ஓவியன் | தினகரன் வாரமஞ்சரி

ஓவியன்

இரவு நேரம் இரண்டு மணி, இளமையைச் சுவைக்கும் இனிமையான நேரமது. இரவு வாழ் உயிரினமும், இன்னொரன்ன புல்லினமும் இதமாக இணைகின்ற நேரமுமாய் அலைத்துக் களைத்து உழைத்து ஓய்ந்த உருவங்கள் நிம்மதி நாடி நீட்டி நிமிர்ந்து படுத்துறங்கும் நேரம் என்று நான் சொல்ல, இல்லை இல்லை இல்லறத்தில் நீந்துகின்ற இனிய உள்ளங்கள் உடலால் ஒற்றுமை காணுகின்ற உன்னத இரவு. இரவைப் பற்றி ஏனிந்த நீட்டு நிமிர்ப்புக்கள்? உண்டு சொல்ல, உண்மை ஒன்று உற்று நோக்குகின்ற போதினிலே சற்றேனும் அலுத்து விடாமல் சுவைத்திடலாம் கதைச்சுவை, கவிதைச் சுவையுடன், 

ஆம், அவனோ ஒப்பற்ற ஓவியன்.  இறைவன் தாமரைத் தடாகத்தின் மத்தியிலே தனிமையிலே அமரவைத்தான் சரஸ்வதி தேவியை. அவள் தானே அவனுக்கு அவ்வறிவை வழங்கிட்டாள். ஓவியனாய், ஒப்பற்ற காவிய நாயகனாய் மிளிர்ந்திடவே வழி அமைத்தான். நிகரில்லா ஓவியனாய் ஒருபடிமேலே உயர்த்தியே வைத்திட்டான். சரஸ்வதியின் அருள்பெற்று சித்திரத்தை கைப்பழக்கமாய் கைக் கொண்டான். 

வயதொன்றும் பெரிதில்லை இளம் வயது இளவலாவான். வட்ட முகத்திடை அரும்பு மீசை துள்ளி வர சுருண்ட கேசம் அலைபா, அகன்ற மார்பும், வீரமும் கொண்ட அழகனென்பேன். அவளும்தான், அவனைவிட இளமையிலே இரு வயது குறைந்த அழகிதான், அவன் உள்ளம் கவர்ந்த அழகிதான். என்றாலும் உணர்ச்சிகள் எழவில்லை அவனுக்கு. அவளுக்கோ அடங்காத உணர்ச்சி தீர்த்து வைக்க முடியாத  கணவனுக்கு வாழ்க்கைப்பட்டு வருந்துகிறாள் வண்ணமயிலாள்.  

ஒவ்வொரு இரவினிலும் ஒவ்வொரு கோணம் நின்று உற்று நோக்கிடுவான் கலைக்கண்ணால் தன் மனைவி அழகுதனை. அழகை ரசிக்க தடையேதும் இல்லை. அவளும்தான் அவன் விரும்பும் விதமாக விசித்திரமாய் நின்றிடுவாள். மேனியிலே மென்பட்டு நூல் கொண்டு ஒட்டவைத்த மேலாடை, ஆடையினூடே ஊடாடும்  மேனி வெளியினிலே இலேசாக பளிச்சிடும். அவனுக்கும் அதுதான் வேண்டும். தன் மனைவி எந்த எந்தக் கோணங்களில் நின்று தனக்கு ‘போஸ்’ கொடுக்கின்றாளோ அவ்வளவுக்கு அவ்வளவு விருப்பம் மேலிடுவான். காரணம் தான் அறிந்ததுவே. அவன் வரையும் ஓவியத்திற்கு உயிர் தந்திடுவாள். நடுச்சாமம் முதற்கொண்டு அதிகாலை வரையானாலும் அலுப்பின்றி நின்றிடுவாள். உணர்ச்சிகள் விழித்துக் கொள்ளும் ஆனாலும் அவனுக்கோ அதுவொன்றும் தேவையில்லை. மனைவியின் தேவை அறியாத கணவன் அவன். 

கைவிரல்கள் நடனமிட  தூரிகைதான் துரிதகதியினிலே துணிந்து விளையாடிட அழகுக் கோலங்கள், அங்கங்களின் அழகுக் கோலங்கள் அப்படியே அச்சடித்துவைத்தது போல் வரைவுத் தாளினிலே வந்து விடும்.  

ஆகா, எத்தனை அழகு எத்தனை அழகு? தன் மனைவி அழகுதனை அப்படியே வரைந்தெடுத்து அழகுக் கடைதனிலே அங்காடித் தெருவினிலே விற்பனைக்கு வைத்திடுவான். அழகை ரசிக்கத் தெரிந்தவர்கள் அவற்றை அதிக விலை கொடுத்து வாங்கிடுவார். இது ஓவிய வியாபாரம். வாழ்க்கை என்பது வியாபாரம் என்பதனால் அவன் பிழைப்பு அமைந்து விடுகிறது அவ்வாறு. 

நாட்கள் இவ்வாறு நடைபோட நாயகனின் புகழ் உச்சிமேல் உச்சி சென்று மெச்சும் பலரது வாய் மொழிக்குள் சிக்கினான். மனைவியின்  தேவை அறியாது தான்தோன்றித் தனமாய் இருந்தவனுக்கு பேரிடிதான் வரும் என்று கனவிலும் தான் நினைத்தானில்லை. 

ஆம், அன்றவன் வீடு செல்லும் போதினிலே அன்பு மனைவிக்கு அழகான நகையுடன் ஆடை அணிகளையும் வாங்கி வந்தான். அது மாத்திரமல்ல, அலைபாயும் கருங்கூந்தலுக்கு மல்லிகைப் பூவிதிலே ஒரு முழமும் வாங்கி இனிப்புப் பண்டங்கள் இனியவனை மகிழ்விக்கும் என்றெண்ணி பல பொருட்கள் வாங்கிக் கொண்டான். 

வீட்டுக்குள் நுழைந்தவனோ அன்பு மனையாளை ஆசையுடன் அழைத்திட்டான். பூங்கொடி, பூங்கொடி எங்கே நீ நிற்கின்றாய் எனக் கூவி அழைத்த வண்ணம் ஒவ்வொரு அறையினிலும் தேடி நின்றான். எங்கு தேடியும் மனைவியின் வாசனையைக் காணவில்லை. பதறினான், எங்கே என்னவள் எங்குதான் சென்று விட்டாள்? வெளியில் தேடுதல் நடத்தினான்.  

முற்றத்தைச் சுற்றி பூத்துக் குழுங்கிய மலர் செடிக்குள் மறைந்து தான் இருப்பாளோ இல்லை கொல்லைப் புறத்தினிலே ஏதேனும் வேலையாய் இருப்பாளோ என எண்ணி எங்கினும் தேடினான் தேவதையைக் காணவில்லை சற்று உள்ளத்து அச்சத்துடனே சமையல் கட்டதனில் தேடி நின்றான். 

“ஆ.... என்ன அது சமையல் கட்டில் ஒரு மடலா” ஆம் ஒரு மடல்தான பிரியமனம் இன்றி பிரிந்து செல்வதற்காய் வரைந்து வைத்த அவளது பிரியாவிடை மடல் தான் அது. பதற்றுத்துடன் பிரித்திட்டான். அன்பு மனைவி கண்ணீரை மையாக்கி அவனது கண்களைத் திறப்பதற்காய் திருமடலாய் வரைந்திருந்தான். 

“அன்புள்ள அத்தான்! தங்கள் அன்பு மனைவி பூங்கொடிதான் வரைகின்றேன் இம்மடலை. நானுங்கள் துணைவியாய் வருவதற்கு பாக்கியம்தான் செய்திருக்க வேண்டும். எனினும் நீங்கள் எனை அபாக்கியவாதியாக ஆக்கி விட்டீர்கள். உங்களுக்கு உடல் மீது பசியில்லை நான் அறிவேன் எனக்குண்டு என்பதையும் நீங்கள் அறியவில்லை. உங்கள் குறிக்கோளில் கண்ணாய் இருந்தீர்கள் உடற்பசியற்ற ஜடமாக எனைத் தொட்டீர்கள், எதற்கென்று நான் பகர்வேன். ‘அப்படியிரு, இப்படியிரு’ என்று என்னை நிற்க வைத்து கால்கடுக்க வைத்தீர்கள். நடுச்சாமம் முதற்கொண்டு வைகரை வேளை வரையில் உங்களது திருவிளையாட்டுக்கள் தொடரும் என்னுடலைக் கண்களினால் அணுவணுவாய் அனுபவித்து சித்திரப் பாவைக்கு தோழியாக்கி விட்டீர்கள். என்னுடல் என்னவருக்குத்தான் என்றிருந்தேன். கேள்விக்குறியாக போனபின்பு என்னுடலை உயிர் உள்ள ஓவியமாய் வரைந்தெடுத்து தெருத் தெருவாய் விற்றீர்கள். தெருத்தெருவாய் பவனி வரும் பரத்தையருக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் கண்டீர்கள்? தன் கணவனே தன் அன்பு மனைவியை பணத்துக்கு விற்ற பழி உங்களைத் தான் வந்து சேர்ந்திடாதோ, ஏன் செய்தீர் இந்த இழிசெயலை? வேறு பிழைப்பில்லை உங்களுக்கு உமக்குத் தெரிந்த தெல்லாம் சித்திரத்தில் மை எழுதி என்னுடலை சந்திகளில் விற்கும் சித்திரக்கலை ஒன்றுதான்.

எத்தனை கேவலம் தன்மனைவியை விற்பதற்கும், தன் மனைவியின் உடலை சித்திரமாய் விற்பதற்கும் வேற்றுமைதான் என்ன சொல்லிவீர்” 

கடிதமோ கை நழுவிக் கீழே விழ அவன் விழி இரண்டும் நீரோடையாய் மடை திறக்க கால் நடுங்க, கையிரண்டும் செயலிழக்க சரிந்திட்டான் நிலமடந்தை மடியின் மீதே தலை சுற்ற தான் செய்த தவறுகள் மூலையிலே கிறுகிறுக்க என்னதான் செய்ய முடியும் அவனாலே. 

மறுகணம் உன்மத்தம் பிடித்தவனாய் உடன் வைத்திருந்த சித்திரத்தாயின் சொத்துக்களை நிலத்தினிலே தூக்கி எறியத் தொடங்கிவிட்டான். அழகழகாய் வரைந்து வைத்திருந்த ஓவியங்களை எல்லாம்  போட்டு அழித்திட்டான். தூரிகை ஒரு புறம். தூரிகையைத் தொட்டு எழுதும் வர்ணக் கலவைகள் மறுபுறம், கரும்பலகை இன்னொரு புறம், வர்ணச் சீலைகள் என ஒவ்வொன்றாய் எடுத்தெறிந்து துவம்சம் செய்திட்டான். “தூரிகையே இனி நீ என்னிடம் வந்திடாதே, வர்ணக்கலவைகளே இன்றோடு அழிந்துவிடு” எனச் சொல்லிச் சொல்லி ஒவ்வொரு பொருளுக்கும் விடை கொடுத்தான். 

“என் இனியவளின் வாழ்க்கையை குடித்து விட்டு ஒன்றும் அறியாதது போல் கிருக்கின்ற எனது சித்திரச் சொத்துக்களே எனக்குத் தேவையில்லை இனிக் கனவிலும் என் கண்முன் வந்து விடாதீர்கள்” எனக் கோபாவேசம் கொண்டு கத்திக் கதறினான். 

“பூங்கொடி, பூங்கொடி உன்தேவை அறியாது இத்தனை நாள்  குருடனாய் இருந்திட்டேனே! நீ எத்தனை பொறுமைசாலி, பூமாதேவியையும் வென்று விட்டாய், என் எண்ணம் போல் நடந்து கொண்டாய் நான்தான் பாவி, உன் எண்ணம் அறியாது இருந்திட்டேன்.

எனது அறிவுக் கண்களைத் திறந்து விட்ட கண்மணியே! என்னை மன்னித்துவிடு பூங்கொடி மன்னித்து விடு கதறினான் புலம்பினான். பூங்கொடி பூங்கொடி எனக் கூவி அழைத்திட்டான். மனம் நொந்து மண் மீது அமர்ந்திட்டான். 

நாளிகைதான் கழிந்திருக்கும் தோட்டத்து மூலையிலே கேணி அருகினிலே மறைந்திருந்த பெண் உருவம் ஒன்று எழுந்து வந்து நரசிம்மன் முன்னாலே சிலைபோலே நின்றது. 

இதை அறியா நரசிம்மன் தலை தூக்கி பார்த்தபோது அவன் கண்களை அவனாலே நம்ப முடியவில்லை. கனவா அல்ல நனவா? எனப் பிரித்தறிய அவனுக்கு நெடுநேரம் பிடித்தது. 

“பூங்கொடி என அழைத்தான் அவளது பூவிதழ் விரிந்தது சந்தேகமில்லை அவள் பூங்கொடிதான் மறுநொடியில் தன் பூங்கொடிதான் நின்றிருப்பது கண்டு ஓடோடிச் சென்று அவளை பூங்கொடி பூங்கொடி எனக் கூவிய வண்ணம் வாரி அணைத்திட்டான், அள்ளி அணைத்து ஆசை தீர அவள் இதழில் முத்தமழை பொழிந்திட்டான்.

கலாபூஷணம் 
மாவனல்லை
எம்.எம். மன்ஸூர்

Comments