''கால்வயித்துக்கு கஞ்சியெண்டாலும் கடனில்லாமல் குடிச்சால் சரி...'' | தினகரன் வாரமஞ்சரி

''கால்வயித்துக்கு கஞ்சியெண்டாலும் கடனில்லாமல் குடிச்சால் சரி...''

சீட்டுப்பிடிப்பது பொதுவாக நிலவி வரும் வழமையாக உள்ளது. கிராமங்களிலும் சரி நகரங்களிலும் சரி சீட்டுப்பிடிப்பது ஒரு கட்டாய கடமையாக மக்களால் செய்து வரப்படுகிறது.  

இந்த சீட்டுகளால் வாழ்க்கையில் மேன்மைடயடைந்தோரும் உள்ளனர். உள்ளதெல்லாம் இழந்து தெருவுக்கு வந்தோரும் உள்ளனர். ஆனாலும்  சீட்டுக்கட்டும் மரபு மட்டும் எம்மிடையே இன்னும் அழியாமல் நிலைத்து நிற்கிறது. என்னதான் அது சட்ட விரோதமானது என்றாலும் மக்கள் அதை கைவிடுவதில்லை. விரலுக்கேற்ற வீக்கம்போல அது நடந்து கொண்டுதான் இருக்கிறது ஒரு பிரபல வர்த்தகர் ஒரு கோடி ரூபாச் சீட்டைக்கட்டுகிறார்  என்றால், சாதாரண கூலித் தொழிலாளி நூறு ரூபா சீட்டைக்கட்டி அதை பல ஆயிரங்களாக சேர்க்கின்றார்.  

இந்த சீட்டுகள் வலுவிழந்து போக போரும் இடப்பெயர்வுகளும் முக்கிய காரணமாக ஒரு காலத்தில் இருந்தது. சீட்டுக்கு சேரும்போது நல்ல நட்பானவர்களைத்தான் சேர்ப்பர். சீட்டை எடுத்தபின் அவர்கள் பகையாளிகளாவதுண்டு. ஆனால சீட்டுகளின் வடிவங்கள்? போர் முடிந்தபின் அது வெவ்வேறு வடிவங்களில் மீளுருக்கொண்டு வியாபித்து நிற்கிறது. 

ஆயிரத்து தொளாயிரத்து அறுபதுகளில் நாங்கள் பல குடும்பத்தலைவிகள் சேர்ந்து சீட்டுக்கட்டுவோம். கிழமைக்கு ரெண்டு கொத்து அரிசி, ஒரு சுண்டு சீனி, இரண்டு ரூபா காசு. பதினைந்து பேர் குலுக்கல் சீட்டு. ஆமாம் சீட்டுகளில் குலுக்கல் சீட்டு கூறல்சீட்டு என ரெண்டு வகை இந்தவகையில் குலுக்கல் சீட்டானது சீட்டுப்பங்காளிகளின் இலக்கங்களை வரிசையாக எழுதி மறைவாக சுருட்டி குலுக்கி போட அவரவர்களே எடுப்பார்கள். யாருக்கு எந்த இலக்கம் வந்ததோ அவருக்கு அந்த வார சீட்டு என்பது முதலே முடிவாகிவிடும். அதன் பின்னர் ஒருவருடைய வீட்டில் ஏதாவது விசேடம் இழப்பு ஏற்பட்டால் ஒத்து மாறி சீட்டுக்குரியவர் விட்டுக் கொடுப்பதும் வழக்கம்தான்.  

எனது மகள் வயசுக்கு வந்த போது என் வீட்டில் அடுத்த வேளைக்கு சோறே இருக்கவில்லை. ஆனால் எனது தோழியொருத்தி தனது சீட்டை என்னுடன் ஒத்து மாறி கைகொடுத்தாள். ஒரே தடவையில் பதினைந்து சுண்டு சீனியும் முப்பது கிலோ அரிசியும் முப்பது ரூபாய்களும் என்பது அப்போது பெரும் நிவாரணமாகியது.  

இப்போது ரூபா மதிப்பு குறைந்து ஒரளவு வளமாகவும் வாழ்கிறோம் என்ற போது அந்த நாட்களின் பாரத்தை நாம் எப்படியெல்லாம் கடந்தோம் என்பது நினைவு வருகிறது. அப்போது எங்கள் வீட்டில் நாம் வாங்கிப்போட்ட பொருட்களில் பெரும்பாலானவை சீட்டுக்கட்டி சேர்த்து வாங்கியவைதான். ஒரு காலகட்டத்தில் அனைத்தும் இழந்து வெறும் கையுடன் மாற்றுத்துணிகளுடன் மிதிவண்டிகளைக் கொண்டு சொந்த ஊரைவிட்டு ஓடித் தப்பினோம். ஆனால் என்னிடம் சீட்டெடுத்த பணம் கொஞ்சம் இருந்தது. 

இப்பவும் என்றல்ல இந்த இரண்டும் கெட்டானான காலப்பகுதியில் அநேகர் பணத்தை எடுத்தபின் சீட்டுக்கட்டாமல் விட்டனர். பின்னுள்ள சீட்டுக்காரருக்கு தாச்சி (முன்னிற்பவர்)யால் பணம் கொடுக்க முடியாமல் நாட்டைவிட்டே ஓடவேண்டிய நிலை ஏற்பட்டது. இப்படி நாட்டை விட்டோடியவர்களை கணக்கெடுத்தால் அது ஒரு கணிசமான தொகையாகலாம் .  

சீட்டில் இன்னுமொரு புதியவகையை சிலர்  கண்டுபிடித்தனர். சின்னச்சின்ன புத்தகம் ஒன்றை அச்சிட்டு குலுக்கல் சீட்டை அறிமுகம் செய்து, மாதாமாதம் ஒருவர் நூறு ரூபாய்களை கட்டி வர சீட்டு இடையில் குலுக்கப்பட்டு வெல்பவருக்கு முதல்வாரம் ஆயிரம் ரூபா இரண்டாவது வாரம் இரண்டாயிரம்ரூபா என ஏறிக்கொண்டே போய் இறுதியில் இரண்டு வருட முடிவில் அனைவருக்குமே ஐயாயிரம் வழங்கப்படும் என்று கூறி புத்தகங்களை மக்களிடம் கொடுத்து பணத்தை மாதாமாதம் அறவிட்டார்கள் பல கிராமங்களில் இது நடந்தது.  

மக்களும் ஆர்வமாக பணம் கட்டினார்கள். இந்த பரிசுகள் மட்டும் யாருக்கு வீழ்ந்ததென்பது யாருக்கும் தெரியவில்லை. சிலர் மிதப்பாக இரண்டு மூன்று புத்தகங்களும் வாங்கிக் கொண்டனர். முடிவில் ஒரு கணிசமான தொகை சேர்ந்த பிறகு பணம் பெறுவோர் கிராமங்களுக்கு செல்லவில்லை. புத்தகங்களை வைத்து எந்த இழப்பீடும் பெற முடியவில்லை, ஏனெனில் அது சட்டவிரோதமானது என்பதுடன்,  புத்தகத்தின் தலைப்பில் நண்பர்களுக்கு மட்டும் என்று அச்சிடப்பட்டிருந்தது என்பதையும் ஓரு காரணமாக சட்டம் முன்வைத்தது. அது மட்டுமல்ல எதிராளிகள் நாட்டைவிட்டே ஓடிவிட்டனர். வன்னியில் அக்கராயன் மணியர்குளம், சாந்தபுரம், கல்மடு போன்ற அடிமட்டக் கிராமங்களில் பலர் ஏமாந்து போயிருந்தனர். 

ஆக நான் சொல்வதெல்லாம் சேமிப்பு அவசியம்தான் அதை பாதுகாப்பான இடத்தில் சேமிப்பதும் அவசியம் எங்கும் ஓரிடத்தில் இல்லாமல் வாடகை வீட்டில் வசிப்பவருக்கு சீட்டை கட்டி முடிக்க முதல் பணம் கொடுக்கலாமா. நிரந்தர வதிவிடம் இல்லாதவரை சீட்டுகளில் சேர்த்துக் கொள்ளலாமா? எமது பழைய கிழவிகளுக்கு நன்றாகத் தெரியும். எனது சின்ன வயதில் எமதூரில் ஒரு கிழவி அவரை கல்வீட்டுக்காரி என அழைப்பர். அப்போது கல்வீடுகள்  மிக அரிது. அவரிடம் சீட்டுச்சேர எங்கள் வீட்டிலிருந்த ஒருவர் போனார் கிழவி சொன்னது இப்பவும் எனக்கு நினைவிருக்கிறது. 

நீ அன்றாடக்கூலி. நாலுநாளைக்கு வேலையில்லாட்டி காசு கட்ட மாட்டாய் அதோட சொந்த வீடில்ல நீ வேற ஊருக்கு போனா நான் ஆரைப்பிடிக்கிறது போய் ஒரமான பிணை கொண்டா சேர்க்கிறன் இல்லதுபோனா ஏலாது. 

இந்தக்காலத்தில நுண்கடன் வழங்கும் எவராவது இதைக் கேட்கிறாரா?  

அதிகமாக சொந்த வீடில்லாதவர்கள் ஆடுமாடு வளர்க்க கடன் எடுக்கிறார்கள். வாழ்நாள் முழுதும் அவர் கட்டும் வீட்டு வாடகையை கணக்கிலெடுத்தாலே பெரிய தொகையாகிவிடும். இப்போது இந்திய முதலாளிகள் நல்ல வழியை சொல்கிறார்கள்.

வீட்டை கடனில் வழங்கி அவர்களது வாடகைப்பணத்தையே கட்டுப்பணமாக செலுத்தினால் ஒரு குறிப்பிட்ட காலத்தின்பின் வீடு சொந்தமாகிவிடுமாம். வட்டி என்னவாகுமோ தெரியாது ஆக மொத்தத்தில் சேமிப்பதொன்றே சுகமான வரவு. சீட்டுச் சேமிப்புகளை வங்கிகளில் பாதுகாப்பாக செய்யமுடியும். 

கடனில்லாக்கஞ்சி கால்வயிறு அதாவது கால்வயித்துக்குத்தான் குடிக்க முடியும் என்கிறார் கடனை பெற்றவர். கால்வயித்துக்கு கஞ்சி குடிச்சாலும் அதில கடனில்லை என்பதே சிறப்பு என்கிறார் சேமிப்பவர். இதில நீங்க யார்.?    

தமிழ்க் கவி பேசுகின்றார்

Comments