வாரத் தொடர்)

மயில்வாகனம் திலகராஜ் என்ற புதிய மலையகத்துக்கான மற்றும் இளைஞர்களுக்கான பாராளுமன்ற உறுப்பினர் ஏன் தொடர்ந்தும் எமக்கு தேவைப்படுகிறார் என்பதை அவருடன் பேசிப் பார்த்தவர்களுக்கும் பழகிக் கொண்டிருப்பவர்களுக்குமே மிகச் சரியாக புரியும் என்பதால் தான் அந்த அவரது இயல்புகளையும் ஆக்க சத்தியையும் நாம் பொது மக்கள் முன்னிலையில் வைக்க வேண்டிய அவசியத்தை உணர்கிறோம்.

ஆங்கிலத்தில் missed the bus என்பார்கள். நேரத்துக்கு வரும் பஸ்சை தவற விட்டு விட்டால் அடுத்த பஸ் வரும்வரை கால் கடுக்க நிற்க வேண்டும். நாம் தவறவிட்ட நேரம் அன்று முழு நாளும் நம்மைத் துரத்திக் கொண்டே இருக்கும். எனவே வாய்ப்புகளைத் தவறவிடக்கூடாது. இது இரு சாராருக்கும் பொருந்தும். சரியான தலைவர்களையும் பிரநிதிகளையும் அடையாளம் கண்டு, அவர்களை அரசியலில் உயர்த்திவிட வேண்டியது மக்கள் கடமை. மக்கள் தயவால் பதவிகளுக்கு வந்த பின்னர் மக்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பது மக்கள் பிரதிநிதிகளின் கடமை. அதாவது பஸ்சை எவருமே தவறவிடக் கூடாது. தவற விட்டதால் தான், எவற்றை சிந்தித்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை வாக்காளர்கள் அறியாமல் பஸ்களைத் தவற விட்டாதால் தான் குடியுரிமை கிடைத்து முப்பதாண்டுகள் ஆகிய பின்னரும் மலையக சமுதாயமும் பின்னடித்துக் கிடக்கிறது என்பதை அனைவருமே ஏற்றுக் கொள்வார்கள். அதனால்தான் திலகராஜ் என்ற பஸ்சை 2020 இல் தவறவிட்டு விடவும் கூடாது பஸ்சும் பஸ்தரிப்பிடத்தில் நிற்கவும் வேண்டும்! 

இதை அவரிடம் சொல்லி, நிச்சயம் போட்டியிடுவீர்கள்தானே? என்று கேட்டபோது, ஆமாம் அடுத்த பொதுத் தேர்தலில் தலைவர் திகாம்பரமும், இராதாகிருஷ்ணனும் நானும் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவோம் என்று கூறியதை வாசகர்களுக்கும் சொல்லிவைக்க விரும்புகிறோம். 

தோட்டப் பாதைகள் என்ற ஒன்றே கிடையாது என்று திலகராஜ் அடித்துச் சொன்னதை கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம்,  அதுபோலத்தான் தோட்டப் பாடசாலைகள் என்ற ஒன்றே கிடையாது என்ற மற்றொரு குண்டையும் தூக்கிப் போட்டார் அவர். 

“நான் இன்னொன்றும் சொல்லவா? எல்லாப் பாடசாலைகளையும் அரசு பொறுப்பேற்று விட்டதல்லவா? அப்படியா நினைக்கிறீர்கள்? நான் அறிந்த வரையில் கண்டி மாவட்டத்தில் தெஹிகந்த என்ற தோட்டத்தில் அமைந்திருக்கும் பாடசாலை அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படாமல் இப்போதும் தோட்டப் பாடசாலையாகவே இருந்து வருகிறது. அப்பாடசாலை பொறுப்பாசிரியருக்கு தோட்டத் துரைதான் சம்பளம் தருகிறார். நான் உங்களை ஒரு நாள் அங்கே கூட்டிக் கொண்டு போகிறேனே! அப்போதுதான் அதை நேரில் பார்த்து நம்புவீர்கள்! என்று ஒரு அபூர்வமான தகவலைச் சொல்லிய திலகராஜ் மீண்டும் தோட்டப் பாடசாலை விவகாரத்துக்கு வந்தார். 

“கல்வி அமைச்சின் கீழ் பல பிரிவுகள் உள்ளன. அவற்றில் பெருந்தோட்டப் பாடசாலைகள் என்ற பிரிவும் ஒன்று. நான் குறிப்பிட்டுச் சொன்ன அந்தப் பாடசாலையைத் தவிர ஏனைய அனைத்து பாடசாலைகளும் அரசுடமையான பின்னர் அவை அரசு பாடசாலைகள் என அழைக்கப்பட வேண்டுமா அல்லது தோட்டப் பாடசாலைகள் என்றே அழைக்கப்பட வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இந்த வகையில் இந்தப் பிரிவின் கீழ் 800 பாடசாலைகள் உள்ளன. இப்பிரிவுக்கு ஒரு பணிப்பாளர் உள்ளார். வருடா வருடம் அமைச்சுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் போது இந்தப் பிரிவுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 800 பாடசாலைகளின் தேவைகளும் இந்த ஒதுக்கீட்டுக்குள்தான் நிறைவேற்றி வைக்க வேண்டும். 

அரசாங்கம் ஒரு கொள்கை வைத்திருக்கிறது. அருகில் உள்ள பாடசாலையே சிறந்த பாடசாலை என்பது அந்தக் கொள்கைத் திட்டம். இது நல்ல கொள்கைதான். இந்த அரசும் அதை வேண்டாம் எனச் சொல்லவில்லை. ஆனால் பௌதீக வளக் குறைவு, கட்டட, காணி வசதியின்மை, ஆசிரியர் பற்றாக்குறை என்பனவற்றால் பீடிக்கப்பட்டிருக்கும் தோட்டப் பாடசாலைகளை வைத்துக் கொண்டு அவற்றின் குறைபாடுகளைப் போக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் எப்படி அருகே உள்ள பாடசாலை சிறந்த பாடசாலையாக முடியும்? முதலில் தோட்டப் பாடசாலை என்ற பிரிவையே எடுத்துவிட வேண்டும். இது பாகுபாட்டைத்தான் காட்டுகிறது. அமைச்சில் வட பகுதி பாடசாலைகள், கிழக்கு பாடசாலைகள் அல்லது சிங்களப் பாடசாலைகள் என்ற பிரிவுகள் கிடையாது. அனைத்தும் அரசு பாடசாலைகளாக விளங்கும்போது இவை மட்டும் எப்படி தோட்டப் பாடசாலைகள் என்ற பிரிவுக்குள் வர முடியும்? இவ்வளவு காலமாக இப்படி ஒரு பிரிவு இயங்கியதன் விளைவாக எத்தனை பாடசாலைகள் துரித அபிவிருத்தி கண்டு, இப்பிரிவில் இருந்து விடுபட்டு தேசிய மட்டத்து பாடசாலைகளாக மாறின என்று எவராலும் கூற முடியுமா?”   இப்படிக் கேள்விகளை அடுக்கினார் திலகர். 

நான் அந்தக் காலத்தில் கையில் கொப்பி, புத்தகங்களை எடுத்துக் கொண்டு மடகும்புறவில் இருந்து கால் நடையாகவே 24 கிலோ மீட்டர் தூரம் சென்று பூண்டுலோயாவில் படித்தேன். மாணவர்களும் மாணவிகளும் இப்படித்தான் கஷ்டப்பட்டுப் படித்தார்கள். இந்த நிலை தோட்டப் பகுதிகளில் இன்றைக்கும் நீடிக்கவே செய்கிறது. அக் காலத்தில் நாங்கள் கண்ட குறைபாடுகள் இன்றைக்கும் தோட்டப் பாடசாலைகளில் காணமுடிகிறது.  

தோட்டப் பாடசாலைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக நான் கல்வி அமைச்சுக்கு சென்ற போதுதான் இவற்றை அறிந்து கொண்டேன். தோட்டத்துப் பாடசாலைகள் மிகமோசமான நிலையில் இருந்தபோது ஜி.டி.இஸட், சீடா நொராட் போன்ற வெளிநாட்டு நன்கொடை நிறுவனங்கள் இப் பாடசாலைகளின் பௌதீக வள அபிவிருத்திக்கு உதவ முன்வந்தன. பெருமளவு நன்கொடைகளை வழங்கின. இலங்கை நிதிச் சட்டங்களின் பிரகாரம் ஒரு வெளிநாட்டு நிறுவனம் நேரடியாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நிதி வழங்க முடியாது. எனவே திறைச்சேரிக்கே அந் நிதி வந்துசேரும். திறைசேரியின் பிரச்சினை என்னவென்றால், ஏதேனும் ஒரு அமைப்புக்கே அதை வழங்க முடியுமே தவிர நேரடியாகத் தோட்டப் பாடசாலைகளுக்கு வழங்க சட்டத்தில் இடமில்லை. அதனால் தான் பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான தனிப் பிரிவு உருவாக்கப்பட்டது. நிதியும் அந்தப் பிரிவுக்கு வழங்கப்பட்டு பாடசாலை அபிவிருத்திக்கு பயன்படுத்தப்பட்டது. அதைத்தான் இப்போதும் வைத்துக் கொண்டு வரவு செலவு ஒதுக்கீட்டில் இருந்து ஒரு தொகையை வருடா வருடம் ஒதுக்கி வருகிறார்கள். தோட்டப் பாடசாலைகள் எனும் போது ஆளணிக்கான சம்பளமும் பாடத்திட்டமும் தான் அரசுக்குரியதாக உள்ளதே தவிர அவை முழு அரசு பாடசாலைகளாக இயங்கவில்லை. பாடசாலைக்குறிய காணி பாடசாலைக்கு சொந்தம் இல்லை. காணி அதிகாரம் தோட்ட நிர்வாகத்தினுடையது. பாதைகள் அரசாங்கத்துகுரியதாக இருந்தாலும் அவை தோட்ட நிர்வாகங்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. போக்குவரத்து வசதி பல தோட்டப் பாடசாலைகளுக்கு கிடைப்பதில்லை. கட்டட வசதி இன்றைக்கும் பிரச்சினைதான். தளபாட பற்றாக்குறை, ஆசிரிய பற்றாக்குறை என்பன பல பாடசாலைகளில் தொடர்கதையாகவே உள்ளது” என்று திலகராஜ் எம்.பி தோட்டப்பாடசாலைகள் பற்றி விவரமாகப் பேசினார். 

“உங்களுக்கு ஒன்று தெரியுமா, வரவு செலவு திட்டம் என்ற பெயரில் நாடுகளில் நிதி நிலை அறிக்கையை சமர்ப்பிக்கிறார்கள் அல்லவா அவை எல்லாம் சும்மா... நிதிநிலை அறிக்கைக்கும் செயற்பாடுகளுக்கும் இடையே பெரும்பாலும் சம்பந்தமே  இருப்பதில்லை. வரவுசெலவுத்திட்ட அறிக்கையில் அது செய்வோம் இது செய்வோம் என்று சொல்வார்கள். ஆனால் அந்தக் காலப்பகுதியில் அவற்றை செய்து முடிக்க மாட்டார்கள். எனவே வரவு செலவுத்திட்ட அறிக்கை என்பதே பொய். அவை வெறும் அரசியல் அறிக்கை தான். சில நாடுகளில் எண்பது சதவீதம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இலங்கையில் ஐம்பதுக்கு ஐம்பது என்று சொல்லலாம். ஒவ்வொரு அமைச்சுக்கும் இவ்வளவு என ஒதுக்கீடு செய்வதும் கூட பெயரளவில் தான்” என்று இன்னொரு தகவலையும் போட்டுடைத்தார் போகிறபோக்கில்.  

அரசியலுக்கு வருபவர்கள் மேம்போக்காக  பேசலாம். ஆனால் அப்படி செயற்படக்கூடாது. பிரச்சினைகளின் ஆழத்துக்குச் சென்று வேர்களில் என்ன பழுதுகள் என்பதை ஆராய்ந்து மாற்றங்களை அங்கே கொண்டுவர வேண்டும். இவ்வாறு எமது அரசியல்வாதிகள் அன்றே செயற்பட்டிருந்தால் மலையக சமூகத்தில் அடிப்படைக் கட்டமைப்புகளை செம்மையாகவும் உறுதியாகவும் போட்டிருக்கலாம். குறிப்பாக மலையக அதிகார சபை.

மலையக அதிகாரசபை என்பது மலையக சமூகத்துடன் தொடர்பு கொண்ட அமைச்சுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு அதிகார சபை. 

உதாரணத்துக்கு ஒரு பாடசாலைக்கு ஒரு கட்டடம் தேவை. கட்டடம் அமைக்க வேண்டுமானால் காணி அவசியம். காணி அரசுடையது என்றாலும் விளை நிலங்கள் தோட்ட நிர்வாகத்துக்கு உரியது. கட்டடத்தை மாகாண சபையே அமைக்க வேண்டும். இவ்விடயத்தில் மாவட்ட செயலகம் சம்பந்தப்படுகிறது. இவ்வாறு ஏழு அமைச்சுகள் மலையக சமூகத்துடன் தொடர்புபடுகின்றன.

இதனால்தான் மலையக அதிகார சபையில் ஏழு அமைச்சுகளின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் ஆறு பணிப்பாளர்கள் அமைச்சரால் நியமிக்கப்படுகின்றனர். மலையகத்தில் ஒரு அபிவிருத்திப் பணி நடக்கும் போது இந்த அதிகார சபையால் தேவையான அமைச்சுகளின் ஒத்துழைப்பைப் பெற்று அப்பணியை விரைவாகவும் அர்த்தமுடையதாகவும் முடித்துத்தர முடியும். 

ஆனால் மலையக அபிவிருத்தி அதிகார சபை என்றால் என்ன, அதனால் கிடைக்கக் கூடிய நன்மைகள் யாவை, அதை எப்படி, எவற்றுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதில் பலருக்கும் தெளிவு இல்லை. மக்கள் மத்தியில் இது தொடர்பாக தெளிவு மிக அவசியம்.

(அடுத்த வாரமும் தொடர்வார்)  

உரையாடியர்: அருள் சத்தியநாதன் , பி.வீரசிங்கம்

Comments