அகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்தும் யாழ்ப்பாணக் கம்பன் விழா- 2020 | தினகரன் வாரமஞ்சரி

அகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்தும் யாழ்ப்பாணக் கம்பன் விழா- 2020

தமிழ் நாட்டு அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர்

உயர் கம்பனின் புகழ்பாடி நமது தமிழ்மொழி, கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை வளர்க்கும் முயற்சியில் அகில இலங்கைக் கம்பன் கழகம் கடந்த 40ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. ஆண்டு தோறும் கம்பனின் பெயரால் இயல், இசை, நாட்டிய விழாக்களை கம்பன் கழகம் நடாத்தி வருவதை அனைவரும் அறிவர். தற்போது கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலுமாக அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் முயற்சிகள் சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. கம்பன் கழகத்தின் கம்பன் விழாக்களின் வரிசையில் 2020ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாணக் கம்பன்விழா எதிர்வரும் பெப்ரவரி 28, 29, மார்ச் 1வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது. இவ்விழாவின் காலை நிகழ்ச்சிகள் நல்லூர் கம்பன்கோட்ட மண்டபத்திலும் மாலை நிகழ்ச்சிகள் நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்திலும் நடைபெறவுள்ளன.  

இவ்வாண்டுக் கம்பன் விழாவின் முதலாம் நாள் நிகழ்ச்சிகள் பெப்ரவரி 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.30மணிக்கு, நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் எம்.பி. பாலகிருஷ்ணன், வி.கே. பஞ்சமூர்த்தி, கே.ஆர்.புண்ணியமூர்த்தி குழுவினரின் மங்கல இசையுடன் இனிதே ஆரம்பிக்கவுள்ளது. நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவத் துறைப்பேராசிரிய வண. ஞா பிலேந்திரன், இஸ்லாமிய மதகுரு மெளலவி எம்.ஏ.பைசர் ஆகியோர் மங்கல விளக்கேற்றி விழாவை ஆரம்பிக்கவுள்ளனர். யாழ். மேன்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதியரசரும் கொழும்புக் கம்பன் கழகப் பெருந்தலைவருமான ஜெ. விஸ்வநாதன் தலைமையில் விழாவின் முதல்நாள் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க. கந்தசாமி தொடக்கவுரையினை ஆற்றவுள்ளார். அதனைத் தொடர்ந்து நூல் மற்றும் இறுவட்டு வெளியீட்டு நிகழ்ச்சி இடம்பெற வுள்ளது. தமிழ்நாட்டின் பிரபல இயக்குனர் பாரதி கிருஷ்ண குமாரின் “கம்பன் என்றொரு மானுடன்” எனும் தலைப்பிலான சிறப்புரை அடுத்து இடம்பெறவுள்ளது. நிறைவாக தமிழ்நாட்டுப் பேராசிரியர் மு. இராமச்சந்திரன் தலைமையில் திருவாளர்கள் இரா. செல்வவடிவேல், ந.விஜயசுந்தரம், ஸ்ரீ.பிரசாந்தன் ஆகியோர் கலந்து கொள்ளும் இலக்கிய ஆணைக்குழு எனும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.  

நூல் வெளியீடும், இறுவட்டு வெளியீடும் 

இந்நிகழ்வில் அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் தொடக்ககாலப் பதினைந்தாண்டு வரலாற்றுப் புகைப்படத் தொகுப்பும், கொழும்புக் கம்பன்விழா வெள்ளிவிழா மலரும், 2019இல் இடம்பெற்ற யாழ்ப்பாணக் கம்பன்விழா இறுவட்டும், 2019கொழும்பில் இடம்பெற்ற நாட்டியவேள்வி இறுவட்டும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளன. இவற்றின் முதற்பிரதிகளை  கு. சிவஞானசுந்தரம், எஸ்.வி.எம். குணரட்ணம், ச.சிவகுமார், க.அருள் நேசன் ஆகியோர் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.  

விழாவில் கலந்துகொள்ளும் தமிழ்நாட்டு அறிஞர்கள் 

இவ்வாண்டு யாழ்ப்பாணக் கம்பன் விழாவில் கலந்து கொள்ளவென தமிழ்நாட்டின் புகழ்பெற்ற அறிஞர்கள் இருவர் வருகை தரவுள்ளனர். ஆங்கிலத்துறைப் பேராசிரியரான மு. இராமச்சந்திரனும்  பிரபல திரைப்பட இயக்குனரான பாரதி கிருஷ்ணகுமாரும் மூன்று நாள் விழா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவுள்ளனர்.  

விழாவில் கலந்துகொள்ளும் நம்நாட்டு பிரமுகர்கள் 

கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன், இந்தியத் துணைத்தூதுவர் கெளரவ ந. பாலச்சந்திரன், வடமாகாண ஆளுநர் கெளரவ திருமதி எம்.சார்ள்ஸ், தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயர் எஸ்.ஜெபநேசன், யாழ்ப்பாண சின்மயாமிஷன் தலைவர் சுவாமி சிதாஹாசானந்தா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா, வலம்புரி பத்திரிகை அதிபர் சி.வெற்றிவேலாயுதம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம், நீராவிப் பிள்ளையார் ஆலய அறங்காவலர் வை.இரகுநாத முதலியார் தம்பதியர், வைத்திய நிபுணர் ஏ.சிறீதரன் தம்பதியர் மனவளக்கலைப் பேராசிரியர் சி. முருகானந்தவேல், சைவப்புலவர் இராசையா ஸ்ரீதரன் தம்பதியர், கிழவன்காடு கலாமன்றத் தலைவர் ந.சோதிநாதன் ஆகிய நம்நாட்டுப் பிரமுகர்களும் இவ்வாண்டு விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர். 

கம்பன் விழா நிகழ்ச்சிகள்: 

இவ்வாண்டுக் கம்பன்விழாவில் மங்கல இசை, இலக்கிய ஆணைக்குழு, இலக்கியப் பேருரை, சுழலும் சொற்போர், பட்டிமண்டபம், சிந்தனை அரங்கம், வழக்காடு மன்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. 

விழாவில் கலந்துகொள்ளும் நம்நாட்டு அறிஞர்கள், கலைஞர்கள்: 

இவ்வாண்டு விழா நிகழ்ச்சிகளில் கம்பவாரிதி இ. ஜெயராஜ், கலாநிதி ஆறு திருமுருகன், கவிஞர் சோ. பத்மநாதன், பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா, பேராசிரியர் தி. வேல்நம்பி, செஞ்சொற் செல்வர் இரா செல்வவடிவேல், வலம்புரி ந. விஜயசுந்தரம், கலாநிதி ஸ்ரீ. பிரசாந்தன், ந. ஐங்கரன், ம.கோசலை, பரா ரமேஸ், சி.கேசவன், கு.பாலசண்முகன், ம.தயாபரன், சி.சிவாம்சன், அ.அமிர்தலோஜனன், அ.அமிர்தசிந்துஜன், ஜெ.மதூஷிகன், அ.சுகன்யா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். 

மங்கல இசை 

விழாவின் மாலை நிகழ்ச்சிகளில் தினமும் நம் நாட்டின் பிரபல மங்கல இசைக்கலைஞர்களின் நாதஸ்வரக் கச்சேரிகளும் நடைபெறவுள்ளன. முதலாம் நாளில் எம்.பி. பாலகிருஷ்ணன், வி.கே. பஞ்சமூர்த்தி, கே.ஆர்.புண்ணியமூர்த்தி குழுவினரதும், இரண்டாம் நாளில் பி.ரஜீந்திரன் குழுவினரதும், மூன்றாம்நாளில் எஸ்.பாலமுருகன் குழுவினரதும் நாதஸ்வரக் கச்சேரிகள் நடைபெறவுள்ளன. 

புத்தக, சி.டி விற்பனை 

விழா நாட்களில் மண்டப வாயிலில் கம்பன் கழகத்தால் இதுவரை வெளியிடப்பட்ட நூல்களும் கம்பவாரிதி இ.ஜெயராஜின் சொற்பொழிவுகளின் இறுவட்டுக்களும் இதுவரை நடைபெற்ற கம்பன் விழாக்களின் இறுவட்டுக்களும் விற்பனைக்காக வைக்கப்படும். 

இரசிகர்களுக்கு வேண்டுகோள்  

கம்பன் விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் நேர ஒழுங்கின்படி நடாத்தப்படவுள்ளதால் இரசிகர்கள் குறித்த நேரத்தில் வருகைதந்து விழாவைச் சிறப்பிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். காலை நிகழ்ச்சிகள் நல்லூர் கம்பன் கோட்ட மேல் மண்டபத்தில் சரியாக 9.30மணிக்கு ஆரம்பமாகி மதியம் 1.00மணிவரை நடைபெறும். பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டோருக்கு நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் மதிய உணவு விருந்தளிக்கப்படும். மாலை நிகழ்ச்சிகள் ஸ்ரீ துர்க்கா மணி மண்டபத்தில் மாலை 4.30மணி முதல் இரவு 9.00மணிவரை நடைபெறவுள்ளன. கழக முகவரிப் பட்டியலில் பதிவு செய்யப்பட்டோருக்கு அழைப்பிதழ்கள் நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Comments