தமிழ்ப் பண்பாட்டில் காதலும் காதலர் தினமும் | தினகரன் வாரமஞ்சரி

தமிழ்ப் பண்பாட்டில் காதலும் காதலர் தினமும்

காதல் என்பது சொர்க்கத்திலிருந்து வந்த ஒளிக்கற்றை என பைரன் குறிப்பிட்டுள்ளார். காதல் ஒருவகை உணர்வு. மனம் சார்ந்து இருப்பதனால் அகம் எனக் குறிப்பிடப்பட்டது.  

இலக்கியக்காதல் அன்பின் ஐந்திணையாக நிலத்தோடு சார்ந்து வகுக்கப்பட்டது. நிலம் தவிர்ந்த இரண்டு ஒழுக்கங்களாகக் கைக்கிளையும், பெருந்திணையுமாக ஏழுவகையாக அகத்தி​​ணை பிரிக்கப்பட்டது.  

அகத்திலே பெயர் சுட்டப்படுமானால் அது புறத்திணைக்குரியதாகியது. காதல், உலகியல் காதல், தெய்வீகக் காதல் எனப் பிரித்துப் பேசப்பட்டது. தெய்வீக காதலுக்கு ஆண்டாளின் காதலை உதாரணமாகக் கூறலாம். ஆண்டாள் கண்ணனை கனவிலே திருமணம் முடித்தாக தோழிக்குக் கூறும் வகையில் ஆண்டாள் பாரசுங்கள் அமையப் பெற்றிருக்கின்றன. இதன் மூலம் ஆண்டாள் கண்ணனை காதலிப்பதால் தெய்வீக காதல் வெளிப்படுகின்றது.  

'உடம்பொடு உயிரிடை என்ன மற்றன்ன  மடந்தையொடு எம்மிடை நட்பு' என வள்ளுவர் காதல் பற்றிக் கூறும்போது உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பைப் போன்றது காதலிக்கும் எனக்கும் இடையிலான உறவு என்கிறார். 

ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 14ஆம் திகதி வரும்போது காதலர் உள்ளங்கள் ஆவலும் ஆர்வமுமாக எதிர்பார்ப்புகளோடு காத்திருந்து காதலர் தினத்தைத் தமது கற்பனைக்கேற்ற வகையில் கொண்டாடி மகிழ்வார்கள். காதலர் தினம் 'வலன்ரயன் டே' எனக் குறிப்பிடப்படுவதற்குக் காரணங்கள் சொல்லப்படுகின்றன.  

இக் காதலர் தினமானது பெப்ரவரி 07ம் திகதியில் இருந்து 14ஆம் திகதி வரை ஒவ்வொரு தினங்களாக பெயரிட்டு கொண்டப்பட்டுவருகின்றது. 

பெப்ரவரி 07- Rose Day அன்பின் அடையாளமாக ரோஜாப்பூவைக் கொடுப்பது. 

பெப்ரவரி -08 - Proposal day -

முன்மொழிவு செய்தல் 

பெப்ரவரி -09 Chocolate day -

சொக்கலேட் பரிமாறல். 

பெப்ரவரி - 10 Teddy day - கரடி

பொம்மையைப் பரிசாகக் கொடுத்தல். 

பெப்ரவரி - 11 Promise day -

வாக்குறுதி கொடுத்தல் 

பெப்ரவரி -12 Hug day -

காதலர்கள் அணைத்துக்கொள்ளல் 

பெப்ரவரி -13 - Kiss day - முத்தம்

கொடுத்தல் 

பெப்ரவரி 14- Lovers day காதலர் தினம் 

பெப்ரவரி 7ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை காதல் கட்டியெழுப்பப்படுகின்றது. ஆண், அல்லது பெண் தனக்கு வாழ்க்கை துணையாக வரப்போகிறவர் பற்றிய ஒரு படிமத்தைத் தமக்குள் கட்டியெழுப்பியிருப்பர். அதற்குப் பொருத்தமானவரைக் கண்டவுடன் அந்த ஈர்ப்பு உருவாகும். அதைப் பக்குவமான முறையில் ரோஜாப்பூவைக் கொடுத்து காதல் இருப்பதை அடையாளப்படுத்துகிறார்கள். பின்னர் செய்தி மூலமாகவோ வார்த்தைகளாலோ காதலைத் தெரியப்படுத்தல் இடம்பெறுகிறது. காதல் ஏற்றுக்கொள்ளப்பட்டதை இனிப்பின் சுவையில் ஐக்கியப்படுத்துகின்றனர். பரிசுப் பொருள் கொடுத்துத் தமது காதலை உறுதிமொழிகளால் அர்த்தப்படுத்துகின்றனர். அணைப்பிலும் முத்தத்திலும் இணைந்த பின் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. 

காதலர் தினத்தில் காதலர்கள் அணியும் உடைகளில் நிறங்கள் அவர்களின் காதல் நிலையை வெளிப்படுத்துகின்றன. 

நீலம் - காதலைச் சொல்லிவிட்டேன் 

பச்சை - காதலிக்காக காத்திருக்கிறேன் 

சிவப்பு - ஏற்கெனவே ஒருவருடன்

காதலில் இருக்கிறேன். 

கறுப்பு - காதலில் ஈடுபாடு இல்லை. 

வெள்ளை - திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. 

ஒரஞ்சு - காதலை இன்று

வெளிப்படுத்தப்போகிறேன். 

இளஞ்சிவப்பு - காதல் அழைப்பு

வந்து ஏற்றுவிட்டேன். 

நாவல் - காதல் அழைப்பை

நிராகரிக்கிறேன். 

மஞ்சள் - காதல் தோல்வி

துணையைத் தேடுகிறேன். 

ப்ரவுண் - தோல்வியால்

காதல் வேண்டாம் என நினைக்கிறேன். 

அணியும் ஆடையிலேயே இத்தனை அர்த்தங்களைப் பொதிந்து வைத்துக் கொண்டு வலம் வருகிறார்கள் இன்றைய காதலர்கள்  

உண்மைக் காதல் நீண்ட கால ஒப்பந்தம் போன்றது. அதுமட்டுமல்ல தோளிலே உட்கார்ந்திருக்கும் பறவைக்கு ஒப்பானதாகும், பறவையை இறுகப் பிடித்தால் செத்துவிடும். பிடிக்க நினைத்தால் பறந்துவிடும். அதைத் தன்பாட்டில் விட்டுவிட்டால் தஞ்சமடைந்துவிடும். காதலும் அழுத்தங்கள் இல்லாமல் இருக்கும்போது ஒருவரில் ஒருவர் தஞ்சமடைந்துவிட முடிகிறது. 

செம்புலப் பெயல் நீர்போல் அன்புடை நெஞ்சம் கலந்துவிட்ட பிணைப்பை உள்ளத்து உணர்விலே இன்பமுறுவதோர் பொருளென நக்கினார்கினியர் கூறியதை கவிஞர் வைரமுத்து காதலித்துப்பார் உணர்ந்தால் தான் அனுபவம் பெறலாம் மற்றவர்களால் சொல்லி விளக்கமுடியாது என்பதை அழகாக முன்வைக்கிறார். 

சின்னச் சின்னப் பரிசுகளில் 

சிலிர்க்க முடியுமே அதற்காகவேனும் 

புலன்களை வருத்திப்

புதுப்பிக்க முடியுமே... 

அதற்காகவேனும்... 

ஆண் என்ற சொல்லுக்கும் 

பெண் என்ற சொல்லுக்கும் 

அகராதியில் ஏறாத அர்த்தம்

விளங்குமே 

அதற்காகவேனும்... 

வாழ்ந்து கொண்டே சாகவும் முடியுமே 

செத்துக் கொண்டே வாழவும் முடியுமே 

அதற்காகவேனும்... 

காதலித்துப்பார்... 

 உணர்வு சார்ந்தவற்றை உணர்ந்து தான் விளக்கம் பெறலாம் என்பதை அன்றும் சரி இன்றும் சரி புலவர்களும் கவிஞர்களும் அழகாக விளக்கியுள்ளார்கள். 

தமிழர் பண்பாட்டில் உயர்ந்த காதல் ஒழுக்கம், களவு, கற்பு என்ற இருநிலைகளில் பேணப்பட்டு வந்தது. ஐவகை நிலங்களிலும் புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் என ஒழுக்கங்கள் வகுக்கப்பட்டு வந்தன. சங்கப்பாடல்களில் முதல், கரு, உரிப் பொருள் சிறப்பிடம் பெற்று அவற்றுக்குரிய தனித்துவத்தைப் பறைசாற்றுவதாக அமைந்தன. 

நிலங்கள் சார்ந்து முகிழ்ந்து வளர்ந்த தமிழரின் காதல், இன்று தேசங் கடந்து வாழும் நிலையில் கண்டங்களுடனான காதலாக மாறி பன்முகப்பட்ட பரிமாணங்களை உள்வாங்கியுள்ளது. இதற்கு இன்றைய தொடர்பாடல் சார்ந்த தொழில்நுட்ப வசதிகளும் பங்காற்றுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.   

ராணி சீதரன்

Comments