"திருக்குறள் ஒரு வாழ்வியல் தத்துவம்!" | தினகரன் வாரமஞ்சரி

"திருக்குறள் ஒரு வாழ்வியல் தத்துவம்!"

இரண்டாவது உலகத் திருக்குறள் மாநாடு நேற்று முன்தினம் (21 – வெள்ளிக்கிழமை) காலை யாழ்.பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் கி.விசாகருபன் தலைமையில் கோலாகலமாக ஆரம்பமாகியது.

இம்மாநாட்டில் இந்தியா, மலேசியா, அவுஸ்திரேலியா, லண்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து பேராளர்கள் முனைவர்கள் ஆர்வலர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இலங்கையின் யாழ்ப்பாண பல்கலைக்கழக முக்கியஸ்தர்கள் கிழக்கிலிருந்து காரைதீவு வள்ளுவர் சிலை நிறுவும் குழுவினர் விசேட வள்ளுவர் பதக்கம் தரித்த செந்நிற மாலையுடன் தவிசாளர் கே.ஜெயசிறில் தலைமையில் கலந்து சிறப்பித்தனர்.

பேராளர்களுக்கு மாநாட்டு பைகள், புத்தகங்கள் அன்றைய தினகரன் பத்திரிகை நூல்த்தொகுதி நிகழ்ச்சிநிரல் என்பன வழங்கப்பட்டன.

முன்னதாக இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டு வடக்கில் உரும்பிராயிலும், கிழக்கில் காரைதீவிலும் நிறுவப்படவுள்ள இரு திருவள்ளுவர் சிலைகளுக்கு யாழ்.பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி, கலைத்துறைப் பீடாதிபதி கலாநிதி, க.சுதாகர் சிலையை அன்பளிப்புச்செய்த தமிழ்நாடு உடையார் கோயில் குணா ஆகியோர் சென்று மரியாதை செலுத்தினர்.

பின்னர் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் மங்கல விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமாகியது. பல்கலைக்கலைக்கழக இசைத்துறை மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையடுத்து விசேடமாக இந்தியாவிலிருந்து வருகைதந்த பெருவுடையார் நாட்டிய ஆசான் கிருஸ்ணாஞ்சலி வேணுகோபால் குழுவினரின் திருக்குறள் பரத நாட்டியம் சபையோரை வெகுவாகக் கவர்ந்தது.

வரவேற்புரையை லண்டன் கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழக பேராசிரியர் சிவாப்பிள்ளை அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் ஆகியோர் நிகழ்த்தினர்.

ஆசியுரைகளை தென்னிந்திய திருச்சபைப் பேராயர் கலாநிதி சு.ஜெபநேசன் யாழ்.பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் கலாநிதி ஆறுதிருமுருகன் ஆஸ்திரேலிய மெல்பேர்ன் தமிழ்ச்சங்க ஆலோசகர் தமிழறிஞர் ம.ஜெயராம சர்மா ஆகியோர் நிகழ்த்தினர்.

நோக்கவுரையை விழா ஏற்பாட்டாளர் தமிழ்நாடு தமிழ்த்தாய்அறக்கட்டளைநிறுவுனர் உடையார்கோயில் குணா நிகழ்த்தினார். அவரது உரையில் தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் திருக்குறளை தேசிய நூலாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற நோக்கங்களை வைத்து 2004இல் 47நாட்கள்1500கிலோமீற்றர் நடைப் பயணத்தை மேற்கொண்டு வெற்றிபெற்றோம். 1வது மாநாடு மலேசியாவில் நடைபெற்றது. 3வது மாநாடு தஞ்சாவூரில்நடக்கும் என்றார்.

விருந்தினர்களான இந்திய துணைத் தூதுவர் ச.பாலச்சந்திரன் யாழ்.பல்கலை தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி கலைப்பீடபீடாதிபதி முனைவர்.க.சுதாகர் தமிழ்நாடுஅம்மா தமிழ்ப்பீட நிறுவுனர் சொல்லின்செல்வர் ஆவடிக்குமார் சென்னை முனைவர் இரா.சண்முகவள்ளி மலேசியா மலாய பல்கலைக்கழக முனைவர் செல்வஜோதி இராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பேராயர் ஜெபநேசன் அடிகளார் பேராசிரியர் கந்தசாமி ஜெயராம சார்மா ஆறுதிருமுருகன் ஆகியோர் உரைநிகழ்த்துகையில் திருக்குறளுக்கு நிகர் எதுவுமே இல்லை. அறம்பொருள் இன்பம் பொதிந்த பொக்கிசம். முக்காலத்திற்கும் எந்தஇனத்திற்கும் பொருந்தும் இந்நூல் உலகப்பொதுமறை. உலகில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நூல் என்றால் அது திருக்குறள்தான். உலகமக்களின் வழிகாட்டிஅது. உலகமுள்ளவரை அதுவாழும் வள்ளுவரும் வாழ்வார். தமிழை உயிராக நேசிக்கும் யாழ்.மண்ணில் இம்மாநாடு நடைபெறுவது மகிழ்ச்சி என்றனர்.

இந்திய துணைத்தூதர் பாராட்டி பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். அதேபோல் ஆசியுரை நல்கியவர்கள் தூதுவரால் பாராட்டப்பட்டார்கள்.

உரும்பிராயில் நிறுவப்படவிருக்கும் திருவள்ளுவர் சிலையை இந்திய துணைத்தூதுவர் ச.பாலச்சந்திரனிடமிருந்து இங்கிலாந்து முன்னாள் துணைமேயர் பவுல் சத்தியநேசன் துரைசாமி பெற்றுக்கொண்டார். மாநாட்டு மலரையும் துணைத்தூதுவர் வெளியிட்டுவைத்தார்.

காரைதீவில் நிறுவப்படவிருக்கும் சிலையை இன்று(23) ஞாயிற்றுக்கிழமை வடமாகாணஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் காரைதீவு பிரதேச சபைத்தவிசாளர் கி.ஜெயசிறிலிடம் வழங்கி வைக்கவிருக்கிறார்.

மதிய இடைவேளையின் பின்னர் பொது அரங்கம் மற்றும் ஆய்வரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. வாழ்த்துரைகளை நாமக்கல் முனைவர் கமலா சிவம் காரைதீவு உதவிக்கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா யாழ்.அன்பர் சிவ.ராஜ்குமார் திருச்சி கவிஞர் மணல்மேடுகுருநாதன் மதுரை குரு.ஜெயச்சந்திரன்ஆ கியோர் வழங்கினர்.

சிறப்புரைகளை பூண்டி பேராசிரியர் முனைவர் வி.ஆர்.அங்கப்பன் அமெரிக்கா மனநலமருத்துவ நிபுணர் எல்பேர்ட் ஆகியோர் நிகழ்த்தினர்.

நிகழ்வுகள் 9.30மணி என்று குறிப்பிடப்பட்டிருந்தும் 10.15மணியளவில்ஆரம்பமாகின. நிகழ்ச்சி நிரல் ஆரம்பத்தில் ஒருசிலரைத் தவிரஅனைவருக்கும் வழங்கப்பட்டிருக்கவில்லை. வாழ்த்துரை வழங்குவோருக்கும் அது தெரியாமலிருந்தது. அந்தக்கணமிருந்து 2.00மணிவரை சபையோருக்கு எவ்வித சிற்றூண்டியோ பானமோ வழங்கப்படவில்லை.மேடையிலிருந்த பெரியார்களுக்கு மட்டும் சிறிய தண்ணீர்ப்போத்தல் வழங்கப்பட்டிருந்தமையை பலரும் சுட்டிக்காட்டினர். மதியபோசனம் சகலருக்கும் வழங்கப்படும் எனக் கூறப்பட்ட போதிலும் உரியவேளைக்கு வந்துசேரவில்லை. ஒழுங்கமைப்பில் சீர்த்திருத்தங்கள் அவசியமெனச்சுட்டிக் காட்டப்பட்டது.இதை விடுத்துப் பார்த்தால் இது தமிழுக்கும் குறளுக்கும் யாழ். மண்ணில் செய்யப்பட்ட மிகப் பெரிய கௌரவம் என்பதை யாரும் மறக்க முடியாது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி அரங்கிலிருந்து காரைதீவு குறூப் நிருபர் வி.ரி.சகாதேவராஜா

Comments