காலம் கனிந்தபோது | தினகரன் வாரமஞ்சரி

காலம் கனிந்தபோது

தபாற்காரனின் சமிஞ்சையைக் கேட்டு வெளியில் வந்த நித்தியா தந்தி என்று அறிந்து கொண்டு மனம் குழம்பிப்போனாள். “என்னங்க என்னங்க... சுருக்கா பிரிச்சி பாருங்களே...” என்று அவசரப்படுத்தினாள். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும், என்பார்களே... அதைப்போலவே சேகருக்கு தான் அறியாமலேயே அவன் அங்கங்கள் துடித்தன. ஏனெனில் அது அவன் ஊரிலுள்ள தபால் நிலையத்திலிருந்து அனுப்பட்டிருந்த செய்தி. இதயம் துடிதுடிக்க தந்தியை பிரித்துபார்த்த அவன், அப்படியே சாய்வு நாற்காலியில் சாய்ந்தான். நித்தியா ஆச்சரியம் மேலெழ அவன் கையிலிருந்த தந்தியை வாங்கி வாசித்துப் பார்த்தாள். அதில் “அப்பாவுக்கு கடுமையான வருத்தம், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் வசந்தி” என எழுதப்பட்டிருந்தது. விஷயத்தை சேகருக்கு இளைய சகோதரி அனுப்பியிருந்தாள்.  

நித்தியாவுக்கு தலை சுற்றுவது போலிருந்தது. அவளும் மயங்கிவிட்டால் என்னவாகும். ஒருவாறு தைரியத்தை வரவழைத்து தன்னை சுதாகரித்துக் கொண்டு தன் கணவனை அணைத்து தாங்கிப்பிடித்து கட்டிலில் கொண்டு போய் கிடத்தி தண்ணீர் பருகக் கொடுத்தாள். சிறு இடைவேளைக்குப்பின் சேகர் சுய நினைவுக்கு மீண்டான். கணவனின் நிலையறிந்து நித்தியா அமைதியாகவே இருந்தாள். அவன் கட்டிலை விட்டெழுந்து கதிரையில் அமர்ந்தான். நித்தியாவை தன்னருகில் அழைத்தான். “இப்போ என்ன செய்யலாம் நித்தியா... எனக்கு மூளை குழம்பிப்போய் இருக்கு, நீதான் இதற்கு வழி சொல்லனும்”... என்றான். “அத்தான் உடனே புறப்பட்டுப் போங்க.... போய் ஆகவேண்டிய காரியங்களை பாருங்க....” என்றாள் நித்தியா பெருமனதுடன். அவன் அவளின் வார்த்தைகளைக் கேட்டு நெகிழ்ந்து போனான். “நீ சொல்றது சரிதான்... ஆனா உன்னதனியா விட்டுவிட்டு.... அதுவும் நிறைமாதக் கர்ப்பிணியாகவேற இருக்க, உன்ன விட்டுட்டு எப்படியம்மா.... ஒரு காலம் முடியாது! முடியவே முடியாது... கட்டாயம் உன்னையும் கூட்டிக்கொண்டுதான் போகவேண்டும். நீயும் புறப்படு” என்றான் சேகர். அவளுக்கு தூக்கிவாரிப்போட்டது. “என்ன அத்தான் இப்படி சொல்றீங்க... மாமா இன்னைக்கு இந்த நிலைக்கு ஆளாகினதே என்னாலத்தானே. இந்த நிலையில் நானும் அவர் முன்னால போய் நின்னா விபரீதம் ஆகிடுங்க... வேணா அத்தான், என் மாமா இன்னும் கொஞ்ச நாள் உயிரோடு வாழனும்.... அத்தோடு நம்ம புள்ளைக்கு தாத்தா யாருன்னு தெரியனும்... என்னைக்காவது ஒரு நாள் அவர் வாயாலே இந்த மருமகள வரும்படி அழைக்கணும். இதைத்தான் நான் தினமும் அம்பாளிடம் வேண்டிப் பிரார்த்தித்து வருகிறேன். என் பிரார்த்தனை நிச்சயம் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்குண்டு... அதுவரை பொறுத்து இருக்க வேண்டும்... தயவுசெய்து நீங்க மட்டும் போயிட்டு வாருங்க....” என்றாள் நித்தியா. ஆனால் அவனுக்கோ அவளை தனியே விட்டுவிட்டுப் போக மனம் இல்லை. தான் நித்தியாவை திருமணம் முடிந்ததிலிருந்து இதுவரை ஒரு நாள் கூட விட்டுப் பிரிந்ததில்லை.  

இப்போது எப்படி பிரிந்து, அதுவும் தன்னந்தனியாக விட்டுவிட்டுப் போவது? அப்படியே அவளையும் கூட்டிக்கொண்டு போகும் பட்சத்தில் அவள் சொல்வது போல ஏதாவது பாரதூரமான விபரீதம் விளைந்து விட்டால்? அதுவும் அப்பா சுகவீனமுற்றிருக்கும் நிலையில்: அம்மா, அக்கா இருவருமே கொதித்துப் போய்தான் இருப்பார்கள். அப்படியாயின் போகாமல் இருந்து விடுவோமா? அப்படியும் இருக்க முடியாதே.... தன்னை அப்பா வெறுத்து ஒதுக்கினாலும் தான் வெறுத்து ஒதுக்குவது? அன்று அப்படி செய்த அப்பா இன்றும் அப்படிச்செய்யமாட்டார்... எப்படியும் அப்பாவைப்போய் பார்த்தே ஆக வேண்டும். இந்த இக்கட்டான நிலையில் அம்மாவும் அக்காவும் என்ன பாடு படுவார்களோ.... கடவுளே... என்று மனதுக்குள்ளே பலவாறு குழப்பமாக இருந்தான். மீண்டும் நித்தியாவின் வார்த்தைகளால் அவன் இதிலிருந்து விடுபட்டான். ‘என்ன அத்தான்... நீங்க கொஞ்சம் கூட யோசிக்காமல் உங்க மனசென்ன கல்மனசா... புறப்படுங்க ம்...ம்... எழும்புங்க... எழும்புங்க...” என்று அவசரப்படுத்தினாள். அதற்கு மேலும் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. “நான் பயண ஏற்பாடுகளை தயார் செய்யுறேன்... நீங்க உடனே வேகமாக போய் பணத்த எடுத்துக்கொண்டு திரும்புங்க...” என்று அவனை அனுப்பிவைத்தாள். அவன் வங்கியிலிருந்து திரும்பியபோது நித்தியா பயணப்பொதியுடன் தயாராய் நின்றாள். அவளைப் பார்த்த அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. 

“தன்னை வெறுத்து ஒதுக்கி வீட்டை விட்டே துரத்தியவரைப்போய் பார்த்து வரும்படி இப்படி துடிதுடிக்கிறாளே.... உண்மையிலே இவள் பெண்வர்க்கத்திலே தெய்வீகம் பொருந்தியவள் தான்” என்று தன் மனதுக்குள்ளே எண்ணிக் கொண்டான். நித்தியாவை பார்க்க அவனுக்கு அழுகை பீரிட்டு வந்தது. இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அடக்கிக் கொண்டான். ஒரு விநாடியில் தன்னை விடுவித்துக்கொண்டு பயணப்பொதியை அவன்  கையில் எடுத்துக் கொடுத்தாள். பக்கத்து வீட்டுக்காரர்களிடம் அவளை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு வீதியில் கால்பதித்தான் சேகர். கால்கள் நடக்க மறுத்தன. மனதும் போக இடம் கொடுக்க சிரமப்பட்டது. தன்னை திடப்படுத்திக் கொண்டு நடக்க முற்பட்டான்.  

பஸ் தரிப்பிடத்தை அடைந்து தலைநகரிலிருந்து மலையகத்திற்கு புறப்படும் அந்த பஸ்ஸில் ஜன்னல் ஓரமாக ஒரு ஆசனத்தில் அமர்ந்து கொண்டான். சற்று நேரத்தில் பஸ் புறப்பட்டது. இளந்தென்றல் அவன் மேனியை தீண்ட இதமாக இருந்தால், அவன் மனம் வேறு பக்கம் சுழலத்தொடங்கியது. பல வருடங்களுக்கு பின், தான் பிறந்த மண்ணில் கால் பதிக்கப்போவதை எண்ணி மனம் ஆனந்தக் கூத்தாடியது. எவ்வளவு தான் தலைநகரில் அனைத்து வசதிகளோடு வாழ்ந்தாலும். மலையகத்து வாழ்க்கை ஒரு தனி இன்பம் தான். எங்கு பார்த்தாலும் தேயிலைச்செடிகள் பச்சைப்பசேலன அழகாக காட்சி தரும். சில்லென்று குளிர்ச்சிதரும் நீர் வீழ்ச்சிகள், அதில் தலையை நன்றாகபிடித்து நீராடினால் அப்படியொரு சுகம் கிடைக்கும். இன்னும் பல பல அற்புதங்கள் அங்கே... சொல்லில் அடங்காதவை. ஒரு காலத்தில் அவனும் இவை அனைத்தையும் அனுபவித்தவன் தான்.  

அவனுக்கு குறுகிய காலத்திலேயே நகர வாழ்க்கை வெறுத்து போய் விட்டது. இயந்திரமாக ஓடித்திரியும் மனிதர் கூட்டங்கள். அவனுக்கு எப்போதுமே தான் பிறந்த மண்ணை விட்டுப்போக எண்ணம் இருந்ததே இல்லை. இருப்பினும் பிரிந்து போக நிர்ப்பந்திக்கப்பட்டான். தலைநகரில் வீடு அல்லது அலுவலகம், இது தான் வாழ்க்கையா என சலிப்பான எண்ணம் கூட உண்டானதுண்டு. வேறு வழியின்றி அவனும் அதற்காக பழகிப்போக வேண்டியிருந்தது.  

அவனுக்கு நித்தியா காட்டும் அன்பும் ஆதரவும் பண்பும் பரிவும் மட்டுமே மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தந்தது. இப்போது அவனுக்கு அவனது ஆரம்ப வாழ்க்கை நினைவுக்கு வந்தது. அடுத்தடுத்து பெண் பிள்ளைகளைப் பெற்று சலிப்படைந்த அவன் பெற்றோர் ஆண் பிள்ளையாக இவன் அவதரித்த போது ஆனந்தக் கூத்தாடினார்கள் என்று அவன் கேள்விப்பட்டிருந்தான்.  

அவன் சுதந்திர வானில் சிட்டுக்குருவியாய் பறந்து திரிந்தான். வெண்புறாக்களாய் பள்ளிப்பராயத்தில் காலடி வைத்த அவனுக்கு எதுவுமே அர்த்தத்துடன் புரிய ஆரம்பித்திருக்கவில்லை. பள்ளிப்படிப்பென்று பாடப்புத்தகங்களை மட்டும் சுமந்து திரியாது பலவித துறைகளிலும் ஈடுபாடு காட்டினான். 

பாடசாலையில் படிப்பா, விளையாட்டா, கலைத்துறையா எதிலுமே வித்தகனாய்த் திகழ்ந்தான். ஆரம்பகாலம் போல் தன் எதிர்காலமும் இன்பகரமானதாய்த்தான் அமையும் என எதிர்பார்த்திருந்தான். வாழ்க்கை என்பது ஒரு சக்கரம்தான். இன்பத்துக்கும் பின் துன்பம் என சுழலாமலா இருக்கும். துன்ப சுழற்சியின் ஆரம்ப கட்டமாக அவன் வீட்டில் வறுமை வாட்டத்தொடங்கியது. 

வறுமையின் வாட்டத்தைத் தாங்கிக் கொள்ளச் சிரமப்பட்டான். இருந்தாலும் பல்கலைக்கடித்துக் கொண்டு உயர்தரக் கல்வியையும் ஒருவாறு பூர்த்தி செய்து கொண்டான். வீட்டுக் கஷ்டம் காரணமாக படிப்பை தொடர முடியாது போனது. 

இவ்வாறான ஒரு நிலையில் தான் அவன் தலைநரில் பிரபல நிறுவனமொன்றிலே குமாஸ்தாவாக தொழிலொன்று கிடைத்தது. அதே நிறுவனத்தில் தான் நித்தியாவையும் சந்திக்க நேர்ந்தது. அங்குதான் அவர்கள் இருவரின் காதலும் மலர்ந்து கல்யாணத்தில் முடிந்தேறியது. 

குடும்பத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் இருவரும் ஒன்று சேர்ந்து தலைநகரிலே குடித்தனம் நடத்தவும் தொடங்கினார்கள். 

சேகரின் பெற்றோர் அவனை வெறுத்து ஒதுக்கினர். அவனோ இவை எதற்குமே சளைக்காது தன்போக்கிலேயே போய்க்கொண்டிருந்தான். காலம் தான் பாட்டில் ஓடியது. நித்தியா தாயாகப் போகின்றாள்.

“தம்பி... தம்பி...” என்று அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒருவர் அவன் மேலில் தட்டிய போதுதான் பசுமை நிறைந்த பழைய நினைவுகளிலிருந்து விடுபட்டு மீண்டும் கண் விழித்தான்.” ‘ஓ... நான் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டதா...’ என்று ஒரு சோகச்சுமையுடன் பஸ்ஸை விட்டு இறங்கினான். பயணப்பொதியை தோளில் போட்டுக்கொண்டு அந்த ஒற்றைவழிப்பாதை வழியாக ஓட்டமும் நடையுமாக போய்க்கொண்டிருந்தான். சுமார் இரண்டு வருடங்களுக்குப்பின் இங்கு கால் வைப்பதால் அவனுக்கு ஒருபுறம் புதுமையாகவும் இருந்தது. சிறுமி ஒருத்தி ஓடி வந்தாள். ‘யாரது சேகர் மாமாவா’ என்று தன்னை அடையாளம் கண்டு கொண்டு வீட்டினுள் போய் கதவைத் திறந்து விட்டாள். அவன் பதற்றத்துடன் உள்ளே நுழைந்தான். வீடு யாருமே இல்லாதது போல் வெறுச்சோடிக்கிடந்தது. உள்ளே கட்டிலில் யாரோ சுருண்டு படுத்து இருப்பது போல் தெரிந்தது. “ஆச்சி... ஆச்சி... மாமா வந்திருக்காரு எழுந்திருங்க” எனறு பக்கத்து வீட்டு சிறுமியின் குரல் கேட்டு கண்விழித்துப் பார்த்த அவன் அவன் தாய் கட்டிலை விட்டு தடுமாறியபடி எழுந்து கூர்ந்து பார்த்தாள். “அம்மா... அம்மா... நான்தான் அம்மா” என்றவனின் குரல் தடுமாறியது. அம்மாவுக்கு பேசுவதற்கு நா எழுந்தாலும் வார்த்தைகள் வெளி வராமல் வாய்தடுமாறியது. கண்கள் இரண்டிலிருந்தும் கண்ணீர் மடைதிறந்த வெள்ளம் போல் பீரிட்டது.  

அப்படியே அவனை அணைத்து கொண்டான். அவன் அம்மாவை பார்க்க அவனுக்கே பரிதாபமாக இருந்தது. ‘தம்பி எப்படிப்பா இருக்க?” எனக்கொண்ணும் குறைவில்லம்மா, அப்பாவுக்கு எண்ணாச்சிம்மா... அக்கா எங்கம்மா” என்றான். அவனை கூர்ந்து பார்த்தவாறு நீ மட்டுமென்ன, ரொம்பதான் மாறிப்பொய்ட்ட, நான்தான் எப்போதுமே நோயாளியாச்சே... உங்க அப்பா நல்லாதான் இருந்தாரு... இப்போது அவருக்கும் அடிக்கடி சுகமில்லாம போயிருது. இந்த முறை ரொம்ப வருத்தமாச்சு. ஆஸ்பத்திரியில் சின்னக்காதான் சேத்திருக்கா அதுதான் உனக்கும் தெரிவிச்சிருக்கா போல” என்று பெருமூச்சோடு கூறினாள். அவனுக்கு கேட்க கேட்க அழுகை வந்து விடும் போலிருந்தது. “இப்போது அக்கா எங்கம்மா” என்றான் “அவதான் உங்க அப்பாவ ஓடி ஓடி பார்த்துக்கொள்ளுறா. இப்ப கூட அப்பாவ பார்க்க அக்கா தான் போயிருக்கா” என்றாள் அம்மா. அவன் அம்மாவை அப்படியே கட்டிலில் படுக்க வைத்து போர்வையால் போர்த்தி விட்டு உடனே புறப்பட்டு வைத்தியசாலை நோக்கி விரைந்தான்.  

அக்கா வசந்தி ஓடி வந்து அவனை கட்டி அணைத்து முத்தமிட்டாள். அப்பாவை பற்றி விசாரித்தான். அப்பாவுக்கு தற்போது ஓரளவு குணம் என்றும் அதிர்ச்சியான விடயங்களை கூறக்கூடாது என்றும் இப்போதைய நிலையில் நீ அப்பாவை சந்திப்பது அவ்வளவு நல்லதல்ல என்றும் அவள் கூறினாள்.  

அக்காவைக்  கூட்டிக்கொண்டு டொக்டரைச் சந்திக்கச் சென்றான். “டொக்டர் நான் அப்பாவோட கதைக்கா விட்டாலும் அவரை எப்படியாவது பார்க்கவாவது வேணும், ப்ளீஸ், எனக்கு இதற்காவது ஒரு சான்ஸ் தாங்களேன்” என்று இறைஞ்சினான். டாக்டர் அவனின் பரிதாப பாச உணர்வைக்கண்டு அவனுக்கு அனுமதி வழங்கினார். “தேங்ஸ் டொக்டர், வெரி வெரி தேங்ஸ்’, என்றவாறு அப்பாவின் கட்டிலருகில் ஓடினான். அங்கே அவரை ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். அப்பாவின் நிலை பார்க்க அவனுக்கு என்னவோ போலிருந்தது. எல்லாம் தன்னால் வந்தகதி தானே என்று அவன் தன்னையே நெரிந்து கொண்டான். அதற்கிடையில் தாதி ‘உங்களுக்கு தரப்பட்ட நேரம் முடிந்தது’ என்று நினைவுப்படுத்த அவன் அப்படியே அப்பாவின் பாதங்களை தொட்டு வணங்கிவிட்டு வெளியே வந்தான். பின் அக்காவையும் கூட்டிக்கொண்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பினான். 

சேகரன் அம்மாவுக்கு அக்காவுக்கு கடந்த காலங்களில் நடந்த வியங்களை எல்லாம் கூறினார். நித்தியா தாய்மை அடைந்திருப்பதையும் கூறினான். அம்மாவும் அக்காவும் நெகிழ்ந்து போனார்கள். நித்தியா மீது தங்களுக்கு தற்போது வெறுப்பேதும் இல்லை என்றும் அப்பாவுக்கு இன்னும் இவ்விடயத்தில் பூரண திருப்தி இல்லை என்றும் ​சேகரின் மீது வெறுப்பு இல்லாவிடினும் அவன் செய்கையால் அவர் இன்னும் கூட கோபமாக இருப்பதாகவும் அம்மா கூறினாள். 

“தம்பி நீ ஒண்ணுக்கும் கவலைப்படாத. இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாய் போயிடும்” என்றாள் வசந்தி. எவ்வளவோ நாட்களுக்கு பின் இன்று அவ்வீட்டில் மகிழ்ச்சி நிலவுவதாக அம்மாவுக்குத் தோன்றியது. அத்தோடு தனது நண்பன் ஒருவனை அக்காவுக்கு மாப்பிள்ளையாக தெரிவு செய்திருப்பதாகவும், கல்யாண ஏற்பாட்டை முழுவதுமாக தானே பொறுப்பேற்றிருப்பதாகவும் அப்பாவின் அனுமதி கிடைத்தால் உடனே விஷயத்தில் இறங்குவதாகவும் அவன் கூறினான். 

வசந்தி இதைக்கேட்டு நாணத்தால் கன்னம் சிவந்தாள். அவன் அதையும் ஒரு கண்ணால் பார்த்துக் கொண்டான். இதையெல்லாம் கேட்க கேட்க அம்மாவுக்கு புதுத்தெம்பே வந்துவிடும் போலிருந்தது. தாம் தம் மகனை வெறுத்து ஒதுக்கி விட்டாலும், அவன் இவ்வளவு பொறுப்புகளை சுமக்க எண்ணியிருக்கானே என்று அவள் பூரிப்படைந்தாள். வசந்தி அதற்கு மேலும் அங்கு நிற்காது வெளியில் ஓடிவிட்டள். “தம்பி, அப்பா குணமாகி வந்துடன் இவ்விடயங்களையெல்லாம் கூறி அவரை சமாதானப்படுத்தி அவர் கையாலேயே கடிதம் எழுதச்சொல்கிறேன். நீ இப்போ பெரியக்கா வீட்டுக்கு போய் அக்காவிடமும் அத்தானிடமும் இவ்விடயத்தை கூறு. அவர்களுடன் கலந்தாலோசித்து எல்லாவற்றையும் செய்யப்பாரு” என்றாள் அம்மா. “அம்மா... அக்காவும் அத்தானும் என்னைப்பற்றி என்ன நினைக்கபோகிறார்களோ...?” என்றான். அதை கேட்டவாறு உள்ளே இருந்து ஓடி வந்த வசந்தி “அதைப்பற்றி கவலைப்படாதே, அக்கா உனக்காகதான் ஆவலாய் பார்த்துக்கொண்டு இருப்பாள்... அத்தானும் ஒன்றும் சொல்லமாட்டார்... நீ தாய் மாமனல்ல... என்ன கைவிட்டுவிடுவார்களா... என்ன” என்றாள். “அப்போது நீயும் வாயேன்” என்றான் அவன். “இதோ ஒரு நிமிஷம்” என்றவள் பயணப்பட்ட தொடங்கினாள். அக்காவின் ஆனந்தத்தை யெண்ணி பெரிதும் மகிழ்ந்தான். 

அன்று மாலையில் அவர்கள் அக்கா வீட்டை அடைந்தார்கள். அக்காவும் அத்தானும் அவர்களை அன்புடன் வரவேற்றார்கள்.

அக்கா குழந்தையை அவனிடம் நீட்டினாள். அந்த அழகிய ஆண் குழந்தையை அவன் வாஞ்சையுடன் வாங்கி கொஞ்சினான். பின்பு எல்லோரும் அழைத்து விடயங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். இவனின் முயற்சியை எண்ணி அவர்கள் பாராட்டினார்கள். அப்பா வைத்தியசாலையிலிருந்து நலமாக வந்தவுடன் இதைப்பற்றி முடிவு எடுப்பதாக கூறினார்கள். அன்று அவனுக்கு பலமான விருந்துபசாரம் கிடைத்தது. மறுநாள் அங்கிருந்து விடைப்பெற்ற சின்னக்காவை வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டு, அம்மாவிடம் அனைத்து விடயங்களையும் கூறிவிட்டு, அன்று மாலையே மீண்டும் கொழும்புக்கு பயணப்பட்டான்.   

பசறையூர் 
ஏ.எஸ். பாலச்சந்திரன்

Comments