பெருந்தோட்ட முன்பள்ளிகள் அரசு பொறுப்பேற்க ஆவன செய்வாரா ஆறுமுகன் தொண்டமான்? | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்ட முன்பள்ளிகள் அரசு பொறுப்பேற்க ஆவன செய்வாரா ஆறுமுகன் தொண்டமான்?

"நீங்கள் உங்கள் குழந்தைகளைக் கைவிட்டால் எமது நாட்டையே கைவிடுகிறீர்கள் என்று அர்த்தமாகும்" இப்படிச் சொன்னவர் நெல்சன் மண்டேலா. குழந்தைகள் தேவ அன்பின் தூதுவர்கள். நாளைய விடியலுக்கு விலாசமாகத் திகழவேண்டியவர்கள்.  

இவ்வாறான குழந்தைகளைக் கைவிடுவது என்பது இரண்டு அம்சங்களை உள்வாங்கி நிற்கின்றது. ஒன்று பராமரிப்பில் அவர்களை அரவணைக்காமை. அடுத்தது அறிவூட்டலில் அவர்களை நெறிப்படுத்த தவறுகின்றமை.  

சிறுவர் உரிமை, சிறுவர் நலன், கட்டாயக் கல்வி எல்லாமே இந்நாட்டுச் சட்டத் திட்டங்களில் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக ஐ.நா.வின் யுனிசெப், யுனெஸ்கோ போன்ற அமைப்புகள் அங்கத்துவ நாடுகளிடம் இதனை ஆணித்தரமாகவே எதிர்பார்க்கின்றன. இதற்கான வேலைத்திட்டங்கள் நிறையவே உண்டு. அதற்கான செலவினங்களை இந்த அமைப்புகள் வழங்குகின்றன. ஆண்டுதோறும் சர்வதேச சிறுவர் தினமும் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனால் மலையக சிறார்கள் மட்டும் இவைகளை அனுபவிக்க முடியாதவர்களாக காணப்படுவது தான் அபத்தம். இக்குழந்தைகளின் எண்ணங்கள், ஏக்கங்கள், எழுச்சி வண்ணங்கள் எதுவுமே ஏறெடுப்பாரின்றி பிஞ்சு வயசிலேயே அஞ்சி அடங்கிப் போகின்றது. பெற்றோர் இவர்களை உளவியல் ரீதியாக எடைபோட போதிய கல்வி பெற்றவர்களல்ல. அதற்கான அநுபவங்களும் அவர்களிடமில்லை. எழுந்தமானமாக பிள்ளை வளர்ப்பில் அவர்களின் இயங்கல் நிலை இடம்பெறுவதால் தடம்புரள வாய்ப்புகள் தாராளமாகவே உள. இதைத் தடுப்பார் இலர். சரியான வழியில் ஆற்றுகைப்படுத்தக் கைகொடுப்பார் இலர்.  

கல்வி விருத்தியில் இவர்களுக்கான உசாநிலைகள் பெருந்தோட்டங்களை எட்டிப் பார்ப்பது கிடையாது. இதேபோல ஒழுக்கவியல் வாழ்வுக்கான ஆன்மீக கட்டமைப்பு முறைப்படி கிடைப்பது இல்லை. குறிப்பாக இந்து மதத்தைச் சார்ந்த குழந்தைகளே இந்தப் பின்னடைவை எதி ர்நோக்கி நிற்கின்றன. கிறிஸ்தவ பிள்ளைகளுக்கு ஞாயிறு பாடசாலைகள் உண்டு. பெளத்த விகாரைகளில் தகம் பாடசாலைகள் நடக்கின்றன. ஆனால் இந்து ஆலயங்களில் எத்தனை அறநெறி பாடசாலைகள் இயங்குகின்றன?  

மிகமிகச் சொற்பமே. இது குறித்து சமூக வலுவூட்டல் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அண்மையில் ஆதங்கப்பட்டிருந்தார். நுவரெலியாவில் நடந்த ஒரு அறநெறிப் பாடசாவையின் 10 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டு அவர் பேசியிருந்தார்.  

இந்து ஆலயங்களில் அறநெறி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் ஆலயங்கள் தோறும் அறநெறிப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். மலையகத்தில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட தினங்கள் வரும்போது திருவிழாக்கள் நடக்கின்றன. களியாட்டங்கள் இடம்பெறுகின்றன. ஆனால் மத போதனைகள் எதுவுமே இடம்பெறுவது இல்லை. ஏனைய மதங்களில் மதம் சம்பந்தமான போதனைகள் கிரமாகவே இடம்பெற்று வருகின்றன. சிறு வயதிலேயே சமய நெறிகளைப் பின்பற்றினால் சமூகத்தில் ஒரு நல்ல பிரஜையாக வளரலாம்.  

எனவே, இந்து ஆலயங்களில் திருவிழாக்கள் களியாட்ட நிகழ்வுகளுக்கு வழங்கும் முக்கியத்துவத்தைப் போல அறநெறிப் பாடசாலைகளுக்கும் வழங்க ஆவன செய்யப்படுவது அவசியம். இதன் மூலம் சிறுவர்களுக்கு ஆன்மீக நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். இனி இவ்வாறு அறநெறிப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் ஆலயங்களுக்கு மாத்திரமே ஆலயங்கள் அபிவிருத்திக்கென அரசாங்கத்திடமிருந்து நிதி உதவிகள் பெற்றுக் கொடுக்கப்படும் என்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான உறுதி வழங்கியிருந்தார்.  

இது வரவேற்கப்பட வேண்டிய சங்கதிதான். ஏற்கனவே மலையக தலைமைகள் இதுபற்றிக் கவனம் செலுத்தி இருக்க வேண்டும் ஏனெனில் மலையக பிரதிநிதிகள் கோயில்கள் அமைக்க உதவுவது, கோயில்களுக்குத் தேவையான பொருட்களை வழங்குவது மட்டுமே பாரிய அபிவிருத்தியின் அடையாளம் என்ற போக்கிலேயே நடந்து கொண்டிருக்கின்றார்கள். இதற்காக அவர்களை மட்டும் குற்றம் சொல்லிவிட முடியாது. தமது பிரதிநிதிகளைக் கண்டாலே பெருந்தோட்ட மக்களும் இதனையே எதிர்பார்த்து கோரிக்கை வைக்கிறார்கள். பின்னர் பிரதிநித்துவம் செய்பவர்கள் தான் என்ன செய்வார்களாம். இப்பொழுது ஆறுமுகன் தொண்டமான் தெட்டத் தெளிவாகவே சொல்லிவிட்டார் அறநெறிப் பாடசாலைகள் அமைக்கப்படும் பட்சத்திலேயே அரச நிதி உதவி என்று.  

உண்மையில் கோயில் பரிபாலன சபையினர் இருக்கிறார்களே இவர்களை எல்லாம் அழைத்து அறநெறியின் அவசியம் பற்றி அறிவுறுத்துவது நல்லது. பொதுவாக மதக்கோட்பாடு பற்றி தேவையான அளவு புரிந்துணர்வு இல்லாமல் தான் பெருந்தோட்டச் சமூகம் மத வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.  

திருவிழா நடத்துவதில் மட்டுமே நல்ல நாட்டம். பூஜை புணஸ்காரங்கள் என்றால் கூட்டத்தோடு கூட்டமாக கும்பிடு போடுவது தான் வழிபாடு என்னும் மனோபாவம். கோவில்களுக்குப் பிள்ளைகள் பெற்றோரோடு வருவார்கள். வந்து அவர்கள் பாட்டில் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஒரு தேவாரம் பாடத்தானும் பிள்ளைகளைத் தேடிப்பிடிப்பது சிரமம்.  

உண்மையில் அமைச்சர் கூறியுள்ளபடி, அறநெறியின் முக்கியத்துவம் அனைத்துப் பெருந்தோட்ட ஆலயங்களிலும் முன்னெடுப்பது அவசரத்தேவை. தெய்வ அச்சம் பிஞ்சு மனதிலேயே பசுமரத்தாணி போல் பதிய வேண்டும். அப்போதுதான் அப்பிள்ளைகள் பழிபாவத்துக்கு அஞ்சுவார்கள். பண்புள்ளவர்களாக மாறுவார்கள்.  

இன்று மலையகப்பகுதியில் அறநெறி போதனை எத்தனை அவசியமோ அதேபோல தோட்ட சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் மீதும் கரிசனை காட்ட வேண்டியுள்ளது. சிறுவர்களின் உளச்சார் விருத்திக்கும் சமூக தொடர்பாடல் நாகரிகங்களுக்குமான முன்பயிற்சி இங்கு தான் ஆரம்பமாகின்றது. ஆனால் அது சரியான முறையில் கிடைக்காவிட்டால் பயனேதும் இல்லை. பெருந்தோட்ட முன்பள்ளி முறைமை இன்னும் முழுமையான வளர்ச்சியை எட்டவில்லை என்பதே அறிவு ஜீவிகளின் அங்கலாய்ப்பு.  

முன்பு பிள்ளைக் காம்பிராக்களாக இருந்தவை இன்று சிறுவர் பராமரிப்பு நிலையங்களாக அடையாளம் இடப்பட்டுள்ளன. இதன் பரிபாலனம் தோட்ட நிர்வாகங்களிடமே உள்ளது. இதனால் முறைப்படி பெருந்தோட்டப் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை அறிவூட்டல்கள் எதுவும் இங்கு இடம்பெறுவது இல்லை. கட்டிடத் தோற்றமும் பதவி முறைகளும் தான் மாறி இருக்கின்றதே தவிர பழைய பிள்ளைக் காம்பிரா போக்கே தொடர்கின்றது. அதாவது வேலைக்குச் செல்லும் தாய்மார் விட்டுச் செல்லும் பிள்ளைகளைப் பராமரித்துப் பார்த்துக் கொள்வது அவ்வளவுதான்.  

இங்கு பணிபரியும் அனைவரும் இத்துறையில் பயிற்சி பெற்றவர்களல்ல. சுமார் இரண்டு பேர் மட்டுமே பணிக்கு அமர்த்தப்படுவர். அநேகமாக நிலைய பொறுப்பாளர் பெரும்பான்மை இனமாக இருப்பார். உதவியாளர் தோட்டத் தொழிலாளிப் பெண்ணாக காணப்படுவார். 5 வயது வரையிலான சிறார்கள் இங்கு உள்வாங்கப்படுகின்றார்கள். இப்பராயச் சிறுவர் சிறுமியர்களைப் பராமரிக்கும் பரிச்சயமேதும் இல்லாத அநேகர் இங்கு தொழில் புரிந்து கொண்டிருக்கின்றனர். இதனால் குழந்தைகள் வினைத்திறன்களை உள்வாங்கிக் கொண்டு இதற்கேற்ப அவர்களின் ஆற்றலை தூண்டிவிட வாய்ப்பற்ற சூழலே இங்கு நிலவுகின்றது.  

பொதுவாக நவீன சிறுவர் அபிவிருத்தி நிலையம் ஒன்று எவ்வாறு அமைக்கப்பட்ட வேண்டும் என்னும் நியதி உண்டு. அமைதியான சூழல். போதிய இடவசதி, கற்றல் விளையாட்டு உபகரணங்கள், உணவு முறைகள் கொண்டதே தன்னிறைவு பெற்ற சிறுவர் அபிவிருத்தி நிலையத்துக்காள இலக்கணம். பயிற்சி பெற்ற உத்தியோகத்தர்களும் இருக்க வேண்டும். ஆனால் பெருந்தோட்டச் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் இப்பண்பினை கொண்டிருக்கவில்லை என்பதே ஆய்வுத் தகவல்.  

தவிர வர்ணம் பூசப்பட்ட பழைய கட்டிடம், பாதுகாப்பு அச்சுறுத்தல், மின்சார வசதியின்மை சுத்தமான குடிநீர் கிடைக்காமை போன்ற பல பிரச்சினைகளும் இங்கு காணப்படுகின்றன, இவைகளைத் தாராள மனப்பான்மை கொண்டு பெருந்தோட்டக் கம்பனிகள் அபிவிருத்திச் செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது.  

பெருந்தோட்டங்களின் நலன்புரி விடயங்களுக்குப் பொறுப்பான பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் (ட்ரஸ்ட்) இங்கு சுகாதார நடை முறையையும் கையாள்கிறது.

இதற்காக கம்பனி தரப்பும் அரசாங்கமும் இந்நிறுவனத்துக்கு தமது பங்குத் தொகையைச் செலுத்தி வருகின்றமையை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டவே செய்கின்றார்கள். இந்நிறுவனம் தமது பொறுப்பினை சரியாக நிறைவேற்றி வருகின்றதா என்பது ஆய்வுக்குரிய சங்கதி.  

எனவே தான் அரசாங்கமே இவற்றைப் பொறுப்பேற்று நடத்துவதே சாலச் சிறந்தது என்று குரல் எழுப்புகிறாா்கள் அறிவுஜீவிகள். ஆகவே அறநெறிப் பாடசாலை அமைப்பது குறித்து அவசியமான அறிவிப்பை வெளியிட்டுள்ள அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இது குறித்தும் அவதானம் செலுத்துவது நல்லது என்பதே பலரதும் அபிப்பிராயமாகும். ஏனெனில் ஆன்மீக தேடலைப்போல முன் பயிற்சி முகாமைத்துவமும் சிறார்களை ஆளுமை நிறைந்தவர்களாக ஆக்க உதவும் என்பது திண்ணம்.

பன். பாலா    

Comments