சிறுபான்மைக் கட்சிகள் எதிரெதிர் அணிகளில் இருப்பது நம் சமூகத்துக்கு வாய்ப்பானது | தினகரன் வாரமஞ்சரி

சிறுபான்மைக் கட்சிகள் எதிரெதிர் அணிகளில் இருப்பது நம் சமூகத்துக்கு வாய்ப்பானது

ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம்.  தான்தோன்றித்தனமாக நான்தான் பெரியவர் என்ற எண்ணமில்லாமல் சமூகம் என்ற ரீதியில் சிந்தித்தார்களானால் நிச்சயம் எதனையும்  சாதிக்கலாம். இதனை உணராதவரைக்கும் எல்லாம் கஷ்டமாகத்தானிருக்கும் என்கிறார் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ். சதாசிவம்.  

அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இ.தொ.காவின் தூண்களாக கருதப்பட்ட எஸ். செல்லசாமி, டி.வி. சென்னன், ஏ.எம்.டி. ராஜன், பி.பி. தேவராஜ், எஸ். ராஜரட்ணம், ஆர். யோகராஜன் போன்ற பலமிக்க தலைவர்களின் வரிசையில் எஸ். சதாசிவமும் ஒருவர். அரசியல் தொழிற்சங்க ரீதியில் நீண்டகால அனுபவமிக்கவர். செளமியமூர்த்தி தொண்டமானின் மறைவின் பின்னர் இ.தொ.காவிலிருந்து வெளியேறினாலும் அரசியலில் இருந்து ஒதுங்காமல் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தொடர்ந்து தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருபவர்.  

அண்மையில் இவரை கொழும்பில் சந்தித்தோம். எந்தவித படாடோபமும் இல்லாமல் மிகவும் இயல்பாக பேசிய அவரிடம் தற்போதைய அரசியல் நிலைமைகள் பற்றிக் கேட்டோம்.  

நாட்டில் 80 வீதமான பெரும்பான்மை மக்கள் தாம் விரும்பும் தலைமைத்துவத்தையே தெரிவு செய்துள்ளார்கள். ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். ஜனாதிபதியாக அவர் பதவியேற்றதன் பின்னர் அவரது நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பேசுபொருளாகி வருகிறது. அரச நிர்வாகியாக இருந்து நாட்டின் ஜனாதிபதியாகி இருப்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஊழல்களை ஒழிப்பதற்காக அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை.  

பொதுத்தேர்தல் வரப்போகிறது. இதுபற்றி உங்கள் கருத்தென்ன?  

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இன்னும் ஐந்து வருடங்களுக்கு கோட்டாபய ராஜபக்ஷவே ஜனாதிபதியாக இருக்கப்போகிறார். இந்நிலையில் இன்னொரு கட்சியைச் சார்ந்தவர் பிரதமராக வந்தால் என்ன நடக்கும் என்பதை கடந்தகால அரசியல் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும்.  

நல்லாட்சி அரசாங்கத்தில் முழுமையான ஆதரவு மக்கள் மத்தியில் இருந்தது. பிரதமராக வந்த ரணில் விக்கிரமசிங்க அரசியல் அனுபவமுடையவர். அதுபோல ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேனவும் அரசியல் அனுபவம் நிறைந்தவர்தான். இவ்விருவரும் கடந்த நாலரை ஆண்டு காலப்பகுதியில் நாட்டிற்கு நல்ல விடயங்களைச் செய்திருக்கலாம். அதற்கான சிறந்த அரசியல் சூழல் அப்போதிருந்தது. இனப்பிரச்சினைத் தீர்வுக்காக ஆரம்ப கட்ட நடவடிக்கைகளைக்கூட எடுக்கமுடியாததொரு நிலையே காணப்பட்டது. பொருளாதார ரீதியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால் இவர்கள் நாட்டில் புதிதாக பல பிரச்சினைகளை உருவாக்கினார்கள். வந்தது நல்லாட்சி என்று ஆனால் கொடுத்தது என்னவோ கெட்ட ஆட்சியைத்தான்!  

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அவ்வாறானதொரு சூழ்நிலைக்கே நாம் மீண்டும் செல்வதா அல்லது இந்த அரசாங்கத்தை ஆதரித்து நமது இருப்பை தக்கவைத்துக்கொள்வதா என்பதை சிறுபான்மை மக்களாகிய நாமே தீர்மானிக்க வேண்டும். சிறுபான்மை மக்களாகிய எமக்கே பிரச்சினைகள் அதிகம். வடக்கு கிழக்கு பிரச்சினைகள் இதுவரை தீர்ந்தபாடில்லை. சிறுபான்மை மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது எனது நோக்கம்.  

இப்போது நாம் வேறொரு அரசாங்கத்தையோ அல்லது வேறு ஒரு தலைமையையோ ஆதரிப்பதில் எவ்வித நன்மையும் கிடைக்கப்போவதில்லை. கடந்தகால ஆட்சி அனுபவங்களைப் பார்த்தால் நாட்டை ஆண்ட அரசாங்கங்கள் தீர்மானம் எடுக்கக்கூடிய தலைவர்கள்தான் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்த்திருக்கிறார்கள். நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதிபதியான ஜே.ஆர். ஜயவர்தன மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்தார். அவர் நினைத்திருந்தால் தமிழ் மக்களின் பிரச்சினையின் ஆரம்ப காலத்திலேயே அதனைத் தீர்த்திருக்கலாம். அதன் பின்னர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இனப்பிரச்சினை தீர்வுக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதுபோல மஹிந்த ராஜபக்ஷவும் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் மிகவும் அக்கறையுடன் செயற்பட்டார். இதில் அதிகளவிலான மக்கள் பணிகளைச் செய்து பெயரெடுத்தவர் மஹிந்த ராஜபக்ஷ. அந்நேரம் ஒரு பாதுகாப்பு செயலாளராக இருந்து பல வேலைத்திட்டங்களைச் செய்து மக்கள் மத்தியில் தன் பெயரை நிலைநிறுத்தியவர் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ஷ. ஒரு செயலாளராக, சிறந்த நிர்வாகியாக இருந்தவர். தற்போது ஜனாதிபதியாக வந்திருக்கிறார். ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் இது முதல் தடவையாக நடந்திருக்கிறது. நாம் இதனை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.  

சிறுபான்மையினராகிய நாம் எல்லாத்துறைகளிலும் பின்தங்கியிருக்கிறோம். அரசியல், சமூக அபிவிருத்தி, கல்வி வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு, சுகாதாரம் இவை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டால் நாம் பின்தங்கியவர்களாகவே இருக்கிறோம். ஏனைய சமூகத்தினருடன் நாமும் சமமாக வருவதற்கு சரி அதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும். அதற்கு நமது பங்களிப்பு இந்த அரசாங்கத்தில் இருக்க வேண்டும். பங்களிப்பு இல்லாமல் கோரிக்கைகளை மட்டும் முன்வைத்தால் நடக்கப்போவது எதுவுமில்லை. நடைமுறையில் மக்கள் குறைகளைச் சொல்லலாம். தேசிய கீதம் தமிழில் பாடுவது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற பல பிரச்சினைகளைப் பற்றியே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதனையே காலங்காலமாக சொல்லிச்சொல்லி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது. நமது மக்களின் பிரச்சினைகள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன.  

ஜே.ஆர். ஜயவர்தன சர்வ அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதி முறையை கொண்டுவந்தார். ஆனால் அவர்தான் இனவாதத்தையும் தூண்டினார். 1983 இனக்கலவரத்திற்கு அவரும் ஒரு காரணகர்த்தாவாக இருந்தார். அதனைப் புரிந்துகொள்ளாத சிறுபான்மை மக்கள்தான் இன்னும் ஐ.தே.கட்சியை ஆதரிக்கின்றனர். அன்று புலிகளுக்கிடையே பிளவு ஏற்பட்டிருக்கவில்லை என்றால் இன்று நாட்டின் நிலைமை மிக மோசமாக இருந்திருக்கும். அந்தப் பிரிவினைக்கு காரணமாக இருந்தவர் ரணில் விக்கிரமசிங்கதான்.  

அண்மையில் நான் மாவை சேனாதிராஜா எம்.பியை சந்தித்தபோது, எல்லோரும் பெரும்பான்மை மக்களைத்தான் குறை கூறுகிறார்கள். அந்த வாக்குகளைப் பெறுவதில் நீங்கள் உங்களது சக்தியை காட்டுங்கள். இந்த நேரத்தில் அனைவரும் ஒன்று சேருங்கள். ஏனைய பகுதிகளிலும் போட்டியிட்டாலும் பரவாயில்லை. அது ஒன்றும் தவறில்லை.

ஐயாயிரம், பத்தாயிரம் என பல பகுதிகளிலும் வாக்குகளைப் பெற்றாலே ஒருவரைத் தெரிவு செய்யக்கூடியதாக இருக்கும். இவ்விடயத்தில் தரம் முக்கியமில்லை.

எண்ணிக்கைதான் முக்கியம். அதைக் காட்டினால் அரசாங்கம் யோசிக்கும். இதனை விட்டுவிட்டு பிரித்து பிரித்து பேசிக்கொண்டும் மற்றவர்களை குறைகூறிக்கொண்டும் எவ்வளவு காலம் இருக்கப்போகிறீர்கள்? ஒன்றுபடுங்கள். நீங்கள் மலையகம், கொழும்பு பகுதிகளில் போட்டியிடுவதில் தவறேதும் கிடையாது. பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அப்போது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இலகுவாக இருக்கும். மலையகத்திலுள்ள தலைமைகளுக்கும் அதனையே கூறுகிறேன் என்று அவரிடம் கூறினேன்.  

மலையகத்தில் பிரதான கட்சிகள் பெரும்பான்மை அரசியல் கட்சிகளைச் சார்ந்தே இருக்கின்றன. இதுபற்றி உங்கள் கருத்தென்ன?  

ஐ.தே.கவின் பக்கம் ஒரு சாராரும் சுதந்திரக்கட்சியின் பக்கம் ஒரு சாராருமாக இணைந்திருக்கிறார்கள். உண்மையில் இப்போது நாம் அரசியல் ரீதியாக பிரிந்திருக்கிறோம். ஒருசில நேரங்களில் இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு சந்தர்ப்ப சூழ்நிலை இல்லாமல் போனதற்கான காரணம் நாம் ஒரே பக்கமாக இருந்தமையே. அதனை நன்கு பயன்படுத்திக்கொண்ட கட்சிகளும் இருக்கின்றன. யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி நமது சக்தியைக் காட்டி நமது மக்களுக்குள்ள குறைபாடுகளை இனங்கண்டு வேலை செய்ய வேண்டும். வெறுமனே தனது சுயநலத்துக்காகவும் தமது இருப்புக்காகவும் இல்லாமல் நமது மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அதனை வாதாடி பெற்றுக்கொள்வதே முக்கியமே தவிர, அரசாங்கம் செய்யவில்லை என்று சொல்வதில் எவ்வித அர்த்தமும் இல்லை.  

தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு விடயத்தில் உங்களது நிலைப்பாடென்ன...?  

அன்று ஆயிரம் ரூபா வழங்குவதாக மேடையில் கூறினார்கள். ஆனால் நடைமுறையில் எப்படி அதனைச் செய்வது? அந்த ஆயிரம் ரூபா வழங்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? நமது பந்தை கம்பனியின் பக்கமாக போடவேண்டும். ஆயிரம் எப்படி கொடுக்கலாம் என்பதை முதலாளிமார் சம்மேளனத்திடமே ஆலோசனைகளை கேட்டிருக்க வேண்டும்.

அப்போது கம்பனிகள் அதற்கான பரிந்துரைகளை சொல்லலாம். அதனை அரசாங்கத்துடன் பேசி அரசாங்கத்தின் உதவியையும் பெற்று மக்களுக்கு சம்பளம் வாங்கிக் கொடுக்க வேண்டும். இந்தமுறை கூட அரசாங்கம் ஆயிரம் ரூபா வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஆனால் கம்பனிகள் இன்னும் அதனை ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை. இது பிரச்சினைகளை மேலும் வளர்க்குமே தவிர, தீர்வதற்கு வழிவகுக்காது.  

இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணம் அனுபவமில்லாத அரசியல்வாதிகளே. மேடையில் எதனையும் பேசலாம். அவை அனைத்தையும் நடைமுறைப்படுத்த முடியுமா? என்பதை சிந்திக்க வேண்டும்.

முள்ளில் உள்ள சேலையை கிழியாமல் எடுக்க வேண்டும் என்பது போலவே இந்த சம்பள விடயத்தையும் அணுக வேண்டும். இழுப்பதென்றால் இழுத்து விடலாம் அதனால் சேலைக்கே பாதிப்பு. இவ்விடயத்தை நான் பிரதமரிடம் எடுத்துக்கூறி ஜனாதிபதித் தேர்தலின்போது வாக்குறுதியளித்தீர்கள். அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுங்கள் என சொன்னேன். அவர்களும் இப்போது அறிவித்து விட்டார்கள். அதனை எப்படி வழங்கப்போகிறார்கள் என்பதை விரைவாகவே தீர்மானிக்க வேண்டும்.   

(அடுத்த வாரமும் பேசுவார்)

சந்திப்பு : பி. வீரசிங்கம்

Comments