"கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும்" | தினகரன் வாரமஞ்சரி

"கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும்"

தமிழ் மக்களை மையப்படுத்தி எவ்வாறு பல தமிழ் அரசியில் கட்சிகள் செயற்படுகின்றனவோ அதுபோல் முஸ்லிம் மக்களையும் மையப்படுத்தி பல கட்சிகள் தமது செயற்பாடுகளை மிக நீண்ட காலமாக மேற்கொண்டு வருகின்றன என்கிறார்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான, ஹாபீஸ் நஸீர் அஹமட். அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி. 

கேள்வி : கடந்த ஜனாதிபதித் தேர்தலில் உங்களுடைய கட்சியின் எதிர்ப்பார்ப்பைக் கடந்து கோட்டபாய ராஜபக்ஸவுக்கு மக்கள் வழங்கிய அமோக ஆதரவு பற்றி என்ன கருதுகின்றீர்கள்? 

பதில் : இது ஒரு முக்கியமான விடயம் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் மூலம் ஒரு முக்கியமான செய்தியை பெரும்பான்மை மக்கள் வழங்கியிருக்கின்றார்கள். மக்களின் ஆணையை மதிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னுடைய பார்வையில் குறிப்பாக ஒட்டுமொத்தமாக பெரும்பான்மை சமூகம்தான் தன்னை வெல்ல வைத்ததாக ஜனாதிபதி பேசினாலும், சிறுபான்மை சமூகங்களிலிருந்தும் அவருக்கு கணிசமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். ஒருபுறம் அதிகமான சிறுபான்மை மக்கள் இருக்க, மறுபுறம் அதிகமான பெரும்பான்மை மக்கள்  ஜனாதிபதியை வெல்ல வைத்தாலும், சிறுபான்மை சமூகத்திலும், குறிப்பாக முஸ்லிம் சமூகத்திலும் கணிசமான வாக்குகள் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளன. எனவே அவரது வெற்றியை நாங்கள் ஏற்றுக் கொண்டு அவர் தற்போது முழு நாட்டுக்கும் ஜனாதிபதியாகியிருக்கின்றார்.

எங்களுடைய ஒட்டுமொத்த அபிலாசைகளையும், அரசியல் உரிமைகளையும் பெறுவதற்கான, செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு சிறுபான்மைக் கட்சிகளுக்கும், சிறுபான்மைச் சமூகத்திற்கும் இருக்கின்றது. 

கேள்வி : தற்போதைய ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து என்ன கருதுகின்றீர்கள்? 

பதில் : என்னுடை பார்வையில் கோட்டபாய ராஜபக்ச  ஜனாதிபதியாக பதவியேற்று குறுகிய காலமாக இருந்தாலும் அவரது சில செயற்பாடுகளை எம்மால் வரவேற்காமல் இருக்க முடியாது. அவர் சிறந்த நிர்வாகி என்ற விடயத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டாக வேண்டும். அவருடைய காலத்தில்தான்ன் பாரிய சவால்களுக்குள்ளும் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதுடன் அவர் ஒரு சிறந்த நிர்வாகி என்பதையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். 

கொழும்பு மாநகரத்தின் அபிவிருத்தியும், அழகுபடுத்தும் செயற்பாடுகளும், அவர் காலத்தில் தான் நடைபெற்றன.

குறுகிய காலத்துக்குள் பல அரச நிர்வாக தலைமை அலுவலகங்களுக்கு திடீர் விஜயங்களை மேற்கொண்டு நிர்வாக நடவடிக்கைகளை இலகுபடுத்தும் செயற்பாடுகள், போன்றவையெல்லாம் வரவேற்கத்தக்தாகும். மேலும் தொடர்ந்து 5 வருடங்களில் அவரது ஆட்சி எவ்வாறு அமையப்போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

கேள்வி : ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் தலைமைத்துவத்தின் கீழ்  அரசாங்கத்திடம் மக்கள் எதனை எதிர்பார்க்கின்றனர்? 

பதில் :  இந்நாட்டில் பெரும்பான்மை மக்கள் எனவும், சிறுபான்மை மக்கள் எனவும் இரண்டு விதமாகப் பேசப்படுகின்றது. பொரும்பான்மை மக்கள் எதிர்பார்ப்பது  இந்நாடு அபிவிருத்தி அடைய வேண்டும், நாட்டில்  சமாதாம் வேண்டும் என்பதுதான். அதுபோல் சிறுபான்மை மக்களும் மேற்குறிப்பிட்ட அத்தனை விடங்களையும் எதிர்பார்க்கின்றார்கள். 

இதுவரைகாலமும் இருந்த தலைவர்களுள், இவ்வாறு பொரும்பான்மை மக்களின் பெரும்பான்மையைப் பெற்ற தலைவர் ஒருவர் இருந்ததில்லை. இந்த நாட்டில் சொல்லப்பட்ட ஒரு அரசியல் தீர்வாக இருந்தாலும், அல்லது சிறுபான்மை சமூகத்தின் அரசியல் தீர்வு, அபிவிருத்திகள் பற்றிக் கதைத்தாலும், சொல்லப்பட்ட விடயங்கள் எல்லாம் பெரும்பான்மை சமூகம் ஏற்றுக் கொள்ளாது  என சாட்டுக் கழிக்கப்பட்ட விடயங்கள் கடந்த காலத்தில் இருந்தன. 

இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ இவற்றையெல்லாம் தாண்டி, இந்த நாட்டிலே சிறுபான்மை மக்கள் சுதந்திரமாக  வாழ்வதற்கும், சமமாக தங்களுடைய மத உரிமைகளைப்பேணி, சம அந்தஸ்துடைய பிரஜைகள் என இந்நாட்டிலே வாழ்வதற்கும், தமிழ் முஸ்லிம் மக்களிடையே ஒரு அரசியல் அதிகாரப்பகிர்வை, செய்து முடிக்கக்கூடிய அத்தனை தகுதிகளையும் உடைய ஜனாதிபதியாகவே அவர் பார்க்கப்படுகின்றார். 

அதனை அவர் செய்து முடிப்பாராக இருந்தால், வரலாற்றில் அவர் என்றென்றும் போற்றப்படுவார். அப்போதுதான்  நிரந்தரமான சமாதானமும், சுந்திரமும், அபிவிருத்தியும், நிலையான கோட்பாடுகளையும், செயற்பாடுகளையும் கொண்ட நாடாக இந்த நாடு முன்னேறும். வெளிநாடுகளிலுள்ள அத்தனை இலங்கையர்களும், மீண்டும் இலங்கைக்குத் திரும்பி வருகின்ற செயற்பாட்டிலும், வெளிநாட்டவர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளவும், ஒரு அடித்தளத்தை  உருவாக்கிய ஜனாதிபதியாகத் திகழ்வார். 

கேள்வி : நீங்கள் கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் நீங்கள் திட்டமிட்டிருந்தும், உங்களால் செய்யமுடியாமல் போனதுமான  செயற்றிட்டங்கள் ஏதும் உள்ளனவா?

பதில் : வேலையில்லாதவர்களுக்கு தொழில் வாய்ப்புகள்,  அங்கு ஏறக்குறைய 2 இலட்சம் இளைஞர் யுவதிகள் தொழிலின்றி இருக்கின்றார்கள். அவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க வேண்டும். கிழக்கிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்கின்றவர்களின் வீதம் தற்போது குறைவடைந்துள்ளது. அதற்காகவே  இங்கு தொழிற்சாலைகளை அமைத்து அவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க வேண்டியுள்ளது. இது ஒரு பாரிய சவால். இவ்லாவிட்டால் கிழக்கு மாகாணம் வேறு ஒரு பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டிவரும். 5000 க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் இருக்கின்றார்கள். அரச தொழில் அனைவருக்கும் வழங்க முடியாது என்ற பொய் பிரசாரங்களை விட்டுவிட்டு, கிழக்கு மாகாணத்தின் பொருளாதாரம் பெரிதும் தாக்கப்பட்டிருக்கின்றது. அரச தொழிற்சாலைகள் ஏதும் இங்கு கிடையாது. எனவே அரச தொழிற்சாலைகளையும், தனியார் தொழிற்சாலைகளையும் கிழக்கு மாகாணத்தில் உருவாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. அதுபோல் தொழில் நுட்பத்துறையிலும் கிழக்கு மாகாணத்தை முன்னேற்ற வேண்டிய தேவை இருக்கின்றது. 

கேள்வி : நீங்கள் கிழக்கில் முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் மட்டக்களப்பு படுவான்கரைப் பகுதியில் தொழிற்பேட்டை அமைப்பதாக உறுதியளித்திருந்தீர்கள் ஆனால் இறுதியில் அதனை உங்களால் செய்ய முடியவில்லையே? 

பதில் : நாங்கள் கிழக்கில் ஆட்சியில் இருந்த போது வருடத்திற்கு 3 தொழிற்சாலைகள் வீதம் அமைப்பதற்குத் திட்டமிட்டிருந்தோம். அதிலே இரண்டாவது வருடம் தொழிற்சாலை அமைப்பதற்கு படுவான்கரைப் பகுதியை முன்னுரிமைப்படுத்தியிருந்தோம். அதுபோல் ஒரு முஸ்லிம் பிரதேசத்திலும், ஒரு சிங்களப் பிரதேசத்திலும் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.

அதில் ஒவ்வொன்றிலும், குறைந்தது 200 பேர் தொழில் செய்வதற்கு ஏதுவாக அமையப் பெற்றிருந்தது. துரதிர்ஷ்டவசமாக எமது ஆட்சிக்காலம் முடிவடைந்துவிட்டது. ஆனால் படுவாங்கரைப் பகுதியில் நிச்சயமாக தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும், எனெனில் அங்கு அதிகளவு இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்பற்றிருக்கின்றார்கள். 

கேள்வி : எதிர்வருகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் உங்களுடைய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுமா, ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுமா? 

பதில் : ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிச்சயமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்து போட்டியிடும். இதில் எதுவித மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை. தற்போது பலரும் பலவித கருத்துக்களைத் தெரிவித்து வந்தாலும், அதில் எதுவித உண்மையும் இல்லை. 

(தொடரும்)

நேர்காணல் : வ.சக்திவேல்  

Comments