விசமத்தனமான பிரசாரங்களால் இடைநிறுத்தப்பட்ட சாய்ந்தமருதுக்கான வர்த்தமானி அறிவித்தல் | தினகரன் வாரமஞ்சரி

விசமத்தனமான பிரசாரங்களால் இடைநிறுத்தப்பட்ட சாய்ந்தமருதுக்கான வர்த்தமானி அறிவித்தல்

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட நிர்வாக சேவை உத்தியோகத்தரான  ஏ.எல்.எம்.சலீம் இணைந்த வடகிழக்கு மாகாண காணி திணைக்களத்தில் உதவி  ஆணையாளராகவும், குடிவரவு மற்றும் குடிஅகல்வு திணைக்களத்தின் உதவிக்  கட்டுப்பாட்டாளராகவும், ஜெனீவா தூதுவராலயத்திலும் இடம்பெயர்ந்த மக்களின்  கடவுச்சீட்டு தொடர்பான பணிகளிலும் சேவையாற்றிருக்கிறார். அத்தோடு விஞ்ஞான  தொழிநுட்ப அமைச்சில் உதவிச் செயலாளராகவும், அரசாங்க தகவல் திணைக்களத்தில்  பிரதிப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். சாய்ந்தமருது பிரதேச  செயலாளராகவும் மிக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.  

சட்டம் ஒழுங்கு அமைச்சின் மேலதிக செயலாளராகவும்  பணியாற்றியதுடன், கைத்தொழில், ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சில்  மேலதிக செயலாளராகப் பணியாற்றி கடந்த மாதம் அரச நிர்வாக சேவையிலிருந்து  ஓய்வு பெற்றுள்ளார். தற்போது சமூக மாற்றத்துக்கும் அபிவிருத்திக்கான  மையத்தை ஸ்தாபித்து தலைவராக இருக்கும் இவர் சமூகப்பணிகளில் ஈடுபட்டு  வருகின்றார். தினகரன் வாரமஞ்சரிக்கு அவர் வழங்கிய செவ்வி..... 

கேள்வி: அரச துறையில் நிர்வாக சேவை எந்தளவு முக்கியத்துவம் பெறுகிறது?  

பதில்: பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சிவில் சேவையை அடிப்படையாகக்  கொண்டுதான் இலங்கை நிர்வாக சேவை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. குறிப்பாக  1815இல் கண்டி பிரிட்டிஷாரால் கைப்பற்றப்பட்டதன் பின்னர் 1833க்குப் பிறகு  நிர்வாக சேவையில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. பின்னர்  1963இல் சிலோன் சிவில் சேவை ஏற்படுத்தப்பட்டது. 1972இல் அது இலங்கை  நிர்வாக சேவையாக பரிணாமம் பெற்றது.  

இலங்கை நிர்வாக சேவையை பொறுத்தவரையில் சேர் பொன்னம்பலம்  அருணாச்சலம் தான் முதலாவது சிவில் சேவை அதிகாரியாக இருந்திருக்கிறார். அதன்  பிறகு சேர் றிச்சட் அலுவிகார, கொட்பிறே குணவர்த்தன, ராஜேந்திர  குமாரசுவாமி, டாக்டர் ஏ.எம்.ஏ. அஸீஸ் எனப் பலர் இருந்திருக்கிறார்கள்.  

 நிர்வாக சேவைக்கு திறந்த போட்டிப்பரீட்சையினுடாக ஆட்கள்  தெரிவுசெய்யப்படுகின்றனர். 30வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் தங்களைத்  தயார்படுத்திக் கொண்டு போட்டிப்பரீட்சைக்கு செல்ல வேண்டும். இவை  அரசியலுக்கு அப்பாற்பட்ட நியமனங்கள். பரீட்சை மூலம் தெரிவு  செய்யப்படுபவர்கள் கட்டமைப்பு ரீதியான நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டு  எந்த இன விகிதாசாரமும் இல்லாமல் திறமை அடிப்படையில் தெரிவு  செய்யப்படுவதால் திறமை காட்டுபவர்கள் முன்னுக்கு வரமுடியும்.  

கேள்வி: அரச திணைக்களங்களின் சேவை கடந்த காலங்களில் மக்களின்  விமர்சனத்துக்குள்ளானதாகவும் இருந்தது. ஜனாதிபதி கோட்டாப ராஜபக்‌ஷவும் அரச  நிறுவனங்களுக்கு திடீர் விஜயங்களை மேற்கொண்டு வருகின்றார். உண்மையில் ஒரு  அரச நிறுவனத்தின் வினைத்திறனான சேவையை மக்களுக்கு வழங்குவதற்கு நிர்வாக  சேவை உத்தியோகத்தர்களின் வகிபாகம் எந்தளவு முக்கியமானதாகவுள்ளது?  

பதில்: இன்றைய ஜனாதிபதி ஒரு அமைச்சின் செயலாளராக  நிர்வாகத் துறையில் இருந்தவர் என்ற அடிப்படையில் எவ்வாறு அரச  நிறுவனங்களின் சேவையை வினைத்திறனாக்க முடியும் என்பது அவருக்குத் தெரியும்.  ஒரு நாட்டின் ஜனாதிபதி ஒரு நிறுவனத்துக்கு திடீர் விஜயங்களை மேற்கொள்கின்ற  போது ஏனைய திணைக்களங்கள் கூட ஒரு உசார் நிலையில் இருக்கும்.  

முதலில் ஒரு அரச நிறுவனம் மக்களின் தேவை என்னவென்று பார்க்க  வேண்டும். தன்னுடைய திணைக்களத்தால் வழங்கப்படுகின்ற சேவையில் மக்களுடைய  தேவைகள், விருப்பங்கள் நிறைவேற்றப்படுகின்றனவா என்று பார்க்க வேண்டும்.  

இன்று திணைக்களங்களில் உற்பத்தித் திறன் என்ற கோட்பாட்டின்  அடிப்படையில் தரப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு ஊக்குவிப்புகள்  வழங்கப்படுகின்றன.  

முன்பிருந்ததை விட தற்போது திணைக்களங்கள் ஓரளவு  முன்னேறியுள்ளன. உதாரணமாக கடவுச்சீட்டு அலுவலகம், ஆட்பதிவு திணைக்களம்  போன்ற பல நிறுவனங்களைக் குறிப்பிடலாம். தற்போது இந்நிறுவனங்கள் எல்லாம் ஒரு  முறைப்படுத்தலுக்குள் வந்திருக்கின்றன. பலவற்றில் இன்னும் முன்னேற்றங்கள்  ஏற்படுத்த பட வேண்டியும் உள்ளது.  

பொது மக்களின் வரியில் தான் அரச ஊழியர்கள் சம்பளம்  பெறுகிறார்கள். பிரஜைகள் பட்டயம் என்றதொரு விடயம் இருக்கிறது. அதில்  உதாரணமாக ஒரு பிரஜை பிறப்புச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் எத்தனை  மணிக்கு அதைத் திருப்பித் தருவோம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது  பொது மக்களோடு ஒப்பந்தம் செய்வது போன்ற ஒரு விடயம். இவ்வாறான திட்டங்கள்  மூலம் சகல அரச நிறுவனங்களிலும் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக்  கொண்டிருக்கின்றன.  

கேள்வி: நிர்வாக சேவை உத்தியோகத்தர் என்ற வகையில் பிரதேச  செயலாளராகவும் நீங்கள் பணியாற்றியிருக்கிறீர்கள். பிரதேச மட்ட மக்களின்  பிரச்சினைகளை தீர்ப்பதில் உங்களால் எந்தளவுக்கு பங்களிப்புச்  செய்யக்கூடியதாக இருந்தது?  

பதில்: 2007ஆம் ஆண்டு சாய்ந்தமருது பிரதேச செயலாளராக  வரும்போது கவலையோடுதான் வந்தேன். ஏறக்குறைய சுனாமியால் பாதிக்கப்பட்ட  800க்கு மேற்பட்ட குடும்பங்கள் நிர்க்கதியான நிலையில் இடைத்தங்கல்  முகாமில்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எந்தவொரு  வீட்டுவசதியும் செய்யப்படவில்லை. ஒரு அலுவலராகவாவது இதற்கான வேலைகளை செய்ய  வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் வந்தேன்.  

கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் போன்ற பல்வேறு  வேலைத்திட்டங்களை அன்றிருந்த அரசாங்கம் முன்வைத்திருந்தது. பொலிவேரியன்  கிராமத்துக்கான சகல வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்தது. அதனால்  பாடசாலை, பள்ளிவாசல், பல்தேவைக் கட்டிடம், விளையாட்டு மைதானம்,  பிரதேசத்துக்கு தேவையான அலுவலகங்கள் என சகல வசதிகளையும் உடைய ஒரு கிராமமே  உருவாகும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட அக்கிராமத்துக்கு அரச  மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் நிதியினூடாக நூறு கோடி ரூபாவுக்கு மேல்  செலவிடப்பட்டுள்ளது. இன்றைக்கு அது ஒரு அழகான கிராமமாக உள்ளது.  

அதேபோன்று சாய்ந்தமருது பிரதேசத்துக்குள் அதிகமான வீதிகளை  புனர்நிர்மாணம் செய்திருக்கின்றோம். நான் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில்  10வருடங்களுக்குட்பட்ட காலத்துக்கு பிரதேச செயலாளராக கடமை  புரிந்திருக்கிறேன்.  

பிரதேச செயலாளராக இருந்த காலங்களில் எனது பிரதேச  எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இனம் காணப்பட்ட பிரச்சினைகளை மத்திய மற்றும்  மாகாண அரசோடு இணைந்து செய்யக்கூடியதாக இருந்தது.  

கேள்வி: பிரதேசங்களில் காணி, வீட்டுத்திட்டம் போன்ற பல்வேறு  பிரச்சினைகள் இப்பிரதேசங்களில் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக  காணப்படுகின்றன. இவற்றுக்குத் தீர்வுகாண்பதற்கு நீங்கள் முன்வைக்கும்  ஆலோசனை என்ன?  

பதில்: முதலில் அனைவரும் தேசிய நல்லிணக்கத்துடன் செயற்பட  வேண்டும். அக்கரைப்பற்றில் காணிப்பிரச்சினை, வீட்டுத் திட்டங்களை பகிர்ந்து  கொள்வதிலுள்ள இரு சமூகங்களுக்கிடையிலான பிரச்சினை. அதேபோன்று கல்முனையில்  தமிழ் மக்களுடைய பிரதேச செயலக தரமுயர்த்தல் தொடர்பான பிரச்சினைகள் என பல  பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவை சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம்  இருக்குமாக இருந்தால் பேசித் தீர்த்திருக்க முடியும். ஆனால்  சமூகங்களுக்கிடையிலான துருவப்படுத்தல்களால் அப்பிரச்சினைகள் தொடர்ந்தும்  தீர்க்கப்படாமல் பிரச்சினைகளாக தொடர்கின்றன.  

இன்று மருதமுனை வீட்டுத்திட்டம், நுரைச்சோலை வீட்டுத்திட்டம்  ஆகியன சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென பகிர்ந்தளிக்கப்படுவதற்காக  கட்டப்பட்டவை. ஆனால் பல வருடங்கள் ஆகியும் இன்னும் அவை  பகிர்ந்தளிக்கப்படவில்லை. அவ்வீட்டுத் திட்டங்கள் வீணாக சீரழிந்து  விடுகின்றன. உண்மையில் இது உரிய காலத்தில் வழங்கப்படாமல் போனதால் அவற்றை  சுனாமி சுற்று நிருபத்துக்குள் வழங்கமுடியாது. தற்போது சுனாமி  சுற்றுநிருபமும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. அவற்றை காணிக் கச்சேரி வைத்து  வீடில்லாதவர்களுக்கு கொடுக்க முடியும்.  

சாய்ந்தமருது பிரதேச செயலாளராக இருந்த போது சுனாமியால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு 800க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டிக்  கொடுத்திருக்கிறோம். அதனை நாங்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தான்  கட்டி வழங்கினோம். அதற்கு வீடு கட்டும் முன்பே பொருத்தமான ஆட்களை அடையாளம்  கண்டு அவர்களுக்கென்றே அவ்வீட்டை நிர்மாணித்தோம். அதனால் பயனாளிகளின்  மேற்பார்வையும் பங்களிப்பும் அவ்வீடு நிர்மாணிப்பின் போது இருந்தது. வீட்டு  நிர்மாணிப்பின் போது முரண்பாடுகளை தவிர்ப்பதற்கு அந்த வழிமுறைகளை  கையாண்டோம்.  

கேள்வி: பிரதேச அபிவிருத்திக்கு அரச உத்தியோகத்தர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான உறவு எப்படி இருக்க வேண்டும்?  

பதில்: அபிவிருத்தி தொடர்பான கூட்டங்கள் நடக்கின்ற போது  மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்படுவது கட்டாயம். எமது மாவட்டத்தைப்  பொறுத்தவரையில் ஒவ்வொரு பிரதேசத்தையும் பிரதி நிதித்துவப்படுத்தி ஆட்கள்  இருப்பார்கள். ஆனால் எங்கள் பிரதேசத்தைப் பிரநிதித்துவப்படுத்துவதற்கு  அரசியல் தலைமை இருந்தாலும் கூட்டங்களுக்கு வருவது மிகவும் குறைவு.  உத்தியோகத்தர்கள் என்ற வகையில் நாங்கள் கேள்வியெழுப்ப முடியாது. ஒரு  அரசியல்வாதி கேட்கலாம்.  

இங்குள்ள அரசியல்வாதிகள் உயர்மட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு  என்ன பிரச்சினை  என்று கேட்பதுமில்லை. அபிவிருத்தி சம்பந்தமான ஆலோசனைகளைப்  பெறுவதுமில்லை. எமது கல்முனைத் தொகுதியைப் பொறுத்தவரையில் எங்களுக்கு  அரசியல் பிரதிநிதித்துவம் ஒன்று இருந்த மாதிரி விளங்கவில்லை. இது  சமூகத்துக்கு ஒரு பாரிய பின்னடைவாகும். வெறுமனே மேடைகளில்  பேசித்திரிந்தார்களே தவிர அடைவு ஒன்றையும் காணவில்லை.  

அரசியல் வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான பெரிய  இடைவெளி காணப்படுகின்றது. அரசியல் வாதி ஒரு பிரதேச செயலாளரை  அடிமைப்படுத்தும் நிலைக்கு வருகின்றார்.

அவர் சொல்வதைத்தான் செய்யவேண்டும்  என்று வலுக்கட்டாயப்படுத்துவது. தனது சுயநலத்துக்காக நிர்வாகத்தில்  தலையிடுவது. எனவே இதுவும் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பொது  நன்மைக்காக அரசியல்வாதியும் உத்தியோகத்தரும் இணைந்து செயலாற்ற வேண்டும்.  

நான் பிரதேச செயலாளராக இருக்கும் போது அரசியல்  வேறுபாடுகளுக்கு அப்பால் எல்லோருடைய உதவியையும் பெற்றுத்தான்  பணியாற்றினேன். ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் தேவை என்று  வருகின்ற போது இவை முக்கியமாகும்.  

அபிவிருத்திகளின் போது மக்களின் தேவைக்கு முன்னுரிமை  அளிக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாமல் அரசியல் வாதிகளினதும் கொந்தராத்துக்க  காரர்களினதும் நலனுக்காக திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தக் கூடாது.  மக்களின் தேவை மற்றும் அவர்களது அபிப்பிராயங்களை உள்வாங்கி திட்டங்களை  அமுல்படுத்துகின்ற பொது மக்களினுடைய பங்களிப்பையும் அவர்களது ஆதரவையும்  பெறமுடியும்.  

கேள்வி: சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கை மிக நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு அண்மையில் அது நகர சபையாக பிரகடனப்படுத்தப்பட்டு அந்த வர்த்தமானி அறிவித்தல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக உங்களது கருத்து என்ன? 

பதில்: பிரதேச சுகாதார பிரச்சினைகளை பார்ப்பதற்காக பிரிட்டிஷார் 1897கொண்டு வந்த statuary Board ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேசம் 1987வரைக்கும் ஒரு தனியான உள்ளூராட்சி சபையைக் கொண்டிருந்தது. சாய்ந்தமருது ஒரு சபையாகவும் கல்முனை இன்னுமொரு சபையாகவும் இருந்தது. இவ்வாறு தனியான சபையைக் கொண்டிருந்த பழமைவாய்ந்த இந்தப் பிரதேசம் 1987இல் அரசியல் ரீதியாக கல்முனையுடன் இணைக்கப்பட்டது.  

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் 120,000க்கும் உட்பட்ட மக்கள் இருக்கின்றார்கள். 7பெரிய கிராமங்களை இந்த மாநகர சபை உள்ளடக்கியுள்ளது. இங்கிருக்கின்ற வளம் குறைவாகும். அதனால் பிரதேசங்களுக்கு இந்த மாநகர சபையினால் கிடைக்கப் பெறும் சேவைகளும் குறைவாகும். உள்ளூராட்சி என்பது ஒரு பிரதேசத்திலுள்ளவர்கள் தங்களைத் தாங்களே தீர்மானிக்கின்ற ஒரு குட்டி அரசாங்கம். சாய்ந்தமருது 20ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட 30ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களைக் கொண்டுள்ள பிரதேசம்.  

2001ஆம் ஆண்டிலிருந்து தனியான பிரதேச செயலகத்தைக் கொண்டு இயங்குகிறது. உள்ளூராட்சி சபையின் எல்லையாக இருப்பதில் மிக முக்கியமான எல்லை பிரதேச செயலக எல்லையாகும். அப்படியான ஒரு எல்லையைக் கொண்டுள்ள பிரதேசத்துக்கு அப்பவே உள்ளூராட்சி சபை கிடைக்கப் பெற்றிருக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காகவும் தமது வாக்கு வங்கிகள் உடைக்கபட்டு விடும் என்பதற்காகவும் இது இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டு வந்தது.  

தற்பொழுதுள்ள அரசாங்கத்தில் சாய்ந்தமருதுக்கான நகர சபை கிடைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கடந்த 14ஆம் திகதி விசேட வர்த்தமானி இல 2162/50மூலம் சாய்ந்தமருது நகர சபையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் மாற்றுக் கட்சியினரின் விசமத்தனமான பிரச்சாரங்களால் அரசாங்கத்துக்கு ஒரு சிக்கல் நிலையை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக வர்த்தமானி அறிவித்தல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கிறது.  

ஆனால் சாய்ந்தமருதைப் பொறுத்தவரையில் அரசாங்கத்துக்கோ அல்லது நாட்டுக்கோ எந்த பிரச்சினையும் இல்லாத ஒரு பிரதேசம். குறிப்பாக கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்பை அடுத்து அதனுடைய சூத்திரதாரியின் குடும்பம் தற்காலிகமாக தங்கியிருந்த இடத்தை சாய்ந்தமருது மக்கள் முற்றுகையிட்டு அதனை பொலிசுக்கும் இராணுவத்துக்கும் தெரியப்படுத்தி மீண்டுமொரு பயங்கரவாதம் ஏற்படாமல் இருப்பதற்கு பங்களிப்பு செய்துள்ளார்கள்.

ஆனால் மாற்றுக் கட்சியினர் ஸஹ்ரானினுடைய பிரதேசம் என்று விசமப் பிரசாரங்களைக் கொண்டு விமர்சிக்கின்றனர். ஆனால் இவ்வாறான தீவிரவாதிகள் யாரும் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர்.

இந்த விசமப் பிரசாரத்தால் தற்காலிகமாக சாய்ந்தமருது நகரசபைக்கான வர்த்தமானி அறிவித்தல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதை மிக விரைவில் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

நேர்காணல்
ஏ.மொஹமட் பாயிஸ்

Comments