பாடசாலை விழாக்களால் இழக்கப்படும் பாடசாலை நாட்களுக்கு தீர்வுதான் என்ன? | தினகரன் வாரமஞ்சரி

பாடசாலை விழாக்களால் இழக்கப்படும் பாடசாலை நாட்களுக்கு தீர்வுதான் என்ன?

பாடசாலைகளில் பல்வேறு விடயங்களை முன்வைத்து விழாக்கள் நடாத்தப்படுவதோடு, வெளி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் மூலமாக வழிநடத்தப்படும் நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பாகவும், பாடசாலை மாணவர்கள் பங்குபற்றச் செய்யப்படுகின்றனர். சில விழாக்கள் நடைபெறுகின்ற காரணத்தினால் அவற்றால் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்கு தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக மாணவர்களின் ஒழுக்கம், கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் என்பன பாதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக பெற்றார் பல்வேறு முறைப்பாடுகளை செய்துவருகின்றனர்.  

அரசாங்கம் பாடசாலைகள் வருடத்தில் 210நாட்கள் நடைபெற வேண்டுமென எதிர்பார்க்கின்றபோதிலும் 196அல்லது அதற்கு குறைந்த நாட்களே பாடசாலைகளை நடாத்தக்கூடிய நிலைமை ஏற்படுகிறது. இவ்வாறு 196நாட்கள் நடாத்தப்படுவது பாடசாலை மட்டத்தில் இடம்பெறும் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், மொழித்தினப் போட்டிகள், மாணவர் மன்றங்கள், க.பொ.த (உயர்தர). க.பொ.த(சாதாரண தர) பரீட்சைகள், பாடசாலை தவணைப் பரீட்சைகள், சமய நிகழ்வுகள் என்பன போன்ற பல்வேறு நிகழ்வுகள் காரணமாக சாத்தியமற்றுப் போகின்றன.  

பாடசாலை நாட்களில் மேற்படி நிகழ்ச்சிகள் நடைபெறுவதால்  கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் மாணவர்களை பூரணமாக ஈடுபடுத்தாமல்  ஆசிரியர்கள் தமக்கு வழங்கப்பட்ட வேலைப்பொறுப்புக்களை செவ்வனே செய்து முடிப்பதற்கு தடையாக உள்ளன. பாடசாலைகளில் சாதாரணமாக காலை 7.30முதல் பி.1.30வரை கற்பித்தல் பணிகள் இடம்பெறுகின்றன.  

பாடசாலை 196நாட்கள் நடாத்தப்படவேண்டுமென அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் பாடசாலை ஆசிரியர்கள் 41நாட்கள் வருடாந்த விடுமுறை பெறுகின்றனர். பெண் ஆசிரியர்களைப் பொறுத்தமட்டில் பிள்ளைப் பேறுக்காக முதல் 84நாட்கள் சம்பளத்துடனும் பின்னர் 84நாட்கள் அரைச் சம்பளத்துடனும் பின்னர் பிள்ளையின் சுகயீனம் அல்லது ஆசிரியையின் சுகயீனம் காரணமாக ஆகக் கூடியது இரண்டு வருடங்களுக்கு சம்பளமற்ற லீவையும் பெறுகின்றனர். அவை தவிர பெண் ஆசிரியைகள் கருத்தரித்தலுக்காக ஒரு வருடம் சம்பளமற்ற லீவையும் பெறக்கூடிய வசதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்துவதற்காகவும், பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதற்காகவும், வேறு நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்காகவும் கடமை லீவுகளையும் பெற்றுக் கொள்கின்றனர். இந்த நிலைமையில் பாடசாலைகளில் மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் சராசரியாக 100நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்படுகின்றமையை அவதானிக்கலாம்.  

இந்த நிலைமையை சீர்திருத்துவதற்கு கல்வித்துறை ஆர்வலர்களும், கல்வியை திட்டமிடுபவர்களும் அதனை அமுல் செய்பவர்களும் மாற்று வழிகளை பற்றி சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது. மாணவர்களுக்கான கற்றலை ஊக்குவிக்கும் நோக்கில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறைக்கப்படும் போது அவர்கள் இயற்கையாகவே தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தூண்டப்படுகின்ற நிலைமையை அவதானிக்கலாம். 

தெற்காசிய நாடுகளிலேயே இலங்கையில் ஆகக்குறைந்த சம்பளத்தை ஆசிரியர்கள் பெற்று வருகின்ற கசப்பான உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் அவர்களது வாழ்க்கைத் தரத்தை கொண்டு செல்வதற்கும், பொருளாதார ரீதியான முன்னேற்றத்துக்கும் பெரும் தடையாக அமைந்துவிடுகிறது. இந்த நிலைமையில் ஆசிரியர்கள் பகுதி நேர தொழிலாக வேறு தொழில்களை புரிய முற்படுகின்றபோது சமூகத்தில் அவர்கள் வித்தியாசமான ஒரு நோக்கில் பார்க்கப்படுகிறார்கள். அதிகமான ஆசிரியர்கள் தனியார் டியூட்டரிகளில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகூட சமூகத்தின் மத்தியில் பாரிய விளைவை கொண்டுவருகிறது. பாடசாலைக் கல்வியில் உள்ள இடைவெளியை தனியார் டியூட்டரிகள் ஈடு செய்து வருகின்ற போதிலும் பாடசாலை கல்வியில் நம்பிக்கை இழக்க முடியாத ஒரு கட்டமுமுண்டு.  

ஆசிரியர்கள்தான் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள் என எடுத்துக்கொண்டாலும் துரதிஷ்டவசமாக கல்விச்சட்டங்களை அமுல்படுத்தி மேற்பார்வை செய்யவேண்டிய கல்வி அதிகாரிகளும், பாடசாலை கற்பித்தலோடு தொடர்பற்ற சில உத்தியோகத்தர்களும் இவ்வாறான தனியார் டியூட்டரிகளில் கற்பித்து வருகின்ற நிலைமையினை அவதானிக்கின்றோம். இவர்கள் மாறிவருகின்ற கலைத்திட்டங்கள், கற்பித்தல் நுட்பங்கள் என்பவற்றில் பயிற்சி அற்ற நிருவாக அதிகாரிகள் ஆவர்.

பாடசாலைகள் திட்டமிட்டபடி நடாத்தப்பட வேண்டிய நாட்களுக்கு பதிலாக பதில் பாடசாலை என்றொரு விடயம் கையாளப்படுகிறது. பதில் பாடசாலை நடாத்தப்படும் நாட்களாக சனிக்கிழமைகள் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் கல்வித்துறை சார் அதிகாரிகளின் அனுபவத்தில் பதில் பாடசாலைகளில் நடாத்தப்படுவது என்ற விடயமானது தோல்வி அடைந்த நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு விடயமாக அவதானிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமைகள் பதில் பாடசாலைகளை நடாத்துவதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் பாடசாலைக்கு வராது விடுகின்றனர். அத்துடன் மாணவர்களின் மேலதிக வகுப்புக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. சில பாடசாலைகளில் இழக்கப்படும் நாட்களை முன்னரே தீர்மானித்து முன் பதில் பாடசாலைகளை நடாத்த முற்படுகின்றனர். இது எந்த வகையிலும் நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒரு விடயமாகும். பதில் என்பது ஒரு சம்பவம் இடம்பெற்றதற்கு பின்னரே இடம்பெறுவதாகும். 

பாடசாலை கல்வி நடவடிக்கைகக்கு பெரும் தடையாக அமைகின்ற பாடசாலை மாணவர்களை பொதுவிழாக்களில் பங்குபெறச் செய்வது தொடர்பாக இதுவரை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டு பாடசாலைகளில் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகளில் மாற்றங்களை செய்வதற்கு கல்வி அமைச்சு நிர்ப்ப்பந்திக்கப்பட்டுள்ளது. இவ்வாறான மாற்றங்கள் அரசியல்வாதிகளையும், மாணவர்களை பல்வேறு நிகழ்வுகளுக்கு பயன்படுத்துவோருக்கும் அசெளகரியமாக இருக்கும்.  

பாடசாலைகளில் நடாத்தப்படும் விழாக்கள் போலவே வெளித்தரப்பினரால் ஒழுங்கமைக்கப்படுகின்ற பல்வேறு விழாக்கள் மற்றும் கண்காட்சிகள் தொடா்பாக பாடசாலை மாணவா்கள் பங்கேற்பதை மேலும் சீர்படுத்துவதற்கு ஒழுங்கான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென கல்வி அமைச்சு எதிர்பார்க்கிறது. 

விளையாட்டு விழாக்கள், பரிசு வழங்கல், பல்வேறு நிகழ்வுகள் போன்றவை முக்கியமாக அமைவதுடன், அவற்றில் ஆற்றப்படும் சொற்பொழிவுகள் மட்டுப்படுத்தப்பட்டவையாக அமைதல் வேண்டும் எனவும் குறிப்பாக பரிசுகள் வழங்கும் போது அதிபரின் அறிக்கை, விசேட அதிதியின் உரை மற்றும் மாணவர் தலைவர் அல்லது தலைவியின் நன்றியுரை போன்றவற்றுடன் விழாவை மட்டுப்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றது. அத்துடன் பிரதான மேடையில் மாணவர் தலைவர் அல்லது தலைவி அமர்வது மிக முக்கியமாகும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

பாடசாலை விழாக்கள் மாணவர்களினதும் மற்றும் பங்குபெறும் ஏனையோரின் நேரத்தையும் கருத்திற் கொண்டு மிகவும் நேர்த்தியாகவும், சுருக்கமாகவும் ஒழுங்கமைப்பதற்கும், கல்வி நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை அளித்து விழா தொடக்கத்தில் தேசிய கீதம் இசைப்பதற்கும் விழா முடிவின் போது பாடசாலை கீதத்தை இசைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  

கல்வி அமைச்சு அல்லது மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அல்லது மாகாணக் கல்வி அமைச்சின் அனுமதியின்றி விழாக்கள் தொடர்பில் மாணவர்கள் மூலமாக நிதி சேகரித்தல்  தவிர்க்கப்பட வேண்டியதுடன் விழா செயற்பாடுகள் குறைந்த செலவில் மேற்கொள்வது குறித்தும் பாடசாலை அதிபர்கள் கவனம் செலுத்தல் வேண்டும். அத்துடன் பரிசு வழங்கல் மற்றும் விளையாட்டு விழாக்கள் தவிர்ந்த பாடசாலையில் நடாத்தப்படும் ஏனைய விழாக்கள் ஒரு மணித்தியாலத்திற்கு மட்டுப்படுத்தப்பட வேண்டியதுடன் மாணவர்களின் திறன் விருத்தியடையும் விதத்தில் அந்த விழாக்களின் வழிநடத்தல் செயற்பாடுகள் மாணவர்களிடம் ஒப்படைக்கப்படுவது கட்டாயமானதாகும்.  

இதற்கு மேலதிகமாக பாடசாலை இசைக்குழுவை பங்குபெறச் செய்வது பின்வரும் சந்தர்ப்பங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தல் வேண்டும். இது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிடப்பட்ட 1995/25இலக்க சுற்றுநிருபம் பின்பற்றப்படுவதுடன் இசைக்குழுவானது தமது பாடசாலையில் நடாத்தப்படும் விழாக்கள், நிரல் கல்வி அமைச்சு அல்லது மாகாணக் கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்படும் கல்வி விழாக்கள், தேசிய/ மாகாண விளையாட்டு நிகழ்ச்சி, தேசிய/ மாகாண மட்டத்திலான கலாசார நிகழ்வுகள், கலாசார அமைச்சு/ கல்வி அமைச்சு/ மாகாண கலாசார அமைச்சு/ மாகாணக் கல்வித் திணைக்களம் ஒழுங்குபடுத்தும் நிகழ்ச்சிகளில் பயன்படுத்த முடியும்.  

அதைத்தவிர சுதந்திரதின விழா, கலாசார விழாக்கள், ஜனாதிபதி /  பிரதமர் / கல்வி அமைச்சர்/ மாகாண ஆளுனர் / மாகாண முதலமைச்சர் பங்குபற்றும் அல்லது நிரல் கல்வி அமைச்சு அல்லது அரசாங்க திணைக்களங்கள் / கூட்டுத்தாபனங்கள் ஏற்பாடு செய்யும் சுதந்திரதின விழா, கலாசார விழா, வெளிநாட்டு பிரமுகர்கள் பங்கேற்கும் விழாக்களில் போது மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்களை பங்கு பற்ற செய்வதுடன் பாடசாலை இசைக்குழுவையும் பயன்படுத்தலாம். இதைத்தவிர வேறு தருணங்கள் தொடர்பாக பாடசாலை இசைக்குழுக்களை பங்கு பெறச் செய்விக்க கூடாது.

ஏ.எல்.முஹம்மட் முக்தார்
ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் 

Comments