புதிய இராஜதந்திர வழிமுறைகளை அரசு கையாள வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

புதிய இராஜதந்திர வழிமுறைகளை அரசு கையாள வேண்டும்

அரசு என்பது ஒரு நாட்டில் அதியுயர் பொறுப்புக்களை வழியுரிமை அடிப்படையில் பொறுப்பேற்க வேண்டிய ஒன்றாகும். ஆட்கள் மாறினார்கள், ஆட்சிகள் மாறின என்பன அந்த நிலைமையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்கிறார் தமிழரசுக்கட்சியின் செயலாளர் சட்டத்தரணி கி.துரை ராஜசிங்கம்.  அவர் வாரமஞ்சரிக்கு வழங்கிய செவ்வி...

கேள்வி: இப்போது நமது நாட்டின் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவை அமெரிக்கா தனது நாட்டிற்கு வரக் கூடாதென தடை விதித்துள்ளது. இதனை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?  

நடந்து முடிந்த போரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவும் அவருடைய குடும்பமும் அமெரிக்கா செல்வதற்கு அவருக்கான நுழைவு அனுமதியை வழங்கவில்லை. இவ்விடயம் தொடர்பிலே இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, தன்னுடைய அதிருப்தியை அமெரிக்கத் தூதரகத்திற்குத் தெரிவித்திருக்கின்றார். தென்பகுதி அரசியல்வாதிகள் தொடக்கம் பிரதான பௌத்த பிக்குகள் வரை தங்கள் அதிருப்தியைத் தெரிவித்திருக்கின்றார்கள்.  

2015ல் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இலங்கை அரசு இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் அமையத்தின் 30(1) பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியது. இதிலே குறிப்பிட்ட விடயங்களை நிறைவேற்றவில்லை என்பதன் காரணமாக 34(1) தீர்மானத்தின் அடிப்படையில் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. குறித்த இந்தத் தீர்மானக் காலங்களில் இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் இலங்கை தொடர்பில் ஒரு மென்போக்கையே கடைப்பிடித்து வந்தது.  

ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் இணை அனுசரணை நிலையிலே இருந்து விலகப் போவதாக அரசு அறிவித்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் தான் சவேந்திர சில்வா மீதான பயணத்தடையை அமெரிக்கா அறிவித்தது.  

இலங்கையில் தற்போது நடைபெற்றுள்ள ஆட்சி மாற்றம் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. அரசு என்பது ஒரு நாட்டில் அதியுயர் பொறுப்புக்களை வழியுரிமை அடிப்படையில் பொறுப்பேற்க வேண்டிய ஒன்றாகும். ஆட்கள் மாறினார்கள், ஆட்சிகள் மாறின என்பன அந்த நிலைமையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இதனை அரசு புரிந்து கொண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைத்திற்கு முன்னைய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

47 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானத்தில் உள்ள விடயங்களை நிறைவேற்ற வேண்டியது இலங்கை அரசின் தவிர்க்க முடியாத கடப்பாடாகும். இணை அனுசரணை வழங்கியமை என்பது ஐநா மனித உரிமை ஆணையத்தின் இணக்கப்பாட்டுடன் பிரேரணையில் குறிப்பிட்ட விடயங்களை நிறைவேற்றுவதற்குக் கொடுக்கப்பட்ட உத்தரவாதம் மட்டுமே ஆகும்.  

இவ்வித இணக்கப்பாடு இல்லாத சந்தர்ப்பத்தில் பிரரேரணை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது தொடர்பிலே ஐநா மனித உரிமைகள் ஆணையம் தேவையான பொறிமுறைகளைக் கையாளும். அவற்றை நிறைவேற்ற மாட்டோம் என்று இலங்கை அரசு அடம்பிடிக்குமானால் அதை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது ஐநா மனித உரிமை ஆணையத்திற்குத் தெரியும். எனவே நாட்டின் நலன் கருதி புதிய இராஜதந்திர வழிமுறைகளைக் கையாள வேண்டும்.  

லெப்டினென் ஜெனரல் சவேந்திர சில்வா மீதான அமெரிக்காவின் நடவடிக்கை இலங்கை தொடர்பான ஐநா மனித உரிமை ஆணையத்தின் பிரேரணைகளை நிறைவேற்றுவது தொடர்பில் குறித்த ஆணையம் எதிர்காலத்தில் எவ்வாறு நடந்து கொள்ளப் போகின்றது என்பதற்கான ஒரு கட்டியம் கூறும் நிகழ்வேயாகும்.  

சர்வதேச சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ”தனது நாட்டு மக்களை பாதுகாக்கின்ற பொறுப்பினின்றும் ஒரு நாடு மீறக்கூடாது” என்ற உறுப்புரையை அரசு மீறியதன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.  

அண்மையில் மனித உரிமை ஆணையத்தின் செயலாளர் மிச்சேல் பச்லெட் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ள முன்னோடி அறிக்கையில் பல விடயங்களைக் குறிப்பிட்டிருக்கின்றார். நீதி, உண்மையான பொறுப்புக் கூறல், உண்மையைக் கண்டறிதல், உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சட்ட மூலங்களை உருவாக்குதல்,சித்திரவதைக்கு எதிரான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல்,பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், பாதிக்கப்பட்டோருக்கு நம்பிக்கையூட்டும் வகையில் உண்மையைக் கண்டறிதல், இது தொடர்பில் விசேட நீதிப் பொறிமுறையைக் கையாளுதல் என்பன பரிந்துரைக்கப்பட்ட விடயங்களில் முக்கியமானவையாகும்.  

மிச்சேல் பச்லெட் அசவர்களுடைய அறிக்கையில் நாட்டின் உயர் பீடத்திலுள்ளோர் பொது நோக்கின்றிச் செயற்படுவது கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.  

தற்போது இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற விடயங்கள் முக்கியமான எல்லாத் துறைகளிலும் இராணுவத் தன்மை கொண்ட அம்சங்களைப் புகுத்துவதாகவும், விடையளிக்கப்பட வேண்டிய போர் தொடர்பான பல்வேறு விடயங்களையும் கைகழுவி விடும் மனப்பாங்குடன் செயற்படுவதாகவும் அமைகின்றன.  

எனவே இலங்கை அரசு வரப் போகின்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ளுவதை இலக்காகக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் கடைப்பிடித்த சிங்கள பௌத்த ஆதிக்கவாதம் என்கின்ற விடயத்தின் அடிப்படையில் செயற்பட்டால் நாட்டுக்கு பல்வேறு விதத்திலுமான பாதகங்கள் ஏற்படும்.  

எனவே வீராப்புப் பேசாமல் நாட்டின் நலனை அடிப்படையாகக் கொண்டு பொறுப்புக் கூறுதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், அரசியல் சீர்திருத்தத்தைச் செய்தல் ஆகிய புத்திசாலித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதே நாட்டுக்கு நலன் பயக்கும் நடைமுறையாக அமையும். அரசு இதனை தீர்க்கமாக யோசித்து ஆழம் அறிந்து காலைவிட வேண்டும். அரசினது ஒவ்வொரு தீர்மானமும் நாட்டின் நலனை மையப்படுத்தியதாகவும். சர்வதேச நியமங்களுக்கு எற்றதாகவும் இருக்கவேண்டும். இதுவே நாட்டுக்கு உகந்ததாக முடியும்.  

கேள்வி: இப்போது கிழக்கு மாகாணத்திலே பழைய கட்சிகளும், புதிதாக முளைத்த கட்சிகளும் ஒன்று சேரவிருப்பதாக கதை பரப்பப்பட்டு வருகிறது. இதுபற்றிய உங்கள் அபிப்பிராயம் எப்படியிருக்கிறது?  

கிழக்கு மாகாணத்திலே புத்திஜீவிகள் என்று தங்களுக்குத் தாங்களே முத்திரை குத்திக் கொள்ளும் சிலரும், கிழக்கு மாகாணத்தில தமிழ்ப் பற்றாளர்கள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்ளும் சிலரும் கிழக்கு மாகாண மக்களின் வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக புதிய கட்சியொன்றைத் தோற்றுவித்து பொதுச் சின்னத்தில் போட்டியிடப் போவதாகக் கூறிக் கொண்டு கூட்டங்கள் நடத்துவதும், அறிக்கைகள் விடுவதும், பத்திரிகையாளர்களைச் சந்திப்பதுமாகிய செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

கிழக்குத் தமிழர் ஒன்றியம் என்று கூறிக் கொண்டு மேற்குறித்த கருமங்களில் ஈடுபட்டவர்கள் இன்று பல்வேறு கட்சிகளாகத் தோற்றம் பெற்றுவிட்டனர். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பத்துக் கட்சிகளின் கூட்டு என்று சொன்னார்கள். இறுதியில் எல்லோரும் மொட்டுக் கட்சிக்கு வாக்களிக்கும்படி மக்களை கேட்டுக் கொண்டார்கள்.  

ஆனால், மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதைச் சிந்தித்ததோ, எதை வெளிப்படுத்தியதோ அதற்கு ஒத்த விதத்திலே செயற்பட்டு தங்களின் மனநிலையை வெளிப்படுத்திக் காட்டினார்கள். உண்மையாக மக்கள் மனநிலை அறிந்து செயற்படுபவர்களாக இருந்தால் இவர்கள் தங்களுடைய செயற்பாடுகளை முற்றாக நிறுத்திவிட்டு எந்தவித நிபந்தனையுமற்ற விதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து செயலாற்றியிருக்க வேண்டும். இவ்வாறான செயற்பாடுதான் அவர்கள் முன்வைத்த கிழக்குத் தமிழர்களின் வாக்குகளை ஒருமுகப்படுத்துதல் என்ற கோட்பாட்டுக்கு அமைவானதாக இருந்திருக்கும். அவ்வாறு இல்லாமல் தற்போதும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக அணிசேர்வதிலேயே அவர்கள் முனைப்புக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.  

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையிலே நமது அரசியல் என்பது அரசியல் விடுதலையை மிக மிகப் பிரதான அம்சமாகக் கொண்ட ஓர் அரசியலாகும்.  

இந்த அரசியல் நடவடிக்கைகளில் மிக முக்கிய விடயங்கள் தமிழ் மக்களை சமஉரிமையுள்ளவார்களாகக் கணிக்கக்கூடிய விதத்திலேயான அரசியற் பொறிமுறை ஒன்றைப் பெற்றெடுத்தல், தமிழ் மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர் தொடர்பாக ஐநா மனித உரிமை ஆணையகத்திலே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு அரசை இசைந்து ஒழுகுமாறு செய்யச் செய்தல், எமது பிரதேசத்திற்கு சேர வேண்டிய அனைத்து அபிவிருத்தி விடயங்களையும் இங்கு செய்யுமாறு அரசை வற்புறுத்துதல் என்கின்ற விடயங்களை உள்ளடக்கியதாக அமையும். ஆனால், கிழக்கின் ஒற்றுமை பற்றிக் கூறுகின்ற அன்பர்கள், மந்திரிப் பதவியைப் பெறுதல், அதன் மூலம் அபிவிருத்தி செய்தல் என்கின்ற ஒரேயொரு விடயத்தை மட்டுமே இலக்காகக் கொண்டிருக்கின்றார்கள். மேற்குறித்த ஏனைய எந்த விடயத்தைப் பற்றியும் அவர்கள் உச்சரிப்பது கிடையாது.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற வாசகத்தை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். தற்போதைய ஆட்சி மாற்றத்தின் பின் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கிய இவர்களுக்கு ஆகக்குறைந்தது ஒரு பிரதியமைச்சர் பதவி கூட வழங்கப்படவில்லை. இவர்களை இன்றைய அரசாங்கம் எந்தவகையில் மதிப்பீடு செய்திருக்கின்றது என்பதற்கு இது நல்ல உதாரணமாகும்.  

நடைபெற இருக்கின்ற பொதுத் தேர்தலில் இவர்கள் களமிறங்கி ஒரு பிரதிநிதித்துவத்தையாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கான பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.  

நாட்டிலே சிறுபான்மையினரான தமிழ் மக்களை பிரதேச ரீதியிலே வேறுபடுத்துவதில் முனைப்புக் காட்டுகின்றார்கள். சிங்கள மக்கள் காலாகாலமாக தங்களிடம் நிலவி வந்த கரையோர மற்றும் கண்டிய சிங்களவர் என்ற வேற்றுமைகளைக் களைந்து சிங்கள மக்கள் என்ற ஒரு வகுதிக்குள் இப்போது வந்துவிட்டார்கள்.  

ஆனால் 2004க்குப் பின் வடக்கு, கிழக்கு என்ற பிரிவினையை, கிழக்கில் உள்ளவர்களும் சிங்களவர்களைப் போன்ற சக்திகளும் முன்நிறுத்துவது தென்பகுதி அரசியல்வாதிகளுக்கு தேன்வார்க்கும் செய்தியாகும். எனவே தமிழ் மக்கள் இவர்கள் தொடர்பில் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  

எனவே பொதுநலம் சார்ந்து ஒரு அரசியல் வகுதிக்குள் வராமல் சிந்திக்கும் புத்திஜீவிகளும் பொது அமைப்புகளும் இவர்களுடைய செயற்பாடுகளை கைவிடுமாறும்¸ தமிழ்த் தேசியத்திற்கு உரமூட்டும் வகையிலே தங்களுடைய செயற்பாடுகளைச் செய்யும் வகையிலும் அவர்களை நெறிப்படுத்தும் வகையிலும் செயற்படுத்துவதும் மிகவும் இன்றியமையாதது ஆகும்.  

ஏற்கனவே அரசியலில் ஈடுபட்டிருக்கும் கட்சி அல்லது கட்சிகள் அவர்களுடைய அரசியற் பயணத்தைத் தொடரட்டும். ஆனால் வாக்குகளை ஒன்று சேர்த்தல் என்னும் மகுட வாசகத்தோடு அண்மைக் காலத்தில் களமிறங்கியுள்ள அன்பர்கள் தங்களுடைய முயற்சிகளைக் கைவிட்டு பொதுமக்களைக் குழப்பாமல் இருப்பது தான் இன்றைய காலத்தின் தேவையாகும்.

எஸ்.எஸ்.தவபாலன் - புளியந்தீவு குறூப் நிருபர்

Comments