பாட்டாளி வர்க்க நிலையை அதிகம் பேசிய மல்லிகை சி.குமாரின் படைப்புக்கள் | தினகரன் வாரமஞ்சரி

பாட்டாளி வர்க்க நிலையை அதிகம் பேசிய மல்லிகை சி.குமாரின் படைப்புக்கள்

மக்கள் எழுத்தாளர் மல்லிகை சி. குமார் அறுபதுகளில் பிரவாகமெடுத்த மலையகப் படைப்பாளர்களில் மிக முக்கியமானவர். அறுபதுகளிலிருந்து இன்று வரை இருநூறுக்கும் மேற்பட்ட கதைகளைத் தந்தவர். அவ்வாறே இருநூறுக்கும் மேற்பட்ட கவிதைகளையும் தந்தவர். நூற்றுக் கணக்கான சுவர் ஓவியங்கள், கோவில் சித்திரங்கள் வரைந்தவர். பல நகரங்கள், தோட்டங்கள். முழுவதும் விளம்பரப் பலகைகள் எழுதியவர். கணினி அறிமுகமாவதற்கு முன்பே பல வகையிலான எழுத்து வடிவங்களைத் தந்தவர்.  

இலக்கிய உலகில் இரண்டு தொகுப்புகள் மட்டுமே வெளிவந்த நிலையில், பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலுமே நிறைய எழுதி, நிறைய வாசகர்களைத் தன் வசம் கொண்டவர்.  

மலையக இலக்கியம் 1920 களிலிருந்து கோதண்ட ராமன் நடேசஐயர் மூலமே தோற்றம் பெற்றது. அவருக்கு அடுத்த நிலையில் கவிமணி சி.வி. வேலுப்பிள்ளை ஆங்கிலத்திலும், தமிழிலும் படைப்பிலக்கியங்கள் எழுதத் தொடங்கினார். இந்த இருவருக்குப் பிறகே மலையக இலக்கியம் அறுபதுகளிலிருந்து பல எழுத்தாளர்களின் படைப்புக்களால் வளர்ச்சிபெறத் தொடங்கியது. மலையக மக்களின் சமூக நிலைமைகள் அவ்வாக்கங்களில் மிளிரத் தொடங்கின.  

இருந்த போதிலும் நடேச ஐயர் ஒருவரே மலையக மக்களின் அவல நிலைமைகளுக்கு தோட்ட நிர்வாகங்களின் அட்டூழியங்களும், அரசுகளின் அலட்சியப் போக்குகளுமே காரணம் என்று அந்த இரண்டு சக்திகளுக்கு எதிராக போர் குரல் எழுப்பி இலக்கியங்கள் படைத்தார்.  

கட்டுரைகளும், பாடல்களும் துண்டுப் பிரசுரங்களும் மக்கள் மத்தியில் பிரச்சாரங்களாக உருவெடுத்தன. நடேச ஐயருக்கு அடுத்த நிலையில் சி.வி. வேலுப்பிள்ளை அறியப் பட்டாலும், அவர் மக்களின் பிரச்சினைகளையும், துயரங்களைப் பற்றியே எழுதியிருந்தார். அம் மக்களின் துயரங்களுக்கு காரணிகளாகவிருந்த தோட்ட நிர்வாகங்களையும், அரசுகளையும் எதிர்த்து, சாடல் இலக்கியங்கள் படைக்கவில்லை எனலாம். ஆனால், அறுபதுகளில் எழுதத் தொடங்கிய மல்லிகை சி.குமார் அரசுகளையும், தோட்ட நிர்வாகங்களையும் எதிர்த்து குரல் எழுப்பி இலக்கியம் படைத்ததில் நடேச ஐயருக்கு அடுத்த வரிசையில் நிற்பதை நாம் இங்கு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது.  

மல்லிகை சி.குமாரின் படைப்புக்கள் யாவும் கற்பனையாக வாசகர்களின் ரசனைக்கு மெருகூட்டுவதாக கதை, கவிதை, பண்பியல், அழகியல், மொழியியல், நடையியல் என இலக்கண மரபுடன் புனையப்பட வில்லை. குறிப்பாக தமிழ்நாட்டுப் பாணியிலான கதைகளை மலையக இலக்கியத்துக்குள் கொண்டுவரவில்லை. எல்லாமே மக்களின் யதார்த்த வாழ்க்கையாகவே சித்தரிக்கப்பட்டன. மக்கள் பேசும் மொழியிலேயே எழுதப்பட்டன.  

1995 ம் ஆண்டில் வெளிவந்த மாடும் வீடும் என்ற கவிதை நூல், முழுக்க மலையக அரசியலை விமர்சித்து எழுதப்பட்ட கவிதைத் தொகுப்பாகும். இத் தொகுப்பு தோட்ட நிர்வாகங்களுக்கும், அரசுக்கும் எதிராக ஆவேசக் கணைகளை எய்த கவிதை வரிகளாகக் காணப்பட்டன. இவரது சிறுகதைகளும் தோட்ட நிர்வாகங்களுக்கும், அரசுக்கும் எதிராக விரல் நீட்டி எழுதப்பட்ட ஆத்திரப் படைப்புக்களாகும்.  

'மாடும் வீடும்' கவிதைத் தொகுப்பு அட்டன் கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவம் என்ற சமூக நிறுவனத்தின் மூலம் வெளியிடப்பட்டது. இத் தொகுப்புக்கு பதிப்புரையை பி.மோகன் சுப்பிரமணியமும், முகவுரையை கொந்தளிப்பு ஆசிரியர் மு.நேசமணியும் எழுதியுள்ளனர். கவிதை நூலுக்கான அணிந்துரையை கவிஞர் வைரமுத்து வழங்கியுள்ளமை பெருமைக்குரியதாகும். கவிஞர் தனது அணிந்துரையில், அலங்காரத்துக்காக கவிதை எழுதும் கவிஞர்கள் மத்தியில், மல்லிகை சி.குமார் உணர்வுபூர்வமாகக் கவிதை வடித்திருக்கின்றார்.                

ஒரு சில கவிதைகளில் வாழ்க்கை எங்கோ ஓரிடத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. பல கவிதைகளில் வாழ்க்கை அங்கங்கே ஒட்டிக் கொண்டிருக்கிறது. மீதமுள்ள கவிதைகள் யாவும் வாழ்க்கையாகவே இருக்கின்றன. ஆயிரம் கிளிஞ்சல்களுக்கு மத்தியில் ஒரு சிப்பியும், ஆயிரம் முத்துக்களுக்கு மத்தியில் ஓர் இடம்புரி முத்தும், ஆயிரம் இடம்புரி முத்துக்களுக்கு மத்தியில் ஒரு வலம்புரி முத்தும் கிடைக்கும் என்பார்கள். குமாரின் கவிதைகள் அனைத்தும் வலம்புரி முத்துக்கள் என்ற மனம் நிறைந்த கருத்தை தந்துள்ளார்.  

கவிஞர் மல்லிகை சி. குமாரை சிலர் தங்களது கட்டுரைகளில் படிப்பறிவு குறைந்தவர் என்று எழுதியிருந்தார்கள். அது பிழையான தகவலாகும். எழுத்தாளர் குமார் க.பொ.த சாதாரண தரம் சித்தியடைந்தவர். அரச மிருக வைத்தியசாலையில் தொழில் புரிந்தவர். தனது அனுபவத்தின் பேரில் பசு வைத்தியம், பசு பிரசவம், ஏனைய பிராணிகளுக்கான மருத்துவம் கற்றுக் கொண்டவர். இந்த அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதற்கு அவரது நெருங்கிய நண்பரான மருத்துவர் காசிநாதர் முக்கியமானவர். காசி நாதர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். நல்லதொரு இலக்கிய ஆர்வலர். இவர்கள் இருவரும் இணைந்து செயல்பட்ட தலவாக்கலை மிருக வைத்தியசாலை தனது சேவையில் பொது மக்களின் நல்லபிப்பிராயத்தை பெற்றிருந்தது. துரதிஷ்டவசமாக அரச மிருக வைத்தியசாலை மூடப்பட்டதன் காரணமாக குமார் தோட்டத்தில் தொழிலாளராக பணிபுரிய நேரிட்டது.  

மலையக இலக்கியத்தில் மல்லிகை சி.குமாரின் முக்கியத்துவத்தை அறிந்த மறைந்த படைப்பாளர் சாரல் நாடன் தனது சாரல் பதிப்பகம் மூலம் இவரின் சிறுகதைகளை 'மனுசியம்' என்ற தொகுப்பின் மூலம் வெளியிட்டிருந்தார். அந்த ஆரம்ப காலத்தில் மல்லிகை சி.குமாருக்கு கிடைத்த நூல் வாய்ப்புக்கள் இந்த இரண்டுமேயாகும். இவைகளுக்கப்பால் மேற்கூறியது போன்று பத்திரிகைகள், சஞ்சிகைகள் மூலமே படைப்புக்கள் தந்து சர்வதேச மட்டத்தில் புகழ்பூத்த படைப்பாளராக உயர்ந்த ஓர் எழுத்தாளன் என்றால் அது மல்லிகை சி. குமார் என்ற ஒருவரையே அடையாளப் படுத்தும்.  

அவரது மரண வீட்டில் இறுதி அஞ்சலி செய்வதற்கு நான்கு நாட்களாக ஆயிரக்கணக்கில் பாடசாலை மாணவர்களும், பல்கலைக் கழக மாணவர்களும், ஆசிரியர்களும், கல்விசார் சமூகத்தினரும் சக படைப்பாளர்களும், வாசக பெருமக்களும் அலை அலையாக வந்து, அஞ்சலி செய்து சென்றமை ஓர் வியப்பை தந்தது.

மு. சிவலிங்கம்

Comments