தடை உத்தரவின் பின்னால் தமிழ் டயஸ்போரா | தினகரன் வாரமஞ்சரி

தடை உத்தரவின் பின்னால் தமிழ் டயஸ்போரா

சவேந்திர சில்வா மீதான அமெரிக்காவின் தடை உத்தரவின் பின்னணியில் தமிழ் டயஸ்போராவே இருப்பதாக தெரிவித்திருக்கும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல எமது நாட்டுக்கு எதிரான சக்திகள் அமெரிக்காவை ஆயுதமாகப் பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.  அமைச்சர் ரம்புக்வெல்ல வார இறுதியில் வழங்கிய நேர்காணலின் போதே இத்தகவலை வெளியிட்டார். அந்த நேர்காணல் வருமாறு:- 

கேள்வி: தற்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா உலகம் ஏற்றுக் கொண்ட படையதிகாரியாகக் காணப்படுகின்றார். மனிதாபிமான நடவடிக்கைகளின் போது மக்கள் பக்கம் சார்ந்த நிலையிலேயே அவர் செயற்பட்டு வந்தார்.  

இந்த நிலையில் அமெரிக்க திடீர் நடவடிக்கையாக அவருக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அவரோ அவரது குடும்பத்தினரோ அமெரிக்காவுக்குள் நுழையமுடியாது என அறிவித்துள்ளதே? எதற்காக அமெரிக்கா இவ்வாறானதொரு முடிவை எடுத்துள்ளது? 

பதில் – இதன் பின்னணியில் இருப்பது தமிழ் டயஸ்போராவாகும். அதேபோன்று எமது நாட்டுக்கு எதிரான சக்திகள் அமெரிக்காவைப் பயன்படுத்திச் செயற்பட்டு வருவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேச ரீதியில் எமது நாட்டை வீழ்ச்சியடையச் செய்வதற்கும், நாட்டை பின்னடையச் செய்வதற்குமே இதனைச் செய்திருப்பது தெளிவானதொன்றாகும். 

இதுகுறித்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லை இது போன்ற விவகாரங்கள் நாம் எதிர்பார்த்தவை தான். இராஜதந்திர ரீதியில் முடிவுகள் எடுக்கப்படும் போது இரண்டு நாடுகளுக்குமிடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்பட வேண்டும். அதன் மூலமே இராஜதந்திர ரீதியில் நட்புறவை பாதுகாத்துக் கொள்ளமுடியும். அமெரிக்கா தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதன் காரணமாக இன்று அந்த நாடு உலகளாவிய மட்டத்தில் அதிருப்தியை தேடிக்கொண்டுள்ளது. அரசு என்ற அடிப்படையில் நாம் எமது கடுமையான எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம். 

அதுமாத்திரமன்றி இராணுவ தளபதி லெப் ஜெனரல் சவேந்திர சில்வா உட்பட அனைத்து இராணுவ வீரர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிக்கின்றோம். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நாள் முதல் பல்வேறு சக்திகளும் இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. அதற்கு அச்ச மின்றி முகம் கொடுத்துள்ளோம். எதிர்காலத்தில் எமது படைவீரர்களை பாதுகாப்பதில் நாம் உறுதியாகவே உள்ளோம். 

கேள்வி – ஐக்கிய தேசியக்கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் ஒன்றுபட்டு மக்கள் சக்தி என்ற பெயரில் இயங்கத் தொடங்கியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் பலகட்சிகளுடன் சேர்ந்து ஒரு கூட்டணியை தொடங்கியுள்ளார். இவை தேர்தலை இலக்காகக் கொண்ட முன்னணிகளாகவே நோக்கப்படுகின்றன. என்ன தான் நடந்து கொண்டிருக்கின்றது? 

பதில் – உண்மையிலேயே இங்கு ஒரு பிரச்சினை இருக்கின்றது. அது இடது சாரி கட்சிகள், அதனுடன் தொடர்புபட்ட அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டதாகும். ஆனால் நாம் எப்போதும் ஒரு கருத்தில் தான் நிற்கின்றோம். அது இடதுசாரி சக்திகள் ஒரே முகாமுக்குள் இருக்க வேண்டுமென்பது தான். 

இந்த இடதுசாரி முகாமுக்குள் பல்வேறுபட்ட கருத்துக்களையும் முரண்பாடுகளையும் கண்டு கொண்டோம். இதில் முக்கியமானதுதான் 2015ல் சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் இணைத்து ஒரு முகாம் அமைத்துக் கொண்டதாகும். இறுதியில் அரசியல் ரீதியாக முரண்பட்டுக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. பிரதமருக்கும், ஜனாதிபதிக்குமிடையில் மோதல் உருவானது. 

இதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நாம் அதிலிருந்து ஒதுங்கிக் கொண்டோம். இதில் நாம் ஒருவிடயத்தைப் கண்டு கொண்டோம். ஐ.தே.கவுடன் கூட்டுச் சேர்ந்த சுதந்திரக்கட்சி இடதுசாரி முகாமிலிருந்து விலகிக் கொண்ட கட்சியாகவே பார்க்க முடிந்தது. பின்னர் அவர்கள் ஐ.தே.க.முகாமிலிருந்து வெளியேறி எம்முடன் இணைந்து கொண்டனர் எந்தவொரு இடதுசாரி அணியையும் நாம் புறந்தள்ளப்போவதில்லை. அவர்களை அரவணைப்பதற்கு எப்போதும் தயாராகவே இருக்கின்றோம். 

நாட்டின் நலன் குறித்துச்சிந்தித்து தீர்மானம் எடுக்கும் எவரையும் நாம் நிராகரிக்க மாட்டோம். அவர்களுக்காக எமது கட்சியின் கதவுகள் திறந்தே வைக்கப்பட்டுள்ளது. எமது அணியை, பொதுஜன முன்னணியை பலம்கொண்ட பேரணியாக கட்டியெழுப்புவதே எமது தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இலட்சியமாகும். 

கேள்வி – பொதுஜன முன்னணி உருவாக்கும் கூட்டணியில் சேர முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டமைக்கு பல்வேறுபட்ட விமர்சனங்களும், எதிர்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றதே. இதனை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்? 

பதில் – உண்மையிலேயே விமர்சனம், வாதப்பிரதிவாதம், கருத்து முரண்பாடுகள் அரசியலுக்குள் அவசியம் இருக்க வேண்டியவையாகும். அதன்மூலமே அரசியலை சரியானதாகவும், காத்திரமானதாகவும் முன்னெடுக்க முடியும். இப்படி விமர்சிப்பதில் நியாயம் இருப்பதாகவே நான் கருதுகின்றேன். இது எனது தனிப்பட்ட கருத்தாகும். புதிய கட்சியை ஆரம்பிக்கும்போது இடையூறுகள் நெருக்கடிகள் நிறையவே வரலாம். எம்மோடு முரண்பட்டவர்களும், தாக்கங்களை ஏற்படுத்தியவர்களும் எமது பக்கம் நெருங்கும் போது இத்தகைய விமர்சிப்புகளை புறந்தள்ளிவிட முடியாது. கருத்தாடல்கள் விமர்சனங்களுக்கு காது கொடுக்கவேண்டிய தேவையும் இருக்கவே செய்கிறது. 

பக்தி மென்டிஸ்

Comments